முதலமைச்சர் நிச்சயம் கவனிப்பார் !
1. கே : நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்திய, தஞ்சையில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உணர்ச்சி உரை, உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது என்பதால், அதை ஆவணப்படுத்த அச்சிட்டு அனைவரும் எக்காலத்திலும் அறியும்படி வெளியிடுவீர்களா?
– பாலாஜி, வண்ணாரப்பேட்டை.
ப : பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. விரைவில் திராவிட இயக்கத்தின் தொடர் இணைப்பு _ தாய், சேய் பாசப்பிணைப்பும் கொள்கை வனப்பும் கொண்ட கையேடாக அந்நூல் திகழும்!
‘தாய் வீட்டில் கலைஞர்’ என்னும் நூலுக்குத் துணை நூலாக – ஆவணமாக அந்நூல் விரைவில் உங்கள் கரங்களில் தவழும். மகிழ்ச்சிதானே…?
2. கே: காவிரி ஆணையம் உத்தரவிட்டும் அதை கர்நாடகம் நிறைவேற்றாத நிலையில், பிரதமர் தலையிட்டு ஆணையை நிறைவேற்ற வேண்டியது கட்டாயக் கடமை என்ற நிலையில், அவர் அமைதி காப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகம் அல்லவா?
– காமராஜ், அடையாறு.
ப : திட்டமிட்டே அரசியல் குளிர் காய, இந்தியா கூட்டணியில் இனியாவது கலகம் பிறக்காதா என்ற ஆசை _ நப்பாசை _ அதற்கு மூலவேராகவும் இருக்கக்கூடும். புரிந்துகொள்ளுங்கள்.
3. கே: உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டாசுக் கடைகளை, சேமிப்புக் கிடங்குகளை கடைத்தெருவில் வைப்பதைத் தடைசெய்ய வேண்டியது கட்டாயம் அல்லவா? தனிப்பட்ட ஒதுக்குப்புற இடங்களில் அமைப்பதை உறுதி செய்ய வேண்டாமா?
– தேவகி, வண்டலூர்.
ப : பட்டாசு விபத்து பரவலான செய்தியாக இருப்பதால், அதன் பாதுகாப்பு_ உயிர்காப்பு _ மக்களுக்கு ஏற்பட தனித்து நிபுணர்கள் ஆலோசனை பெற்று, போதிய பாதுகாப்பு விதிகளுடன் – அதன் செயல்பாடு செல்லரிக்காத முறையில் ஏற்பாடுகள் செய்து உயிர்களைப் பாதுகாப்பது நமது அரசின் முக்கிய கடமையாகும். முதலமைச்சர் கவனிப்பார்- நிச்சயம்!
4. கே: ‘சமவேலைக்கு சமஊதியம்’ கோரிக்கை நியாயமானது என்பதால் அதை அரசுக்கு அவப்பெயர் வராமல் தீர்வு காண தங்கள் கருத்து என்ன?
– வைஷ்ணவி தேவி, ஆவடி.
ப : உரிய நியாயமான தீர்வுகளைக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் விடை செயல் வடிவத்தில் கிடைக்கும்.
5. கே: அறநிலையத் துறை பற்றிய முழுத்தெளிவு இல்லாததால் பிரதமர் பேசுகிறாரா? அல்லது “எதைத் தின்றால் பித்தம் தெளியும்’’ என்ற தவிப்பில் சுமத்தும் வீண்பழியா?
– ஜானகி, தஞ்சாவூர்.
ப : பயம்! பயம்!! எல்லாமே தோல்வி பயம்! உறுதியாகக் கண்ணுக்கு தெரியும் வரும் தேர்தல் பற்றிய தோல்வி பயம்! பயம்! அரண்ட நிலைதான் அதற்கு அடிப்படை!
6. கே: இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகளில் முன்னெடுப்பு தடைபட்டுள்ளது வியூகமா? வேறு காரணங்கள் உண்டா?
– மேரி, திருச்சி.
ப : தடைபடவில்லை; 5 மாநிலத் தேர்தல் வியூகங்கள் குறுக்கிட்டாலும் ஆரவாரமின்றி, அமைதியாக அந்தந்தப் பணிகள் -ஆங்காங்கே தொடர்கின்றன.
7. கே: நீண்ட நாள் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை குறித்து தமிமுன் அன்சாரி அவர்களின் கோரிக்கை பற்றி தமிழக அரசுக்குத் தாங்கள் கூறும் கருத்து என்ன?
– வேலாயுதம், ஆரணி.
ப : வழக்கமான ‘ராஜ்பவன் நந்தி’ குறுக்கே – அரசும் முதல்வரும் அக்கறையுடன் அதில் உள்ளார்கள்! நம்புங்கள்.
8. கே: ஆளுநர் என்ன தப்பு செய்தாலும், சட்டமீறல் நிகழ்த்தினாலும் அதை உச்சநீதிமன்றம்கூட சரி செய்ய முடியாதா? சட்டத் திருத்தம்தான் ஒரே வழியா?
– காதர், வேலூர்.
ப : அப்படியல்ல; நுனிக்கொம்பு ஏறியவர்களுக்கும் தீர்வு உண்டு என்கிறாரே திருவள்ளுவர். அந்தக் குறள் நினைவுக்கு வரவில்லையா?
9. கே: காவிரிச் சிக்கலில் மத்திய அரசைக் கண்டிக்காமல், மாநில அரசின்மீது பழி சுமத்தும் எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடு சரியா?
– கருப்பசாமி, ஆத்தூர்.
ப : நாடே கைகொட்டிச் சிரிக்கும் என்பது அவருக்கே தெரியும். என்றாலும் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை! ♦