… விழியன் …
தேசியக் கல்விக்கொள்கை வரைவு மற்றும் இறுதி வடிவம் வெளியான போது இது குலக்கல்விக்கு வித்திடும் என முழக்கங்கள் வந்த போது, இது அதீத கற்பனை என்றனர் அதனை ஆதரிப்போர். இப்போது வெளியாகி இருக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் அதனை வெட்டவெளிச்சமாகக் காட்டியுள்ளது. அத்திட்டத்தில் எவ்வளவும் விஷமும் விஷமத்தனமும் உள்ளது எனப் பல கட்டுரைகள், விவாதங்கள் எனக் கிளம்பியுள்ளது. தமிழ்நாடு தவிர வேறு எங்கும் இதற்கான எதிர்ப்பு உள்ளது எனத் தெரியவில்லை.
இந்நிலையில் கல்விக்கொள்கையில் எந்த அம்சங்கள் எல்லாம் இந்தத் திட்டத்திற்கான ஆரம்பப்புள்ளிகள் எனப் பார்ப்போம்.
1. ஆறாம் வகுப்பு முதலே உள்ளூர் தொழில்களைக் குழந்தைகள் கற்கவேண்டும். (அவர்களைத் தொடர்ச்சியாக அவர்களின் குலத்தொழிலோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்ஏற்பாடு)
2. Voccational Training என்பதனை கிட்டத்தட்ட ஆறாம் வகுப்பிலேயே துவங்கிட
வேண்டும் (கொட்டாம்பட்டியில் இருப்பவருக்கும் சென்னை அண்ணா நகர் குழந்தைக்கும் ஒரே பாடங்கள் கிடைக்குமா?)
3. 3, 5, 8 வகுப்புகளில் தேர்வுகளின்- கடுமையை எதிர்கொள்ள இயலாமல் பள்ளியைவிட்டு நின்றிடுவார்கள்.
4. 9ஆம் வகுப்பு முதலே செமஸ்டர் – இவை குழப்பம் விளைவிப்பதற்கே ஒழிய எந்த பயனும் இல்லை.
5. 11, 12ஆம் வகுப்பில் விருப்பிய நேரத்தில் பொதுத்தேர்வு, இரண்டு முறை தேர்வு – இவை அனைத்துமே ஏற்கனவே படித்த குடும்பத்தில் இருப்பவர்களுக்குச் சாதகம். இன்னும் வசதி வாய்ப்புகள் இல்லாதாருக்கு மேலும் சிரமும் சுமையும் மட்டுமே.
6. 18 வயதில் தொழில் செய்யலாம் எனில் அப்போது கல்லூரியில் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு படிப்பார்கள் [விஸ்வகர்மா]. எப்படி
மாணவரை வெளியே வரவைப்பது? கல்விக்கொள்கையில் ‘anytime entry and anytime exit’. ஓராண்டு படித்துவிட்டு அதற்கு ஏற்ப சான்றிதழ் பெறலாம் என்பது முறை அல்ல.
7. தேசிய அளவில் நிணிஸி GER (Gross Enrollment Ratio) வை அதிகரிக்க வேண்டும் என்று வெற்று சவடால் விட்டுவிட்டு, 18 வயதில் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு என்பது எவ்வளவு நகைமுரண்.தொடர்ந்து, உனக்குப் படிக்க வராது உனக்குப் படிக்க வராது எனச் சொல்லிவிட்டு கடைசியாக படிக்கவரலைன்னா விஸ்வகர்மா யோஜனா திட்டமிருக்கிறது போய் குலத்தொழிலைச் செய் எனச் சொல்லாமல் சொல்கின்றது.
பட்டியலிடப்பட்டுள்ள தொழிலினை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாமா என்றால் அதுவும் இல்லை. அந்த தொழிலினை ஏற்கனவே பரம்பரை பரம்பரையாகச் செய்திருக்கவேண்டும் என்ற ஒரு மடக்கலும் உள்ளது.
எப்படி எதிர்கொள்வது?
ஒன்றிய அரசு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய எல்லா முனையிலும் முயலும். ஒவ்வொரு திட்டத்திற்கும் இப்படி முனைப்பு இருக்கும், இந்தத் திட்டத்திற்குக் கூடுதல் முனைப்பு கண்டிப்பாக இருக்கும். கல்லூரி படிக்கும் மாணவர்களை அணுகி இத்திட்டத்தில் சேரச் சொல்வார்கள். பள்ளிகளிலேயே இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளுவார்கள். இது மிகப்பெரிய சவால். சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் ஓர் அரணாக நின்று குழந்தைகள் குறைந்தது இரண்டு டிகிரியாவது படிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்வது அவசியம். அரசியல் ரீதியாகத் தமிழ்நாட்டில் இதற்குக் கடும் எதிர்ப்பு நிலவுவது வரவேற்கத்தக்கதே! ஆனாலும் ஒன்றிய அரசு இதனை வெற்றி பெற எந்தச் சூழ்ச்சியும் செய்யும். களத்தில் நிற்போர் இக்குழந்தைகளுடன் கரம் கோத்து நிற்பது மிக அவசியம்.
ஒரு பக்கம் எல்லா மாணவர்களையும் எப்படியாவது கல்லூரியில் சேர்த்து மேற்படிப்பு படிக்க வைக்கும் முயற்சியில் மிகவும் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது (தமிழக அரசால்). தேசியக் கல்விக்கொள்கை குறிப்பிடும் நிணிஸிஅய் நாம் எப்பொழுதோ தாண்டியாச்சு. நான் முதல்வன் திட்டம் மூலமாகக் கண்ணுக்குத் தெரிந்தே நிறையப் பலன்களையும் பார்க்கின்றோம். முழுப் புள்ளிவிவரங்கள் வெளிவரும். கொரொனா காலத்தால் ஏற்பட்ட கல்லூரிச் சேர்க்கை பின்னடைவு நிச்சயம் களையப்பட்டு இருக்கும்.
குழந்தைகளுக்குக் கல்வியையும், தன்னம்பிக்கையையும் கொடுப்போம், எங்கே எந்த உயரத்திற்குச் செல்லவேண்டும் என்பதை அவர்கள் முடிவெடுப்பார்கள். ♦