– பாணன்
இன்றும் சந்திரனை ஜோதிடர்கள் குழந்தை பிறந்தது முதல் திதி வரை பயன்படுத்துகின்றனர்.
‘சந்த்ர’ என்றால் பிரகாசம் என்று பொருள். சந்திரன் என்றால் பிரகாசமானவன் என்று பொருள். சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். இதன் பிரியமான மனைவியின் பெயர் ரோகிணி. நன்றாகக் கவனிக்கவும். இந்த சந்திரன் பெண் தன்மை வாய்ந்த கிரகம். ஆனாலும் இதற்கு மனைவிகள் உண்டு.
இந்த சந்திரன் வைசிய வர்ணத்தைச் சேர்ந்த கிரகம். அதாவது கோள்களுக்கும் வர்ணங்கள், ஜாதிகள் இருக்கின்றன. பெண் தன்மை கொண்ட சந்திரனுடன் சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் பிள்ளை பெற்றிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.
அத்தரி மகரிஷிக்கும் அவருடைய மனைவி அனுசுயா என்பவளுக்கும் சோமன், துர்வாசன், தத்தாத்திரேயன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் சோமன் என்பவனே நவகிரகாதிகளில் ஒருவனாகிய சந்திரன். இவன் தட்சனின் இருபத்தியேழு பெண்களை மணந்து கொண்டான். தனது புகழ், கீர்த்தி, மரியாதையை நிரூபிக்க சந்திரன் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினான். யாகத்தைச் சிறப்பாக நடத்தியதால் மமதை தலைக்கேறியது. ஆணவம் கண்களை மறைத்தது. மனது அறிவு சொன்னபடி கேட்க மறுத்தது. அதனால்தான், தன் குலகுருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையை அபகரித்துச் சென்று வாழ்க்கை நடத்தி அவளைக் கருவுறச் செய்தான்.
தேவர்களும், கடவுளர்களும், குருவும் கேட்டுக்கொண்ட பிறகும் அவன் தாரையை அனுப்ப மறுத்தான். எனவே, தேவர்கள் சந்திரனின் மீது படையெடுத்தனர். தேவர்கள் சார்பில் சிவனும், குரு பிரகஸ்பதியும், முன்னின்று போரை நடத்தினர். சந்திரனுக்கு உதவியாக அசுரர்களும், அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரும் சேர்ந்து கொண்டனர். போர் மிகவும் கடுமையாக நடந்தது. போருக்கு “தாரகாமய சங்கிராமம்” என்று பெயரும் வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் பலம் சரிசமமாக இருந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, பிரம்மன் இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி தாரையைச் சந்திரனிடமிருந்து பிரித்து பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். ஆனால், பிரகஸ்பதியோ “தாரை கர்ப்பமாக இருக்கிறாள். எனவே, என்னால் தற்போது தாரையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறி அக்கருவை விட்டுவிட்டு வருமாறு தாரையிடம் கூறினார்.
தாரையும் அக்கருவை ஒரு மரத்தின் நிழலில் விட, அது மிகுந்த பிரகாசத்துடனும் அழகுடனும் ஒரு சிறுவனாக மாறியது. அதனைக் கண்ட தேவர்கள் மிகவும் வியப்புற்று தாரையை நோக்கி இந்தக் குழந்தை யாருடையது என்று கேட்க, அவள் அக்குழந்தை சந்திரனுடையது என்று சொன்னாள். எனவே சந்திரன் தனக்கும் தன் குருவின் மனைவி தாரைக்கும் பிறந்த குழந்தைக்குப் புதன் என்று நாமகரணம் சூட்டினான். இப்படியாக புதன் பிறந்தான்.
குருவின் மனைவியையே அபகரித்துச் சென்று அவளுடன் வாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றுக்கொண்டதால், சந்திரன் குரு பிரகஸ்பதியின் சாபத்திற்கு ஆளானான்.
மாமனாரின் சாபம்
பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களில் பத்துபேரை தருமனுக்கும், பதின்மூன்று பேரை காசிபருக்கும் இருபத்தேழு மகள்களை சந்திரனுக்கும், மீதிப் பெண்களை ஆங்கீசர், அரிஷ்டநேமி, கிரிஷஷ்வர் வாஹுபுத்திரர்க்கு திருமணம் செய்து வைத்தான். தட்சன் தன் இருபத்தியேழு பெண்களை (அஷ்வினி முதல் ரேவதி வரை) சந்திரனுக்குத் திருமணம் செய்கையில் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். சந்திரனும் அதற்குச் சம்மதித்துத் திருமணம் செய்து கொண்டான். திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை வெறுக்கத் தொடங்கினான்.
இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்கள் தகப்பனாரிடம் முறையிட்டனர்.
இதைக் கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான். தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சனின் கோபம் அதிகரித்தது. கோபம் கொண்ட தட்சன், ‘சந்திரனுடைய கலைகள் படிப்படியாய்த் தேய்ந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தான். இப்படியாக சந்திரன் தனது தவறுகள் காரணமாகவும், தனது வாக்குறுதியை மீறியதனாலும், மனைவிமார்களின் புகாரின் அடிப்படையில் தட்சனின் சாபம் பெற்று தனது கலைகளை இழக்க ஆரம்பித்தான்.
சந்திரன் என்ற சொல்லுக்குப் பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கியதால், சந்திரன் தேவர்களிடம் முறையிட, அவர்கள் அவனை பிரம்மனிடம் அழைத்துச் சென்றனர். பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார். சந்திரனும் உடன் பிரபாசத்திற்குச் சென்று சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்ச மந்திரத்தை உச்சரித்து வணங்கினான். சந்திரன் செய்த பூசையைக் கண்டு மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சந்திரனும் தனது மாமனாரின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துச்சொன்னான். அதற்கு சோமசுந்தரேஸ்வரர் தட்சன் கொடுத்த சாபத்தைத் தன்னால் மாற்ற முடியாது என்றும், அந்தச் சாபத்திலிருந்து சந்திரன் தப்பவும் முடியாது என்று கூறினார்.
ஆனால் சந்திரன், சிவனிடம் தான் செய்த தவறுகளை மன்னித்து தனக்கு அருள் புரிந்து கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டான்.
சந்திரனின் பக்தியில் வேண்டுகோளில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டார். எனவே, ஒரு மாதத்தில் பதினைந்து நாள்கள் சந்திரனின் கலைகள் குறைந்து (தட்சனின் சாபப்படி) மீதிப் பதினைந்து நாள்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார். இவ்வாறாக சந்திரன் தன் இழந்த அழகைப் பெற்றான்.
சந்திரன் தன் மதிப்பையும் மரியாதையையும் தேவர்கள் மத்தியில் இழந்ததற்குக் காரணம் தன் குருவின் மனைவி தாரையை அபகரித்து அவளைத் தாயாக்கியதால்தான்.
இதை வைத்தே ‘சந்திரன் கெட்டது பெண்ணாலே‘ என்ற பழமொழி உருவாயிற்று.
இவனைப் போலவே ‘இந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிவனும் விஷ்ணுவும் சந்திரனின் அழகில் மயங்கி அவனோடு கலந்து பிள்ளைகளைப் பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகிறது.
தட்சனின் மகள்கள் 27 பேரைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். தட்சனின் ஒரு மகள் தான் பார்வதி. பார்வதி சிவனின் மனைவி.
பிரகஸ்பதி என்ற வியாழனின் மனைவி தாரையைக் கண்டு அவளையும் அவளது பணிப்பெண்கள் 400 பேரையும் கவர்ந்து சென்றதால் சந்திரனை மகா காமந்தகன் என்று கூறுவார்கள்.
அப்படிப்பட்ட காமந்தகனான சந்திரனைத் தலையில் வைத்து அவன் அருகிலேயே கங்கையையும் வைத்து தனது உடலில் பாதியான பார்வதியையும் வைத்துள்ளார் சிவன்.
சந்திரன் பூமியைப் போன்று ஒரு கோள். அதுவும் மண்ணால் ஆனது. ஆனால், பூமியைவிட சிறியது. மண்ணால் ஆன ஒரு கோள் பெண்களை மணந்தது, பிள்ளை பெற்றது என்று கூறுவது எவ்வளவு பெரிய மடமை!
புதன் என்பது நிலவைப்போல் ஒரு கோள். ஆனால் அது நிலவுக்கும் தாரை என்ற பெண்ணுக்கும் பிறந்த குழந்தை என்றும் இந்துமதம் கூறுகிறது. அதுமட்டுமல்ல; தாரை வியாழனின் மனைவி என்கிறது. ஆக, சந்திரன், வியாழன் முதலிய கோள்கள் பெண்களை மணந்தன, பிள்ளைகளைப் பெற்றன என்பது எப்படிபட்ட அடிமுட்டாள்தனம்.
பூமியையும் இந்த ஸனாதனிகள் விடவில்லை. பூமியும் பிள்ளை பெற்றது என்று கதை எழுதி வைத்துள்ளனர்.
இந்த அறிவுக்கு ஒவ்வாத ஆயிரம் கதைகள் முன்னமே நாறிக் கிடக்கின்ற நிலையில், பிரதமர் மோடி, சந்திரனில் சந்திரயான் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்து இந்தியாவின் மூடத்தனத்தை அகிலம் அறியச் செய்துள்ளார். சிவன் தலையில் நிலவும் இல்லை, சிவனும் இல்லையென்பதை சந்திரயான் ஓங்கி முழங்கியுள்ள நிலையில், அந்த சந்திரயான் இறங்கிய இடத்திற்கு சிவசக்தியென்று பெயர் வைப்பது எந்த அளவிற்கு அறிவியலைக் கேவலப்படுத்தும் அவலம்? சிந்தித்துப் பாருங்கள்! ♦