-தஞ்சை பெ.மருதவாணன்
ஆரியத்தின் எதிர்ப்புரட்சியாக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிய பவுத்தத்தின் வீழ்ச்சிக்குப் பல துணைக் காரணங்கள் இருந்த போதிலும் முதன்மையான காரணம் சனாதன பிராமணியத்தின் சூழ்ச்சியே என்பது வரலாறு கூறும் உண்மை.
1.பவுத்தத்தை வீழ்த்துவதற்குப் பிராமணியம் கடைப்பிடித்த செயல்பாடுகளில் ஒன்றாக அணைத்தழிக்கும் சூழ்ச்சியை விளக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமெரிக்கப் பேராசிரியர் ஜோஷி என்பவர் எழுதிய ‘புத்தரை உற்றுப் பார்க்கிறேன்’ என்ற நூலிலிருந்து கீழ்க்கண்ட
வழிமுறைகளை எடுத்துக்காட்டுகிறார். அதன்படி, ஆரியம் பின்பற்றிய மூன்று வகையான தந்திரங்கள் வருமாறு:
1. Appreciate முதலில் பாராட்டு
2. Accept ஏற்றுக் கொள்வது போல் காட்டிக்கொள்.
3 Annihilate அழித்துவிடு.(‘விடுதலை’ 15.8.2019 பக்கம் 4)
2) பவுத்தத்தின் வீழ்ச்சி பற்றி “யாதும் ஊரே’’ எனும் திங்கள் இதழ் (மே மாதம் 2006) வெளியிட்ட புத்தரின் 2550ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு மலரில் (பக்கங்கள் 10 _ -11) காணப்படும் கருத்துகள் பின்வருமாறு:-
2550 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரின் நெறியும் தந்தை பெரியாரின் கொள்கைகளும் ஒன்றுதான். “பிறப்பொக்கும்” என்பதுதான். ஆனால், பார்ப்பனர்களைப் புத்தர் தன் நெறியில் சேர்த்துக் கொண்டதனால் புத்தநெறி உருவ வழிபாட்டுக்கும் சடங்குகளுக்கும் வழிவிட வேண்டியதாயிற்று. நாகார்ச்சுனர் போன்ற புத்த நெறியில் சேர்ந்த பார்ப்பனர்கள் புத்தரையே சிலை வடிவில் உருவமைத்து வழிபடச் செய்தனர். சடங்குகள், மூடநம்பிக்கைகள் இடம் பெற்றன. புத்தர் விஷ்ணு அவதாரமாக்கப்பட்டார். இறுதியில் நடந்ததென்ன? புத்த நெறி, தான் பிறந்த இந்தியாவிலிருந்தே துரத்தப்பட்டது………… குமுகாயத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி, இந்த நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள எல்லாவகையான வீழ்ச்சிகளுக்கும் பார்ப்பனர்கள்தான் அடிப்படைக் காரணமாக இருந்து வந்துள்ளனர். பார்ப்பனியத்தின் நச்சுப்பற்களால் கடிபட்டுச் சிதறுண்டு போகாத துறைகளே இல்லை.
பவுத்தத்தில் சாமி இல்லை. சடங்கு இல்லை. ஜாதி இல்லை. மந்திரம் இல்லை. பூசை இல்லை. பிரார்த்தனை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனி உடைமைச் சுரண்டல் இல்லை. இவற்றில் எதுவொன்றிருப்பதும் பவுத்தம் இல்லை. பவுத்தத்தில் அன்பு உண்டு. அறிவு உண்டு. சமத்துவம் உண்டு. ஒழுக்கம் உண்டு. இரக்கம் உண்டு. வீரம் உண்டு. விவேகம் உண்டு. இவற்றில் எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை. இத்தகைய சிறப்புக்குரிய புத்த நெறியின் அழிவுக்குப் பார்ப்பனர்களின் ஊடுருவலே முக்கிய காரணம் ஆகும். எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர்களைத் தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். (அதுமட்டுமல்ல) பார்ப்பன தாசர்களையும் அவர் எதிர்த்தார்.
3) பவுத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான பார்ப்பனிய ஊடுருவலைப் பற்றிப் பேராசிரியர் அ-. மார்க்ஸ் அவர்கள் எழுதிய ‘புத்தம் சரணம்’ என்ற தனது நூலில் (பக்கங்கள் 88_ 89) குறிப்பிட்டுள்ளவற்றுள் முதன்மையான பகுதிகள் பின்வருமாறு:
அ) புத்த சங்கத்தில் சேருபவர்களுக்கு ஜாதி அடையாளத்தைத் துறக்க வேண்டும் என்கிற கட்டாயம் விதிக்கப்படாததும் இங்கே சிந்திக்கத்தக்கது. சமூகத்தில் நிலவும் ஜாதிக்கொடுமைகளுக்கு எதிராகச் சாக்கிய முனி தீவிரமான நிலைப்பாடுகளை மேற்கொள்ளாததையே இது காட்டுகிறது. ஒருவேளை லட்சுமி நரசு கூறுவதுபோல அன்றைய சமூகச் சூழலில் அதற்கொரு தேவையில்லாதிருந்திருக்கலாம். எனினும், சுனிதரின் வாக்குமூலத்தைப் படிக்கும்போது அப்படி எளிதாகச் சொல்லிவிடவும் இயலவில்லை. தோன்றும் போதே இந்திய ஜாதியத்துடன் ஒரு சிறிதளவு சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பவுத்தத்திற்கு இருந்ததாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஆ) இதன் விளைவாகவே பெரிய அளவில் பார்ப்பனர்கள் புத்த சங்கத்தில் எவ்விதத் தடையுமின்றிச் சேர முடிந்தது. கோதமரின் முதற் சீடர்களான பஞ்சவர்க்கத்துப் பிக்குகள் எனப்படும் ராமன், துவஜன், லக்கணன் மந்தி, கோண்டஞ்ஞன் (கவுண்டில்யன்) போஜன், ஸூயாமன், ஸூதத்தன் ஆகிய எண்மரும் ஆறங்கத்தோடு மறை பயின்ற அந்தணர்களே. உருவேலவனத்திற்குப் பெருமான் வந்தபோது சடைமுடியர்களான காஸ்யப சகோதரர்கள் மறைவிதிப்படி தீ வளர்த்துத் தவம் செய்து வந்தனர். அவர்களுள் மூத்தவரான உருவேல காஸ்யபவனுக்கு மட்டும் அய்ந்நூறு சீடர்கள் இருந்தனர். அனைவரும் புத்தருக்குச் சீடர்களானார்கள். தொடர்ந்து புத்தர் செல்லுமிடமெல்லாம் அவரால் ஈர்க்கப்பட்டோ வெல்லப்பட்டோ பார்ப்பனர்கள் பெரிய அளவில் புத்த சீடர்கள் ஆனார்கள்.
இ) உருவேலாவிலிருந்து ராஜ கிருஹத்துக்குப் பெருமான் எழுந்தருளியபோது பன்னிரண்டு பார்ப்பன ரிஷிகளுடனும் பெருங்குடிமக்களுடனும் சூழ இருந்த மன்னன் பிம்பிசாரனும் புத்த போதனைகளைக் கேட்டுப் புத்தரின் சீடரானார். சூழ இருந்தவர்களும் மன்னரைப் பின்பற்றினர். இங்குதான் சஞ்சையனின் மாணவர்களும் பார்ப்பனர்களுமான சாரிபுத்தரும் மொக் கல்லானரும் புகழ்மிக்க புத்த சீடர்களாயினர்.
4) கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பரமேஸ்வரமேனன் என்பதை இயற்பெயராகக் கொண்டவருமான தவத்திரு தர்ம தீர்த்த அடிகளார் (1893 – 1978) அவர்கள் நாராயண குரு வழிவந்தவர் வழக்கறிஞரும் கூட. இவரைத் தந்தை பெரியார் அவர்கள் தனது வடநாட்டுப் பயணத்தின் போது 1941ஆம் ஆண்டில் லாகூரில் சந்தித்து உரையாடினார் என்று க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய திராவிட இயக்கம் நீதிக்கட்சி வரலாறு 1916 – 1944 (இரண்டாம் பாகம்) எனும் நூலின் (பக்கம் 531) வாயிலாகத் தெரியவருகிறது. தவத்திரு தர்ம தீர்த்த அடிகளார் எழுதிய இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு (History of Hindu Imperialism) எனும் நூலில் (சாளரம் பதிப்பகம் வெளியீடு,
சென்னை_91. 2009ஆம் ஆண்டு பதிப்பு) பிராமணியம், புத்தமதத்தை எவ்வாறு அழித்தது என்பது குறித்து காணப்படும் முதன்மையான கருத்துகள் பின்வருமாறு:-_
அ) புத்தரின் ஆரம்ப காலத்திலிருந்தே பிராமணர்கள் புத்த மடங்களில் சேர்ந்து கொண்டிருந்தனர். யாகம் போன்ற சடங்குகள் கைவிடப்பட்ட நிலையில் பிராமணர்களுடைய வருவாய் தடைப்பட்டது. அடியார்கள் ஏராளமான சொத்தும் பணமும் செலவிட்டுப் புத்த பிட்சுகளுக்காக அமைத்த ஆஸ்ரமங்களில் சுகமாக வாழும் நோக்கத்துடன் பிராமணர்களும்
போய் புகுந்து கொண்டனர். அங்கும் அவர்கள் தங்களுடைய பாண்டித்தியம், சாமர்த்தியம் போன்றவற்றால் தலைவர்களாகி சிறிது காலம் ஆஸ்ரமங்களை வலுப்படுத்த உதவினர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார மய்யங்களை எல்லாம் பிராமணர்கள் கைப்பற்றியதைப் போல அசோகரின் காலத்தில் புத்த சங்கங்களில் முக்கியமான பதவிகளையும் பிராமணர்கள் கைப்பற்றினர். (பக்கம் 102)
ஆ) புத்த பிட்சுகளாக மாறிய பிறகும் ஜாதி மனப்பான்மையைக் கைவிடாமல் தாங்கள்பிராமணர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டு அடிக்கடி கூட்டத்திலிருந்து விலகி நின்றனர்.
(தொடரும்)