அந்நியத் தளையிலிருந்து விடுபட நடந்த போராட்டத்தின்போது இந்திய மன்னர்களுக்கு எதிரான போராட்டமும் அதில் அடங்கியிருந்தது. அப்போது இந்திய மக்கள் விடுதலை பெற்ற இந்தியா பற்றி சில தீர்க்க தரிசனப் பார்வைகள் கொண்டிருந்தனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய இந்திய தேசிய காங்கிரசின் தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களிலும் அந்த தரிசனம் தன்னை பளீரென வெளிப்படுத்தியது. வயதுற்றோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மிளிரும் அரசியலமைப்பைப் படைப்பது, சமத்துவம் – சமூகநீதி ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் புதுப்பிப்பது. இந்தியப் பண்பாட்டின் பன்முகத் தன்மையையும் பிரிவுகளையும் அங்கீகரிப்பது _ அவற்றில் பெருமை கொள்வது என்ற வீறார்ந்த முனைப்புகள் அந்தக் கண்ணோட்டத்தில் காணப்பட்டன.
விழிப்புணர்வு – இந்திய அரசமைப்பில் பொறிக்கப்பட்டமனித உரிமைகள்
இந்திய சமூகத்தை நோயாய்ப் பிடித்திருந்த பல பழமைசார் தீமைகளிலிருந்து இந்தியா விடுபடுவதற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட சமூக சீர்திருத்த இயக்கங்களின் வளமான மரபுகளை அது ஸ்வீகரித்தது. துவக்க முதலே குடியுரிமை (சிவில் ரைட்ஸ்)க்கான போராட்டம் இந்திய விடுதலைப் போரில் ஒன்றியதோர் அங்கமாக இருந்தது. அவ்விடுதலை இயக்கம் சர்வதேசக் கண்ணோட்டத்தையும் வளர்த்தது. மக்களாட்சி, சுதந்திரம் சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தனது போரையும் அவ்வியக்கம் உருவகித்தது. இந்தத் தொலைநோக்கு காரணமாகவே இந்திய விடுதலை இயக்கம் பிறநாட்டு விடுதலை இயக்கங்களுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டியது. அந்நாடுகளின் மக்களாட்சி சக்திகளோடும் சமூக முன்னேற்ற சக்திகளுடனும் தன்னை இணைத்துக் கொண்டது. இந்திய விடுதலைக்குப் பாடுபடும் போதே தனது பரிவையும் ஆதரவையும் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்திலும் அப்போரின்போதும் பாசிச ஆக்கிரமிப்புக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கு இரையாகிப் போனவர்களுக்கு வழங்கியது.
1946 டிசம்பரில், இந்தியா விடுதலை பெறாதபோதே, தன் பணியைத் துவக்கி 1949 நவம்பர் திங்கள் 26ஆம் நாள் அதனை நிறைவு செய்த இந்திய அரசமைப்பு அவையினால் படைத்தளிக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விடுதலைப்போரின் பெரிய லட்சியங்கள் பிரதிபலித்தன.
அரசமைப்புச்சட்ட முகப்புரை, அடிப்படை உரிமைகள் பற்றி முழங்கும் பாகம் 3, நெறிகாட்டும் கோட்பாடுகள் பற்றிய பாகம் 4 நமது அரசமைப்பின் உட்கரு என்று போற்றப்படுகின்ற பகுதிகள் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனம், குடியுரிமையும் அரசியலுரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைகள், பொருளாதார சமூக கலாச்சார பன்னாட்டு உடன்படிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. அந்த முகப்புரை, பாகம் 3இன் சில பகுதிகள், பாகம் 4, அடிப்படைக் கடமைகள் பற்றிப் பேசும் பாகம் 4அ, பிரிவு 226, 325, 326 ஆகியவை இங்கு தரப்படுகின்றன.
I
இந்திய அரசமைப்புச் சட்டம்
முகப்புரை
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை சார்ந்தவோர் சமதர்ம, மதசார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக உருவாக்கவும், அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவையும் சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம், வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமும் அந்தஸ்திலும் வாய்ப்பிலும் சமத்துவமும் கிட்டுமாறு செய்யவும்.
தனி மனித கண்ணியத்துக்கும் நாட்டின் ஒருமைப்பாடு ஒற்றுமை ஆகியவற்றுக்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தை அவர்களிடையே வளர்க்கவும், மனப்பூர்வமாக உறுதியேற்று 1949 நவம்பர் 26ஆம் நாளான இன்று நமது அரசமைப்பு அவையில் ஈங்கிதனால் இவ்வரசமைப்புச் சட்டத்தை ஏற்று, சட்டமாக்கி நமக்குநாமே வழங்கிக் கொள்கிறோம்.
I I
அடிப்படை உரிமைகள்
பொது
12. வரையறை – இந்தப் பாகத்தில் “அரசு” (State) எனும் தொடர், பின்னணி வேறு பொருள் கற்பித்தாலன்றி இந்திய அரசாங்கம், இந்திய நாடாளுமன்றம், ஒவ்வொரு மாநிலத்தின் அரசு, மாநில சட்டமியற்றவை, இந்திய நிலப்பரப்புக்குள் அமைந்த அல்லது இந்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
13. அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்களும் அடிப்படை உரிமைகளை அவமதிக்கிற சட்டங்களும்
1. இவ்வரசமைப்பு துவங்குவதற்கு முந்தைய பொழுது வரை நடைமுறையிலிருந்த எல்லாச் சட்டங்களும் இந்தப் பாகத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு எந்த அளவு முரணாக இருக்கின்றனவோ, அந்த முரண் அளவுக்கு செல்லத்தகாதவை ஆகிவிடும்.
2. இந்தப் பகுதியினால் அளிக்கப்படும் உரிமைகளைச் சுருக்கவோ எடுத்து விடவோ கூடிய சட்டமெதையும் அரசு
உருவாக்காது; இந்த உட்பிரிவினை மீறுவதாக இயற்றப்படும் சட்டமெதுவும் அந்த மீறல் அளவுக்கு செல்லத்தகாததாகிவிடும்.
3. இந்தப் பிரிவில், பின்னணி வேறு பொருள் தந்தாலன்றி
அ. “சட்டம்” என்பதில் அரசாணை, ஆணை, உட்சட்டம் விதி, நெறிமுறை, அறிவிக்கை, இந்திய நிலப்பரப்பில் சட்டத்தின் வலுக்கொண்டு விளங்கும் மரபு, வழக்காறு, ஆகியவை அடங்கும்.
ஆ. “நடைமுறையில் உள்ள சட்டங்கள்” என்பது இந்திய நிலப்பரப்பில் இவ்வரசமைப்பு ஆரம்பிக்குமுன் சட்ட அவைகளாலோ அல்லது தகுதி பெற்ற அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்ட, இயற்றப்பட்டு நீக்கப்படாத சட்டங்களைக் குறிக்கும்.
சமத்துவ உரிமை
14. சட்டத்தின் பார்வையில் சமத்துவம் இந்திய நிலப்பரப்பில் சட்டத்தின் பார்வையில் சமத்துவத்தையோ அல்லது சமமான சட்டப் பாதுகாப்பையோ அரசு எவருக்கும் மறுக்காது.
15. மதம், இனம், ஜாதி, பால் அல்லது பிறப்பிடத்தின் அடிப்படையிலான ஓரவஞ்சனையைத் தடை செய்தல்.
1. மதம், இனம், ஜாதி, பால், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதாவதொன்றின் காரணமாக மட்டுமே, அரசு குடிமக்களில் எவரையும் ஓரவஞ்சனை செய்யாது.
2. மதம், இனம், ஜாதி, பால், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மட்டுமே, கீழ்க்கண்ட விஷயங்களில், குடிமக்களில் எவரும் எந்தவிதமான குறைபாட்டுக்கும், கடப்பாட்டுக்கும், கட்டுப்பாட்டுக்கும், நிபந்தனைக்கும் ஆளாக்கப்படமாட்டார்:
அ. கடைகள், பொது உணவகங்கள், தங்கும் விடுதிகள், பொதுக் கேளிக்கை மன்றங்களில் நுழைதல்.
ஆ. பராமரிப்புச் செலவு முழுவதையுமோ, அதில் ஒரு பகுதியையோ அரசு நிதியிலிருந்து பெறும் அல்லது
பொதுமக்கள் பயன்படுத்த அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கிணறுகள், குளங்கள், குளிக்கும் துறைகள், சாலைகள் மற்றும் பொது இடங்களைப் பயன்படுத்துதல்.
3. பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்வதை, இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் தடை செய்யாது-.
4. சமூக ரீதியாகவோ கல்வி ரீதியாகவோ பிற்படுத்தப்பட்ட குடிமக்களின் அல்லது அட்டவணை ஜாதியினர்/பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்வதை இந்தப் பிரிவின் எந்தப் பகுதியுமோ அல்லது பிரிவு 29இன் உட்பிரிவு 2இன் பகுதியோ தடைசெய்யாது.
16. பொதுப்பணி பெறுவதில் சம வாய்ப்பு
1. அரசின் எந்த அலுவலகத்துக்கும் நியமிக்கப்படுவது மற்றும் பணிக்கு அமர்த்தப்படுவதும் ஆகிய விஷயங்களில் குடிமக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்கும்.
2. மதம், இனம், ஜாதி, பால், வம்சாவழி, பிறந்த இடம், வாழுமிடம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாக மட்டுமே, குடிமக்களில் எவரும் அரசுப் பதவிக்கோ பணிக்கோ தகுதியற்றவராக மாட்டார், ஓரவஞ்சனை புரியப்படமாட்டார்.
3. ஒரு மாநில அல்லது ஒன்றிய ஆட்சிப் பகுதியினுள், அரசு அல்லது உள்ளாட்சி அல்லது வேறு எந்த அதிகார அமைப்பின் ஒரு பிரிவு அல்லது பிரிவுகளின் பணிக்கு அமர்த்தப்படுவதற்கோ அல்லது அலுவலகத்துக்கு நியமிக்கப்படுவதற்கோ, அப்படி அமர்த்தப்படுவது அல்லது நியமிக்கப்படுவதற்கு முன் அந்த மாநிலத்தில் அல்லது ஒன்றிய நேரடி ஆட்சிப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் நிபந்தனை விதிப்பதை இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள எதுவும் தடை செய்யாது.
4. அரசின் கருத்துப்படி, அரசுப் பணிகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறாத பின்தங்கிய வகுப்புக் குடிமக்களுக்கு ஆதரவாக நியமனத்துக்கோ பதவிக்கோ அரசு இடஒதுக்கீடு செய்வதை இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள எதுவும் தடை செய்யாது.
5. ஏதாவதொரு மத அல்லது அமைப்பின் விஷயங்களோடு தொடர்புடைய ஒரு பதவியை வகிப்பவரோ அல்லது அதன் நிருவாகக் குழுவின் உறுப்பினரோ, அந்த மதத்தைப் பின்பற்றுபவராகவோ அல்லது கிளை மதத்தைச் சார்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் எந்தச் சட்டத்தின் செயல்பாட்டையும், இந்தப் பிரிவில் கூறப்பட்ட எதுவும் தடை செய்யாது.
17. தீண்டாமை ஒழிப்பு
“தீண்டாமை” ஒழிக்கப்படுகிறது. எந்த வடிவிலும் அதைச் செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது. தீண்டாமையிலிருந்து எழும் எந்தத் தகுதிக் குறைவையும் செயல்படுத்துவது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ♦