இலவசங்களை கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்களைப் பற்றி எழுதுவார்களா?

ஏப்ரல் 01-15

வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அ.தி.மு.க.வோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப் பூர்வமான ஏடான தீக்கதிரில் (21.3.2011 பக்கம் 3) கூறப்பட்டுள்ளது.

அதேபோல அ.தி.மு.க.வின் ஆலோசகராக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமி இலவசங்கள்பற்றி என்ன சொல்லுகிறார்? இன்று வெளிவந்துள்ள துக்ளக் அட்டைப் படம் என்ன சொல்லுகிறது?

கிரைண்டரையோ, மிக்சியையோ,  லேப் டாப்பையோ கலைஞர் கொடுத்தால் அதற்குப் பெயர் வசந்த் அண்ட் கோ விளம்பரமாம் _- சோ எழுதுகிறார்.

இப்பொழுது அவர் விழுந்து விழுந்து ஆதரிக்கும் இவர்  ஆலோசகராக இருக்கும் ஜெயலலிதா இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறாரே! –

கலைஞராவது மிக்சி அல்லது கிரைண்டர் இலவசம் என்கிறார்; ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மூன்றையும் இலவசமாகத் தருவேன் என்கிறாரே, 20 கிலோ அரிசி இலவசம் என்கிறாரே – இது மட்டும் வசந்த் அண்ட் கோ விளம்பரம் இல்லையோ!

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள இலவசங்கள்பற்றி அடுத்த துக்ளக்கில் இதே பாணியில் கிண்டல் செய்வாரா? பதில் சொல்லுவாரா?

இது அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை.

இதில் ஒரு கார்ட்டூன் வெளிவந்துள்ளது.

என்ன தெரியுமா?

35 கிலோ அரிசி இலவசமாகக் கலைஞர் சொல்லியிருக்கிறாராம் – அதற்காக அரிசி கடத்தல்காரர்கள் சங்கத்திலே இருந்து பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்று கார்ட்டூன் போட்டுள்ளது. இன்று காலை வந்த நமது எம்.ஜி.ஆரில் இந்தக் கார்ட்டூன் வெளி வந்துள்ளது. பாவம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? ஜெயலலிதா என்ன சொல்லப் போகிறார் என்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?

இலவசமாக அரிசி கொடுத்தால் கள்ள மார்க்கெட் காரர்களுக்கு மகிழ்ச்சி என்று கார்ட்டூன் போட்டுவிட்டது.

கலைஞராவது வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம் என்றார். ஜெயலலிதாவோ குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி இருக்கிறாரே, – நமது எம்.ஜி.ஆர் ஏட்டின் கார்ட்டூன்படி – இது அரிசி கடத்தல்காரர் களுக்குக் கொள்ளை லாபமோ!

(24.3.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரையிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *