ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களுக்குத் திடீரென்று ‘‘சமூகநீதி – ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீது திடீர்ப் பற்று, பாசம் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது!
‘‘2000 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, முதலிய வர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி உள்ள சமூகநீதி அவசியம் கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதாக சண்டப் பிரசண்டம் செய்து ‘ஸனாதனம்’ ஏற்படுத்திய கொடுமையை நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகப் பேசியுள்ளார்!
பாரதம், இராமாயணம் கூறும் தர்மம் என்ன?
வேட்டுவ குல ஏகலைவனின் கட்டை விரலை சூழ்ச்சிப் புத்தியோடு குருதட்சணையாக வெட்டித் தர வேண்டும் என்று பெற்ற துரோணாச்சாரியாரைச் சிறந்த குருவாகப் படம் பிடிக்கும் மகாபாரதமும், கடவுளைக் காண ‘‘தவம்” செய்த சூத்திர சம்பூகனால் வர்ணதர்மம் கெட்டுவிட்டது; அதன் காரணமாகத்தான் எங்கள் (பார்ப்பன) சிறுவன் இறந்தான் என்று ‘‘இராம இராஜ்ஜியம்” நடத்திய இராமனிடம் பார்ப்பனர்கள் முறையிட, எந்த விசாரணையுமின்றி, நேரே வாளோடு சென்ற இராமன், சூத்திர சம்பூகன் கழுத்தை வெட்டினான். இறந்த பார்ப்பனச் சிறுவன் உயிர் பெற்றெழுந்ததாகக் கூறும் வால்மீகி இராமாயணமும் – (உத்தர காண்டம்) ஆகிய இரண்டும், ஸனாதன தர்மம் வர்ண தர்மம் எவ்வளவு கொடூரமான ‘ஒரு குலத்துக்கொரு நீதி’ என்பதை விளக்கும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரும் பழைய ஸனாதன சமூகக் கட்டமைப்பின் சரியான படப்பிடிப்புகளாகும்!
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தற்போதைய இட ஒதுக் கீட்டை ஒழிப்பதையே தொடக்கத்திலிருந்து கூறிய இயக்கமாகும்!
அது முழு வெற்றியடையாது என்று ஒரு புரிதல் அதற்கு ஏற்பட்டவுடன், அதனை நீர்த்துப் போகச் செய்ய அதன் பெரும்பங்கை மேல்ஜாதி பார்ப்பனர்களும் அனுபவிக்க பொருளாதார அடிப்படையில் அது மாற்றப்படவேண்டும் என்று மாற்றிச் சொல்லி, அதன் மூல நோக்கத்தையே முறியடிக்கும் முயற்சியில் அன்று முதல் இன்றுவரை இன்றைய ணிகீஷி என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்று பறிக்கும் கொடுமை ஒருபுறம் சட்டப் பாதுகாப்புடன் நடைபெற ஏற்பாடாகி நடந்து வருகிறது தமிழ்நாடு தவிர!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் திடீர் பல்டிக்குக் காரணம் என்ன?
இந்நிலையில், இதற்குமுன் பல மேடைகளில் இட ஒதுக்கீடு மறுபார்வைக்கு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அதனை எதிர்த்து, அறவே நீக்க முழங்கிய இதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இப்போது ஏன் திடீர் பல்டி அடிக்கிறார்?
இப்படி அவர் ராகத்தை மாற்றிப் பாடுவது இது முதல் தடவை அல்ல; முன்பு பீகாரில் காங்கிரசும் நிதிஷ்குமார் கட்சியும் பா.ஜ.க.வுக்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து, தேர்தலை எதிர்கொண்டபோது, அவர்களைச் சில மேடைகளில் எதிர்த்துப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பிறகு தோல்வி முகம் பளிச்சென்று தெரிந்தவுடன், கடைசி நேரத்தில், இதுபோன்று இட ஒதுக்கீட்டினை எதிர்க்காமல், இவ்வளவு வெளிப்படையாக இப்போது பேசுவதுபோல் -_ பேசாது, பேசினார்; பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, பீகாரில் காங்கிரஸ் நடத்திய பேரணி ‘‘சுயமரியாதைப் பேரணி” (‘சுய அபிமான்’ என்ற ஹிந்தித் தலைப்பில்) இப்போது ஒன்றியத்தில் நடைபெறும் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.க. ஆட்சியின் சரிவு – ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது என்பது ஆர்.எஸ்.எஸ்சுக்கே புரிந்துவிட்டது.
ஆர்.எஸ்.எஸின் புதிய யுக்தி, எச்சரிக்கை!
மக்களிடம் நடக்காத பல வாக்குறுதிகளைக் கொடுத்து, இனியும் வாக்குகளை வாங்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ்சுக்குப் புரிந்துவிட்டது. பிரதமர் மோடி சரியான வாக்கு வங்கிச் சேகரிப்புக்கு இனி பயன்பட மாட்டார் என்பதை நாளும் உணருவதால், புதிய புதிய உத்திகளும், வித்தைகளும்
ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தேவைப்படுகின்றன.
தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல்அம்பேத்கர் ஆகியவர்களின் சமூகநீதிக் கொள்கை
புறந்தள்ளப்பட முடியாத அளவுக்குத் தேர்தலிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதாலேயே மோகன் பாகவத் இப்படி ‘டர்ன்’ வித்தை காட்டுகிறார் என்பதும் புரிகிறது.
சமூகநீதிக் காற்று – மண்டல் காற்று இந்தியா
முழுவதும் – பலமாக வீசத் தொடங்கிவிட்டது; காவிக்கட்சி ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
எனவே, கடைசி நேரத்தில் சமூகநீதி முகமூடியை அணிந்து புதிய மாயமானை விட்டு வெற்றி பெற முடியுமா? என்று கருதி, இப்படி ஆட்சியின் கொள்கை வகுக்கும் கர்த்தாவான மோகன் பாகவத் அவர்கள் முயற்சிக்கிறார் போலும்!
‘‘இல்லை, உங்கள் கருத்து தவறு; உண்மை
யாகவே அவர் கூறுகிறார்” – என்பது காவிகளின், ஆர்.எஸ்.எஸின் பதிலாக இருப்பின், அவர்கள் அதை நிரூபிக்க – ஒடுக்கப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்த இரண்டு செயல்களைச் செய்து காட்டட்டும்!
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவார்களா?
1. தற்போது கடைப்பிடித்துவரும் இட ஒதுக்கீடு – சமூகநீதி போல, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் _- மாவட்ட நீதிபதிகள்வரை அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து – அவசரச் சட்டமும் அதற்காகக் கொண்டு வந்து நிறைவேற்றட்டும்!
2. தமிழ்நாடு தி.மு.க. அரசு போட்டுள்ளது போல, ஒன்றிய அரசின் ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு தற்போது உள்ளபடி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்ற பிரிவுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட இடங்கள் ஒழுங்காகச் சரிவரப்பின்பற்றப்பட்டிருக்கிறதா என்று கண்காணிப்புக் குழுவை நியமித்து மூன்று மாதங்களுக்குள் கண்டறிந்து, சரியான விகித எண்ணிக்கையை நிறைவேற்றலாமே!
அதன்மூலம் இக்கொள்கையில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டினை (Commitment) வாக்காளர்களுக்குக் காட்டி, தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறலாமே!
செய்வார்களா?என்பதே நமது கேள்வி!
ஓநாய்களை ஆடுகள் நம்பலாமா?
காட்டில் ஓநாய்களின் தலைமை ஒரு நாள், ஆடுகளை எல்லாம் திரட்டி வைத்து, நாளை முதல் நான் ‘‘சைவமாகி”விட்டேன் ”சாக பட்சிணி” ஆக
மாறிவிட்டேன் – என்னிடம் பயமின்றி வரலாம்;
என்னுடனேயே தங்கலாம் என்று ஆடுகளை நோக்கிக் கூறினால், அதை பரிதாபத்திற்குரிய ஆடுகளும் – நம்பினால் என்ன கதி ஏற்படுமோ,
அதேகதி (ஏன், அதோகதி) ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்படுவது உறுதி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
– கி. வீரமணி
ஆசிரியர்