– சரவண இராஜேந்திரன்
பெற்றோர்களின் மூடநம்பிக்கையினால் தீயில் வெந்த பச்சிளங் குழந்தையின் நிலை என்ன?
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில், ஒரு முதியவர் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அவர் வைத்திருந்த தனது ஒரு வயது பேத்தி குண்டத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் தனது மனைவிக்குச் சொந்தமான தாராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீ மிதித் திருவிழாவுக்குத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
ராஜாவின் மாமனார் ராஜேஷ் என்பவர் கடந்த ஜூலை 30-ஆம் தேதி (ஆடி மாதம் 1-ஆம் தேதி) காப்பு கட்டி விரதம் இருந்து வந்த நிலையில், தனது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் திரவுபதி அம்மனுக்கு ஆடி மாதம் பத்தாம் நாளில் இரவு தீக்குண்டம் இறங்க முடிவு செய்துள்ளார்.
அப்போது தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவைக் தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கியுள்ளார். அப்போது ராஜேஷ், கால் இடறி தீக்குண்டத்தில் குழந்தையுடன் தவறி விழுந்தார். அவர் தனது ஒரு வயது பேத்தியுடன் திடீரென தீக் குண்டத்தில் விழுந்ததைக் கண்ட கிராமத்தினர் உடனடியாக ராஜேஷையும் குழந்தையையும் மீட்டுள்ளனர். விபத்தில் ராஜேஷின் கை மற்றும் கால் முட்டி பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை தர்ணிஜாவுக்கு முதுகுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் விபத்து குறித்து கூறுகையில், “தீ மிதித் திருவிழாவிற்காக நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். ராஜேஷ் அன்று விரதம் இருந்து இரவு தீ மிதிக்கச் சென்றார். அவருக்கு ஏற்கெனவே இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால் தீ மிதிக்க அருகில் சென்றபோது தலைச்சுற்றல் ஏற்பட்டதால் குழந்தையும் தீயில் விழ நேரிட்டது. இதில் ராஜேஷின் கை மற்றும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை தர்ணிஜாவுக்கு முதுகுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல கோவில் திருவிழாக்களில்
தீ மிதி நிகழ்வு நடைபெறுகிறது. இந்து சமயத்தினரின் ஆடி மாத நேர்த்திக்கடன்களில் தீ மிதித்தல் முக்கிய பங்கு வகிக்கிறது.
அம்மன் கோயில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. இந்த தீக்குழியானது 10 அடி முதல் 20 அடி நீளம் வரை இருக்கும்.
இந்தக் குழியில் கட்டைகளைப் போட்டு எரியவிட்டு அது எரிந்தவுடன் தணலால் ஆன கரியாக இக்குழி இருக்கும். வேண்டுதலை நிறைவேற்ற காப்பு கட்டிய பக்தர்கள் நீராடிய பின்னர், வரிசையாக வந்து இந்த தீக்குண்டத்தில் இறங்குகிறார்கள். பொதுவாக இந்த நிகழ்ச்சி இரவில் மட்டுமே நடத்தப்படும்
வழக்கமாக, தீ மிதித் திருவிழாவுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்கப்படும் என்பது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை கூறும்போது,
தீ மிதித் திருவிழா நடத்த கோயில் நிருவாகத்தினர் தரப்பில் இருந்து கோயில் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும். எத்தனை பேர் திருவிழாவில் பங்கேற்பார்கள் என்பது குறித்த விவரங்களைத் தர வேண்டும். அதன் அடிப்படையில் திருவிழா நடைபெறும் போது பாதுகாப்பு வழங்கப்படும்.
தீக்குண்டம் அமைக்கப்படும் இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்படும். தீ மிதிக்கும் பக்தர்களுக்குக் காயம் ஏற்பட்டால் முதலுதவி அளிக்க குழு ஒன்றும், படுகாயம் அடைபவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் நிறுத்தி வைக்கப்படும்.
மேலும், தாராட்சியில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவின் போது அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியான முறையில் இருந்ததாகத் தெரிவித்த காவல் ஆய்வாளர் ஏழுமலை, அந்தக் கோயிலில் மட்டும் காவல் துறையினர் 4 பேர் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த 4 பேர்
பாதுகாப்பு பணியில் இருந்ததாகத் தெரிவித்தார்.
ஆரோக்கியமானவர்கள் ஒவ்வொருவராகக் கட்டுப்பாடுடன் தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தீக்காயம் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது என்ன, எந்த அடிப்படையில் தீக்காயத்தின் விழுக்காடு கணக்கிடப்படுகிறது
“எந்தத் தீக்காயம் ஏற்பட்டாலும் முதலில் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். தீக்காயம் ஏற்படும் போது முதலில் எவ்வளவு ஆழமாகக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இதுதான் தீக்காயம் எவ்வளவு விரைவாகக் குணமடையும் என்பதை முடிவு செய்யும்,” என்றார்.
“உடலின் தோல் பகுதியில் இரண்டு அடுக்குகள் உள்ளன. அவை எபிடர்மிஸ், டெர்மிஸ் என்று அழைக்கப்படும். எபிடர்ஸ் தோலின் வெளிப்பகுதி, டெர்மிஸ் என்பது அதற்குக் கீழிருக்கும் பகுதி. தோலின் மேல் பகுதியில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அதேவேளையில் தோலின் கீழ்ப்பகுதி மற்றும் எலும்பு வரையில் தீக்காயம் பரவினால் குணப்படுத்துவது சற்று கடினமான ஒன்று,’’’’ என்றார்.
மேலும் பேசிய அவர், “எனவே தீக்காயம் ஏற்பட்டவுடன் முதலில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கழுவுவதே சிறந்தது. இதனால் தீக்காயத்தின் ஆழம் குறையும்’’ என்றார். ஆனால், தீக்காயம் ஏற்பட்டவருக்கு போர்வை போர்த்துவது ஆபத்தானது “அப்படிச் செய்தால் வெப்பம் உள்ளேயே தங்கி காயத்தின் ஆழம் அதிகமாகிவிடும். இதனால் பாதிப்பு மேலும் அதிகமாக வாய்ப்பு உண்டு. வெப்பத்தை வெளியேற்றுவதற்கு தண்ணீர் ஊற்றிக் கழுவுவதே சரியான ஒன்று. தண்ணீர் ஊற்றிக் கழுவிய பின் சுத்தமான பருத்தித் துணியை மேலே சுற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தீக்காயம் ஏற்பட்டவுடன் மை ஊற்றுவது,
மஞ்சள் பொடி, காப்பி பொடி தடவுவது போன்ற செயல்களில் கட்டாயம் ஈடுபடக் கூடாது.’’’’
“தீக்காயம் ஏற்பட்டால் உடலில் உள்ள நீர் வெளியேறி விடும் என்பதால் முதல் 24 மணி நேரத்திற்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும். சாதாரண தீக்காயம் 7 முதல் 10 நாள்களுக்குள் சரியாகிவிடும். எந்த ஒரு தீக்காயம் என்றாலும் 21 நாள்களுக்குள் சரிப்படுத்தி விட்டால்
தழும்பு மோசமாக இருக்காது. 21 நாள்களுக்கு மேல் சென்றால் தழும்புடன் தான் காயங்கள் ஆறும்,’’ என்றார்.
தீயில் விழுந்த குழந்தையின் தற்போதைய நிலை என்ன?
மீட்கப்பட்ட ராஜேஷ் மற்றும் அவரது ஒரு வயது பேத்தி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். உடல் முழுவதும் 36% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த குழந்தை தர்ணிஜா, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தீக்காயத்தின் சதவிகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது?
உடலின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டால் 9% தீக்காயம் என்று கணக்கிடப்படும். “கைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டால் 9%, மார்பு, வயிற்றுப் பகுதியில் தீக்காயம் என்றால் 18% என இப்படி ஒவ்வொரு பகுதியிலும் தீக்காயம் என்பது சதவிகிதமாகப் பிரித்து கணக்கிடப்படுகிறது. தீக்காயம் ஏற்பட்டவர்களின் வயது மற்றும் தீக்காயம் ஏற்பட்ட சதவிகிதத்தைக் கூட்டினால் அது 100% அதிகமாகச் சென்றால் அது ஆபத்தானது. உதாரணமாக 40 வயதுடைய ஒருவருக்கு, 60% தீக்காயம் என்றால் அது ஆபத்தான ஒன்று தான். 1 வயது குழந்தைக்கு 36% தீக்காயம் என்றால் அது குணப்படுத்தக் கூடிய ஒன்றே,’’இருப்பினும் அந்தத் தழும்புகள் நிரந்தரமாகவோ அல்லது நீண்ட நாள்களாகவோ இருக்கும் என்றார். றீ