விழிப்புணர்வு – கல்வியும் மனித உரிமைகளும் பற்றிய தேசியக் கொள்கை

2023 கட்டுரைகள் செப்டம்பர் 1-15,2023 மற்றவர்கள்

இந்திய நாடாளுமன்றத்தால் 1986இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகின்றன. சில பகுதிகள் சமச்சீரின்மையை அகற்றுவதையும் சமமான கல்வி வாய்ப்புகளை அளிப்பதையும் வலியுறுத்துகின்றன. பிற பகுதிகள் மனித உரிமை பற்றி கல்வியில் முறைமைகள், உள்ளடக்கம் ஆகியவற்றின் சில அம்சங்களை வலியுறுத்துகின்றன.

தேசியக் கல்வி முறை

3.1 எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தேசியக் கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளதோ அவற்றை அரசமைப்புச்சட்டம் தன்னுள் கொண்டுள்ளது.

3.2 குறிப்பிட்ட நிலை வரை, ஜாதி, மதம், இடம், பால் ஆகியவை எதுவாயிருந்தாலும் மாணவர்களனைவரும் சமமான தரமுள்ள கல்விக்கு சம வாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தேசியக் கல்வி முறை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அதனை எய்துவதற்கு உரிய வகையில் நிதி வசதி செய்யப்பட்ட திட்டங்களை அரசு துவங்கும். 1986ஆம் ஆண்டு கொள்கை பரிந்துரைத்த பொதுப்பள்ளி முறைகளின் திசையில் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

3.3 தேசியக் கல்வி முறை ஒரு பொதுவான கல்வியமைப்பை உருவகிக்கிறது. 10+2+3 அமைப்பு இப்போது நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் பத்தாண்டுகளின் உட்பகுப்பைப் பொறுத்தவரை அய்ந்தாண்டு ஆரம்பக் கல்வியைக் கொண்ட துவக்க அமைப்பு, மூன்றாண்டு உயர்துவக்கம், இரண்டாண்டு உயர் பள்ளிக் கல்வி என்பதை நோக்கி முயற்சி மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் +2 நிலையும் பள்ளிக் கல்வியிலேயே ஒரு பகுதியாக ஏற்கப்படவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

3.4 ஒரு தேசிய பாடத்திட்ட அடிப்படையின் மீது தேசியக் கல்வி முறை நிர்மாணிக்கப்படும். அப்பாடத்திட்ட வரையறையில் ஓர் ஆதாரப் பொதுக்கூறும் நெளிவுசுழிவான பிற பாடங்களும் இருக்கும். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறும் தேசிய அடையாளத்தைப் பேணிக் காத்திடத் தேவைப்படுகிற அரசமைப்பு ரீதியான கடமைகள் முதலிய அம்சங்கள் பொது ஆதாரக் கூறில் அடங்கும். பாடப் பகுப்புகளைத் தாண்டிய இக்கூறுகள் இந்தியாவின் பொதுப் பண்பாட்டு மரபு, சமதர்மம் தத்துவம், ஜனநாயகம், சமயச் சார்பின்மை, பால் சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகத் தடைகளைத் தகர்த்தல், சிறு குடும்பக் கொள்கை, அறிவியல் மனோநிலை ஆகியவற்றை வளர்ப்பவையாக வடிவமைக்கப்பெறும். எல்லா கல்வித் திட்டங்களும் முழுக்க முழுக்க மதச்சார்பற்ற மதிப்பீடுகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

3.5 எப்போதுமே இந்தியா உலக முற்றிலும் ஒரே குடும்பமே என்ற நம்பிக்கையுடன் நாடுகளுக்கிடையே புரிதலும் அமைதியும் நிலவ உழைத்து வந்துள்ளது. இந்த வளமான மரபுக்கேற்ப உலகளாவிய பார்வையைக் கல்வி வலுப்படுத்த வேண்டும். இளைய தலைமுறையை பன்னாட்டுக் கூட்டுறவுக்கும் சமாதான சக வாழ்வுக்கும் பக்குவப்படுத்த வேண்டும். இந்த அம்சத்தைப் புறக்கணிக்க முடியாது.

3.6 சமத்துவத்தை வளர்க்க கல்வி கிடைப்பதில் மட்டுமல்ல, அதில் வெற்றி பெறுவதிலும் சம வாய்ப்புகளை உருவாக்குவது அவசியமாகும். அத்துடன் பாடத்திட்ட மூலக்கூறுகள் வழியே மாந்தர்கள் அனைவர்க்குமிடையே உள்ளார்ந்த சமத்துவம் இருப்பதைப் புரிய வைக்க வேண்டும். சமூகச் சூழல் காரணமாகவும் பிறப்பு என்ற நம்மை மீறிய காரணியினாலும் அளிக்கப்படுகிற விருப்பு வெறுப்புகளையும் மனக்கோணல்களையும் அகற்றுவதை முக்கிய நோக்கமாக ஆக்க வேண்டும்.
சமத்துவத்துக்காகக் கல்வி வேறுபாடுகள்

4.1 வேறுபாடுகளை அகற்றுவதற்கும் இதுவரை சம இடம் மறுக்கப்பட்டு வந்தவர்களின் குறிப்பான தேவைகளைக் கவனிப்பதன் மூலம் கல்வி வாய்ப்புகள் சமமாக்கப்படுவதற்கும் புதிய கொள்கை சிறப்பான அழுத்தம் தரும்.

மகளிர் சமத்துவதற்கான கல்வி

4.2 மகளிர் நிலையில் அடிப்படை மாறுதலை ஏற்படுத்த கல்வி ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்படும். சேர்ந்துபோய் பெருகிவிட்ட கடந்த காலத்தில் ‘சமச்சீரின்மையை ஈடுகட்ட மகளிர்க்குச் சாதகமாக, தேர்ந்த சிந்தனையில் உருவான வசதியதிகரிப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மகளிர் கரங்களுக்கு வலுச்சேர்ப்பதில் தேசியக் கல்விக் கொள்கை ஒரு நேர்மறையான குறுக்கீட்டுப் பணியில் சிறப்பாகப் பங்களிக்கும். புனரமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், பாடங்கள், ஆசிரியர்களையும் முடிவெடுப்பவர்களையும் நிருவாகிகளையும் நெறிப்படுத்தலும் பயிற்றுவித்தலும், கல்வி நிறுவனங்களையும் ஈடுபாடு காட்டச் செய்தல் ஆகிய வழிகளில் புதிய மதிப்பீடுகளின் வளர்ச்சிக்கு உதவும். இது ஒரு நம்பிக்கையின் செயல் வெளிப்பாடும் சமூகப் பொறியியல் நடவடிக்கையுமாகும். பல்துறைக் கல்விகளிலும் மகளிர் பற்றிய ஆய்வுகள் வளர்த்தெடுக்கப்படும். மகளிர் மேம்பாட்டை அதிகரிக்கக்கூடிய தீவிரத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கல்வி நிலையங்கள் ஊக்குவிக்கப்படும்.

4.3 மகளிர் கல்லாமையை அகற்றவும் துவக்கக் கல்வி கிடைப்பதிலும், தக்க வைத்துக் கொள்வதிலும் குறுக்கிடும் தடைகளை அகற்றவும் தனி ஆதரவு சேவைகள், காலக்கெடு, பயனுள்ள தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் உயர்ந்த பட்ச முன்னுரிமை தரப்படும். தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி, வேலை வாய்ப்புக் கல்வி ஆகியவற்றில் பல மட்டங்களிலும் மகளிர் பங்கு பெறுவதற்கு முதன்மை தரப்படும். தொழில் கல்வியிலும் வேலைக் கல்வியிலும் ‘இவைதான் இவர்களுக்கு’ என்ற வரையறுத்தல்களைத் தீவிரமாகக் களையவும், காலம் காலமாக மகளிர் இடம் பெறாத தொழில்களிலும், இப்போதுள்ள மற்றும் புதிதாய்த் தோன்றி வருகிற தொழில்நுட்பத் துறைகளிலும் மகளிர் பங்கு பெறுவதை வளர்க்கவும் வகை செய்யும் முறையில் பாகுபாடு காட்டாமை என்ற கொள்கை தீவிரமாகப் பின்பற்றப்படும்.

ஷெட்யூல்டு பிரிவினரின்

4.4 எல்லாப் பகுதிகளிலும் சிற்றூர் ஆண், சிற்றூர் பெண், நகர ஆண், நகர மகளிர் என்று இருக்கின்ற பரிமாணங்கள் நான்கிலும் கல்வி நிலைகள், கல்வி மட்டங்கள் அனைத்திலுமே ஷெட்யூல்டு பிரிவினரை மற்ற மக்களுடன் சமச்சீர் செய்வதே அவர்களது கல்வி மேம்பாட்டுப் பணியின் மய்யப்புள்ளி.

4.5 இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில்

அ. தம் குழந்தைகளை 14 வயது வரை தொடர்ந்து பள்ளிக்கனுப்பும் வறிய குடும்பங்கட்கு ஊக்கப் பரிசுகள்.

ஆ. தோட்டித் தொழில், தோல் தொழில்கள் புரிவோரின் குழந்தை களுக்கு மெட்ரிகுலேஷனுக்கு முந்திய நிதியுதவிகளை முதல் வகுப்பிலிருந்தே வழங்குதல், வருமானம் எதுவாயிருந்தாலும் அத்தகைய குழந்தைகள் அனைவரையும் இத்திட்டத்தில் கொண்டுவருதல், அவர்கள் நலனைக் குறிவைத்து காலக்கெடு உள்ளனவாக திட்டங்களை மேற்கொள்ளுதல்.

இ. ஷெட்யூல்டு பிரிவைச் சார்ந்த குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை, பள்ளியில் தொடர்தல், வெற்றிகரமாகப் படிப்பை முடித்தல் ஆகியவை எந்நிலையிலும் தாழ்வுறாது இடையறாத ஆணிவேர் மட்டத் திட்டங்களாலும் கண்காணிப்பினாலும் உறுதி செய்தல்.

ஈ. ஷெட்யூல்டு பிரிவிலிருந்து ஆசிரியர்கள் நியமனம்.

உ. படிப்படியாக ஷெட்யூல்டு பிரிவு மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகர்களில் விடுதி வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தல்.

ஊ. ஷெட்யூல்டு பிரிவு மக்களும் முழுமையாகப் பயன்பெற வசதியாக இடங்களைத் தேர்ந்தெடுத்து பள்ளிக் கட்டடங்கள், பால்வாடிகள், முதியோர் கல்வி மய்யங்கள் ஆகியவற்றை அமைத்தல்.

எ. ஷெட்யூல்டு பிரிவினருக்கு வலுவான கல்வி வசதிகள் கிட்ட வழி செய்யும் வகையில் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்ட வளங்களைப் பயன்படுத்துதல்.
ஏ. கல்வியில் ஷெட்யூல்டு பிரிவினர் பங்கெடுப்பதை வளர்ப்பதற்காக புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பதில் இடைவிடாத புதுமை முயற்சிகள்.

பழங்குடியினரின் கல்வி

4.6 பழங்குடியினரை மற்றவர்களுடன் சரிநிகர் சமானமாக ஆக்கப் பின்வரும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அ. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் துவக்கப் பள்ளிகள் திறக்க
முன்னுரிமை அளிக்கப்படும். பொதுவாகக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மட்டுமின்றி, ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டம் பழங்குடியினர் நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றின் நிதியிலிருந்தும், முன்னுரிமை தந்து, இப்பகுதிகளில் பள்ளிக் கட்டடங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆ. பழங்குடியினரின் சமூக பண்பாட்டியல் பின்னணிகள்: பல சமயங்களில் அவர்களின் சொந்த பேச்சு மொழிகள் உள்பட _ தனித் தன்மைகள் கொண்டவை. இது பாடங்களையும், கல்விக் கருவிகளையும் ஆரம்பக் கட்டத்தில் அவர்களின் பேச்சு மொழிகளில் வடிவமைத்து, பிறகு வட்டார மொழிக்கு மாற்றிக்கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது.

இ. படித்த பிரகாசமான பழங்குடி இளைஞர்களுக்குத் தங்கள் பகுதிகளில் ஆசிரியப் பணியில் சேர ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்படும்.

ஈ. ஆசிரமப் பள்ளிகள் உள்பட, வசிக்க வசதி கொண்ட பள்ளிகள் அதிக அளவில் நிறுவப்படும்.

உ. அவர்களது தனித் தேவைகளையும் வாழ்க்கை முறையையும் கவனத்தில் கொண்டு பழங்குடியினருக்கான ஊக்கப் பரிசுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும். உயர்கல்விக்கான உதவித்தொகைத் திட்டங்களில் தொழிற்கல்வி, தொழில் சார் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, ஆகியவற்றுக்கு அழுத்தம் தரப்படும். குறை நிவர்த்திக்கும் சிறப்பு வகுப்புகள், மற்ற திட்டங்கள்மூலம் சமூக –  மனவியல் தடைகளை உடைத்துக்கொண்டு அவர்கள் பலதுறைக் கல்வியிலும் தேர்ச்சி பெறுவதற்கு உதவப்படும்.

ஊ. அங்கன்வாடி, முறைசாராக் கல்வி மய்யங்கள், முதியோர் கல்வி மய்யங்கள் ஆகியவற்றில் பழங்குடியினர் பிரதானமாக வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

எ. பழங்குடி மக்களின் வளமான பண்பாட்டு மரபுகளையும், அவர்களது ஏராளமான படைப்புத் திறன்களையும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வியின் எல்லா நிலைகளிலும் பாடங்கள் வடிவமைக்கப்படும்.

கல்வியில் பிற்படுத்தபட்ட பிற பிரிவினரும் பிற இடங்களும்

4.7 கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்கும்- குறிப்பாக நாட்டுப்புறத்து மக்களுக்கு  உரிய வகையில் ஊக்கப் பரிசுகள் ஏற்படுத்தப்படும். மலையக  பாலைநில மாவட்டங்கள், தொலைதூரப் பகுதிகள், போக்குவரத்து வசதிக் குறைவான பகுதிகள், தீவுகள் ஆகிய பகுதிகளுக்கும் போதுமான நிறுவனக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படும்.

சிறுபான்மையினர்

4.8 சில சிறுபான்மை இனங்கள் கல்வியைப் பொறுத்தவரை வசதியற்றவைகளாகவோ_ பிற்படுத்தப்பட்டனவாகவோ உள்ளன. சமூக நீதியும் சமத்துவமும் பேணப்பட வேண்டுமென்ற வகையிலே இவ்வினங்களின் கல்வியில் இன்னும் அதிக கவனம் செலுத்தப்படும். தமது சொந்தக் கல்வி நிறுவனங்களை நிறுவிக் கொள்ளவும் நிருவகிக்கவும் தமது மொழிகளையும் பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ளவும், அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உறுதிகளும் இதிலடங்கும். அதேசமயம் பாடநூல் தயாரிப்பிலும் எல்லா பள்ளிச் செயல்பாடுகளிலும், பாகுபாடின்மை கடைப்பிடிக்கப்படும். அடிப்படையில் பாடக் கூறுகளுக்கிசைந்த முறையில் பொதுவான தேசிய இலக்குகளையும் இலட்சியங்களையும் போற்றும் அடிப்படை கொண்ட ஒருமைப்பாட்டை வளர்க்கவும். இயன்ற நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

குறைபாடுடையோர் மனக் குறைபாடுடையோர், உடல் குறைபாடுள்ளோர் எல்லாரையும் சமூகத்தின் பிற உறுப்பினர்களுடன்
சம பங்காளிகளாக இணைப்பதும், அவர்களையும் இயல்பான வளர்ச்சிக்கு தயார் செய்வதும், வாழ்க்கையைத் துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்ளுமாறு செய்வதும் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்காக பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

அ. இயன்ற இடத்தில் எல்லாம் நடக்கும் குறைபாடோ பிற எளிய குறைபாடோ கொண்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் சேர்த்தே கல்வியளிக்கப் படும்;

ஆ. தீவிரக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதியுடன் கூடிய தனிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

இ. குறைபாடுடைய குழந்தைகளுக்குத் தொழிற்பயிற்சி தர போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஈ. ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், குறிப்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கானவை. குறைபாடுள்ள குழந்தைகளின் சிரமங்களை எதிர்கொள்ளப் பயிற்றுவிப்பனவாகச் சீரமைக்கப்படும்.

உ. குறைபாடுள்ள குழந்தைகளின் கல்விக்கான தற்சார்பு நிறுவனங்களின் முயற்சிகள் இயன்ற வகையெல்லாம் ஊக்குவிக்கப்படும்.
வாழ்க்கை மதிப்பீட்டுக் கல்வி

8.4 அடிப்படை மதிப்பீடுகள் சீர்கேடுற்று வருதல் குறித்து வளர்ந்து வரும் கவலையும் சமூகத்தில் எதையெடுத்தாலும் குறை சொல்லும் தன்மை பெருகி வருவதும், சமூக தார்மிக மதிப்புகளை விதைப்பதில் கல்வியை ஒரு வலுவான கருவியாக்கும் வகையில் பாடங்களில் மறுமாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையை மய்யத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.

8.5 பண்பாட்டு அடிப்படையில் பன்முகங் கொண்ட நமது சமுதாயத்தில் கல்வியானது காலமும் இடமும் கடந்த பொது அறங்களை வளர்க்க வேண்டும். நமது மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மய்யமாகக் கொள்ள வேண்டும். மதவெறி, மூடநம்பிக்கை, வன்முறை, விதியை நோதல், கண்மூடிப்பழக்கங்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதில் அத்தகைய மதிப்பீட்டுக் கல்வி பேருதவியாயிருக்கும்.

8.6 இந்த எதிர்மறைப் பணி தவிர, மதிப்பீட்டுக் கல்வி ஆழ்ந்ததோர் நேர்மறை உள்ளடக்கம் கொண்டதுமாகும். அந்த உள்ளடக்கம் நமது மரபுகளையும் தேசிய இலக்குகளையும் உலகளாவிய இலக்குகளையும், உலகு தழுவிய பார்வையையும் அடித்தளமாகக் கொண்டது கல்வி இந்த அம்சத்துக்கு முதல் மரியாதை தர வேண்டும். ♦