– முனைவர் கடவூர் மணிமாறன்
காலக் கொடையாய், காஞ்சி வழங்கிய
ஞாலம் போற்றும் தலைவர் அண்ணா!
இருமொழிக் கொள்கை இனிதே வகுத்தவர்;
பெருமை ஒளிரத் தமிழ்நா டென்று
பெயரைத் தந்தபே ரறிஞர் அண்ணா
உயரிய கொள்கை உரத்தினர்; மாண்பினர்
பண்பின் உறைவிடம்; பகுத்தறி வாலே
கண்ணியம் கடமை கட்டுப் பாட்டினைத்
தொண்டர்க் குணர்த்திய தொண்டறச் செம்மல்!
திண்ணிய நோக்கினர்; திராவிடக் குரிசில்!
பெரியார் குருகுலம் பயின்ற இவரோ
நரியார் கூட்டம் நடுங்கவே தமது
எழுத்தால் பேச்சால் எழுச்சி விதைத்தார்;
கொழுத்தோர் தம்மின் கொட்டம் சிதைத்தார்;
“மாற்றான் தோட்ட மல்லிகை மணக்கும்”
போற்றற் குரிய பொன்மொழி புகன்றவர்;
திராவிட நாடு, காஞ்சி மற்றும்
திராவிடம் புதுக்கிய குடியர சிதழ்களில்
கருத்தியல் மூலம் கயமைப் போக்கினர்
வெறுப்பை விலக்கி விருப்பை வளர்த்தார்
இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்தவர்;
சந்தி சிரிக்கும் சாத்திரப் புளுகுகள்
வேதப் புரட்டுகள் வேண்டா மடமை
சாதி மதத்தின் சழக்கு யாவையும்
வேருடன் வீழ்த்திட வெங்களம் நின்றவர்;
சீருறப் பொழிந்த செந்தமிழ்க் கொண்டல்!
தமிழ்நாட் டரசின் தனித்த முதல்வராய்
நிமிர்ந்தே ஆட்சி நிலைபெறச் செய்தவர்;
இலக்கிய உலகிலும் திரையுல கினிலும்
நலம்சார் அரசியல் உலகிலும் வாழ்வில்
முத்திரை பதித்த அண்ணா நற்புகழ்
இத்தரை தன்னில் என்றும் வாழுமே! ♦