புத்தர் 45 ஆண்டுகள் ஏறத்தாழ வட இந்தியா முழுவதும் கால்நடையாகவே சென்று தனது பரப்புரைப் பயணத்
தினை மேற்கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களின் அய்யங்களைத் தீர்த்தபடியே இடம் விட்டு இடம் ஊர் விட்டு ஊர் என்று அவர் சென்றுகொண்டே இருந்தார். தங்கக்கூட இடமின்றி பெரும்பாலான சமயங்களில் அவர் சாலை ஓர மரங்களின் நிழலில் தங்கினார். ஒரு துறவியாய் அவர் மூன்று துவராடைகள் மட்டுமே வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வாழ்ந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் வீடு வீடாகச் சென்று உணவைக் கொடையாகப் பெற்றே உண்டார். பிற்காலத்தில் தான் அவரது உபாசக சீடர்களால் தோப்புகளும் கட்டடங்களும், தங்குமிடங்களும் அளிக்கப்பட்டு அவற்றில் அவர் தங்கினார்.
இவ்வாறு புத்தர் பரப்புரை செய்த காலம் எப்படிப்பட்டது? சென்னை எழும்பூர் மகா போதி சங்கத்தில் ஆற்றிய உரையில் தந்தை பெரியார் “புத்தர் பிறந்த காலம் ஆரியம் தலைசிறந்து மக்கள் ரொம்பவும் காட்டுமிராண்டிகளாக ஆக்கப்பட்டிருந்த காலம்’’ என்று குறிப்பிட்டு உள்ளார் (விடுதலை 17.5.1957). ஆரியம் அங்கிங்கெனாதபடி எங்கும் தலைகொழுத்துத் திரிந்த காலத்தில், புத்தர் தனது பரப்புரைப் பயணத்தின்போது ஆரியப்பார்ப்பனர்களால் சந்தித்த எதிர்ப்புகளும் இழிமொழிகளும் ஏராளம். பல இடங்களில் புத்தரைத் தடுத்து நிறுத்தி தமது பிராமணப் பெருமையையும் உயர்ஜாதி ஆணவத்தையும் நேருக்கு நேர் சுட்டிக்காட்டி பண்பாடு அற்ற முறையில் அன்பே உருவான அறவோன் புத்தரை இழிவுபடுத்திய நிகழ்ச்சிகள் பல உண்டு.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.” (குறள் எண் 151)
என்பதற்கிணங்க அவற்றை எல்லாம் புன்னகையோடு எதிர்கொண்டு விழிப்புணர்வூட்டும் தக்க விடைகளை ஆங்காங்கே அளித்துக்கொண்டே தனது பரப்புரைப் பயணத்தை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். அவற்றுள் ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்குக் காண்போம்.
1.அ) தனது பரப்புரைப் பயணத்துக்கிடையில் சிராவஸ்தியில் உள்ளஜேதவனம் என்ற இடத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஆசுவலா
யனன் என்ற பார்ப்பனனின் தலைமையில் ஒரு கூட்டம் புத்தரைக் கண்டு உரைத்த ஆணவச் சொற்கள் இவை:
“கோதமரே! பிராமண ஜாதியே உயர்ந்தது. மற்ற ஜாதிகள் தாழ்ந்தவை, பிராமணர் வெள்ளை நிறத்தவர். மற்றவர் கருப்பர்கள். பிராமணர்களுக்குத்தான் முக்தி
கிடைக்கும். மற்றவர்களுக்குக் கிடைக்காது.
பிராமணர்கள் பிரம்மனின் வாயிலிருந்து பிறந்தவர்கள். அவர்கள் அவனுடைய சொந்தப் பிள்ளைகள். எனவே, அவர்கள்தாம் பிரம்மனிடம் செல்வதற்கு உரிமை உடையவர்கள். இதைப்பற்றித் தங்கள் கருத்து என்ன?” இதற்குத் தக்க விடையைப் புத்தர் அளித்தார்.
ஆசுவலாயனா! பிராமணர்களின் மனைவியர்
பூப்படைகிறார்கள்; கருத்தரிக்கிறார்கள்; குழந்தைகள் பெறுகிறார்கள்; பாலூட்டுகிறார்கள்; இவ்வாறு பிராமணர்களும் மற்ற ஜாதிக்காரர்களைப் போலவே தாயின் வயிற்றிலிருந்தே பிறக்கிறார்கள். அப்படியிருக்க அவர்கள் மட்டும் பிரம்மனுடைய வாயிலிருந்து தோன்றியதாகக் கூறிக்கொள்வது வியப்பாக இல்லையா? பிராமணர்கள் தான் ஜாதிகள் அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளுவதற்கு ஆதாரம் என்ன?” என்று கேட்டார் புத்தர்.
ஆ)மற்றொருமுறை புத்தர் ஜேதவனத்தில் இருந்தபோது ஏசுகாரி என்ற பார்ப்பனன் புத்தரைப் பார்த்துக் கீழ்க்கண்டவாறு உயர்ஜாதித் திமிரோடு கூறினான்.
“கோதமரே! பிராமணர்களுக்கு மற்ற மூன்று ஜாதிக்காரரும் தொண்டூழியம் செய்யப் பிறந்தவர்கள் என்றும், சத்திரியருக்கு வைசிய, சூத்திரரும் வைசியருக்குச் சூத்திரரும் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்றும், சூத்திரர்கள் மற்ற மூன்று ஜாதியினர்க்குத் தொண்டூழியம் செய்யப் பிறந்தவர்கள் என்றும் பிராமணர்கள் கூறுகிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டான். இதற்கு விடை அளிக்கையில் ”பிராமணரே! அந்தப் பிராமணர்களின் இந்தக் கருத்தை
மக்கள் எவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்களா? இவ்வாறு பிராமணர்களுக்கு மற்றவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று சொல்ல அவர்களுக்கு யார் எப்போது உரிமை கொடுத்தது? என்று வினவினார் புத்தர்.
(மச்சிம நிகாயம் ஆசுவலாயன சூக்தம் மற்றும் தர்மானந்த கோசம்பி எழுதிய பகவான் புத்தர் ஆகிய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குருவிக்கரம்பை வேலு எழுதிய ‘இவர்தான் புத்தர்’ எனும் நூல் பக்கங்கள் 98 மற்றும் 102)
2. பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதி தமிழ்நாடு பவுத்த சங்கம் (சென்னை 40. இரண்டாம் பதிப்பு 2014) வெளியிட்ட புத்தம் சரணம் என்ற நூலில் (பக்கம் 79) எடுத்துக்காட்டப்படும் நிகழ்ச்சி வருமாறு:-
இதே ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது ஒரு நாள் வழக்கம் போல் பாத்திரத்தை ஏந்தி உணவுக்கொடை பெறுவதற்காகப் புறப்பட்டுச் செல்கையில் பரத்வாஜன் என்ற பார்ப்பனனின் வீட்டருகே சென்றார். புத்தரைக் கண்ட பரத்வாஜன் “வா ஸ லா நில் அங்கே! என ஆணையிட்டான். மழித்த தலையை உடையவரே! அனுதாபத்துக்கு உரியவரே! தீண்டத்தகாத இழிந்தவரே! நில் அங்கே!” என்று ஜாதி வெறியுடன் கத்தினான். புத்தர் கோபம் கொள்ளவில்லை. அமைதியாய்ப் புன்னகைத்தார். நிற்கவும் இல்லை. பரத்வாஜனை அணுகிச் சென்று பேசினார். யார் தீண்டத்தகாதவர்? எவையெல்லாம் ஒருவரை இழிந்த நிலைக்கு உள்ளாக்குகின்றன என அறிவாயா நீ ? அந்தணனே சொல்! பிறப்பால் ஒருவர் இழிந்தவராவதில்லை. பிறப்பால் எவரும் பிராமணன் ஆவதுமில்லை. அவரவர் செயலால் ஒருவர் இழிந்தவர் ஆகிறார். அவரவர் செயலால் ஒருவர் அந்தணர் ஆகிறார். அந்தப் பார்ப்பனருக்குப் புத்தர் கொடுத்த பதிலடி இது.
3) ஆசிய ஜோதி என்ற பெயரில் (சென்னை பாரி நிலையம் வெளியீடு. 1941) புத்தரின் கதையை ஒரு காவியமாகப் பாடிய கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்களின் கீழ்க்கண்ட கவிதை வரிகளை இங்குச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக அமையும்.
“ஓடும் உதிரத்தில் வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப்பார்த்தாலும் – சாதி
தெரிவதுண்டோ – அப்பா
எவர் உடம்பினிலும் – சிவப்பே
இரத்த நிறமப்பா
எவர் விழி நீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா
நெற்றியில் நீறும் _- மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றிவ்வுல குதனில் _ – எவரும்
பிறந்ததுண்டோ – அப்பா
பிறப்பினால் எவர்க்கும் _ உலகில்
பெருமை வராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
பிராமணியத்துக்கு எதிராக வாதிடுவதில் புத்தர் கடைப்பிடித்த உத்தி என்ன?
உயர்ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தும் பிராமணர்களிடம் அதனை மறுத்து வாதிடு
வதற்குப் புத்தர் என்ன உத்தியைக் கடைப்பிடித்தார்? புத்தரின் பேருரைகள் பலவற்றைச் சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மூன்று தொகுதிகளாக அளித்த பவுத்த அறிஞர் ரைஸ் டேவிட்ஸ்(Rhys Davidas) அவர்கள் புத்தர் வாதிடுவதற்குப் பின்பற்றிய முறையைப் பற்றிக்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
கேள்வி கேட்கிற அல்லது விவாதிக்கிற எதிராளியின் மனநிலையில் தன்னை அவர் நிறுத்திக் கொள்வார். எதிராளியின் புனித நம்பிக்கை எதையும் அவர் தாக்குவதில்லை. எதிராளியின் அடிப்படைக் கருத்துகளிலிருந்து தான் வேறுபடவில்லை என்றே தொடங்கிப் படிப்படியாகப் பயன்படுத்துகிற சொல்லாடல்களில் புதுப்புதுப் பொருள்களைத் திணிப்பதன் மூலம் அவர் எதிராளியைத் தன் கருத்துக்கு இணங்க வைப்பார்.
எடுத்துக்காட்டாக, பிறவியிலேயே பார்ப்பனர் உயர்ந்தவர் என எதிராளி சொன்னால், பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் தான் என்று தொடங்கி, ஆனால் அது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்று நிறுவுவார். பிறவியில் பார்ப்பனரானவர்கள் இழிவானவர்களாகவும் இருக்கமுடியும் என முடிப்பார்.
எதிராளியின் நிலைப்பாட்டையும் மொழியையும் கைக்கொள்ளும் இம்முறையை ‘உபய கவ்சல்ய’ என்பர்.(Rhys Davids Dialogues of Buddha 3 vol. Delhi. 2000. பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய புத்தம் சரணம் நூல் பக்கங்கள் 77-78)
(தொடரும்)