– டாக்டர் செந்தாமரை
எதையும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் அதன் உண்மைத் தன்மை தெளிவாகத் தெரியும் என்றார் சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள்.
அப்படிப்பட்ட அய்யா அவர்கள் 90 ஆண்டுகளுக்கு முன் பேசியதுதான் இன்று மருத்துவத்துறையின் வளர்ச்சியாக நடந்து
கொண்டிருக்கிறது. ஆண், பெண் சேர்க்கை இல்லாமலேயே குழந்தை பிறப்பு ஏற்படும் என்று ‘டெஸ்ட் டியூப் பேபி’ குறித்துப் பேசியிருக்கிறார்கள். 1978ஆம் ஆண்டு சூன் 25இல் முதல் சோதனைக்குழாய் குழந்தை லூசி ஜாய் பிரவுன். இதற்கான ஆய்வை மேற்கொண்டவர் இராபர்ட் எட்வர்ட். இந்த ஆராய்ச்சிக்காக இவருக்கு 2010ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. சோதனைக்குழாய் முறையில் இந்தியாவில் பிறந்த முதல் பெண் குழந்தை ஹர்ஷா. இவரது பெற்றோர் குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ராவைச் சார்ந்தவர்கள். இம்முறையை இங்கு அறிமுகப்படுத்தியவர் மருத்துவர் இந்திரா இந்துஜா அவர்கள். இவரும் மருத்துவர் குசும் சவேரியும் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைக்குழாய் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிறக்கச் செய்துள்ளனர். மருத்துவ அறிவியல் வளர்ச்சி பல அபரிமிதமான வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்திவருகின்றது.
இரத்த வங்கி என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது விந்தணுக்கள் சேமிப்பு வங்கிகள் (Sperm Bank)அதிகம் உருவாகி வருகிறது. குழந்தை பிறப்பிற்காக அரச மரங்களையும், ஆல மரங்களையும் சுற்றக்கூடிய அவலம், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு ஆன்லைன் டிக்கெட் எடுக்கக்கூடிய அவலம் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அறிவியல் வளர்ச்சியினால் விந்து செல்களைச் சேகரித்து அவை 10 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. ஜான் நெஸ்பித் என்பவர் Hi Tech Hi Touch என்ற புத்தகத்தில் Children without sex இதற்கு முன் குழந்தை பிறப்பைத் தடுப்பதற்கு என்ன வழிமுறைகள் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. இப்பொழுது Children without sex என்ற அளவிற்கு மருத்துவ வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது. இதுதான் இப்பொழுது Semen Bank என்று வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது. ஒரு இளைஞரின் பெற்றோர் அவரது மகன் இறந்துவிட்டதால் சேமித்து வைக்கப்பட்ட விந்தணு செல்களைக் கொடுத்து அதன் மூலம் அவர்களின் வாரிசை உருவாக்க வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்களுடைய மகன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் திருமணமாகாத அவருக்கு புற்றுநோய் கதிரியக்கச் சிகிச்சை மேற்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற காரணத்தால் அவருடைய விந்து செல்களைச் சேமிக்க அறிவுறுத்தினர். அப்படி சேமித்து வைக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததால் அவரின் பெற்றோர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். இராணுவத்தில் இருப்போர், வெளிநாட்டில் வேலைபார்ப்போர் போன்றோருக்குக் குழந்தை பிறப்பிற்கு இது ஓர் அரிய வாய்ப்பு. மருத்துவத்துறையில் இது மிகப்பெரிய புரட்சி.
கடந்த செப்டம்பர் மாதம் ‘விடுதலை’ தலையங்கத்தில் வந்த ஒரு செய்தி, 2020இல் வருமான வரித்துறையில் வேலை பார்த்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமலேயே உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. அவர் இன்னும் இறக்கவில்லை அவருடைய ஆன்மா உயிரோடுதான் இருக்கின்றது. கங்கை நீரை இரண்டு ஆண்டுகள் அவர் மேல் தெளித்தால் ஆன்மா உடலோடு சேர்ந்து உயிர்பெற்றுவிடுவார் என்று சாமியார் ஒருவர், சொன்னதை உறவினர்கள் நம்பி இரண்டு வருடமாக கங்கை நீரைத் தெளித்து வந்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினரிடம் அவர் கோமாவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விடுமுறை விண்ணப்பம் கொடுக்காததாலும், அவர்கள் அனுப்பிய கடிதத்திற்குப் பதில் ஏதும் அனுப்பாததாலும் வருமான வரித்துறையினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உடல்அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடனே உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கும், உறவினர்களை மனநல மருத்துவமனைக்கும் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். தந்தை பெரியார் கூறிய பக்தி வந்தால் புத்தி போகும் என்ற கருத்து நூற்றுக்கு நூறு உண்மையாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. படித்தவர்களேகூட மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பது இந்தச் சமூகத்தின் அவலநிலையைக் காட்டுகின்றது.பெற்ற தாய், வளர்த்த தாய் இவற்றின்வரிசையில் அறிவியல் விஞ்ஞானம் வாடகைத்தாய் இணைத்திருக்கின்றது.
அமெரிக்காவில் இது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இது அறிவியல் வளர்ச்சி என்றாலும் சமூக ரீதியாக இது இன்னும் இந்தியாவில் அதிகம் நடைமுறையாகவில்லை. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. பம்பாயில் வெளிவந்த ஒரு ஆங்கில நாளேட்டில் வந்த விளம்பரத்தில் அழகான, மிகுந்த வசதிபெற்ற உயர்ஜாதியின இணையருக்கு வாடகைத்தாய் வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் ஆரோக்கியமான, கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் பொருளாதார உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பிறப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்பொழுது பிரபல நடிகை ஒருவருக்கு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பிறந்த செய்தி நாம் அனைவரும் ஊடகங்களின் வழியாகப் பார்த்து வருகிறோம். பெண்கள் உடல் ஆரோக்கியம், அழகு கெட்டுப்போதல் போன்ற காரணங்களால் குழந்தை பிறப்பிற்கு இம்மாதிரியான விஞ்ஞான வளர்ச்சியைக் கையாளுகின்றனர்.
பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரமா என்று கேள்விகள் கேட்டவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள். பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள், அடிமைத்தனங்கள் இப்பிள்ளைப் பேற்றினைக் காரணம் காட்டி நிகழ்வதால் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறி பெண் விடுதலையின் உச்சத்திற்கே சென்றவர் அறிவு ஆசான் தந்தை பெரியார்அவர்கள். இந்தச் சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இடத்திலிருந்து அவர்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் சிந்தித்த ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அப்படி சிந்தித்ததன் விளைவு தான் குடும்பக் கட்டுப்பாடு முறை. 80களில் ‘நாம் இருவர் நமக்கிருவர்’, பின் ‘நாம் இருவர் நமக்கொருவர்’, இப்பொழுது ‘நாமே குழந்தைகள் நமக்கேன் குழந்தைகள்’ என்ற அளவிலே குடும்பக் கட்டுப்பாட்டு முறை மேலோங்கியிருக்கின்றது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப மருத்துவ வளர்ச்சியை ஆச்சரியத்துடன் பார்க்கச் செய்துள்ளது. கம்பியில்லா சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும், தொப்பியில் ரேடியோ இருக்கும், தொலைதூரத்தில் இருப்பவர்களும் முகம் பார்த்து பேசக்கூடிய சூழ்நிலை உருவாகும், ஊட்டச்சத்துக்கள் சுருக்கப்பட்டு ஒரு குப்பியில் அடைக்கப்படும், ஆயுள்நீட்சியென்பது இரண்டு மடங்காக உயரலாம், பொலிவான ஆரோக்கியமான மக்கள் உருவாகும் வாய்ப்புகள் பிறக்கும் என்று தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அய்யா அவர்களுடைய கனவு என்று சொல்வதைவிட கணிப்பு நனவாகியுள்ளது.
இன்று விபத்துகளினால் மனித உயிர்களை காக்கத் தேவைப்படும் இரத்தம் மற்றும் உடல் உறுப்புகள் உடனடியாக வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு அனுப்பப்பட்டு விபத்துக்குள்ளானவர்களைக் காக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு இருக்கும் போது இரத்ததானம் இறந்த பிறகு கண்தானம் என்றார்கள். இப்பொழுது இருக்கும்போது இரத்ததானம், உடல் உறுப்பு தானம் போன்றவை நடைபெறுகிறது. இறந்த பிறகு உடல்கொண்ட கண்தானம் என்றார்கள். இப்பொழுது இருக்கும்போது இரத்ததானம், உடல் உறுப்பு தானம் போன்றவை நடைபெறுகிறது. இறந்த பிறகு உடல்கொடை என்ற மனித நேய தொண்டறப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விநாயகரின் தலையை வெட்டி யானைத் தலையை இணைத்தது தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடி என்ற சொல்லக்கூடியவர்களும் இந்தியாவில்தான் உள்ளனர். பகுத்தறிவுச் சிந்தனையும் மனிதநேயமும் இருப்பதால்தான் உடல் உறுப்புக் கொடையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நமது திராவிடர் கழகத் தோழர்கள் அதிக அளவில் உடற்கொடை வழங்குகின்றனர்.
கொரோனா நமக்குக் கற்பித்த பாடங்கள்ஏராளம். அதிகமானவர்களை நாம் இழந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட இக்கட்டான காலத்தில் கல்வி பாதிக்கப்படாத வகையில் வீட்டிலிருந்தே அனைத்து மாணவர்களும் செல்போனின் உதவியுடன் கல்வி கற்றனர். ஒருவருக்கொருவர் தனித்திருந்தாலும் உலக அளவில் நடைபெறக்கூடிய கொரோனா குறித்த தகவல்கள், அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தொழில்நுட்ப உதவியினால் நாம் வீட்டிலிருந்தே தெரிந்துகொண்டோம். கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சிகள் வீடியோ கான்பரன்சிங் உதவியுடன் நாட்டுக்கு நாடு நடைபெற்றது. அதனால் தான் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘Go கொரோனா ‘Go கொரோனா’ என்றால் கொரோனா ஓடிவிடாது. கை தட்டினாலும், மணி அடித்தாலும் கொரோனா ஓடிவிடாது. மருத்துவ வளர்ச்சி, ஆராய்ச்சியின் பலன்தான் இன்று கொரோனா முற்றிலும் ஒழியாவிட்டாலும் கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமல்ல மிகப்பெரிய அறுவை சிகிச்சைகளைத் தடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. CT, MRI, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டேஸ்கோபி, லேப்ராஸ்கோபி போன்ற மருத்துவ தொழில்நுட்ப வசதிகளின் உதவியால் ஒரு துளையிட்டு மிகப்பெரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சிகிச்சை பெறும் காலங்களும் குறைவு. ஆபத்துகளும் குறைவு.
மேலும் பாவத்தினாலும் சாபத்தினாலும் தான் புற்றுநோய் ஏற்படுகின்றது என்ற மூடநம்பிக்கைகளினாலும் எல்லாம் விதிப்படி என்ற அறியாமையினாலும் புற்றுநோய் முற்றிய நிலையில் மக்கள் மருத்துவமனையினை அணுகுகின்றனர். இதனாலேயே குணப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகின்றது. முன்பெல்லாம் புற்றுநோய் கட்டியா என்று பரிசோதிக்க சதை பரிசோதனை எடுப்பதற்கு அதிக நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். பரிசோதனை முடிவு வருவதற்குள் புற்றுநோய்க் கட்டியாக இருந்தால் அதன் வளர்ச்சி அபரிமிதமாகிவிடும். தற்பொழுது ஏற்பட்டுள்ள மருத்துவ வளர்ச்சியினால் அய்ந்து ஆண்டுகளுக்கு பின்னால் வரும் புற்றுநோயினைக் கண்டறியக்கூடிய அளவில் மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இப்பொழுது புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஸ்லோன் கெட்டரிங் மெமோரியல் கேன்சர் சென்டர் (Sloan Kettering Memorial Cancer Centre) Dostar limab என்ற மருந்து நூறு சதவிகிதம் புற்றுநோயினை குணப்படுத்தியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்குக் கொடுக்கப்படும் கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி சிகிச்சை இல்லாமல் இம்மருந்து புற்றுநோயினை முற்றிலும் குணப்படுத்தியுள்ள
தாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இவையெல்லாம் மருத்துவ அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் இத்தகைய வளர்ச்சியினால் மனிதர்களில் ஆயுட்காலம் அதிகமாகியிருக்கின்றது. சராசரி ஆயுட்காலம் 40லிருந்து 50, 50லிருந்து 60 என்ற நிலை இன்று 70அய் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. பகுத்தறிவாளர்கள், நாத்திகர்களின் ஆயுள் மற்றவர்களைவிட அதிகமாகியிருக்கின்றன.
தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குப் பார்வை இன்று மருத்துவத்துறையில் உச்சத்தைத் தொட்டுள்ளது. நான் 1989ஆம் ஆண்டு மருந்தியல் கல்லூரியில் பணியில் சேர்ந்தபோது தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எனக்கு அதிக அளவு தெரியாது. பாடத்திட்டத்தில் பள்ளிகளில் படித்ததோடு சரி. பிறகு இந்த நிறுவனத்தில் இணைந்த பிறகு அய்யா அவர்களின் புத்தகங்களில் அவர்களின் எழுத்து நடையைப் புரிந்துகொள்வதற்கு ச்சிரமமாக இருந்தது. தொடர்ந்து அதனை படிக்கும் பொழுதுதான் அய்யா அவர்களின் சிந்தனைகள், கருத்துகள், தொலை நோக்குப் பார்வை எனக்கு ஆச்சரியத்தையும், பிரம்மிப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் குறித்து அய்யா அவர்கள் சிந்தித்த அளவிற்கு மற்ற எந்தத் தலைவரும் சிந்தித்திருக்க முடியாது.
நான் முதல்வர் ஆன பிறகு ஆரம்பத்தில் ஆசிரியர் அய்யா அவர்கள் இருக்கக்கூடிய மேடைகளில் தந்தை பெரியார் அவர்கள் பற்றிப் பேசுவதற்கு, நாம் சரியாகப் பேசிவிடுவோமா என்று எனக்குள் தயக்கம் இருக்கும். தொடர்ந்து ஆசிரியர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல், தந்தை பெரியாரின் புத்தகங்கள் எனக்குள்ள பயத்தைப் போக்கி ஆர்வத்தைத் தந்தது. பகுத்தறிவுப் பாசறையின் மூலம் இணைந்திருக்கக்கூடிய நாம் அய்யா அவர்களின் அறிவியல் அணுகுமுறைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்திற்கும், அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் அடித்தளம் பகுத்தறிவே. அத்தகைய பகுத்தறிவுச் சிந்தனைகளை நம்முடைய மாணவர்களிடத்தில் எடுத்துச்செல்வது நம்முடைய மிகப்பெரிய கடமை. ஏனென்றால் புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் குலக்கல்வித் திட்டம் புகுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர்-களுக்கு வர்ணாசிரமம், ஜாதி, மதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. பிஞ்சிலேயே நஞ்சுக் கருத்துகள் அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை மேம்படுத்த ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தைப் போட வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் வாழும் நாடாக நம் நாடு மாறிக்கொண்டிருக்கின்றது. இதற்குத் தீர்வு மாணவ சமுதாயத்தை பகுத்தறிவான சமுதாயமாக உருவாக்கினால்தான் நம் நாடு திராவிட நாடாக இருக்கும். தந்தை பெரியார் தாம் வாழ்ந்த காலத்தைவிட இப்பொழுது மிக அதிகமாகத் தேவைப்படுகிறார்.
பெரியார் உலகமயமாகிறார் என்பதைக் கடந்து உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நம்முடைய திராவிட மாடல் அரசு தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளினை சமூக நீதி நாளாக அறிவித்தது. இந்த ஆண்டு பெரியார் உலகத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க..ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். நமது வல்லம், திருச்சி அருகே சிறுகனூரில் பெரியார் உலகம் அமையவிருப்பது நமக்கெல்லாம் பெருமை, இரட்டிப்பு மகிழ்ச்சி.
அறியாமை மூடநம்பிக்கை, அடிமை போன்ற சமூகப்பிணிகளுக்கு ஒரு மாமருந்துதான் தந்தை பெரியார் அவர்கள். அத்தகைய மாபெரும் தலைவரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பெரும்பொறுப்பை நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு Scientific Temper என்று சொல்லக்கூடிய அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். பகுத்தறிவு வளர்ந்தால் அனைத்து துறைகளும் வளரும். ♦