– ஆறு. கலைச்செல்வன்
பகலவனைச் சந்தித்தான் அவனது நண்பன் கலைவேந்தன். இளைஞர்களான இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
கலைவேந்தன் கையில் நாளிதழ் ஒன்று இருந்தது. முகத்தில் சோகமும் வேதனையும் காணப்பட்டது.
“நாளிதழில் என்ன முக்கிய செய்தி”, என்று கலைவேந்தனைப் பார்த்துக் கேட்டான் பகலவன்.
“கடவுள்களின் பெயரால் காடுகளை அழித்து சிலைகளையும், கோயில்களையும் கட்டி வருகிறார்கள். இப்படிக் காடுகளை அழித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு திருவிழா வேறு நடத்தப்போறாங்களாம். நாளிதழில் செய்தி வந்திருக்கு. இப்படிக் காடுகளை அழித்து, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கினால் நாடு என்னாவது? பிற்கால சந்ததியினர் அழியவேண்டியதுதானா’’ என்றான் கலைவேந்தன்.
“அரசியல்வாதிகளின் ஆதரவோடு நடைபெறும் கொடுமை அது. காடுகளை துணிச்சலாக அழித்து அதன் மூலம் வன விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் நிர்மூலமாக்குகிறார்கள் பல சாமியார்கள். மக்களும், நமக்கு இதனால் எதுவும் பாதிப்பில்லை என்ற தவறான எண்ணத்தில் மதத்தின் கோரப்பிடியில் சிக்கி வாளாவிருந்து வருகிறார்களே! இதையெல்லாம் நினைக்கையில் பெரும் கவலை ஏற்படுகிறது’’ என்று தனது கவலையை வெளிப்படுத்தினான் பகலவன்.
அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
“கலைவேந்தா! நம்மைப் போன்ற இயற்கை ஆர்வலர்களும் பேசாமல் இருந்தால் நாடு என்னாவது? நாம் ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்.’’
“எல்லோரும் பேசாமல் இருந்தால் மனிதகுலம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் அழிந்துபோகும். உலகமே பாலைவனமாகிவிடும்.’’
“மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த-வேண்டும். இயற்கை ஆர்வலர்களை ஒன்றிணைக்கவேண்டும். அரசுக்கும் நிலை
மையை எடுத்துச் சொல்லவேண்டும். மக்களின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்க்க உடனடியாக நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே’’
“நீ சொல்றதும் சரிதான் பகலவன்! காடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாம் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டால் என்ன-?’’
“கண்டிப்பாகச் செய்வோம் கலைவேந்தா! மார்ச் மூன்று அன்று உலக வனவிலங்கு நாள் வருகிறதல்லவா? அன்று நம் பயணத்தைத் தொடங்கலாமா?
“தொடங்கலாம். எந்தெந்த ஊர்களின் வழியாகச் செல்லலாம் என்பதை இயற்கை ஆர்வலர் அமைப்புகளோடும் சமூக நல அமைப்புகளோடும் கலந்து பேசி முடிவு செய்வோம். மார்ச் 21ஆம் நாள் உலக காடுகள் நாள் வருகிறதல்லவா? அன்றைய நாள் வரை நாம் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தைத் தொடர்வோம்.’’
இவ்வாறு அவர்கள் முடிவு செய்தபின் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர்.
பகலவனும் கலைவேந்தனும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்லாமல் இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள். இருவருமே தாவரவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று அதில் முனைவர் பட்டமும் பெற்றவர்கள்.
நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதை உணர்ந்த இருவரும் மிகவும் கவலை கொண்டனர். இயற்கையை அழிப்பதில் மனிதன் காட்டும் வேகம் அவர்களை மிகவும் பாதித்தது.
மக்கள் பிளாஸ்டிக் பொருள்களை அதிகம் பயன்படுத்துவதை கைவிடக் கோரி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். காடுகளைக் காப்போம்; இயற்கையை நேசிப்போம் என்ற கொள்கைகளை வலியுறுத்தி அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தினர். அதன் மூலம் பல துண்டறிக்கைகளையும் வெளியிட்டனர்.
ஆயினும், தற்போது பல சாமியார்கள் காடுகளைக் குறிவைத்து அவற்றை அழித்து மதத்தின் பெயரால் அங்கு கோயில்களையும் கட்டடங்களையும் கட்டி சுற்றுச்சூழலைக் கெடுத்து வருவதைக் கண்டு இயற்கை ஆர்வலர்களும் சமூகநல அமைப்புகளும் கண்டித்தனர். ஆனால், அந்தச் சாமியார்களுக்கு அரசியல் தலைவர்களின் ஆதரவு இருந்ததால் அவர்கள் துணிச்சலாகக் காடுகளை அழித்து கோயில் கட்டி வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களது சதிச்செயலை அம்பலப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால், மதத்தின் கோரப்பிடியில் பலர் சிக்கிக்கொண்டு வாளாவிருந்தனர்.
இந்நிலையில் பகலவனும், கலைவேந்தனும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மிதிவண்டிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டனர்.
மார்ச் 3ஆம் தேதி உலக வன விலங்கு நாளன்று மிதிவண்டிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினர். ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காடுகளை அழித்து வரும் சாமியாரின் ஊரின் வழியாகவும் சென்று சென்னையை அடையவேண்டும் என்பது அவர்களின் இலக்கு. பல நண்பர்களும் இயற்கை ஆர்வலர்களும் திரளாக வந்திருந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
செல்லும் வழி நெடுகிலும் துண்டறிக்கைகளை வினியோகம் செய்தவண்ணம் சென்றனர். மக்கள் அதிகமாகக்கூடும் இடங்
களில் மிதிவண்டியை நிறுத்தி பிரச்சாரம் செய்தனர். மக்கள் அவர்கள் பேச்சை விருப்பத்துடன் கேட்டனர்.
கிராமப் பகுதிகளிலும் அவர்கள்பேச்சை மக்கள் திரளாகக் கூடிக் கேட்டனர்.
“இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மைப் பாதுகாக்கும். இயற்கையை அழித்தால் நாமும் அழிவோம். இயற்கையை அழிக்க யாருக்கும் உரி¬யில்லை”, என்று ஒரு கிராமப் பகுதியில் பேச்சை ஆரம்பித்தான் பகலவன்.கூட்டத்தில் பல இளைஞர்கள் கேள்விகள் கேட்டனர்.ஒரு படித்த இளைஞன்,
“உங்களிடமிருந்து நிறைய செய்திகளை தெரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’’ எனக் கேட்டான்.
இப்படிக் கேள்விகள் கேட்பது அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் கேட்பது பகலவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்திற்கும் பதில் சொன்னான்.
“எம்.எஸ்ஸி. தாவரவியல் முடித்தபின் அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். அது தவிர தமிழ், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளேன். என்னைப் போலவே இங்கு வந்துள்ள எனது நண்பர் கலைவேந்தனும் படித்துள்ளார். என் பெயர் பகலவன்.’’
இவ்வாறு கூறிய பகலவன் அங்கு பல செய்திகளைக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினான். கலைவேந்தன் துண்டறிக்கைகளைப் பொது மக்களிடம் வழங்கினான்.
பிறகு தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
சில நாள்களில் அவர்கள் காட்டையெல்லாம் அழித்து, வன விலங்குகளின் வாழ்வாதாரத்
தையே சீர்குலைத்துக் கொண்டிருக்கும் சாமியார் வாழும் பகுதிக்குள் நுழைந்தனர். மதவெறியுடன் கோயில்கட்டிக் கும்மாளமடிக்கும் அந்தச் சாமியாருக்கு அரசியல் செல்வாக்கும், பண பலமும் அதிகமாகவே இருந்தது.
அந்நகரத்தில் இருந்த பல பசுமை அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ரோட்டரி சங்கம் போன்ற பல சமூகநல அமைப்புகளும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
“காடுகளைக் காப்போம்’’ என்ற முழக்கத்தைக் கேட்ட அந்நகர மக்கள் திரளாகக் கூடி அவர்கள் பேச்சைக் கேட்டனர். காடுகளை அழித்து சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து வரும் அந் நகரத்தில் உள்ள போலிச் சாமியார் ஒருவரின் பகட்டு வாழ்க்கையை அனைவரும் அறிவார்கள். அந்தப் பகட்டு போலிச் சாமியாரின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் மக்கள் விரும்பினர். அதற்கு ஒரே வழி இது போன்ற பிரச்சாரப் பயணங்கள் தான் என்பதும் மக்கள் கருத்து.
மக்களிடையே பகலவன் பேசினான்.
“ஒவ்வொரு நாட்டிலும் அதன் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாக இருக்க
வேண்டும். அதாவது 33.33 சதவிகிதம் காடுகளாக இருக்கவேண்டும். நம் நாட்டில் அப்படி இருக்கிறதா? என்று கேட்டு பேச்சை நிறுத்தினான் பகலவன்.
“இருக்காது’’, என்று மக்கள் நினைப்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது.தொடர்ந்து பேசினான் பகலவன்.
“உங்கள் எண்ணம் சரிதான். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் இப்போது 24.62 சதவிகிதம் தான் காடுகள் இருக்கு. நமது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 17.59 சதவிகிதம் தான் காடுகள் இருக்கு. இப்படி இருக்கும்போது காடுகளை அழிப்பது சரியாகுமா?
“வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்.’’என்பது அவ்வையார் பாடல். இப்போது நம்முடைய பாடல் எதுவென்று கேட்டால் “காடுயர நாடுயரும்” என்பதுதான். காடுகள் அழிக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?’’
“பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப காடுகள் அழிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறதல்லவா? மக்கள் வீடு கட்டிக்கொள்ள இடம் வேண்டாமா?’’ என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.பகலவன் பதில் கூறிப் பேசினான்.
“காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவேண்டும். அக்குடியிருப்புகளில் பொதுவான சமையலறை இருக்கவேண்டும். பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறக்கூடாது. இது நடந்தால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும். அது மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும். மனிதன் இல்லாமல் மரம், செடி, கொடிகள் உயிர் வாழ முடியும். ஆனால், மரம், செடி, கொடிகள் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.’’
“தமிழ்நாட்டில் காடுகள் நிலைபற்றிச் சொல்லுங்கள்,’’ எனக் கேட்டார் ஒருவர்.
இதற்கு கலைவேந்தன் முன்வந்து பதில் அளித்தான்.
“தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 966 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 22 ஆயிரத்து 877 சதுர கிலோ மீட்டர் மட்டுமே காடுகளின் பரப்பளவு ஆகும். அதாவது, காடுகளின் பரப்பளவு 17.59 சதவிகிதம் மட்டுமே உள்ளது. ஆனால், 33.33 சதவிகிதம் பரப்பளவில் காடுகள் இருக்க வேண்டும். இன்னும் 15.74 சதவிகிதம் காடுகள் நமக்குத் தேவை.’’
“இதற்காக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா?” கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“சமூக நலக் காடுகள்’’ திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வன வளத்தை அதிகரிக்க முள் செடிகளை வளர்த்தனர். இவைகள் மழையை ஈர்க்கும் தன்மையற்றனவாக இருந்ததால் பிற்பாடு மழையை ஈர்க்கும் மரங்கள் வளர்க்கப்பட்டன. சாலை ஓரங்களிலும் வாய்க்கால், ஆற்றங்கரைகளிலும் மரங்கள் வளர்க்கப்பட்டன. இப்போதும் நமது முதல்வர் அவர்களால் “தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்’’ என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.”
“இவைகள் மட்டும் போதுமா?” என்று ஒருவர் கேட்டார்.
“போதாது. பத்து சதவிகித அடர்த்திக்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பே “வனம்’’ எனப்படுகிறது. வனம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளும், அடர்த்தியான மரங்களைக் கொண்ட பகுதிகளும் காடுகளாகக் கருதப்படும். தமிழ்நாடு மாநில வனச்சட்டம் 1882, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம் 1980 போன்ற சட்டங்கள் இருந்தாலும் மத வெறி எல்லாவற்றையும் மாய்த்துவிடுகிறது. மலைகளில் கோயில்களைக் கட்டுவது, தீப்பந்தம் ஏற்றுவது, ஒலிகளை எழுப்பி வன விலங்குகளுக்கு அச்சத்தைத் தருவது போன்ற செயல்களைத் தடுக்கவேண்டும்.’’
இவ்வாறு பகலவன் பேசியபோது அவர்களைச் சுற்றிலும் காவல் துறையினர் சூழ்ந்து கொண்டனர்.
இந்நிலையில், கூட்டத்தில் ஒருவர் அமேசான் காடுகளைப் பற்றியும் கேட்டார்.
பகலவன் பதில் சொன்னான்.
அமேசான் காடுகள் “உலகத்தின் நுரையீரல்’’ எனப்படுகிறது. இது தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றில் பரந்து கிடப்பதைப்போல அமேசான் காடுகள் பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் பரந்து கிடக்கிறது.
இப்போது, காவல் ஆய்வாளர் பகலவனை நெருங்கி கூட்டத்தை முடிக்குமாறு கூறினார்.
“நாங்கள் காவல் துறை அனுமதி பெற்றுத்தான் பயணத்தைத் தொடங்கினோம்”, என்றான் கலைவேந்தன்.
“உண்மைதான். ஆனால், நிறைய புகார்கள் வந்திருக்கு. மத நம்பிக்கையை அவமதித்துப் பேசுகிறீர்கள்,’’ என்றார் காவல் ஆய்வாளர்.
இது சாமியாரின் வேலைதான் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
“நீங்கள் கலைந்து செல்லவில்லையென்றால் கைது செய்ய நேரிடும்”, என்ற காவல் ஆய்வாளர் துண்டறிக்கைகளையும் வாங்கிப் படித்துப் பார்த்தார்.
“அருமையான செய்திகள் இந்த துண்டறிக்கையில் உள்ளது. நானும் ஓர் இயற்கை ஆர்வலர்தான்’’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் காவல் ஆய்வாளர்.
அவரது எண்ண ஓட்டத்தைப் பகலவனும் கலைவேந்தனும் புரிந்து கொண்டனர். நாம் பேசி முடிப்பதற்காகவே அவர் இவ்வளவு நேரம் காத்திருந்தார் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.
“நன்றி அய்யா! நாங்களும் எங்களது இன்றைய பிரச்சாரத்தை முடித்துக் கொண்
டோம். மீண்டும் நாளை காலை எங்களது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குவோம்,’’ என்றான் பகலவன்.
“நாளைக்கும் நான் வருவேனே’’ என்றார் காவல் ஆய்வாளர்.
“உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்க அய்யா. எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். எங்கள் அமைப்புகளுடன் கலந்து பேசி நல்லபடியாக எங்கள் பயணத்தைத் தொடர்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்று கூறி முடித்தனர் இருவரும். ♦