பா.ஜ.க., ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்பொழுதெல்லாம் இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. புராணத்திற்கும், வரலாற்றிற்கும் வேறுபாடின்றி புராணக் கட்டுக் கதைகளைக் கொண்டு வரலாற்றுக் குறிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.
முதன்முதலாக பா.ஜ.க., வாஜ்பேயி அவர்களது தலைமையின்கீழ் ஆட்சி அமைத்த வேளையில், அப்பொழுது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி, சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை மாற்றி அமைத்திடும் பணியில் முயன்று தோல்வி கண்டார்.
மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ‘காளை மாடு’ முத்திரைகளை, ஆரிய அடையாளமான ‘குதிரை’ச் சின்னமாக மாற்றிட முயன்றார். பொ.ஆ.மு.3300 முதல் பொ.ஆ.மு.1300 வரையிலான காலகட்டத்தில் குதிரையின் பயன்பாடே சிந்துவெளிப்பகுதியில் வழக்கத்தில் இல்லை. இந்த வரலாற்றுத் தடயங்கள் குறித்த வெளிப்பாடு எதுவுமின்றி, அந்தக் காலகட்டத்தில் சிந்துவெளியில் வாழ்ந்து வந்த மக்களான திராவிடர்களின் அடையாளத்தை மாற்றிடும் மூர்க்கத்தனமான அணுகுமுறை பா.ஜ.க. ஆட்சியின் முதல் கட்டத்தில் மட்டுமின்றி, இப்பொழுதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
2014 இல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியில் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக வந்து வரலாற்றுக் குறிப்பு மாற்றங்களை முன்னிலும் பல மடங்கு வேகமாக மேற்கொண்டு வருகிறது. இந்திய வரலாற்று மன்றத்தில் (Indian Council of Historical Research) ஹிந்துத்துவா சிந்தனை உள்ளவர்களைப் பொறுப்பில் அமர்த்தி, மாற்றங்களுக்கான அங்கீகாரங்களை வரலாற்று மன்றங்களில் பெற்று அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்தத் திருத்தல் போக்கு அழுத்தத்தின் ஓர் அணுகுமுறை-யாக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் பயிலும் பாடங்களிலும் ஹிந்துத்துவா சிந்தனைகளுக்கு, சிந்தனையாளர்களுக்கு இடமளித்து இதுவரை நிலவிவந்த வரலாற்றுக்கு உகந்தவர்களை, உகந்தவைகளை நீக்கி வருவதை தேசிய கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி மன்றம் (National Council of Education Research and Training) திட்டமிட்டுச் செய்து வருகிறது. முற்போக்குச் சிந்தனை படைத்த பலராலும், கல்வியாளர்களாலும் இந்த வரலாற்றுத் திருத்தல், நீக்கல் போக்குகள் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வருகின்றன.
கண்டனங்கள்பற்றி எதனையும் கண்டுகொள்ளாமல், தங்களது ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலை பா.ஜ.க. படிப்படியாக நடத்தி வருகின்றது.
இந்திய வரலாறு என தனியாக எதுவும் இல்லை. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் வரலாற்றின் ஒட்டுமொத்தம்தான் இந்திய வரலாறாக இருக்க முடியும்!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் வரலாற்றுத் திருத்தங்களிலிருந்து தம்முடைய வரலாற்றைப் பாதுகாத்திட, ஒவ்வொரு மாநிலமும் முன்வரவேண்டும். ஒரு மாநிலத்தின் வரலாற்றை முழுமையாக்கிடும் பணி அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். இதற்கான முன் முயற்சியாக மாநில வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தினை (State Council of Historical Research) சிறந்த வரலாற்று அறிஞர்களை, நடுநிலை சார்ந்த பிற மாநில, பிற நாட்டு வரலாற்றாளர்களைக் கொண்டு அமைத்திட வேண்டும்.
இத்தகைய கருத்தினைத்தான் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பேராசிரியர் ரொமிலா தாப்பர் அவர்கள் தனது அண்மைக்கால ‘‘The Future in the Past Essays & Reflections – Romila Thappar’’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘The danger today is that in an effort to restrict history to that of the upper caste Hindu – as seems to be the game plan of the central government – the richness of the many other cultures will be eliminated. This makes it necessary to have state councils of historical research where the regional variation can be articulated and at the same time can interface with the national.
இத்தகைய மாநில அளவிலான அமைப்பினை உருவாக்கிடும் முன்மாதிரி நிலைகள் பல உண்டு. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்து தொடங்கி வைத்த மாநிலங்களின் வளர்ச்சித் திட்டம், தேவைப்படும் நிதி அளவு ஆகியன பற்றிக் கலந்து பேசி, நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தேசிய திட்டக் குழு (National Planning Commission) சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இருப்பினும் மாநில அளவிலும் ஒரு திட்டக் குழுவினை மாநில அரசு அமைத்திட வேண்டும் என அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு மாநில திட்டக்குழு (Tamil Nadu State Planning Commission) அமைத்து மாநில வளர்ச்சிக்கு வித்திட்டார். இன்று புகழ்பெற்று வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான வலுவைச் சேர்த்தலில் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவிற்கு முக்கிய இடம் உண்டு.
இந்த முன்மாதிரி போல தமிழ்நாடு அரசு உண்மையான இந்திய வரலாற்றைப் பாதுகாத்திட, மாநில வரலாற்றை வலுப்படுத்திட தமிழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தினை (Tamil Nadu Historical Research Council) அமைத்திடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
திருத்தல் போக்கு பலவற்றுக்கு ஆளாகிவரும் சிந்துச் சமவெளி நாகரிகம் அகழாய்வுப் பணிகளை 1921-1922ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் அகழாய்வு இயக்குநராக இருந்த சர் ஜான் எச் மார்ஷல் தொடங்கி வைத்து உலகிற்கு அந்த நாகரிகத்தினை – திராவிட நாகரிகத்தினை வெளிக் கொணர்ந்தார். அந்த அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு சிந்து சமவெளி நாகரிக காலத்திற்கு இணையான அதனுடன் உள்ள தொடர்பை ஆதாரப்படுத்திடும் வகையில் தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வுகள் இலக்கியக் குறிப்புகளாக நிலவி வரும் வரலாறு, உரிய அகழாய்வுத் தடயங்களுடன் வெளிவரக்கூடிய நிலைமை உருவாகும்.
எனவே, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இன்றைய நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தக்காரைக் கொண்டு, தகைசான்ற தமிழ்நாடு மாநில வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தினை உருவாக்கிட வேண்டும் என விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டு வரலாறு உன்னத நிலையினை எட்டி, பதிவாவது உங்களது ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற வேண்டும்.
– கி. வீரமணி
ஆசிரியர்