நேர்காணல்

2023 ஆகஸ்ட் 1-15,2023 மற்றவர்கள்

தோழர்கள் தொடங்கிய முடிதிருத்தகம் மற்றும் சலவை நிலையம்!
– வி.சி.வில்வம்

பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 12.07.2023 அன்று மன்னார்குடிக்கு வருகை தந்தார். காலை முதல் இரவு வரை ஓய்வில்லாத அந்தச் சுற்றுப் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் அந்த இளைஞர். கவனத்தை ஈர்த்த அந்தக் கருஞ்சட்டை வரலாற்றைக் கீழே வாசிப்போம்!

அய்யா வணக்கம்! தங்களின் பெயர், ஊர் குறித்துக் கூறுங்கள் அய்யா?

என் பெயர் மாணிக்க வாசகம். மணியன் என்றால் அனைவருக்கும் தெரியும்.‌ வயது 88. சொந்த ஊர் கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம். ஆறாம் வகுப்புப் படிப்பதற்காக 1947 இல் மன்னார்குடியில் உள்ள தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன்.‌ முழுவதும் பார்ப்பன ஆசிரியர்களைக் கொண்டது அப்பள்ளி. உரிமையாளரும் பார்ப்பனர் தான்!
எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். கல்விக் கட்டணம் மாதம் 3 ரூபாய் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன். அதே நேரம் கட்டணம் செலுத்தினாலும் ஒடுக்கப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்க மறுத்த கொடுமையும் இருந்தது.

பெரியார் சிந்தனை உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது எங்கள் பள்ளியின் பார்ப்பன ஆசிரியர்கள் ஊர் மக்கள் மற்றும் மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து மகிழ்ந்தனர். அது எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல எனது ஆங்கில ஆசிரியராக இருந்த வி.என்.இராமசாமி அய்யர். “உன் நாக்கில் “தெர்ப்பைப்புல்” கொளுத்திப் போட்டாலும் உனக்கு ஆங்கிலம் வராது. விக்கிரபாண்டியம் போய் இரண்டு மாடுகள் வாங்கி மேய்த்து, அதை அக்கிரகாரத்தில் கொடுத்தால் நன்றாகப் பிழைக்கலாம். ஏன் “பிராணனை” வாங்குகிறாய்”, எனக் கேவலமாகத் திட்டுவார். இதுபோன்ற அவமரியாதையை மாணவர்கள் ஏராளம் சந்தித்தோம்.
அப்போது மன்னார்குடி, வாக்குப்பேட்டை தெருவில் தங்கி இருந்தேன். அங்கே திராவிடர் கழகத் தாலுகா தலைவர் உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி அவர்கள் “தமிழரசு சோடா கம்பெனி” எனும் நிறுவனம் வைத்திருந்தார். அங்கு விடுதலை நாளிதழ் வரும். அதைப் படிப்பேன். மன்னார்குடியில் மாணவர் கழகமும் அந்த சமயத்தில் தொடங்கப்பட்டது. அதில் சேர்ந்தேன். ஆக பள்ளியில் பார்ப்பனர் ஆதிக்கம், சோடா கம்பெனியில் விடுதலை படித்தது, இவையிரண்டும் தான் எனக்குப் பகுத்தறிவுச் சிந்தனையைத் தந்தன.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, உங்கள் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

மன்னார்குடியில் படிப்பை முடித்து, விக்கிரபாண்டியம் சென்றுவிட்டேன். எங்களுக்கு இருந்த விவசாயம் மற்றும் தேநீர் நிலையத்தைப் பார்த்துக் கொண்டேன். இயக்கச் செயல்பாடுகளையும் சிறிது, சிறிதாகச் செய்து வந்தோம். நான், அழகேசன், கணேசன், சம்மந்தம், மணி ஆகியோர் களத்தில் இருந்தோம்.
அதுசமயம் எங்கள் ஊரில் பெரியசாமி என்கிற ஒடுக்கப்பட்ட தோழர் சுயமரியாதைத் திருமணம் செய்ய விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். திருமணத்தை நடத்தி வைக்க உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி, உள்ளிக்கோட்டை சிவானந்தம், வடசேரி தமிழ்மணி மூவரும் “ரேக்ளா” வண்டியில் விக்கிரபாண்டியம் வந்தனர்.
திருமணம் முடிந்ததும் மணமகன் பெரியசாமி மூவருக்கும் 5 ரூபாய் வழிச்செலவு கொடுத்தார். அவர்கள் மூவரும் மேலும் 1.25 பணம் போட்டு, 6.25 ரூபாயை விடுதலை சந்தாவிற்கு வழங்கினர். அதிலிருந்து எங்கள் தேநீர் கடைக்கு விடுதலை வர தொடங்கியது. அது நல்ல விளைவை எங்கள் கிராமத்தில் ஏற்படுத்தியது. இதன் மூலம் எங்கள் கிராமத்திற்குக் கூடுதல் தோழர்கள் கிடைத்தார்கள். விடுதலையை கிராமத்தினர் பலரும் படிப்பார்கள். ஒருவர் படிக்க நான்கைந்து பேர் சேர்ந்தும் கேட்பார்கள்.
 

விக்கிரபாண்டியம் கிராமத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வரலாற்று நிகழ்வுகள் ஏதேனும் நடந்துள்ளதா?

எங்கள் கிராமத்தில் இருந்த தோழர் கணேசன் அரசியல் சட்டத்தைக் கொளுத்தி ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். அதேபோல தோழர் அழகேசன் தேசப்படம் எரித்த வழக்கில் 10 நாள்கள் சிறை சென்றார். அழகேசன் கைதையொட்டி ‘விடுத¬’ல நாளிதழில் நாள் ஒன்று, நாள் இரண்டு, நாள் மூன்று எனத் தினமும் வந்தது குறிப்பிடத்தக்கது.
எங்கள் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு யாரும் முடிதிருத்தம் செய்வதில்லை, துணியும் வெளுப்பதில்லை. இந்நிலையில் விக்கிரபாண்டியம் கழகத் தோழர் இராமானுஜம் தாமே முன்வந்து முடிதிருத்தகம் ஒன்றைத் தொடங்கினார். அதில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு முடிதிருத்தம் செய்யப்படும் என அறிவித்து, அவரே “கிராப்” வெட்டினார்.அதேபோன்று இன்னொரு தோழர் இராமலிங்கம் சலவை நிலையம் ஒன்றைத் தொடங்கினார். ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சலவை செய்து கொடுத்தார். இவையிரண்டும் சுற்று வட்டாரக் கிராமங்களில் பெரும் புரட்சியாகப் பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஒடுக்கப்பட்டோரில் யாராவது இறந்தால், சடலத்தை தெரு வழியாக அனுமதிக்காமல், வயல் வெளியில் அனுப்புவார்கள். அந்நிலையை மாற்றி, தோழர்கள் இணைந்து சமத்துவச் சுடுகாடு ஒன்றை உருவாக்கினோம். அது இப்போதும் இருக்கிறது.
அதேபோல ஒடுக்கப்பட்டவர்களை அக்கிரகார வீதிகளில் நடக்கக் கூடாது என்றனர். நாங்கள் பெரியார் படத்தை அலங்கரித்து, அந்தத் தெரு வழியாக
ஊர்வலம் செல்வோம். அப்போது ஒடுக்கப்பட்டவர்களையும் கூடவே அழைத்துச் செல்வோம். ஊர்வலம் செல்லும் போது தோழர்கள் வீடுகளில் சுண்டல், பானகம், ஆரஞ்சு சுளை மிட்டாய் போன்றவை கொடுப்பார்கள். விக்கிரபாண்டியம் கிராமத்தில் எனக்குத் தெரிந்து 40 கூட்டங்கள் நடத்தி இருப்போம்! எங்கள் கிராமத்தில் அப்போதே 30 தோழர்கள் இருந்து வந்தோம்.

பெரியாருடன் உங்களுக்கு இருந்த தொடர்பு குறித்துக் கூறுங்கள்?

எங்கள் கிராமத்தில் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார் 2 மணி நேரம் பேசினார்.
அந்தக் கால கட்டத்தில் வேளாங்கண்ணியில் ஒரு வாரம் வரை பயிற்சி வகுப்புகள் நடந்தன. வேளாங்கண்ணி எல்.முத்தையா அவர்கள் தான் அந்த வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தார். மிலிட்டரியில் பணிபுரிந்த அவர், 20 மொழிகள் பேசக் கூடியவர். இவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் மாமா ஆவார்.
அந்த ஒரு வாரம் நானும் வேளாங்கண்ணியில் இருந்தேன். அப்போது தான் “அனைத்து ஜாதியினரும் சட்டம் ரத்து”, என்கிற தீர்ப்பு ஒன்று வந்தது. இதுகுறித்து மாறுபட்ட பல தகவல்களும் வந்த நிலையில், பெரியார் இமயவரம்பன் அவர்களை அழைத்தார். உடனே ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பேசி, உண்மை நிலையைக் கேட்கச் சொன்னார்.
இமயவரம்பன், நான் மற்றும் சில தோழர்கள் வேளாங்கண்ணி அஞ்சல் அலுவலகம் சென்றோம். அங்கு “அர்ஜெண்ட் கால்” பதிவு செய்து இமயவரம்பன் அவர்கள், ஆசிரியரிடம் பேசினார்.
“ஆபரேஷன் சக்சஸ்; ஆனால் நோயாளி இறந்துவிட்டார்”, என்று உதாரணம் கூறி, அந்தத் தீர்ப்புக் குறித்து ஆசிரியர் அவர்கள் விவரமாகக் கூறினார். அதைப் பெரியாரிடம் வந்து கூறினோம்.

உங்கள் கிராமம் தவிர மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்த அனுபவம் உண்டா?

வேளாங்கண்ணி பயிற்சி வகுப்பின் போது, கிராமப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனப் பெரியார் அறிவித்தார். அவரே சிலரைத் தேர்வும் செய்தார். அந்த வகையில் மாயவரம் பகுதிக்கு வடிவேலு, தஞ்சை மாவட்டம் முழுவதுக்கும் தோலி சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் இணைந்து நானும் செல்வேன். கிராமங்களுக்குச் சென்று ஒரு கம்பு நடுவோம். அதில் கொம்பு வடிவில் உள்ள ஒரு “ஹாரன்” கட்டுவோம். பிறகு இரண்டு கம்பு நட்டு, இரண்டிலும் கொடி கட்டி, நடுவில் “பெஞ்ச்” போட்டால் அதுதான் மேடை.
கொள்ளிடம் முதல் அறந்தாங்கி வெள்ளையாறு வரை அன்றைக்கு தஞ்சை மாவட்டம். சுமார் 30 கிராமங்களில் கூட்டம் நடத்தினோம். குடந்தை என்.ஜி.இராஜன், மதுரை செல்வா கலைத்தூதன், சென்னை இராவணன் மூவரும் கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.

 திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்துக் கூறுங்களேன்?

1964 இல் ஆசிரியர் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்ய முடிவு செய்தேன். அழைப்பிதழும் தயாரானது. எனினும் ஆசிரியர் அவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக வர இயலவில்லை. அதே நேரம் தஞ்சாவூரில் நடைபெற்ற இட ஒதுக்கீடு மாநாட்டு மேடையில்‌ அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் நானும், தோழர் கணேசனும் இணையரின் தாலியை அகற்றினோம்.
இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 10 முறையாவது ஆசிரியர் எங்கள் கிராமத்திற்கு வந்திருப்பார்.‌ எனக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். சிவசாமி என்கிற மகனுக்கு ஆசிரியர் அவர்கள் தான் திருமணம் செய்து வைத்தார்கள். மற்றொரு மகன் அழகிரிசாமி. அவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பணி செய்கிறார்.
கோட்டூர் ஒன்றியச் செயலாளராக இருந்த நான், இப்போது பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறேன். பெரியார் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்த வாழ்கின்ற நாள்களை எண்ணி மனநிறைவு அடைகின்றேன்!  ♦