‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்பது குறித்து முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார்.
“திராவிடம் என்பது ஓர் இனம், ஓர் உணர்வு, பெரியார், அண்ணா கண்ட இந்த சகாப்தத்துக்கு முடிவு கிடையாது” என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
31.7.2010 அன்று மீஞ்சூரில் நடைபெற்ற அரசு விழாவில்தான் இவ்வாறு கூறினார்.
ஆரியர் – திராவிடர் என்பது இரு வேறு கலாச்சார அடையாளங்கள்! இவை திராவிட இயக்கம் கற்பித்துக் கூறியதல்ல.முத்தமிழ் அறிஞர் கலைஞர்அவர்கள் ‘முரசொலி’ (4.10.2010)யில் எழுதிய கடிதத்தில் ஒளிவு மறைவின்றி பளிச்சென்று எழுதியுள்ளார்.
“கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த இடத்தை லெமூரியா கண்டம் என்று அழைத்த அந்தக் காலத்தில், நாமெல்லாம் தோன்றாவிட்டாலும் கூட, நம்முடைய முன்னோர்கள் தோன்றிய இடம்தான் இந்த இடம். அப்படிப்பட்ட முன்னோர்கள் விதைத்த நாகரிகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சிறிதுசிறிதாக, படிப்படியாக வளர்ச்சியுற்ற அந்தப் பரிணாம வளர்ச்சிதான் இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த நாகரிக வளர்ச்சி; அப்படிப்பட்ட பெரும்புகழுக்கும், வரலாற்றுச்சிறப்பிற்கும் உரிய பகுதி இந்த நாகர்கோவில் பகுதி.
அப்படிப்பட்ட பழம்பெரும் பூமியில் – வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பூமியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மக்களின் சந்ததிகள் நாம். நம்முடைய கலாச்சாரம் தனிக் கலாச்சாரம். அதற்குப் பெயர்தான் திராவிடக் கலாச்சாரம். திராவிடக் கலாச்சாரம் என்று சொல்லும்போது, அதிலே என்ன முக்கியமான பொருள் என்றால், ஏதோ இன்னொரு கலாச்சாரம் இருக்கிறது, அதனால்தான் இதனை திராவிடக் கலாச்சாரம் என்று பிரித்துச் சொல்கிறோம் என்ற அந்த வேறுபாட்டை பொதுவிலே உணரக்கூடியவர்கள் உண்டு. ஆரியக் கலாச்சாரத்தைப் பிரித்துக்காட்ட, நாம் திராவிடக் கலாச்சாரத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
திராவிடக் கலாச்சாரத்தில் ஊறி வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான், இந்த இயக்கத்திற்கு, “திராவிட முன்னேற்றக் கழகம்” என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றால், திராவிடக் கலாச்சாரத்தை வாழ்த்த, திராவிடக் கலாச்சாரத்தைப் போற்ற, திராவிடக் கலாச்சாரத்தை வெற்றி கொள்ளச் செய்ய நாம் உருவாக்கியிருக்கின்ற கழகத்திற்குப் பெயர் தான் “திராவிட முன்னேற்றக்கழகம்” (கலைஞர் கடிதம் – ‘முரசொலி’ – 4.10.2010).
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லித் திரிவோர்க்கும் இன்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
கேள்வி:- ஆரியர் – திராவிடர் போராட்டம் தொடர்கிறது என்று குறிப்பிட்டு வருகிறீர்கள் – எந்த அடிப்படையில்?
கலைஞர்:- திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான பகுத்தறிவு, சுயமரியாதை, இட ஒதுக்கீடு, மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்றவை இன்றைக்கும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் சூழ்ச்சியால் சோதனைக்கு உள்ளாகும்போது, ஆரியர் – திராவிடர் போராட்டம் தொடர்கிறது என்று சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
கேள்வி:- ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சொல்லிக்கொண்டு சிலர் புறப்பட்டுள்ளார்களே?
கலைஞர்:- ‘ஆரியத்தால் வீழ்ந்தோம்’ என்பதற்குப் போட்டியாக சிலர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று புறப்பட்டுள்ளார்கள். திராவிடத்தால் தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் வீழாது! எனவே, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இப்போது சொல்பவர்களே, கடந்த காலத்தில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்ற நிலையிலே இருந்தவர்கள்தாம்!
(- ‘விடுதலை’ பொன்விழா மலர்- 17.9.1985)
சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்றும், மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள் என்றும் கூறுவது எழுதுவது ஏதோ திராவிட இயக்கத்தினர் கண்டுபிடிப்பல்ல. வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட வரலாற்று உண்மைதான். இன்னும் சொல்லப் போனால் ஆரிய வரலாற்று ஆசிரியர்களே எழுதி இருப்பதுதான்.
‘ஆரிய மாயை’ என்னும் நூலில் அறிஞர் அண்ணா அவர்கள் இந்த வகையில் அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளித் தந்திருக்கிறார்.
‘திராவிட மாடல்’ என்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கூறி வருவதை – அந்த அடிப்படையில் செயல்பட்டு வருவதை கூர்மையாக அறிந்த நம் இன எதிரிகள் இந்த ஆட்சியின் மீது சேறு வாரி இறைக்கிறார்கள், கூலி கொடுத்து ஆட்களை அமர்த்தி சமூக வலைதளங்களில் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.
தனது வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.
அப்பொழுது முதல் அமைச்சராக இருந்த நமது மானமிகு கலைஞர் அவர்கள், “அய்யா அவர்களே, உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும்போது, நீங்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டுமா?” என்று கேட்டதோடு நிற்கவில்லை. அதற்கான சட்டத்தையும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றவும் செய்தார்.
இடையில் பல தடைகளை அது சந்தித்தபோதும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது ஆட்சியின் நூறாவது நாளில், முக்கிய சாதனையாக ஆகமப் பயிற்சிப் பள்ளியில் படித்துத் தேர்ந்த பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 28 பேர் பல்வேறு கோயில்களில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் பெண் ஓதுவார் ஒருவரும் உண்டே!
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம், சென்னை மாநிலம் என்பதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடம் இல்லை – இருமொழிகள் மட்டும்தான் என்ற நிலை; பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு தங்க மெடல், பெண்ணுரிமைக்கான ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை எல்லாம் – வேறு எந்த அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் நினைத்துக் கூடப் பார்க்கப்பட முடியாதவை.
தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சியல்ல. சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்று உறுதியாகவே கூறியுள்ளார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அந்த அடிப்படையில்தான் தி.மு.க. ஆட்சி அன்றும் சரி, இன்றும் சரி வீறுநடை – விவேக நடைபோட்டு வருகிறது.
தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் கலைஞர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி கவனிக்கத்தக்கது – கருத்தூன்றிப் பின்பற்றத் தக்கதாகும்.
தி.மு.க.வின் உண்மையான வெற்றி எது?
“நம்முடைய அரசியல் இயக்கங்கள் – தமிழகத்திலே எத்தனை இருந்தாலும் கூட, நாம் அவைகளிலிருந்து மாறுபட்டிருப்பதற்கு ஒரேயொரு காரணம், அவர்கள் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றி யோசிக்கிறார்கள்; நாம் சமுதாயத்தை எப்படி வளர்ப்பது என்பதைப் பற்றி யோசிக்கிறோம். நாம் ஜாதிகளை எப்படி ஒழிப்பது என்று சிந்திக்கிறோம்; அவர்கள் ஜாதிகளை எப்படி வளர்ப்பது என்று நினைக்கிறார்கள். இன்னமும் ஜாதிகளின் ஆதிக்கத்தால், ஆதரவால், கட்சிகளை நடத்தி விட முடியுமென்று எண்ணி, கட்சித் தலைமைக்குப் போட்டியிடுகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். நீங்களும் அறிவீர்கள். ஆனால், உங்களால் வெளியே சொல்ல முடியாது.
சொல்லாததற்குக் காரணம் எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையிலேதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே அரசியல் இருக்கிறது. எப்படி உருவான அரசியல் இது? எப்படி உருவான இயக்கம் இது? இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் துணைநின்று காக்க முற்பட்ட நேரத்திலும் சரி, இந்த இயக்கம் தொடங்கிய போதும் சரி, எத்தகைய எண்ணத்தோடு தொடங்கப்பட்டது என்பதை, தயவு செய்து எண்ணிப் பாருங்கள். பழைய ஏடுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். பழைய புத்தகங்களை வாங்கிப் படித்துப் பாருங்கள். பழங்காலத்து நண்பர்கள் சில பேர் இன்னமும் உயிரோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
இந்த இயக்கம் சமுதாயத்திலே நமக்கு ஏற்பட்ட இழிவுகளைத் துடைத்துக் கொள்ள, ஏற்றம் பெற நாமும் மனிதர்கள்தான் என்கிற சுயமரியாதை உணர்வு கொள்ள பக்தி என்ற பெயரால் பஞ்சாங்கம் என்ற பெயரால் மூடநம்பிக்கை என்கின்ற பெயரால் – ஆண்டவன், ஆலயம் என்கின்ற பெயரால் குருட்டு நம்பிக்கை என்கிற பெயரால் – இந்தச் சமுதாயத்திற்கு எந்தக் காலத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான் இந்த ஆட்சி அமைந்த காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அத்தனையையும் பொருட்படுத்தாமல், அனைத்து எதிர்ப்புகளுக்கும் ஈடுகொடுத்து-பெண்களுக்காகப் பாடுபடுகின்ற நேரத்திலும் சரி மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நேரத்திலும் சரி அல்லது மூடநம்பிக்கைகளை வீழ்த்த வேண்டுமென்பதற்காக பேசுகிற நேரத்திலும் சரி எழுதுகிற நேரத்திலும் சரி அவைகளைக் கலைக் காட்சிகளாகத் தெரிவிக்கின்ற நேரத்திலும் சரி எல்லா நேரத்திலும் கொள்கையை விட்டு நாம் அகன்றதில்லை. இம்மியும் நழுவியதில்லை.
நமக்கு இருக்கின்ற ஒரே பெருமை – ஒரே செல்வாக்கு – ஒரே திறமை – ஒரே சக்தி அதுதான். அதை விட்டு நாம் விலகாத வரை நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை நான் பெறுகிறேன். இன்றைக்கு இந்த நாற்காலி இருக்கலாம் கோட்டையிலே நமக்காகப் போடப்படுகின்ற சிம்மாசனம் ஓராண்டுகாலம், இரண்டாண்டு காலம் இருக்கலாம். எப்போதும் நிரந்தரமல்ல. அவைகளுக்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டதல்ல. இந்த இயக்கத்திலே இருக்கின்ற நாம் சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும்.
நாம் எதிர்பார்க்கின்ற தேர்தல் – சிம்மாசனத்திலே அமர்வதல்ல. கோட்டையிலே உட்காருவதல்ல. இவைகளை எல்லாம் விடப் பெரியது. சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது, தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனிக்கு எடுத்துக்காட்டுவதுதான் நாம் வெற்றி பெறவேண்டிய, சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறந்து விடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
(தி.மு.க.பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் கலைஞர்- 2.6.2008 – சென்னை)
இதனைக் கலைஞரின் செப்பேடாகக் கொள்ள வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞர் அவர்களின் 49ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது தந்தை பெரியார் கூறிய வாழ்த்துச் செய்தியைக் குறிப்பிடுவது முக்கியமாகும்.
“மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலும் நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார். இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாக வருகிறார்கள்.
காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும், வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல், எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். பொதுவாகவே சமுதாயத் துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழைமை விரும்பிகள் உடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுதான் தீரும். கலைஞர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு, எதிர்ப்பும் தொல்லையும் ஏற்படுவது அதிசயம் அல்ல. அவற்றைப் பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல், துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று வாழ்த்தினார் தந்தை பெரியார்.
இது அன்றைக்கு மட்டுமல்ல -நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பொருந்தக் கூடியதே! ♦