– முனைவர் கடவூர் மணிமாறன்
புலவர் நன்னன் புரட்சித் தென்றல்
உலகோர் போற்றும் உயர்ந்த தலைவராம்
பெரியார் சிந்தனை, கொள்கை மறவர்
நரியார் கூட்டம் நடுங்கச் செய்தவர்
ஏற்றம் விளைத்தவர்; இனமா னத்தின்
ஆற்றலைச் சொன்னவர்; அண்ணா மலைப்பல்
கலைக்கழ கம்தனில் கல்வி பயின்றவர்
நிலைதடு மாறா நெஞ்சுரம் வாய்ந்தவர்!
நெறிபிற ழாத நேர்மைக் குணத்தர்
அரிய பனுவல் பலவும் ஆக்கிய
சங்கப் புலவர் போலும் சால்பினர்;
எங்கும் எதிலும் இன்றமிழ் விழைந்தவர்
உரைநடை என்பதில் ஒழுங்கு வேண்டும்
குறைநடை யாகக் கூத்துகள் புரிவது
இழுக்கைச் சேர்க்கும் இனிய தமிழ்க்கே
பழுதறக் கற்றிடப் பாடம் சொன்னவர்!
பொற்புடைத் தமிழைப் புரிந்திடும் வண்ணம்
கற்பிக் கின்ற கலையைக் கற்றவர்!
‘ழ’கரச் சிறப்பை உணர்த்திச் செந்தமிழ்
சிகரம் தொட்ட செம்மொழி அரிமா!
பகுத்தறி வியக்கப் பாசறை மறவர்!
மிகுபயன் விளைத்த மேன்மைத் தமிழர்!
தெளிவும் துணிவும் ஒருங்கே பெற்றவர்
வளமும் நலமும் தமிழ்க்குச் சேர்த்த
பெரியார் பேருரை யாளர் நன்னன்!
திராவிட இயக்கக் கருத்தியல் அறிஞர்!
பேச்சிலும் எழுத்திலும் பிழைகள் அகற்றி
மூச்செனும் தமிழை முறையாய் விதைத்தவர்;
குடிஅர சென்னும் குருகுலம் தன்னில்
அடிகள் பதித்தவர்! ஆளுமை நிறைந்தவர்!
ஆரியப் புரட்டினை ஆன வரையிலும்
வீரியம் கொண்டே வீழ்த்திய வேங்கை
நன்னன் அய்யா நற்புகழ், மாண்பெலாம்
கன்னல் தமிழ்போல் காலமும் வாழுமே! ♦