– வை.கலையரசன்
காந்தி அமைதி விருது அவரது கொள்கைக்கும் அணுகுமுறைக்கு எதிரியான மத வெறிக் கும்பலுக்கு நிழல் தரும் மரமாக விளங்கும் கீதா பிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது அயோக்கியத்தனத்தின் உச்சமாகும். ஏற்றத் தாழ்வுகளற்ற சமூகத்திற்காகப் பாடுபட்ட, அனைவரையும் பாகுபாடின்றி ஒன்றாகப் பாவித்த காந்தியாருக்கும் அவரது கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிரான கருத்துருவாக்கத்தின் பிதாமகனாக விளங்கும் நிறுவனம்தான் கீதா பிரஸ்!
மதவெறுப்புப் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு குருவாக விளங்கும் நிறுவனம் இது என்பதை இந்தப் பதிப்பகம் வெளியிடும் பத்திரிகைகளையும் நூல்களையும் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.
”கீதா பிரஸுக்குத் தரப்படும் காந்திக்கான அமைதிப் பரிசு கோட்சேவுக்கும், சாவர்க்கருக்கும் தரப்படுவதைப் போன்றது’’ என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. முழு உண்மையாகும்.
சர்வதேச காந்தி அமைதி விருது என்பது மகாத்மா காந்தியின் 125ஆம் பிறந்த நாளை ஒட்டி 1995இல் உருவாக்கப்பட்டது. அகிம்சை முறையிலும் காந்திய வழியிலும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்திற்காகப் பாடுபடுபவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய விருது இது. இந்த விருது என்பது ஒரு கோடி
ரூபாய் பணமும் சான்றிதழையும் உள்ளடக்கியது.
இந்த விருதை நெல்சன் மண்டேலா, டெஸ்மண்ட் டூடு போன்ற சர்வதேச பிரபலங்களும் கிராமீன் வங்கி, இஸ்ரோ போன்ற அமைப்புகளும் பெற்றுள்ளனர்.
இந்த விருது இந்த ஆண்டு கீதா பிரஸ் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் மோசடிச் செயலாகும்.
காந்தியக் கொள்கையான மனிதநேயத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் அகிம்சைக்கும் எதிரான அப்பட்டமான பழமைவாத, வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனமான கீதா பிரஸ் நிறுவனத்துக்கு மகாத்மா காந்தியடிகளின் பெயரால் உள்ள இந்தப் பரிசை வழங்குவது மகாத்மா காந்தியடிகளையும், மதச்சார்பின்மையையும் ஒருசேர அவமதிப்பதாகும்.
கீதா பிரஸின் தோற்றம் குறித்து ஒரு பத்திரிகையாளர் அக்ஷய் முகுல் எழுதியிருக்கும் ஆய்வு நூலான ‘கீதா பிரஸ் அண்ட் தி மேக்கிங் ஆஃப் ஹிந்து இந்தியா’ என்ற நூல் விரிவான தகவல்களைத் தருகிறது.
இந்த நூல் குறித்து 2015ஆம் ஆண்டிலேயே தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஏராளமான செய்திகளை ஒரு சிறப்பு கூட்டம் மூலம் விளக்கியுள்ளார்.
ஆங்கிலத்தில் வெளியான இந்த நூலை விடியல் பதிப்பகம் தமிழில் ‘இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த நூல், இந்தியாவில் இந்துத்துவத்தின் வளர்ச்சியில் கீதா பிரஸின் பங்களிப்பைச் சொல்வதோடு, அந்தக் காலகட்டத் தலைவர்களோடு இந்த அமைப்பிற்கு இருந்த உறவையும் மிக விரிவாக விவரிக்கிறது.
பொதுவாக காந்தி அமைதி விருது என்பது காந்திய வழியைப் பின்பற்றுவோருக்கும் முன்னெடுத்துச் செல்வோருக்கும் வழங்கப்படும் ஒரு விருதாகக் கருதப்படுகிறது. ஆனால், அக்ஷய் முகுலின் நூல், கீதா பிரஸின் நிறுவனரான அனுமன் பிரசாத் போத்தார், எப்படி காந்தியோடு கடுமையாக முரண்பட்டார் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
காந்தி முன்னெடுத்த சமபந்தி விருந்தையும் ஆலய நுழைவையும் போத்தார் கடுமையாக எதிர்த்தார். “பல இடங்களில் வருண ஜாதியினர் தலித்துகளோடு அமர்ந்து உணவருந்துகிறார்கள். அவர்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்-படுகிறார்கள். இது எங்கு கொண்டு செல்லும்? அவர்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டுள்ளார்களா என்று உங்களது சமபந்தி மற்றும் ஆலய நுழைவு இயக்கங்கள் உறுதிசெய்வதுகூட இல்லை” என்று காந்திக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டார் போத்தார். ஆலயத்தில் நுழைய தலித்துகள் விரும்பினால், அவர்களுக்காக தனியாக ஏன் ஆலயங்களைக் கட்டக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினார்.
தீண்டாமை குறித்த போத்தாரின் கருத்துகளை மாற்றுவதற்கு காந்தி செய்த முன் முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தன. காந்தியைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் ‘கல்யாண்’ இதழில் 1948வரை வெளிவந்தன.
1920களில் இரண்டு மார்வாரி தொழிலதிபர்களான ஜெய்தயாள் கோயந்த்கா மற்றும் அனுமன் பிரசாத் போத்தார் ஆகிய இருவரும் இணைந்து கீதா பிரஸை நிறுவினர். ஜெய் தயாள் கோயந்த்காவிற்கு நீண்ட காலமாகவே பகவத் கீதையின் மீது ஆர்வம் உண்டு. கீதையின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பை வெளியிடவும் இந்து மத நூல்களை வெளியிடவும் இருவரும் ஆர்வம் கொண்டனர்.
இதையடுத்து 1923 ஏப்ரலில் கீதா பிரஸ் பகவத் கீதையின் முதல் மொழியாக்கத்தை வெளியிட்டது. 1926வாக்கில் இந்திப் பதிப்பக உலகில் தன்னை வலுவாகக் காலூன்றிக் கொண்ட கீதா பிரஸ், ‘கல்யாண்’ என்ற மாத இதழை வெளியிட முடிவுசெய்தது. இந்தத் தருணத்தில் கீதா பிரஸின் தலைமையகம் கல்கத்தாவில் கோவிந்த் பவன் என்ற அலுவலகத்தில் இருந்து செயல்பட்டுவந்தது.
வருணாசிரம இந்து சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று வெறிகொண்டு செயல்பட்ட சனாதனவாதிகளால் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கப்பட்டு, சனாதன இந்து மதத்தைப் பரப்புவதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதிப்பகம் செயல்பட ஆரம்பித்தது. ‘கல்யாண்’ இதழ் வழியாக, சனாதனக் கோட்பாடுகளை இந்தி மொழி பேசும் இடங்களுக்கெல்லாம் பரப்பியதோடு, இந்தியில் மிகத் தரமாக அச்சிடப்பட்ட ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, இந்துப் புராணங்கள் உள்ளிட்டவற்றை மிக மலிவான விலையில் விற்றது. பிறகு, இதே பதிப்பகத்தில் இருந்து ‘கல்யாண் கல்பத்ரு’ என்ற ஆங்கில இதழும் வெளியிட துவங்கினார்கள்.
அந்த காலகட்டத்தில் புரோகிதப் பார்ப்பனர் வகுப்பினரிடம் மட்டுமே இருந்த ராமசரிதமானஸ் நூலை இந்த பதிப்பகம் வெளியிட்டு பரப்பியது.
காந்தியாரைக் கொன்ற கோட்சேவை உருவாக்கிய அமைப்பான இந்து மகாசபையுடன் தொடர்புடைய நிறுவனம்தான் இந்த கீதாபிரஸ்!
1946ஆம் ஆண்டு கோரக்பூரில் நடந்த இந்து மகா சபா ஆண்டு பொதுக்குழுவின்போது இதன் நிறுவனரான போத்தார் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராகவே பணியாற்றினார். இதுவும், கல்யாண் இதழின் காந்தி மீதான காட்டமான தாக்குதல்களும் இணைந்து நாட்டு விடுதலைக்குப் பின் பெரும் தீமைகளாக முடிந்தன.
நாதுராம் கோட்சே மற்றும் இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ் இயக்கங்களைச் சேர்ந்த சிலர் இணைந்து திட்டமிட்டு 1948 ஜனவரி 30ஆம் நாள் தில்லி பிர்லா ஆலயத்தில் காந்தியைக் கொலை செய்தனர். அதன் விளைவாக நாடு முழுவதும் 25,000 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் போத்தாரும் அவரது குரு ஜெய் தயாள் கோயந்த்காவும் அடங்குவர். அவர்கள் இருவருக்கும் உதவ மறுத்த ஜி.டி. பிர்லா, அவர்களது வழக்கை சர் பத்ரிதாஸ் கோயங்கா எடுத்து நடத்தியதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர்கள் இருவரும் சனாதன மதத்தைப் பரப்பவில்லை. மாறாக சாத்தான் தர்மத்தையே பரப்புகிறார்கள் என்றும் பிர்லா கண்டித்துரைத்தார்.
1980களில் ராமசரிதமானஸ் நூல் 50 லட்சம் பிரதிகளை விற்பனை செய்திருந்தது.
அதன் மூலம் தூவப்பட்ட இந்துத்துவ மதவெறி விதைகள் தான் பின்னர் மரமாகி வட இந்தியா முழுவதையும் கலவர பூமி ஆக்கின.
சனாதன மதம் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்த பார்ப்பனர்கள் மக்களை அடக்கி, சுரண்டி வாழ்வதற்கு, தங்களுக்குத் துணையாக – பாதுகாப்பாக சத்திரியர்களை உடன் வைத்திருந்தனர். இன்றைய ஜனநாயக சூழலில் அவர்களுக்கு சத்திரியர்கள் தேவைப்படாத சூழலில் வைசியர்களை உடன் வைத்துக் கொண்டு பிற மக்களை ஒடுக்குகின்றனர்.
எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய ஒரு கட்டுரையில் இதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“பிரிட்டிஷ் ஆட்சியில் மார்வாடி பனியா சமுதாயம் வணிகத்திலும், சமூக அந்தஸ்திலும் சற்று பின்தங்கி இருந்த சூழலில், மன்னராட்சி காலத்தில் இந்தியாவில்
‘பார்ப்பனர் – ஷத்திரியர்’ என்றிருந்த உயர் அடுக்கினை சுதந்திரத்திற்கு பின் ‘பார்ப்பனர்-வைசியர்’ என மாற்றியமைத்ததன் பின்னணியில் இருக்கும் நிறுவனம் தான் கீதா பிரஸ்!
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால். அன்று போர்க் களத்திலும், யுத்த முனைகளிலும் இருந்து செயல்பட்ட ஷத்திரியர்களின் தேவை தற்போதைய மாறிய சமூகச் சூழலில் தேவைப்படாத நிலையில், ஜனநாயகப் போர்க் களத்தில் அதிகாரத்தை வென்றெடுக்க, தொழில் அதிபர்களைச் சார்ந்து ஆட்சியாளர்கள் இருக்கும் சூழலைக் கட்டமைத்தது தான் கீதா பிரஸ்!
இதன் மூலம் ‘மக்கள் அதிகாரம்’ சார்ந்த ஜனநாயகத்தை மண்ணுக்குள் குழிதோண்டிப் புதைத்து, ‘எங்கும் பணநாயகமே பிரதானம்’ என ஆட்சியாளர்களைச் சிந்திக்க வைத்த ஸ்தாபனம் தான் கீதா பிரஸ்!
இன்று நாட்டைச் சூறையாடி வரும் ‘பார்ப்பன கார்பரேட்’ கூட்டணியின் மூலவேரான கீதா பிரஸுக்கு ஒரு புனித பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சிதான் இந்த காந்தி அமைதி விருதாகும்” என்கிறார். இக்கருத்தை இன்றைய அரசியல் சூழலோடு கவனித்தால் இதன் உண்மை விளங்கும்.
இன்றைய இந்தியாவின் அச்சுறுத்தலான இந்துத்துவ மதவெறி நடவடிக்கைகள் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவதுதான் இந்த கீதாபிரஸ் என்பதற்கு ஏராளமான நிகழ்வுகளை ஆதாரங்களுடன் பட்டியலிட முடியும்!
தங்களின் மதவெறி அரசியலுக்கான கூட்டாளிக்கு இந்த விருது வழங்கப்படுவதன் மூலம் “அமைதிக்கான மகாத்மா காந்தி விருது” இழிவுபடுத்தப்படுகிறது. ♦