கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டக் காவனூரே இவர்தம் சொந்த ஊர். 30.7.1923இல் மாணிக்கம் – மீனாட்சி இணையரின் மகனாகப் பிறந்தார். தம் தாயின் பிறந்தகமாகிய கிளிமங்கலம் எனும் ஊரில் மூன்றாம் வகுப்பு வரையில் படித்து பின் தம் ஊரையடுத்துள்ள திருமுட்டம் என்னும் பேரூரில் எட்டாம் வகுப்பு வரையில் படித்துவிட்டு, உழவுப் பணியில் சில ஆண்டுகளைக் கழித்தபின் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1940-1944) புலவர் பட்டம் பெற்றார்.
படிப்பு முடிந்ததும் (1944) பெரியார் கூட்டத்தில் பேச மயிலாடுதுறையை அடுத்த வடகரை எனும் ஊருக்குச் சென்ற நன்னன், பெரியாரின் விருப்பத்திற்கிணங்க அவரோடு சென்று ஈரோட்டில் பெரியாரின் இல்லத்திலேயே தங்கிச் சுயமரியாதை இயக்கப் பணியில் ஈடுபட்டார். பிறகு இவர்தம் விருப்பப்படி பெரியாரின் உதவியால் தமிழாசிரியர் பணிக்குச் செல்ல நேர்ந்தது.
பெரியாரின் கடும் பத்தியத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமையாலேயே இவர் அவரைவிட்டு விலகாது விலக நேர்ந்தது. பிறகு கல்விப் பணியிலிருந்து கொண்டே மெட்ரிகுலேசன், இண்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ., ஆகியவற்றைப் படித்து முடித்து தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். இவை சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டவை. புலவர் பட்டம் மட்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டது. தமிழாசிரியர் பயிற்சிச் சான்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெறப்பட்டது.
கல்விப்பணியும், நிருவாகப் பணியும்
காவனூரில் பின்னாளில் துவக்கப்பட்ட தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக இவர்தம் கல்விப்பணி தொடங்கியது.
புலவர் பட்டம் பெற்றபின் இலப்பைக் குடிக்காடு, திருமுட்டம் ஆகிய ஊர்களின் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துவிட்டு கோவை, மேட்டூர், வேலூர் ஆகிய ஊர்களிலும் 1949 முதல் சென்னையிலும் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
சென்னையில் மதரசே ஆசம்; சைதை ஆசிரியர் கல்லூரி, அண்ணாசாலை அரசு கலைக்கல்லூரி, ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
இறுதியாக மாநிலக் கல்லூரியில் 7.9.1972 முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுப் பணியாற்றியபின் 1980-83 ஆகிய மூன்றாண்டுகள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணிபுரிந்து 31.5.1983இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றினார்.
தந்தை பெரியார் நூற்றாண்டில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தந்தை பெரியார் புரட்சி மொழிகள் புத்தகத்தைத் தொகுத்தவர்.
அருப்புக்கோட்டை கைலாசம் அறக்கட்டளையில் ‘பெரியார் ஒப்பற்ற சுயசிந்தனையாளர்’ என்னும் தலைப்பில் தந்தை பெரியார் பற்றிய ஆய்வு சொற்பொழிவை நிகழ்த்தி பெரியார் பேருரையாளர் பட்டம் பெற்றவர்.
கல்வித்துறையின் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பயிற்சிப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக் கல்லூரி ஆகிய எல்லாவகை நிலைகளிலும் பணிபுரிந்துள்ளார். இவை தவிர வயது வந்தோர் கல்வி, ஆட்சிமொழிக் கல்வி, பிறமொழியாளர் கல்வி ஆகியவற்றிலும் பணிபுரிந்துள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
எழுத்தறிவித்தலில் நன்னன் முறை எனும் ஒரு புதிய முறை சென்னை, கோலாலம்பூர், லண்டன் ஆகிய மூன்று இடங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. சென்னை தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் கற்பித்துள்ளார். அங்கு அறுபதுக்குக் குறையாத குறு நாடகங்களை (உங்களுக்காக என்பது அத்தொடரின் பொதுப்பெயர்) எழுதி இயக்கி, நடித்துமுள்ளார்.
எழுத்துப்பணி
கட்டுரைகள், ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள், பாடநூல்கள், துணைப்பாட நூல்கள் போன்றன தவிர குறிப்பிட்டுக் கூறத்தக்க எழுத்துப் பணி எதுவும் 1989 வரை நடைபெறவில்லை. எழுத்துப்பணி தமக்கு இயலாத பணி என்ற முடிவுடன் இருந்த அவருக்கு ஒரு வாய்ப்பின் உந்துதலால் ஏற்பட்ட எழுச்சியால் 1990ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை சிறியவும் பெரியவும் ஆகிய நூற்று இருபத்து நான்குக்கும் (124) மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சில நூல்கள் அய்ந்து பதிப்புகளைக் கண்டுள்ளன. இவர்தம் நூல்கள் மிகப் பெரும்பாலும் பெரியாரியலும் தமிழியலும் பற்றியனவாகவே அமைந்துள்ளன.
நன்னன் குடி (அறக் கட்டளை)
அவர்தம் குடும்பத்தில் அப்போது (2004) எட்டு (8) உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு நன்னன் குடி எனும் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
பொதுவாழ்வு
பெரியார், அண்ணா, கலைஞர், புரட்சிக்கவிஞர் ஆகிய திராவிடத் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த இவர் காமராசர், மூப்பனார், சீவானந்தம் (சீவா), கலைவாணர், ம.கோ.இரா. ஆகியவர்களோடும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.
இருமுறை பொதுத்தேர்தலில் நிற்கத்தக்க சூழ்நிலைகள் ஏற்பட்டபோதும் அதில் தமக்குப் போதிய ஆசை இருந்த போதிலும் இறுதியில் உறுதியாக அதை மறுத்து விலகியதோடு நேரடி அரசியலில் ஈடுபடாமலேயே இருந்தார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவராயிருந்து பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பினார். பெரியாரியல் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார்.
தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு, தலைமைச்செயற்குழு போன்றவற்றுள் சிறப்பு அழைப்பாளராக இருந்திருக்கிறார். தி.மு.க. உறுப்பினராகத் தொடர்ந்து
அதன் தொடக்க காலம் முதல் இருந்தார். ♦