90இல் 80 அவர்தான் வீரமணி!

2023 கட்டுரைகள் ஜூலை 16-31, 2023

சென்ற இதழ் தொடர்ச்சி…

27.06.2023 அன்று நடைபெற்ற விழாவில், தமிழர் தலைவர் ஆற்றிய ஏற்புரையின் ஒரு பகுதி.

அருமைத் தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரான -இந்தியாவே போற்றக்கூடிய _- இந்தியாவிலேயே முதலமைச்சர்
களின் முதல் முதலமைச்சர் என்ற நிலையில், எதிர்நீச்சல் அடித்தாலும், என்றைக்கும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதை இந்திய நாட்டிற்கே உணர்த்திக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார்.
அந்த உயிரோட்டமுள்ள வாழ்த்துச் செய்தியை _- ஒவ்வொரு சொல்லிலும் ஆழமான
பொருள் உள்ள கருத்துரையாக இருக்கக்கூடிய அந்த வாழ்த்துச் செய்தியை  நம்முடைய சிவா அவர்கள் படித்தபொழுது, எளிதில் உணர்ச்சி
வயப்படாத நான், மிகுந்த உணர்ச்சிவயப்பட்டேன்.

இன்றைக்கு அவர் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், இந்தியாவிற்கே வழிகாட்டக்
கூடிய ஒரு தலைவராக இன்றைக்கு வளர்ந்-திருக்கிறார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் அதற்குரிய முதல் தொடக்கம் ஆரம்பமாகியிருக்கிறது.
ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்குப் பிறகு 90ஆம் ஆண்டு பிறந்த நாளன்று நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அன்பு ஆணையினால், கலைவாணர் அரங்கத்தில் அவ்விழா நடந்தது.
இப்போது நான் ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் உண்டு. ஏன் ஒப்புக்கொண்டேன்?

90இல் 80 வீரமணி என்ற விழாவிற்கு.அந்த ரகசியத்தை வெளியிட்டால், அது எல்லோருக்கும் பயன்படும். 90இல் 80 என்பதைப் பற்றி எல்லோரும் இங்கே பேசினார்கள்.

சுருக்கமாகச் சொல்கிறேன், இந்த 90 அந்த 80ஆல்தான் கிடைத்தது. அதுதான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம். அந்த 80 இல்லாவிட்டால், 90 இல்லை. அதுதான் ரகசியம். இது எனக்கு மட்டும் அல்ல நண்பர் களே, களத்தில் நிற்கின்ற போராளிகளாக இருக்கக்கூடிய அத்துணை பேரும் தெரிந்து
கொள்ளவேண்டிய உண்மை.

நீங்கள் ஒதுங்கிப் போனால், உங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும்; நீங்கள் உழைத்தால், உயர்வீர்கள்  நீங்கள் என்று சொல்லும்பொழுது, நாம் உயர்வோம் என்று சொல்லும்பொழுது – நாடு, இனம், மொழி, மக்கள். அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்களுக்கு நான் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன் முதலாக மேடையில் என்னை ஏற்றியபொழுது, எனக்கு எழுதிக் கொடுத்தார் அவர். நான் மனப்பாடம் செய்துதான் அந்தக் கூட்டத்தில் பேசினேன். அண்ணா அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், என்னைத் தயாரிக்கும் பொழுது, ஒரு மேசையையும் தயாரித்திருக்கிறார்கள். அப்பொழுது நான் அணிந்தது அரைக்கால் சட்டைதான்; பிறகுதான் முழுக்கால் சட்டையாக மாற்றினார் ஆசிரியர் திராவிடமணி அவர்கள்.

வெளியூர்களுக்கு என்னைப் பேச அழைப்-பார்கள். அரை டிக்கெட்தான் எனக்கு ரயிலில். என்னை அழைத்துக்கொண்டு போகிறவருக்கு ஒரு டிக்கெட். ஆகவே, ஒன்றரை டிக்கெட் ஆசாமியாகத்தான் இந்த இயக்கத்திற்கு வந்தோம்; அதற்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சாரம் வளர்ந்தது. இவ்வளவு பெரிய அளவிற்கு என்னைத் தயாராக்கியது  என்னை ஆளாக்கியது தந்தை பெரியார் என்ற அந்த மாபெரும் தத்துவம்தான்!
இன்றைக்கு எனக்கு இருக்கின்ற மனநிறைவுக்கு நன்றி செலுத்தவேண்டுமானால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் எல்லோரும் நன்றி செலுத்துவதைப்போல, அவருடைய நம்பிக்கைக்கு நாம் இன்னமும் உழைக்கவேண்டும்.

அவருடைய கொள்கை, இலட்சியத்திற்காக, பாதையில்லாத ஊருக்கெல்லாம் அவர் ஈரோட்டுப் பாதை அமைத்தார். அதற்கு நாம் நன்றி செலுத்தவேண்டும் என்ற உணர்வை இன்றைக்கும் நான் பெற்றிருக்கிறேன்.

நான் பொதுவாழ்வில் இத்தனை ஆண்டுகள் இருப்பதற்கு ஓர் அடித்தளமாக இருப்பது- முதலில் என்னை இறக்கிவிட்ட ஆசிரியர் திராவிடமணி  அதற்குமேல் தந்தை பெரியார் திராவிட இயக்கம்  இந்தக் கொள்கைகள். அதற்கு அடுத்து இன்னமும் நான் உற்சாகம் குறையாமல் இருக்கின்றேன் என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய வாழ்விணையர். ஆனால், அவர் வெளிச்சத்திற்கு வரமாட்டார். அஸ்திவாரம் போன்றவர் அவர். கட்டடம் மேலே தெரியும்; அஸ்திவாரம் புதைந்துதான் இருக்கும். அதுபோலத்தான் அவர்.

இவையெல்லாவற்றையும்விட மிக முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெரியார் எங்கு வெற்றி பெற்றார்? திராவிடம் எங்கு வெற்றி பெற்றது? கருப்புச் சட்டை எப்படி வெற்றி பெற்றது? என்றால், கருப்புச் சட்டை தைத்து வைக்காத கட்சியினரே இல்லை இன்றைக்கு.
எல்லாத் தலைவர்களும் கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள்; எல்லா கட்சிகளிலும் கருப்புச் சட்டை இருக்கிறது. காரணம், எவ்வெப்பொழுதெல்லாம் போராடவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் எல்லா தலைவர்களும் கருப்புச் சட்டை அணிந்துகொண்டுதான் களத்திற்கு வருகிறார்கள்.
இந்தப் பணி என்பது இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்குக் காரணமே, நண்பர்களுடைய ஒத்துழைப்பு, தந்தை பெரியாருடைய அசைக்க முடியாத கொள்கையில் இருக்கின்ற நேர்மை, உறுதி; உங்களுடைய அன்பு, ஆதரவு; ஆட்சியாளர்களுடைய மிகப்பெரிய தெம்பு – இவையெல்லாம் ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட மிக முக்கியமான அடிப்படை எதிரிகள், எதிரிகள், இன எதிரிகள்!

அந்த எதிரிகள் வாலாட்டுகின்ற வரையில், எங்களுடைய உணர்ச்சிகள் குறையாது. அந்த எதிரிகள் பல ரூபத்தில் வருகிறார்கள். அன்றைய எதிரிகள் நாணயமான எதிரிகள்; இன்றைய எதிரிகள், நாணயமற்ற எதிரிகள்.
அந்த எதிரிகளையெல்லாம் சமாளிக்கக்கூடிய வியூகத்தை பெரியார் தந்திருக்கிறார்; இந்த இயக்கம் தந்திருக்கிறது.
இன எதிரிகள் எந்த ரூபத்தில் வந்தாலும், நாம் வென்றிருக்கின்றோமே தவிர, திராவிடம் வெற்றிருக்கின்றதே தவிர, ஒருபோதும் தோற்றதாக வரலாறு கிடையாது. அதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்; திராவிடத்தினுடைய அரசியலை மிகச் சுலபமாகத் தட்டிவிடலாம்; சுலபமாக டில்லி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மிரட்டிவிடலாம் – இந்த ஆட்சிதானே – இது சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டு தப்புக் கணக்குப் போடுபவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு இந்தப் பாடம் மிகத் தெளிவாகப் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

அண்ணா பேசுகிறார், ‘‘தலைவர் பெரியார் அவர்களே, நீங்கள் எந்தக் கருத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை ஆட்சிக்குச் சென்று நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களை விட்டுப் போனேன்.

இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்; அதிகார அளவு குறைவாக இருந்தாலும், இந்தப் பணியையே தொடர்ந்து செய்யவேண்டுமா? அல்லது இதை விட்டுவிட்டு பழையபடி உங்களிடத்திலே நான் வந்து அந்தப் பழைய பணியையே செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்; அதைச் செய்யவேண்டுமா? நீங்கள் எதற்கு உத்தரவு இடுகிறீர்களோ அதன்படி நடப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’’ என்று. அதற்கு தந்தை பெரியார் அவர்கள்,

‘‘முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொன்னார், அதிகாரம் அதிகமில்லை; ஆகவே, இந்தப் பணியில் இருக்கவா? அல்லது உங்கள் பின்னால் வரவா? என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் இப்பொழுது அவருக்குச் சொல்கிறேன்; சாதாரணமாகச் சொல்லு கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு கட்டளையிடுவது போன்று சொல்லுகிறேன். நீங்கள் இந்த ஆட்சியிலே இருக்கவேண்டும்; 5 ஆண்டுகளுக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் மக்கள் என்று சொன்னால், அந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒரு நிமிடம்கூட குறையாத அளவிற்கு நீங்கள் அந்தப் பொறுப்பிலே இருந்து எதை எதை செய்யவேண்டுமோ, அதையெல்லாம் செய்யுங்கள். மற்ற பணிகளைச் செய் வதற்கு நாங்கள் வெளியில் இருக்கிறோம்; நாங்கள் அந்தப் பணியை செய்வோம். ஆகவே, இந்த இரண்டும் செய்தால்தான், நம் மக்களுக்குப் பயன்படும்‘’ என்றார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பெரியார் மறைந்த பொழுது சொன்னார், ‘‘நான் பெரியாருக்கு அரசு மரியாதைதான் கொடுக்க முடிந்தது; ஆனால், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடிந்ததா? அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது’’ என்று சொன்னார்.
ஆனால், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த பெருமை, இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
எது என்னை 90 வயது வரையில் வாழ வைத்திருக்கிறது? நீங்கள் எல்லாம் விரும்பியபடி 100 ஆனால், ஒன்றும் அதிசயமில்லை.

வீட்டில் இருப்பதைவிட, போராட்டக் களத்திற்கு வரும் பொழுது எவ்வளவு உற்சாகமாக இருப்போம் என்பதைப் பாருங்கள்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரானவுடன், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லி, அவர்களுக்குப் பதவி ஆணையைக் கொடுத்தார்.
காலையில் இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தோம். இதை பெரியார் திடலே கொண்டாடுகிறது மகிழ்ச்சியில். காரணம் என்னவென்றால், பெரியாருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர் கலைஞர் அவர்கள். அகற்றியவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆகவே, நம்முடைய கொள்கைகள் வெற்றி பெறக்கூடிய கொள்கைகள்; இந்தக் கொள்கைகள் ஒருபோதும் தோற்காதவை!
இந்த ஆட்சியை மிரட்டலாம் என்று நினைக்காதீர்கள்; உள்துறை அமைச்சராக இருந்த மறைந்த சபாநாயகம் அவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம் இன்று.

எனவேதான், ஆட்சிகள் வரும், போகும். ஆனால், ‘திராவிட மாடல்’ ஆட்சி – இது வெறும் ஆட்சிக்காக அல்ல;- காட்சிக்காக அல்ல; – இனத்தின் மீட்சிக்காக இருக்கக்கூடிய ஒரு கருவி.

ஆகவேதான், நாங்கள் யார் ஆட்சிக்கு வரவேண்டும்; யார் வரக்கூடாது என்று சொல்கிறோம் என்றால், எங்களுக்குப் பதவி துச்சமானது; அங்கே போகமாட்டோம்; நாங்கள் எப்பொழுதும் காவலர்களாக இருப்போம். எங்கள் வேலை சென்ட்ரி ட்யூட்டி.
வெளியில் நிற்பதுதான் எங்கள் வேலை. சென்ட்ரி ஒருபோதும் என்ட்ரி கேட்டில் போகமாட்டார்; சென்ட்ரி எப்பொழுதும் சென்ட்ரியாகவே இருப்பார்.

அண்ணா அவர்கள், Sappers & Miners படை என்று உதாரணம் சொல்வார். பின்னால் படை போராட்டத்திற்கு வந்தால், முன்னால் சென்று ‘தூசிப்’படைகள் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வார்கள்; உடைக்க வேண்டிய பாலத்தை உடைப்பார்கள்; கட்டவேண்டிய பாதையை சரியாகப் போடுவார்கள். படை முன்னேறி வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
அது உங்களைப் பாதுகாக்கும் படை அரசியல் உங்கள் படை அதைக் காப்பது எங்கள் வேலை.

Sappers & Miners படையாக நாங்கள் இருப்போம். அதிலும் இப்பொழுது அதிகமாக இந்தப் படைக்கு வேலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலை வருகிறது; வேலை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்; எனவே, அவர்களுக்கும் நன்றி!
என்னை உற்சாகப்படுத்தினீர்கள்; இன்னும் நீண்ட நாள் வாழவேண்டும், வாழவேண்டும் என்று சொன்னீர்கள்.அதற்கு என்ன செய்ய
வேண்டும்? எதிரிகளை நாம் சமாளிக்கவேண்டி இருக்கிறது; எதிரிகளுடைய ஆயுதங்கள் வெளியில் வர வர, நீண்ட நாள் வாழ வேண்டும் என்கிற இந்தக் காரணம் இருக்கும்.

கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன், மாவோ சொன்னதை இந்த நேரத்தில் நினைவூட்டவேண்டும் ‘‘நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை; நம் எதிரிகள் தீர்மானிக் கிறார்கள்’’ என்று அவர் அன்றைக்குச் சொன்னதை இன்றைக்குப் பலரும் சொல்வார்கள். நான் அதை மாற்றிச் சொல்லுகிறேன் – ‘‘நாம் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதைவிட, நம்முடைய கொள்கை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்.’’
எனவே, வாழ்வோம்! வளர்வோம்!! வெற்றி பெறுவோம்!!

நன்றி, வணக்கம்! ♦