– வி.சி.வில்வம்
தன்னைத் தானே சிறந்த எழுத்தாளர் என்றும், இலக்கியவாதி என்றும் கூறிக் கொள்பவர்தான் இந்த ஜெயமோகன்.
எந்தத் தனித்த கொள்கையும் இல்லாமல், கலந்த கலவையாக மக்களைக் குழப்புவதில் அசாதாரண திறமை கொண்டவர் இவர். இவரின் எழுத்துகளைப் படிப்பதெற்கென்றே குறுங்குழு ஒன்று உள்ளது. குறிப்பாகப் பார்ப்பன ஆசீர்வாதம் பெற்ற ஆரிய அடிமை இவர்!
தற்பெருமை பேசிக் கொள்வதிலும், குறிப்பாகப் பொய் பேசுவதற்கும் தயக்கம் காட்டாதவர். சென்ற வாரம் ‘ஜெயமோகன்’ என்கிற தம் இணையப் பக்கத்தில் ‘அறியாமையின் பொறுப்பு’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில் திராவிடர் கழகக் கொள்கை என்பது எதிர்ப்பு மனநிலையை மட்டுமே உருவாக்கும். அதனால் அங்கிருக்கும் நாத்திகர்கள் மதம் மாறுகிறார்கள் என எழுதியிருக்கிறார்!
இதோ அவரது வரிகளை வாசியுங்கள்.
‘‘சென்ற ஓராண்டில் நான் இஸ்லாமுக்கு மதம் மாறிய எட்டு குடும்பங்களுக்கு மேல் நேரில் சந்திக்க நேர்ந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் உள்ள பொதுப் பின்னணி என்பது அவர்களின் முந்தைய தலைமுறையினர் திராவிடர் கழகத்துக் கொள்கை அல்லது இடதுசாரிக் கொள்கை கொண்டிருந்தனர் என்பதுதான்.
திராவிடர் கழகப் பின்னணி அவர்களுக்கு ஓர் எதிர்ப்பு மனநிலையை மட்டுமே அளித்தது. கொள்கை அல்லது நம்பிக்கை என அவர்களிடமிருந்தது எல்லாமே அந்த எதிர்ப்பு தான். எவரும் அந்த எதிர்ப்பிலேயே தொடர்ந்து வாழ முடியாது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழகத்தில் மட்டுமின்றி கம்யூனிச இயக்கத்தில் இருப்பவர்களும் அந்தக் கொள்கையால் வெறுக்கப்பட்டு, மதம் மாறுவதாக எழுதுகிறார். அந்தக் கட்டுரையை இந்துவாக இருந்து எழுதியிருக்கிறாரே தவிர, சமூக மனிதராக அவர் எழுதவில்லை.
இந்து மதத்தை விமர்சனம் செய்யும் சூழல் திராவிட இயக்கத்திற்கு ஏன் வந்தது? இந்துக்களுக்குக் கல்வியை மறுக்காதே, வேலையைப் பறிக்காதே, அவர்கள் சுயமரியாதையை அசிங்கப்படுத்தாதே, அவர்களையும் மனிதர்களாக வாழ விடு என்று தானே கேட்டார்கள்?
இந்திய நாட்டில் ஓர் இந்துவிற்கு ஏற்படுகிறசிரமங்கள் அனைத்தும் எங்கிருந்து வருகின்றன?
யார் தருகிறார்கள்? இஸ்லாம் மதம் தருகிறதா? கிறித்துவ மதம் கொடுக்கிறதா? இந்துக்களின் எதிரியே இந்து மதம் தானே?
தினமும் குரான், பைபிள் படியுங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். வேதங்கள் படியுங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா? மந்திரங்கள் அனைத்தையும் சமஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கிறீர்கள்.
தமிழர்களின் தாய்மொழி தமிழ். தமிழரின் மதம் இந்து மதம் என்றால் அதன் கோட்பாடுகள் எப்படி சமஸ்கிருதத்தில் வந்தது? ஆக தமிழர்களுக்கும், இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தானே பொருள்! தமிழர்களுக்கே தெரியாமல் தமிழர்களை இந்து மதத்தில் சேர்த்த மோசமான மதம் தானே உங்கள் மதம்!
இந்நிலையில் தான் திராவிட இயக்கங்கள் வந்தன. அனைவரும் சமம் என்றன. நீ படி, வேலைக்குப் போ, பொருளீட்டு, கடல் கடந்து உலகம் செல், பகுத்தறிவு பெறு, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று சொன்னது!
ஆண்டு முழுவதும் பண்டிகை கொண்டாடு,துன்பங்கள் தீர கடவுளிடம் வா, நேர்த்திக் கடன் செய், நிறைய செலவழி என்று கூறி இந்துக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி, பயம் காட்டி, அவர்களைக் குழப்பத்திலும், நிம்மதியற்ற வாழ்வை வாழச் செய்து கொண்டிருப்பது தானே உங்கள் இந்து மதம்.
ஏதோ பொழுது போகாமல் எழுதப்பட்டது அல்ல; தமிழர்கள் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டவையே பெரியார் கொள்கை. அது ஒரு வாழ்வியல் தத்துவம்! எவையெல்லாம் முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டார்.
அதன் பயன்தான் தமிழர்கள் அனுபவிப்பது. சிறுபான்மை நாத்திகர்கள் மட்டுமல்ல; பெரும்பான்மை ஆத்திகர்களும், குறிப்பாக இந்துக்களும் உரிமைகளைப் பெற திராவிடர் இயக்கங்களே காரணம்!
ஆக, இந்து மதம் என்கிற மன உளைச்சலில் இருந்து வெளிவந்து, பகுத்தறிவோடு சிந்தித்து, கடவுள், கோயில், திருவிழாக்கள் இல்லாமல் 365 நாள்களும் எப்படி மகிழ்ச்சியோடு வாழ்வது என்பதை அறிந்து சுயமரியாதை வாழ்வு வாழ்கிறோம்!
இதுதான் வெளிப்படையான வரலாறு! அதைவிட்டு வெறுப்புக் கொள்கை என நினைத்து திராவிடர் கழகத்தில் இருக்கும் பிள்ளைகள் மதம் மாறுகிறார்கள் என எழுதுவது எவ்வளவு நாணயமற்ற போக்கு! தமிழர்களிடை விஷம் கலந்த கருத்தைப் பரப்பி… அப்படி என்னதான் ஆரிய அடிமைகளிடம்
சன்மானம் பெறுவார்களோ தெரியவில்லை! ♦