Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முகப்புக் கட்டுரை – மூடநம்பிக்கைகளை முனைந்து பரப்பும் ஊடகங்கள்! – மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கைகள் இருவகைப்படும். ஒன்று அறியாமையால் ஏற்படுபவை. மற்றொன்று திட்டமிட்டே சுயநலத்திற்காக மக்களை ஏமாற்றி வருவாய் ஈட்ட உருவாக்கப்படுபவை.

கடவுள், விதி, பிறவி, பாவ புண்ணியம், சொர்க்கம், நரகம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், திருஷ்டி கழிப்பு, பேய், பலியிடல் போன்றவை அறியாமையால் வந்தவை.

மந்திரம், பில்லி சூனியம், சோதிடம், பரிகாரம், தாயத்து, தகடு, முடிக்கயிறு, காணிக்கை, சடங்குகள் போன்றவை திட்டமிட்டே உருவாக்கப்பட்டவை. அண்மைக்காலத்தில் விதவிதமாய் மக்களை ஏமாற்ற, வருவாய் ஈட்ட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூடநம்பிக்கையைப் புதிதுபுதிதாய் உருவாக்கிப் பரப்பி வருகின்றனர்.

ஆரிய பார்ப்பனர்கள்

இந்தியாவைப் பொறுத்தவரை பிற அயல்நாட்டவர் இங்கு நுழைவதற்குமுன் எந்த மூடநம்பிக்கையும் இன்றிதான் வாழ்ந்தனர். நன்றியின்பாற்பட்ட செயல்பாடுகளைத் தவிர அவர்களிடம் எந்த மூடநம்பிக்கைகளும் இல்லை. ஆனால், ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் நுழைந்து பரவி நிலையாக வாழத் தொடங்கியபின், தங்கள் வருவாய்க்கும், பிழைப்பிற்கும், சிறுபான்மையினரான தங்கள் பாதுகாப்பிற்கும் பல்வேறு சடங்குகளை, மூடநம்பிக்கைகளை உருவாக்கி, அவற்றிற்கு வலுச்சேர்க்கவும், வளர்க்கவும் புராணங்களையும், கதைகளையும் உருவாக்கினர்.

வீரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் யாகம், வேண்டுதல், படையல், பலியிடல் என்று பலவற்றை உருவாக்கி தமிழர்களை ஏற்கும்படி செய்தனர்.
தங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், வருவாய்க்கும், ஆதிக்கத்திற்கும், உயர்விற்கும், மேன்மைக்கும் மூடநம்பிக்கைகள் பெரிதும் பயன்பட்டதால், உதவியதால், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதையே தங்கள் முதல் வேலையாக, தொழிலாகக் கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாக மூடநம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியப் பார்ப்பனர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வரவர, அவை அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, அவற்றை முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளைப் பரப்பப் பெரிதும் பயன்படுத்தி, அறிவியல் வளர்ந்து உச்சம் பெற்றுள்ள காலத்திலும், அதே அறிவியலைக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் உச்சம் பெறச் செய்துவருகின்றனர்.

அச்சு ஊடகங்கள்

கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரித்தாக்-கிக்கொண்டு, பல நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் என்பதால் அச்சு ஊடகங்களும் அவர்கள் ஆதிக்கத்திலே அகப்பட்டுக்கொண்டன.

ஓலைச்சுவடியில் இருந்தவற்றை தாள்களில் அச்சிடும் முறை வந்தவுடன், மூடநம்பிக்கைகளை நூல்கள் வழி பெருமளவில் பரப்பினர். குறிப்பாக புராணங்களை, இதிகாசங்களை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்த்தனர்.

ஏன் என்று கேட்காமல், சிந்திக்காமல் அப்படியே அக்கருத்துகளை, கதைகளை ஏற்க வேண்டும், நம்பவேண்டும் என்று கூறி மக்களைச் சிந்திக்க விடாமல், கண்மூடித்தனமாக ஏற்கும்படி செய்தனர். கல்வியென்றாலே இந்தப் புராணங்களைப் படிப்பதுதான் என்றளவில் கல்வியை முடக்கினர், சுருக்கினர். தங்கள் உயர்விற்கும், மற்றவர்கள் இழிவிற்கும் காரணமாய் அமையும் வகையில் புராணங்களை, இதிகாசங்களை உருவாக்கினர்.
அதன்பிறகு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் வந்தபின் அவற்றையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு மூட நம்பிக்கைகளைப் பரப்புவதை முதன்மையாகக் கொண்டனர்.

மற்ற மக்களும் அச்சிட்டு வந்ததால் அவையெல்லாம் உண்மையென்று நம்பினர். இது மூடநம்பிக்கைகளிலே முதல்தர மூடநம்பிக்கையாகும்.
நாளிதழ்களில், கடவுள், கோயில், சடங்குகள், கும்பாபிஷேகம், தேர் இழுப்பு, தீமிதித்தல், யாகங்கள் செய்தல் போன்றவற்றைப் பற்றி அன்றாடம் செய்திகள் வெளியிட்டனர், அவற்றையும் முதன்மைச் செய்திகளாக வெளியிட்டனர்.
கடவுள் மகிமை, கோயில்களின் மகிமை என்று பல கோணங்களில் கட்டுரைகளை கற்பனை, பொய் கலந்து எழுதிப் பரப்பினர்.

இராசி பலன்

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் இராசிபலன் இல்லாமல் வருவதில்லை. ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு வாரத்திற்கும் இராசிபலன்களைத் தனித்-தனியே வெளியிட்டு மூட-நம்பிக்கைகளைப் பரப்பி, இன்றளவும் நிலைநிறுத்தி வருகின்றனர். இதில் வரும் அனைத்தும் பொய், மோசடிப் பித்தலாட்டங்களே!

ஒரு ஆங்கில நாளிதழின் ஆசிரியரே இதுகுறித்து ஒரு சுவையான கருத்தைக் கூறியுள்ளார். அவருடைய ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ந்து இராசிபலன் எழுதிவந்தவருக்கு உடல்நிலைப் பாதிப்பால், ஒருநாள் எழுத முடியாமல் போக, எப்படியாவது இராசிபலன் இதழில் வரவேண்டுமே என்ற முடிவில், சென்ற ஆண்டு ஒரு நாளில் வெளியிடப்பட்ட இராசிபலனை அப்படியே அன்றைய இராசிபலனாக எடுத்துப்போட்டார். விளைவு என்ன தெரியுமா? அடுத்த நாள் அந்த ராசிபலனைப் பற்றி அவ்வளவு பாராட்டுகள். பலரும், தங்களுக்கு அப்படியே நடந்தது; மிகச் சரியாக இருந்தது; அந்த சோதிடரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; அவர் சோதிட மாமேதை என்று பாராட்டினர்.

இராசிபலன் எவ்வளவு பொய் என்பதற்கு இந்நிகழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதை எழுதினாலும் லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் போது அது பலருக்கு பொருந்தவே செய்யும்!அதுதான் உண்மை.

ஆனால், மூடநம்பிக்கையில் மூழ்கடிக்கப்-பட்டுள்ளவர்களுக்கு அதுவெல்லாம் தெரிவதும் இல்லை. புரிவதும் இல்லை.
இராசிபலன் இல்லாது எந்த ஒரு ஏடும் இந்தியாவில் வருவதில்லை. சோதிடத்திற்கென்றே தனி இதழ்களே வெளியிடப்படுவது வேதனைக்குரியதாகும்.
இப்படிப்பட்ட நிலையில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்று கிரகபெயர்ச்சிகள் வந்துவிட்டால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதுபற்றிய செய்திகள்தான் இதழ்களில் இடம் பெறும்.

இதில் ஒரு தந்திரம் என்னவென்றால் பத்திரிகை விற்று பணம் வருவதாலும் பார்ப்பானுக்கு வருவாய்; பத்திரிகையைப் படித்துவிட்டு கோயிலுக்குப் படையெடுப்பதாலும் பார்ப்பானுக்கு வருவாய்! இதில் படித்த முட்டாள்கள் முதலில் நிற்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

சங்கராச்சாரி அற்புதங்கள்

பத்திரிகைகள் பார்ப்பனர் பிடியில் இருப்பதால், தங்கள் இனத்தின் சங்கராச்சாரி, செத்துப்போன காஞ்சி பெரிய சங்கராச்சாரியை வாராவாரம் மகிமைப்படுத்தி எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாம் வாழும் காலத்தில் கண் முன்னால் வாழ்ந்து இறந்தவர் அவர். அவரே இறுதிக் காலத்தில் கோமாவில் கிடந்து செத்துப்போனவர். நானே நேரில் பார்த்தேன். சுயநினைவின்றி இருந்த அவரை நாற்காலியில் அமர்த்தி கனகாபிஷேகம் செய்தனர். அப்படி கோமாவில் செத்துப் போனவர்தான் ஏராளமான அற்புதங்களைச் செய்தார் என்று ஒவ்வொரு வாரமும் மோசடியாக, பொய்யாக எழுதி வருகின்றனர்.
சாயிபாபாவை அப்படித்தான் தூக்கிப்-பிடித்தார்கள். அவருக்கே குடல்வால் பிரச்சனை வந்தபோது மும்பை மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருடைய பித்தலாட்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அப்படித்தான் இந்த சங்கராச்சாரியையும் அளவின்றி அற்புதங்கள் செய்தவர் என்று எழுதி வருகின்றனர்.

சங்கராச்சாரியைச் சந்தித்தோம்; எங்கள் வாழ்வே வளமானது. சங்கராச்சாரியிடம் வாழ்த்துப் பெற்றோம்; எங்கள் பிரச்சனைகள் எல்லாம் தகர்ந்து விட்டன. சங்கராச்சாரி பிரசாதம் கொடுத்தார்; என் நோய் குணமானது என்று எதையெதையோ எழுதி அவருக்கு மகத்துவம் சேர்க்கின்றனர். இந்த நிலை
இப்படியே போனால் அவரை கடவுளாக்கிவிடுவார்கள்.
அண்மையில் யுடியூப் சேனலில் தற்செயலாக ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு பெண், சங்கராச்சாரி சொன்னதாக ஒருசில வரிகளைச் சொல்லி இந்த வரிகளைத் தினம் காலையில் எழுந்தவுடன் சொன்னால் உங்கள் வாழ்வு உச்சிக்குப் போய்விடும்; செய்து பாருங்கள் என்கிறார். இப்படி ஏராளம் ஏராளம்.

மலர்கள்

அச்சு ஊடகங்களில் வெளியிடப்படும் மலர்கள் அனைத்தும் மேற்கண்ட மூடநம்பிக்கைகளை பரப்புகின்றனவாகவும், வளர்ப்பனவாகவுமே உள்ளன. கோயில்கள், கடவுள்கள், மகிமைகள், இராசிபலன், மந்திரபூஜைகள், மந்திரத்தகடுகள் என்று பல இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கென்றே பல பண்டிதர்கள் நிறைய உருவாகி விட்டனர்.

ஒருவர் பெயர் இராசி என்று சொல்லிப் பிழைக்கிறார். இன்னொருவர் நட்சத்திர பலன் என்று சொல்லிப் பிழைக்கிறார். இன்னொருவர் கையெழுத்தை வைத்து பலன் சொல்கிறார். வாஸ்து, பரிகாரபூசை, நல்ல நாள், நல்ல நேரம் கணித்தல் என்று ஏராளமான வழிகளில் பிழைப்பு பிரம்மாதமாய் நடக்கிறது.

காட்சி ஊடகங்கள்

திரைப்படங்கள் அறுபது ஆண்டுகளுக்கு – முன் புராணக் கதைகளாகவே இருந்து மக்களிடம் மூடநம்பிக்கைகளைப் பரப்பின.
அதன்பின் அண்ணா, கலைஞர் போன்றோரின் அரும்பெரும் முயற்சியால், அவை முறியடிக்கப்பட்டு, சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள், சமத்துவக் கருத்துகள் உருவாக்கப்பட்டன. என்றாலும் மூடக்கருத்துகளைப் பரப்பும் முயற்சியை அவர்கள் நிறுத்தவில்லை. புராணங்களை காலத்திற்கேற்ப கற்பனை கலந்து கவர்ச்சியாக திரைப்படம் எடுத்து மக்களை பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கின்றனர். இதன்மூலம் அடுத்த தலை-முறைக்கும் மூடநம்பிக்கைகளைக் கொண்டு செல்கின்றனர்.

தொலைக்காட்சிகள்

தொலைக்காட்சிகள் வந்தபின், மூடநம்பிக்கைகளைப் பரப்புவது அவர்களுக்கு மிகவும் எளிதாகிவிட்டது. திரையரங்குகளைத் தேடிச் சென்று பார்க்கும் நிலை மாறி, வீட்டிற்குள்ளே மூடக் காட்சிகளைக் கொண்டு வந்துவிட்டனர். காலையில் நீங்கள் தொலைக்காட்சியைக் காணமுற்பட்டால் முதலில் உங்கள் மூளைக்குள் ஏற்றப்படுவது இராசிபலன்கள்தான். எந்தச் சேனலை மாற்றினாலும் அங்கு ஒருவர் உட்கார்ந்து இராசிபலன் சொல்லிக்கொண்டிருப்பார்.
அதைவிட்டு செய்திகளைப் பார்க்க முயன்றால், அந்தக் கோயில் கும்பாபிஷேகம், இந்தக் கோயிலில் தீமிதியென்று வரிசையாகச் செய்திகள். அடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்கதைகள் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளைப் பரப்பக்கூடியவையாகவே உள்ளன. தேவையில்லாமல், வலிய மூடநம்பிக்கைகளை அவற்றுள் நுழைத்து மூடக்கருத்துகளைப் பரப்புகின்றனர்.

பெண்ணடிமைத்தனம், தாலி மகத்துவம், தாலி பூசை, பரிகாரபூசை, வேண்டுதல், நேர்த்திக்கடன், மந்திரம், சோதிடம், தீமிதி, சாமியாடுதல், பேயாடுதல், பேய் ஓட்டுதல் என்று பலப்பல. விதிவிலக்காக ஒருசில தொடர்கள் தவிர, பெரும்பாலான தொடர்களில் இதுதான் நிலை.

பெண்கள் பெரும்பாலான நேரங்களில் இவை போன்ற தொடர்களைப் பார்ப்பதால் அவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் அவலம் நிகழ்கிறது. வீடுகளிலே இக்காட்சிகள் நடப்பதால் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எண்ணெய் விளம்பரம் செய்ய ஒரு நிறுவனம், சாமிக்கு விளக்கேற்ற இந்த எண்ணெய்தான் சிறந்தது என்று கூறும் சாக்கில் குழந்தைகள் மூளையில் மூடநம்பிக்கையை ஏற்றுகின்றனர். அதுவும் பாட்டி, பேத்திக்கு விளக்கம் கூறுவது போல் மூடநம்பிக்கையைக் குழந்தைகளின் மூளையில் ஏற்றுகின்றனர்.

சமூகக் குற்றம்

இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்பி மூடநம்பிக்கைகளைப் ஒழிக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய, அறிவூட்ட வேண்டிய ஊடகங்களே சிறிதுகூட சமூகப் பொறுப்புணர்ச்சியின்றி, உளச்சான்று இன்றி, மக்களை முட்டாள்களாக்கி வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டே இக்காரியங்களைச் செய்வது சமூகக் குற்றமாகும்; சமூக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
சமூக ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன், நேர்மையாக, உளச்சான்றுடன் செயல்பட்டாலே 90 சதவிகிதம் கேடுகள் நீங்கிவிடும். மக்கள் மத்தியில் அதிக அளவில் சென்று சேரும் ஊடகங்கள்தான் இந்தச் சமூக விரோதச் செயல்கள், கேடுகளைச் செய்கின்றன.

எனவே, ஆதிக்க ஜாதிகளின் பிடியிலிருந்து ஊடகங்களை, மற்ற ஜாதியினரும் கைப்பற்ற வேண்டும். ஆரிய பார்ப்பனர் அல்லாதார் நடத்தும் ஊடகங்கள் இத்துரோகத்தைச் செய்யாமல் நிறுத்திக்கொண்டு, மக்களை நல்வழிப்படுத்த வேண்டும். குறிப்பாக வடநாட்டிலிருந்து வந்து தமிழில் காட்சி ஊடகங்களை நடத்துவோர் திட்டமிட்டே மூடநம்பிக்கைகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது.

தூய தமிழ்ப் பெயரைச் சூட்டும் வழக்கம் பெரியார், அண்ணா, கலைஞர் உழைப்பால் நடைமுறைக்கு வந்து வளர்ந்தது. அதை இந்த ஊடகங்கள் பற்றி சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டும் அளவிற்கு மக்களை மூளைச் சலவை செய்துவிட்டன. இன்று தமிழர் வீடுகளில் தமிழ்ப் பெயர்களே இல்லை என்பது மிக வேதனைக்குரியது; கவனத்தில் கொண்டு தீர்வு காணப்பட வேண்டியது.

கலாச்சாரப் புரட்சி

ஆரியப் பார்ப்பனர்களும், அவர்கள் பிடியில் உள்ள ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் திட்டமிட்டு சனாதன நடைமுறைகளை நிலைநிறுத்த ஆட்சி அதிகாரத்தோடு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு, மூடநம்பிக்கைகளை அதிக அளவில் பரப்பினால்தான் சாத்தியப்படும் என்றும் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர். 3 சதவிகிதம் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் 97 சதவிகிதம் மக்களை தாழ்த்தி, வீழ்த்தி, அடக்கி, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்ய முற்படுகின்றனர். கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சியில்லாத காலத்திலேயே தந்தை பெரியார் தன்னால் இயன்ற அளவிற்கு ஆரிய ஆதிக்கச் சக்திகளை முறியடித்து, மூடநம்பிக்கைகளைத் தகர்க்கப் போராடி அதில் அதிக அளவு வெற்றியும் பெற்று, நம்மை மானமும், அறிவும், கல்வியும், பதவியும் உள்ள மக்களாய் முன்னேற்றிச் சென்றுள்ளர். அப்படிப்பட்ட நிலையில் அவரால் கிடைத்த இந்த உயர்வை இழக்காமல், மேலும் நாம் விழிப்புடன் எதிர்வினையாற்றி எதிர்தரப்பாரின் சதிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் பெரிய அளவில் கலாச்சாரப் புரட்சியைச் செய்தாக வேண்டும்.
தற்போது நம்மிடம் நம் கையில் செல்பேசியுள்ளது. அதன்வழி கலாச்சாரப் புரட்சி மிகவும் எளிது. ஒவ்வொரு அதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டாலே நாம் வெற்றி பெற முடியும்.

முதலில் நாம் ஒவ்வொருவரும், பகுத்தறிவுடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து உண்மை எது, சரி எது என்று தெளிய வேண்டும். மூடநம்பிக்கைகளை எந்த அச்சமும் இன்றி அகற்ற வேண்டும். அதற்கு, பகுத்தறிவுச் சிந்தனைகளை நம் செல்பேசி வழி ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குப் பகிரவேண்டும்; பரப்ப வேண்டும்.
சனாதனிகளின் சூழ்ச்சிகளைச் சன்னமாய் விளக்கி மக்களை விழிப்பும் எழுச்சியும் பெறச் செய்யவேண்டும்.

மூடநம்பிக்கைகளை மக்கள் ஏற்க அவர்கள் அதனால் அந்த நன்மை கிடைக்கும், இந்தப் பலன் கிடைக்கும் என்று ஆசை காட்டி நம்மை ஈர்ப்பார்கள், அதில் ஏமாறாது நாம் எச்சரிக்கையுடன் அறிவார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று மக்களுக்கு- குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஊடகங்களை மூடநம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவு வளர்க்கவும், கல்வி, வேலைவாய்ப்பு பெறவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், ஆதிக்கம் ஒழிக்கவும், நல்லிணக்கம் வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும். இது இன்றைய கட்டாயத் தேவையும் கடமையும் ஆகும். ♦