பட்டினிச் சாவு ஏற்பட்டது, திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆதிச்சபுரம் என்ற கிராமத்தில். பிரகாஷ் என்கிற பச்சிளம் பாலகன் பட்டினியால் மடிந்த கோரக் கொடுமை நடைபெற்றது.
சட்டப்பேரவையில் திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் தோழர் கோ. பழனிச்சாமி பட்டினிச் சாவு குறித்து எடுத்துரைத்தபோது, ஆவேசமாகக் குறுக்கிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்குத் தவறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லி எனது அரசுக்குக் களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன், பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை என்று சொன்னால், மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என்று கேள்விக்கணை தொடுத்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தையை இழந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ஒரு பட்டினிச் சாவு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு இருப்பாரேயானால், அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம் – போற்றலாம். மாறாக, மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபிமானமற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா?
அம்மாபேட்டை வீரையன், சண்முகம் என்று எண்ணற்ற விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்தபோது, அது அனைத்தையும் கிண்டல் செய்த, கேலி செய்த – விலை மதிக்க முடியாத மனித உயிர்களைப்பற்றி கிஞ்சிற்றும் கவலையற்ற, அரக்க குணம் படைத்த ஜெயலலிதாவின் ஆட்சியினை இனியும் அனுமதிக்க முடியாது.
வறட்சியின் கோரக் கொடுமைகள் குறித்து, பட்டினிச் சாவுகள் குறித்து, விவசாயிகள் தற்கொலை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுவரவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி நாளேடுகளுக்கு, செய்தி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது குற்றமா?
ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றியது குற்றமென்று கூறி தோழர் ஆர். நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள்மீது அவதூறு வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்திற்கு இழுத்தடித்து வரும் ஜனநாயக விரோத ஆட்சியான அ.தி.மு.க.வை அரியணையில் இருந்து இனியும் அகற்றாமல் இருக்க முடியாது – இருக்கக் கூடாது.
– ஜனசக்தி, 19.3.2006
ஜெயலலிதா ஆட்சியை ஒழித்தே தீரவேண்டும் என்று சூளுரைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் இப்பொழுது ஜெ அம்மையாரை ஆட்சிக்குக் கொண்டு வரத் துடியாய்த் துடிக்கிறது. அடையாளம் காண்பீர்!
அம்மையார் மாறவில்லை, அய்யனார்கள்தான் மாறி அணிசேர்ந்துள்ளனர்! – அது தண்ணிக் காட்டப்பட்டபின்பே!
வாக்காளர்களே, கம்யூனிஸ்டுகள் சொன்ன அந்தப் பேயாட்சியை மீண்டும் வரவழைத்து ஏமாறலாமா? எண்ணுவீர், தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்து சமதர்ம ஆட்சியை மலரச்செய்வீர்.