சுயமரியாதை இயக்கத்தில் அய்யாவின் தொண்டராகத் தன்னைக் காட்டிக் கொள்வதை பெருமிதமாகக் கொண்ட ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் செல்வபுரத்தில் 1.6.1888 ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை தாமரைசெல்வம், தாயார் ரத்தினம் அம்மையார் ஆவர்.
திருச்சி புனித வளனார் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார். பன்னீர்செல்வம் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் பட்டம் முடித்து திரும்பியதும் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். தென்னிந்திய நலவுரிமைச் சங்க முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தம் தீவிர இனவுணர்வுத் தொண்டினால் உயர்ந்திருந்த கட்டத்தில், காங்கிரசை விட்டு வெளியேறி வந்த தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால், அய்யாவின் மீது அன்பும் அவர்தம் செயல்களின்மீது ஆர்வமும் காட்டித் தம்மை தந்தை பெரியாரின் உற்ற நண்பராக்கிக் கொண்டார்.
செங்கற்பட்டு முதலாம் சுயமரியாதை மாநாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தந்தை பெரியாரின் பெரும் பணிக்குத் தோள் கொடுக்கும் தோழரானார்.
சுயமரியாதை மாநாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும், முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்ட பொதுக் கூட்டங்களிலும் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் பன்னீர்செல்வம் அவர்கள் ஆற்றியிருக்கும் உரைகள் இலக்கியத்தரம் உடையவை. இத்தகைய திராவிடச் செம்மல் – திராவிடச் செல்வம்1.3.1940 அன்று லண்டனுக்குச் சென்ற ஹனிபால் என்னும் வானூர்தி விபத்தில் சிக்கி நம்மை விட்டுப் பிரிந்தார். வாழ்க சர்.ஏ.டி. பன்னீர்செல்வம்.
தொகுப்பு : பொ.அறிவன், கழனிப்பாக்கம்.