1916ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு இருபெரும் சிறப்புகள் உண்டு. அந்த மாநாட்டிலேதான் மதச் சிறுபான்மையினருக்கும் உரிய உரிமைகளை வழங்குவது என்ற ஜனநாயக முடிவை இந்திய தேசிய காங்கிரசும், இந்திய முஸ்லிம்லீக்கும் சேர்ந்து எடுத்தார்கள். அதைத்தான் நாம் இப்போதும் லக்னோ ஒப்பந்தம் (Lucknow Fact) என்று அழைக்கிறோம்.
அந்த மாநாட்டுக்கு இருக்கிற இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்த மாநாட்டிலேதான் முதன்முதலாக காந்தியாரும் நேருவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டார்கள்.
அது குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையிலே எழுதுகிறார். 1916ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நேரத்தில் அந்த மாநாடு நடைபெற்றபோது, நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த காந்தியார் அவர்களைச் சந்தித்தேன், என் போன்ற இளைஞர்களுக்கு அவர் ஒரு வித்தியாசமான மனிதராக இருந்தார். அவர் ஒதுங்கித்தான் அம்மாநாட்டில் இருந்தார்.
ஆனாலும், அவர் ஒரு கட்டத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்தப் போகிறவராக இருப்பார் என்கிற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது என்கிறார் நேரு.