கொள்கை அடிப்படையிலேதான்
ஆதரவும் எதிர்ப்பும்.
– கி, வீரமணி
28.6.2003 மாலை 6:00 மணிக்கு சென்னை திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) மன்றத்தில் இலக்கிய வீதி அமைப்பின் வெள்ளிவிழா நிறைவும் சொல்கேளான் கவிதைகள் (ஏ.வி. கிரியின்) நூல் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு நாம் தலைமை ஏற்று உரையாற்ற, நூல் வெளியீடு நடைபெற்றது. இலக்கியவீதி இனியவன் வரவேற்புரையாற்றினார். சொல்கேளான் கவிதை நூலை வலம்புரிஜான் வெளியிட, பார்வையற்ற சகோதரி செல்வி சுப்புலட்சுமி நூலைப் பெற்றுக்கொண்டார். இலக்கிய வீதியின் வெள்ளி விழா நிறைவுச் சிறப்புரையை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராசன் ஆற்றினார்.
தஞ்சை வல்லத்தில் 30.6.2003 அன்று காலை 10:00 மணியளவில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி வளாகத்தில் புத்தாக்க எரிசக்தி பணிமனை, பெரியார் உயிர்கூள விற்பனை நிலையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தும் கல்வெட்டினையும் திறந்து வைத்து பெண்களுக்கான புத்தாக்க எரிசக்திப் பயிற்சி முதல் வகுப்பையும் தொடங்கி வைத்தார்_ ஒன்றிய மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சர் மு. கண்ணப்பன் அவர்கள். அதனையடுத்து மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறை செயலாளர் அஜய் விக்ரம்சிங் சூரிய வெப்ப உலர் சாதனம் மற்றும் சூரிய ஒளி மின் ஆற்றல் நிலையத்தையும் திறந்து வைத்தார். கல்லூரித் தலைவர் என்கிற முறையில் நாம் அமைச்சர் அவர்களை வரவேற்று தலைமை உரையாற்றினோம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு திருச்சி மாநகர மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் எமக்குப் பாராட்டு விழா 01.07.2003 அன்று நடைபெற்றது.
திருச்சி மாநகர மேயர் வணக்கத்திற்குரிய திருமதி. சாருபாலா தொண்டமான் அவர்கள் தலைமை உரையில்,
“தமிழர் தலைவருக்கு கிடைத்த இந்த டாக்டர் பட்டம் என்பது பெண் இனத்திற்குக் கிடைத்த டாக்டர் பட்டமாகக் கருதுகிறேன். தமிழர் தலைவர் நடத்தும் கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, தமிழர் தலைவரின் கருத்தைக் கேட்கும் வாய்ப்பு என் போன்றோர் கல்லூரிகளில் படிக்கும்போது கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட்டார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தலைசிறந்த தலைவர், சிந்தனையாளர் என்று குறிப்பிட்டார். மேலும், குறிப்பிடும்போது என்னைப் போன்ற பெண்கள் தமது உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ள அய்யாவின் உழைப்புதான் காரணம்’’ என்று கூறினார்.
தொடர்ந்து மேயர் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்ற எமக்கு விழாக்குழு சார்பில் சால்வை அணிவித்தார். அதைத் தொடர்ந்து பொதுவுடைமை இயக்க முன்னோடி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். விழாக்குழுவின் சார்பில் டாக்டர் பட்டம் பெற்ற எம்மிடம் அன்பளிப்பாக ரூ.50,000 நிதியினை மனித நேய நண்பர்கள் குழு தலைவர் ‘வீகெயென்’ கண்ணப்பன் அவர்களும் செயலாளர் எல். ஞானராஜ் அவர்களும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து-கொண்ட பல தரப்பினரும் அன்பளிப்புகள், சால்வைகள் வழங்கினர்.
தா.பாண்டியன் உரை…
அடுத்து பாராட்டு விழாவின் சிறப்பு விருந்தினர், பொதுவுடைமை இயக்க முன்னோடி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், தோழர் தா. பாண்டியன் தனது பாராட்டுரையில்,
‘‘இந்திய அரசியல் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியாரால் தான் நடைபெற்றது. அது சமூக நீதிக்கானது. அந்தப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. நீதிமன்றத்தில் சமூகநீதி வழக்கும் நீடிக்கிறது. இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்க பிறவி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற உண்மையை, புரட்சிக் கருத்தைச் சொன்னவர் தந்தை பெரியார். அந்தக் கருத்தை முற்போக்கு இடதுசாரிகள்
புரட்சி மனம் படைத்தோர் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். தவறு செய்துவிட்டார்கள். இடது சாரிகள் நல்லவரோடு (பெரிய
£ரோடு) சேராததால் இந்நாடு இன்று மதவாதிகள் கையில் சிக்கியுள்ளது. இக்கொடுமையிலிருந்து நாட்டைப் பாதுகாக்க தமிழர் தலைவர், தமிழ்நாட்டு மக்கள் பேரன்புக்குரிய தலைவர், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் வீரமணி அவர்கள் நெடுங்காலம் நலமுடன் வாழ்க எனக் கூறி விடை பெறுகிறேன்’’ என்று பேசினார்.
நிறைவாக எமது ஏற்புரையில்,
“காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் தந்தை பெரியாரைப் பாராட்டி, டாக்டர்
பட்டம் கொடுக்க தாமதமாக முடிவெடுத்து, அந்த வாய்ப்பு இல்லாததால், தந்தை பெரியாரின் தொண்டர்களில் ஒருவரான எனக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கி
யிருக்கிறது. இதன்மூலம் எனக்குச் சுமை கூட்டப்பட்டுள்ளது. மனிதநேய நண்பர்கள் குழு வழங்கிய ரூ.50,000த்தை திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அப்படியே வழங்குகிறேன். இந்த இல்லத்துக் குழந்தைகள் முகவரி எழுத்து ஈ.வெ.ரா.ம. என்பதாகும். அக்குழந்தைகள் வளர்ச்சிக்கு அத்தொகையை உங்கள் ஒப்புதலோடு வழங்குகிறேன்.
மேலும், இங்கு ஏராளமானவர்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் திருச்சியிலுள்ள பெரியார் மணியம்மை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்குகிறேன்.
என் இறுதி மூச்சு உள்ளவரை என் பணி பெரியார் பணி தொடரும். நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது உழைப்பேன். மனிதநேயம் மலரச் செய்ய அய்யா பெரியாரின் இலட்சியம் வென்றிட பணி செய்வேன். “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற நிலை நோக்கி எங்கள் பயணம் தொடரும்’’ எனக் குறிப்பிட்டேன்.
விருத்தாசலம் வட்டம் சின்னப்பரூரில் கடந்த 6.7.2003 ஞாயிறு காலை 8:30 மணிக்கு கடலூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஆ.த. குருநாதன்- கு. வசந்தா ஆகியோரின் மகனும்ஜி.கே. பழவணிகம் காமராஜ் பழ வியாபாரிகள் சங்கப் பொருளாளரும் மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவருமான கு. கிருஷ்ணமூர்த்திஅவர்களுக்கும் விருத்தாசலம் சின்னபரூர் அம்புலிராமசாமி_ விஜயலட்சுமி ஆகியோரின் மகள் இரா. அனிதா ராஜ் அவர்களுக்கும் மணமகள் இல்லத்தில் மணவிழாவினை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
திண்டிவனத்தில் 9.7.2003 அன்று காலை 9:30 மணிக்கு காந்தி சிலை அருகிலுள்ள ஆர்.எஸ். வள்ளி மகாலில் பாஞ்சாலம் வீ. ஏழுமலை – பொம்மி ஆகியோரின் மகன் ஏ.சிவக்குமார் (செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி) தீவனூர் கே.எம். கண்ணன் – இராஜேஸ்வரி ஆகியோரின் மகள் க. கீதாலட்சுமி(P.V. Polytechnic College. Thindivanam) இவர்கள் இணையேற்கும் நிகழ்வினை நடத்திவைத்து சிறப்புரையாற்றினோம்.
உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகரில் மணமகன் இல்லத்தில் 10.7.2003 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு துரை. மகாலிங்கம் – நல்லம்மாள் ஆகியோரின் மகன் மணி – ஒக்கநாடு மேலையூர் தெற்குத் தெரு சா. தருமலிங்கம் _ ராசம்மாள் ஆகியோரின் மகள் உஷாராணி இவர்களின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
குடவாசல் 11.7.2003 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு எம்.எஸ்.கே. திருமண மண்டபத்தில் மஞ்சக்குடி சிவானந்தம் _ பொன்னம்மாள் ஆகியோரின் மகன் பெரியார் சமூக பாதுகாப்பு அணி பயிற்றுநர் சி. அம்பேத்கர் (எ) அசோக்குமார், பூங்குடி கணேசன் _ கல்யாணி ஆகியோரின் மகள் க. உமாராணி இருவருக்குமான மணவிழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம். விழாவில் கழகத் தோழர் அன்புமணி- ரேணுகா ஆகியோரின் பெண் குழந்தைக்கு மணியம்மை என்றும் மற்றொரு இணையரின் பெண் குழந்தைக்கு ‘அறிவுச்செல்வி’ என்றும் பெயர் சூட்டினோம்.
திருச்சி திருவெறும்பூரில் 11.7.2003 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு சீரணி அரங்கத்தில் பி.எச்.இ.எல்லில் பணிபுரியும் கழகத் தோழர்களால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பகுத்தறிவு எழுச்சி மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினோம்.
மாநாட்டு மேடையில் பெரியாரின் கொள்கையை ஏற்ற பெரம்பலூர் மாவட்டம் கீழராயபுரம் பழனிமுத்து_ சரஸ்வதி ஆகியோரின் மகன் கழக இளைஞரணித் தமிழர் ப. சரவணன் செந்துறை வட்டம் மருவத்தூர் சிங்காரம் (நினைவில் வாழும்) கலையரசி ஆகியோரின் மகள் சி. தென்றல் ஆகிய இருவரின் இணையேற்பு நிகழ்வையும் நடத்திவைத்தோம்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 13.7.2003 ஞாயிறு அன்று காலை 10:00 மணிக்குத் தொடங்கி இரவு 10:00 மணிவரை திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் பச்சைத்தமிழர்_ கர்மவீரர்_ கல்வி வள்ளல்_ பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக எழுச்சிமிகு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். காமராசர் திருவுருவச் சிலையை நாம் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
தமிழர் சமூக விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணம் 15.07.2003 அன்று கொட்டும் மழையில் நாகர்கோவிலில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவுற்றது. தமிழர் சமுதாய விழிப்புணர்வுக்கான எழுச்சி விழாப் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் 15.7.2003 மாலை 4:00 செம்மங்குடிச் சாலையில் மாவட்டத் தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சி.எம். பெருமாள் வரவேற்க, பள்ளத்தூர் நாவலரசு_ தாசு குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு. அறிவுக்கரசு உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி உரைக்குப்பின் நாம் சிறப்புரையாற்றினோம். அடுத்து வள்ளியூர் திருவள்ளுவர் திடலிலும், பாளையங்கோட்டை மார்க்கெட் திடலிலும் தூத்துக்குடி 1ஆம் கேட் காந்தி சிலை முன்பும் நடந்த கூட்டங்களில் உரையாற்றினோம்.
தமிழர் சமூகநீதி விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணம் 16.7.2003 அன்று அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் எழுச்சிப் பயண நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் ‘வானவில்’ மணி தலைமையில் நடைபெற்றது. மதுரைச் சாலையில் உள்ள எஸ்.கே.பி. பள்ளிச்சாலை சந்திப்பில் பொதுக்கூட்டத்தில், அடுத்து விருதுநகர் குளக்கரை பொதுக்கூட்டத்தில் இரவு 7:00 மணிக்கும்,
17.7.2003 இரவு 8:00 மணிக்கு திருமங்கலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கம் (தேவர்) சிலை அருகில் நடந்த கூட்டத்திலும், மதுரை முனிச்சாலை ஒபுளா படித்துறையில் இரவு 9:00 மணிக்கு மாவட்டத் தலைவர் கி. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும்,
17.7.2003 அன்று மாலை 5:00 மணிக்கு மதுரையையடுத்த மேலூரிலும் 7:00 மணியளவில் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்திலும், இரவு 8:30 மணியளவில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகேயும், இரவு 9:15க்கு காரைக்குடி பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினோம்.
18.7.2003 அன்று மாலை 6:00 மணியளவில் திருமயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும், மாலை 7:00 மணிக்கு புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திலும், 8:30 மணியளவில் கீரனூர் கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றினோம்.
தமிழர் சமூகநீதி விழிப்புணர்வு எழுச்சிப் பயணம் அய்யம்பேட்டை சாவடி பஜாரில் அனைத்துக் கட்சியினர் சார்பாக 21.7.2003 மாலை 6:00 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.
இரவு 7:30 மணியளவில் நாச்சியார் கோவில் வடக்கு வீதியிலும், சிறப்பான வரவேற்புக்குப்பின் இரவு 9:00 மணிக்கு குடவாசல் பேருந்து நிலையம் அருகேயும் இரவு 10:00 மணிக்கு திருவாரூரிலும் உரையாற்றினோம்.
23.7.2003 பாண்டிச்சேரி கடலூர்_ திண்டிவனம் 25.7.2003 செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,
வாலாஜாபாத், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாற்றியபின் வில்லிவாக்கத்தில் நிறைவாக சிறப்புரையாற்றினோம்.
சமயபுரத்தில் 27.7.2003 ஞாயிறு காலை 9:00 மணிக்கு மாரியம்மன் திருமண மண்டபத்தில் இந்திராநகர் வே. பாண்டியன் _ பா. பாலாம்பாள் ஆகியோரின் மகன் பா. சந்திரமோகன் இலால்குடி ரெத்தினம் – ரெ. சீதையம்மாள் ஆகியோரின் மகள் ரெ. இளவரசி ஆகிய இருவருடைய இணையேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு, நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட தி.க.தலைவர் துரை. சந்திரசேகரன் அவர்களின் தாயார் பக்கிரி அம்மாள் (வயது 76) கடந்த 6.7.2003 அன்று இயற்கையெய்தியதை அடுத்து அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 1.8.2003 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ராஜாங்கம் தலைமை வகித்தார். துரை. சந்திரசேகரன் வரவேற்றார். அடுத்து அன்னாரின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினோம்.
அடுத்து மாலை 6:00 மணியளவில் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் இரா. இராசரெத்தினம் அவர்களின் படத்திறப்பு பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணித் தலைவர் கு. கிருட்டினமூர்த்தி வரவேற்றார். நிறைவாக அவர்களின் படத்தைத் திறந்து வைத்து நினைவுரையாற்றினோம்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் வடகுடியில் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா 3.8.2003 அன்று மாலை 5:00 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை சுடர்வேந்தனின் ‘மந்திரமா _ தந்திரமா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிலை அருகிலுள்ள சமுதாயக் கூடத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டுமென்று பஞ்சாயத்து தீர்மானமாக உள்ளதை ஊராட்சித் தலைவர் சிவாஜி அவர்கள் சுட்டிக்காட்டி, தந்தை பெரியார் பெயரை வைக்க வேண்டுமென்று கேட்டதன் அடிப்படையில் அந்த கூட்டத்திற்கு தந்தை பெரியார் சமுதாயக்கூடம் என்று பெயர் சூட்டப்பட்டது. நிறைவாக தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 3.8.2003 ஞாயிறு இரவு 8:00 மணிக்கு பெரியார் படிப்பகம் எதிரிலுள்ள இடத்தில் பெரியார் பெருந்தொண்டர் மனித நேய வள்ளல் சுயமரியாதைச் சுடரொளி வேளாங்கண்ணி எல். முத்தையா அவர்களின் படத்திறப்பு_ வீரவணக்கப் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நாகை மாவட்ட விவசாய அணிச்செயலாளர் எம்.ஆர். பொன்னுசாமி வரவேற்றுப் பேசினார். நாகை மாவட்ட தி.க. தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் தலைமை வகித்துப் பேசினார். மனிதநேய வள்ளல் வேளாங்கண்ணி எல். முத்தையா அவர்களின் நினைவுக் கல்வெட்டினையும், மேடையில் அமைக்கப்பட்டிருந்த எல்.முத்தையா அவர்கள்
படத்தினையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினோம்.
நமது ஆதரவும், எதிர்ப்பும் கொள்கையின் அடிப்படையிலே இருக்கும் என்பதை பல அரசியல் நிகழ்வுகளில் நாம் உறுதி செய்துள்ளோம். அவ்வகையில் 17.7.2003 தேதியில் ‘‘ஆனந்த விகட’’னுக்கு அளித்த பேட்டியும் முக்கியமானது. எனவே, அப்பேட்டியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
“அயோத்தி விவகாரம் மறுபடியும் அனல் கிளப்ப ஆரம்பித்துவிட்டதே?’’
“அயோத்தி விவகாரம் நம் நாட்டின் தேசியத் துயரமாகிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த பி.ஜே.பி. அரசு சொல்லிக்கொள்வது மாதிரி எந்தச் சாதனையையும் செய்யவில்லை. அதற்குள் அடுத்த தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால்தான் மனித மனத்தின் மலிவான மத உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அதில் லாபம் பார்க்கத் துடிக்கிறது. குஜராத் மாநிலத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்த மத உணர்ச்சி இந்தியா முழுவதும் பெற்றுத்தரும் என்று கணக்குப் போடுகிறார்கள் இந்தப் பண்டிதர்கள்.’’
“இந்துத்துவா கோஷம் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்று அடிக்கடி சொல்வீர்கள். ஆனால், கோவையில் குஜராத் முதல்வர் நரேந்திர
மோடிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறதே?’’
கட்சி வளர்ப்பதற்கு பி.ஜே.பி.க்கு ஏதாவது ‘ஷோ பீஸ்’ தேவைப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு இப்படி தேசியத் தலைவர்களை அவ்வப்போது கொண்டு வந்து “ஷோ’’ காண்பிப்பது காங்கிரஸ் கட்சியின் தோற்றுப் போன ஃபார்முலா. அதை இப்போது பி.ஜே.பி. கையில் எடுத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல… தமிழ்நாட்டு மக்களுக்கு ராமர் கோயிலோ, அயோத்தியோ முக்கிய விஷயம் அல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்துமதம் என்பது வேறு; இந்துத்துவா என்பது வேறு. பிள்ளையாரைச் சுற்றுபவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸின் அங்கத்தினர் என்று சொல்ல முடியாது. திராவிட இன உணர்வு இங்கே நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருக்கும். அதனால் இங்கு திராவிடக் கட்சிகளின் தோள்மீது ஏறித்தான் தேசியக் கட்சிகள் தங்கள் உயரத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது. இது தேசியக் கட்சிகளுக்கும் தெரியும்.’’
“ஜெயலலிதா ‘இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லையென்றால், வேறு எங்கே கட்ட முடியும்?’ என்று கேட்டிருக்கிறார். ஜெயலலிதாவை ஆதரித்துவரும் உங்கள் பதில் என்ன?’’
“வேதனையும், வருத்தமும், வெட்கமும் படுகிறோம். திராவிட இயக்கத்தின் பிரிவுகளில் ஒன்றின் முதலமைச்சரிடமிருந்து இப்படிப்பட்ட பதில்கள் வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்துத்துவா கொள்கையுடைய கட்சிகளேகூட சொல்லத் தயங்கும் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். திராவிட இயக்கத்தின் கண்ணோட்டத்தில் இதை எந்தவிதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது.
இந்தியாவில் ராமர் கோயில்களுக்கா பஞ்சம்? அயோத்தியிலேயே ஏராளமாக ராமர் கோயில்கள் இருக்கின்றன. பிறகென்ன பேச்சு!
அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையால் இந்த தேசம் முழுக்க எவ்வளவு பெரிய மதக் கலவரங்கள் நடந்தன என்பது முதல்வருக்குத் தெரியாதா? நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இன்னமும் அங்கே சாமியார்களைத் திரட்டி அயோத்தியைக் கலவர பூமியாக ஆக்குகிற விஷயங்கள் எல்லாம் அவர் அறியாததா? நிலைமை இப்படி இருக்க, பெரியார், அண்ணா பூமியிலிருந்தா இந்தக் குரல் கிளம்ப வேண்டும்?
இப்படிப்பட்ட இந்துத்துவா குரலை எழுப்பினால், அதன்மூலம் பி.ஜே.பி.யின் ஆதரவு வாக்குகளை, தானே வாங்கிவிடலாம் என்று முதல்வர் நினைத்திருக்கலாம். ஆனால், அதுவும் தப்புக் கணக்கு. இதனால் வருகிற அய்ந்து சதவிகித லாபத்தைவிட பெருமளவு நஷ்டமே வரும் என்று முதல்வருக்கு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் 1999, 2001 தேர்தல்களில் மதச் சார்பற்ற கூட்டணிக்குத் தலைமையேற்ற ஒருவர் இப்போது இப்படிச் சொல்வது தவறு.’’
“பொது சிவில் சட்டம் வந்தால் அதையும் ஆதரிக்கப் போவதாகச் சொல்கிறாரே ஜெயலலிதா?’’
“அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் என்று வருவது இருக்கட்டும் இந்து மதத்தினர் அனைவருமே ஒரே மாதிரியா? அயோத்திப் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் சட்ட வாரியத்துக்குக் கடிதம் போட்டார்_ காஞ்சி சங்கராச்சாரியார். ‘ஸ்மார்த்தரான (சிவனை வணங்கும்) சங்கராச்சாரியாருக்கு வைஷ்ணவ ராமன் கோயில் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?’ என்று வி.எச்.பி.களான அசோக்சிங்கால், கிரிநாத் கிஷோர் இருவரும் கேட்டார்கள்.
இனி கோதுமைதான் அனைவருக்கும் உணவு என்று சட்டம் கொண்டு வந்துவிட முடியுமா? காய்கறி சாப்பிடுபவர்களுக்குக் கூட சில காய்கறிகள் பிடிக்கிறது. சில காய்கறிகள் அலர்ஜி. எனவே, அனைவருக்கும் பொது என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானது.’’
“ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான நீங்கள், இதைப்பற்றியெல்லாம் நேரடியாகவே அவரிடம் சொன்னீர்களா?’’
“எல்லாவற்றையும் நேரடியாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. மேலும், இந்த விஷயத்தில் நாங்கள் என்ன முடிவெடுக்கிறோம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதனால்தான் வெளிப்படையாகச் சொல்கிறோம்.
நல்ல, தெளிவான முடிவை முதலமைச்சர் எடுக்கும்போது பாராட்டுவோம். இதுபோன்ற மோசமான முடிவெடுத்தால், கடுமையாக விமர்சிப்போம், கண்டிப்போம். எங்கள் ஆதரவு எப்போதுமே கொள்கை அடிப்படையில்தான்!
“நடராஜனும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு ஜெயலலிதாவால் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால்தான் திடீரென்று நீங்கள் ஜெயலலிதாவை விமர்சிக்கிறீர்கள் என்கிறார்களே?’’
“யார் சொன்னது? எங்கள் விமர்சனத்துக்கும், நடராஜனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நடராஜனை நான் சந்தித்தே பல நாள்கள் ஆகிவிட்டது. தனிப்பட்ட எந்த நபர்களுக்காகவும் நாங்கள் இயக்கத்தை நடத்தவில்லை.
அனைத்துக் கட்சியினருடனும் நட்பு ரீதியாகப் பழகுகிறோம். திராவிடர் கழகம் பொதுவான அமைப்பு. இங்கு எந்தத் தனி நபருக்காகவும் எந்த முடிவும் எடுப்பதில்லை. நீங்கள் சொன்னதைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்’’ என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டேன்.
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநில செயற்குழு உறுப்பினரும் பெரியார் பெருந் தொண்டருமான சுயமரியாதைச் சுடரொளி வை. கண்ணையன் 4.8.2003 மதியம் 1:00 மணியளவில் மறைவுற்றார். அது குறித்து நாம் வெளியிட்ட இரங்கல் செய்தி துண்டறிக்கையாக அப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் தோக்கியத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா 25.8.2003 அன்று இரவு 7:00 மணியளவில் மிகவும் எழுச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் தொடக்கமாக மாலை 5:00 மணிக்கு மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. பேரணிக்கு பெ.சுந்தரம், சி. தமிழ்ச் செல்வன், சி. வீரமணி, அண்ணா சரவணன், பழ. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் கழக இளைஞரணித் தோழர்கள் கடவுள் இல்லை; கடவுளை மற மனிதனை நினை!! என்று எழுச்சி முழக்கமிட்டு முதுகில் அலகு குத்தி அம்பாசிடர் காரை தோழர்கள் இழுத்து வந்தனர்.
விழாவுக்கு மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமை வகித்தார் மாவட்டக் காப்பாளர் ஏ.டி.கோபால், மாவட்டச் செயலாளர் ஜெ. துரைசாமி, நகரத் தலைவர் மா.தி. பாலன், ஒன்றியச் செயலாளர் க.எல்லப்பன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா. கோவிந்தன் வரவேற்றுப் பேசினார்.
ஊரின் மய்யத்தில் கம்பீரத்துடன் எழுச்சியுடன் தோற்றமளிக்கும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையினை பலத்த கரவொலிக்கிடையே திறந்துவைத்துச் சிறப்புரையாற்றினோம்.
நினைவுகள் நீளும்…