இயற்கையை நேசித்த பெண்ணுரிமைப் போராளி

மே 01-15

– டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ.பிஎச்.டி

உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபெல் பரிசாகும். அறிவியல், மருத்துவம், கலை இலக்கியம், உலக அமைதி முதலான துறைகளில் உயர்ந்த தொண்டாற்றிய பெருமக்களுக்கு இப்பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் அமெரிக்கச் சார்புடைய அறிஞர்களுக்கு மட்டுமே நோபெல் பரிசு வழங்கப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கடந்த ஆண்டு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் சீன அரசு, அப்பரிசினை அவர் நேரில் சென்று பெறுவதற்குத் தடைவிதித்து விட்டது. இதைப் போன்றே கறுப்பின அறிஞர்களும் பெண்களும் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், காலம் இத்தடைகளை இப்போது தகர்த்தெறிந்திருக்கிறது.
அண்மையில் (2011 செப்டம்பர்) இயற்கை எய்திய கென்யா நாட்டுப் பெண்மணி வங்காரி மத்தாய் நோபெல் பரிசுபெற்ற முதல் கறுப்பினப் பெண்மணியாவார். பெண்ணுரிமைக்காகவும் உலக அமைதிக்காகவும் போராடியமைக்காக வங்காரி மத்தாய் அம்மையாருக்கு 2004ஆம் ஆண்டு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

1940இல் கென்யாவில் பிறந்த மத்தாய் தம் இளமைக் காலத்தில் ஆப்பிரிக்காவின் இயற்கை வளம் அழிக்கப்படுவதைக் கண்டு வருந்தினார். விலைமதிப்பற்ற மரங்கள் வெள்ளையர்களால் வெட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டன. ஆப்பிரிக்காவின் அழகு மிகுந்த ஆப்பிள் தோட்டங்களும் கனிமரங்கள் நிறைந்த காடுகளும் அந்த மண்ணின் மைந்தரிடமிருந்து கைமாறிப் போயின. அந்தத் துயர வரலாற்றை இப்படி ஒரு கவிஞன் பாடுகிறான்:

முன்னம் ஒருநாள் அவர்கள் (வெள்ளையர்)
இங்கு, வந்தபோது ஆப்பிள் தோட்டங்களும்
கனிமரக் காடுகளும் நம் கைகளில் இருந்தன.
அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது.
கால ஓட்டத்தில் கதைகளைச் சொல்லி
பைபிளை விரித்து வைத்துச் செம்மறி ஆடுகளாய் நம்மை மேயவைத்தார்கள்!
இப்போது நம்முடைய தோட்டங்கள்
அவர்கள் கைகளில்!
பைபிள் நம்முடைய கைகளில்!

மரங்கள் வெட்டப்பட்டமையால் மழைப் பொழிவு குறைந்தது. நீரோடைகள் வற்றிப் போயின. குடிப்பதற்குத் தூய்மையான தண்ணீர் கிடைக்கவில்லை! வறுமையின் பிடியில் கறுப்பின மக்கள் கண்ணீர் சிந்தினர். பெண்கள் வெள்ளையர்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தகைய நிகழ்வுகள், வங்காரி மத்தாயின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தன. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் எழுந்த விடுதலைக் குரலும் அவர் காதில் விழுந்தது.

நிறவேறுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட கறுப்பினச் சமூகத்தின் துயரங்களைச் சுமந்தவாறு உயர்கல்விக்காக வங்காரி மத்தாய் அமெரிக்காவில் உள்ள பிட்சுபர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கென்யாவின் ஊர்ப்புறப் பெண்களில் சிலர்க்கு மட்டுமே இத்தகைய அரிய வாய்ப்பு அக்காலத்தில் கிடைத்தது.

கால்நடை மருந்தியலில் மிக உயரிய பட்டத்தைப் பெற்ற வங்காரி மத்தாய், பிட்சுபர்க் கல்கலைக் கழகத்தில் கால்நடை மருந்தியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்று, சிறிது காலம் பணியாற்றினார். அப்பல்கலைக்கழகத்தில் ஒரு துறையின் தலைவரான முதற்பெண்மணி வங்காரிதான்!

புதிய சிந்தனைகளோடும் உறுதி வாய்ந்த முடிவுகளோடும் 1969இல் வங்காரி மத்தாய் தம் தாயகமான கென்யாவுக்குத் திரும்பினார். சின்னஞ்சிறு வயதில் தான் ஓடிவிளையாடிய நீரோடைகள், வேனிற்காலத்தில் நிழல் விரித்த நெடுமரங்கள் என்று அழகு கொழித்த இயற்கை அழிந்துபோய் கிடந்த காட்சியைக் கண்டு மனம் வருந்தினார். இருண்ட கண்டம் என அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்யும் இயக்கத்தைத் தொடங்கினார் வங்காரி மத்தாய். பசுமை வளையம் (கிரீன் பெல்ட்) எனும் பெயரில் முதலில் கென்யாவில் 1977இல் தொடங்கப் பெற்ற அவ்வியக்கம் சுற்றுச் சூழலைக் காப்பாற்றுமாறு மக்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டது. பசுமை வளையத்தின் மூலமாக ஆப்பிரிக்கா முழுவதும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுப் பசுமைச் சூழலைத் தோற்றுவித்தார் வங்காரி. மத்தாயின் இந்தப் பசுமைப் புரட்சிக்குக் கறுப்பின மக்கள் கைகொடுத்தனர்.
ஒருபுறம் பசுமைப் புரட்சியை நடத்தி வெற்றி கண்டு வந்த வங்காரி, மறுபுறம் வெள்ளையரின் வல்லாண்மைக்கு இரையாகி வாழ்விழந்த பெண்களின் மறுவாழ்விற்கான தம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். அமைதி வழியில் ஆப்பிரிக்கப் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்கெனச் சமூக இயக்கங்களைத் தோற்றவித்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஓர் அமைதிப் புரட்சி அரங்கேறியது கென்யா அதற்குத் தலைமை தாங்கியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அரசின் செயல்பாடுகளில் கமுக்கம் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. அப்போதுதான் நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்காகச் செயல்படுகிறது என்று மக்கள் நம்புவார்கள். ஆகவே அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று வங்காரி மக்களிடையே முழங்கினார். 2002இல் நடைபெற்ற கென்யப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுச் சுற்றுச் சூழல்துறை அமைச்சராகச் சிறிது காலம் பணியாற்றினார்.

பசுமைச் சூழலை உருவாக்கி இயற்கையைப் பாதுகாப்பது, பெண்ணுரிமைக்காகப் போராடுவது, மக்கள் அரசாங்கம் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான அமைதிவழி அரசியல் போராட்டம் என்று வங்காரி மத்தாய் பன்முகத் தொண்டறத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். இதன் பயனாக 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வங்காரி மத்தாய்க்கு வழங்கப்பட்டது.

கடவுளைப் பற்றிக் கவலைப்படாது கடமையாற்றி வந்த மத்தாய், அமைதிப் பணிக்கான நோபெல் பரிசினைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். அஃதோர் ஏற்புரை இலக்கியம் ஆகும். அவருடைய ஏற்புரையில் எவ்விடத்திலும் கடவுளைப் பற்றிய குறிப்பில்லை!

2004ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாளன்று நார்வேயின் ஆசுலோ நகரின் நகர்மன்றத்தில் வங்காரி மத்தாய் ஆற்றிய ஏற்புரை இதோ!

மேன்மை தங்கிய பெருமக்களே! நார்வே நோபெல் குழுவின் மதிப்புமிகு உறுப்பினர்களே! தோழர்களே! 2004ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசினைப் பெற்ற பெருமையுடன் உங்கள் முன்னாலும் உலகின் முன்பாகவும் நான் பணிவோடு நிற்கிறேன். இந்தப் பரிசினைப் பெறும் முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற முறையில் கென்ய மக்களின் சார்பாகவும் ஆப்பிரிக்க மக்களின் சார்பாகவும் ஏன், உலக மக்களின் சார்பாகவும் நான் இப்பரிசினை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் என் சிந்தனையைச் செலவழித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், ஒரு தாய் என்ற முறையில், இளைஞர்களுக்கு இப்பரிசு தரும் தூண்டுணர்வை நான் பாராட்டுகிறேன். அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இப்பரிசு எனக்கு அளிக்கப்பட்ட போதிலும், பெண்ணுரிமைக்காகவும் பசுமை மயமாக்கத்திற்காகவும் உலகமெங்கும் பாடுபட்டுவரும் எண்ணற்ற பெருமக்களின் சமுதாயப் பணியை இப்பரிசு பெருமைப்படுத்துகிறது! ஆண்_பெண் சமத்துவத்திற்காகவும், மனித உரிமைகளையும் சுற்றுச் சூழலையும் காப்பதற்காகவும் அவர்கள் அமைதியான முறையில் எவருடைய பாராட்டு மொழிகளையும் எதிர்பாராமல், உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை நான் அறிவேன்.

என் அன்பிற்குரிய ஆப்பிரிக்க மக்களே! இந்த நல்வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்தக் கொண்டு முரண்பாடுகளையும் மோதல்களையும் தவிர்த்துவிட்டு வறுமையை ஒழிப்போம். மனித உரிமைகளையும் சுற்றுச் சூழலையும் பேணிக்காப்போம்.

என் இளமைப் பருவத்தில், கென்யாவின் நாட்டுப்புறங்களில் இயற்கை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு அங்கு வணிகப் பயிர்கள் வளர்க்கப்பட்டன. நமக்குத் தண்ணீர் நல்கிய மரங்கள் அடர்ந்த இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டமையால் கென்யாவின் இயற்கை அழகு மடிந்து போயிற்று.

மேன்மைதங்கிய பெருமக்களே! 1977இல் நாங்கள் பசுமை வளையம் எனும் இயக்கத்தைத் தொடங்கியபோது நாட்டுப் புறத்தில் வாழ்ந்த பெண்களுக்கு அடுப்பு எரிப்பதற்கு விறகு இல்லை! குடிப்பதற்குத் தூய்மையான தண்ணீர் இல்லை! சரியான உணவு இல்லை! பாதுகாப்பான உறைவிடம் இல்லை! போதிய வருவாய் இல்லை! இத்தனை இல்லாமைகளையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. பசுமை போர்த்துக் கிடந்த சுற்றுப்புறச் சூழல் அழிக்கப்பட்டமையால் இந்த அவலநிலை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது என்பதை நான் உயர்ந்தேன். மேலும் தங்களின் தேவைகள் வளம் நிறைந்ததும் நல்ல ஆளுமைக்குட்பட்டதுமான சுற்றுப்புறச் சூழலைச் சார்ந்துள்ளன என்பதைப் பெண்கள் அறியவில்லை. மாசுபடிந்த சுற்றுப்புறச் சூழல் வறுமைக்கு வழிவகுக்கும் என்பதையும் எம்முடைய பெண்கள் உணரவில்லை.

எனவே எம்முடைய மக்களுக்கு உதவுவதற்காக மக்கள் கல்வித் திட்டம் ஒன்றைத் தொடங்கினோம். சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதல், காடுகள் அழிப்பு, இவற்றால் ஏற்படும் தட்ப வெப்பத் தடுமாற்றம், மண்மாசுபடுதல் முதலானவற்றை எம்முடைய மக்களுக்கு எடுத்துரைத்தோம். சுற்றுப்புறச் சூழலே அவர்களைத் தாங்கி நிற்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதனால் அதன் காவலர்களும் பயனாளிகளும் அவர்களே என்பதை அறிந்து கொண்டனர்.

மாண்புமிகு தலைவர்களே! நண்பர்களே! நாங்கள் இந்தப் பணியைத் தொடங்கி முப்பது ஆண்டுகள் ஆகின்றன. மக்களையும் சுற்றுப் புறச் சூழலையும் மாசுபடுத்தும் செயல்கள் தங்கு தடையின்றி நடநதுவந்தன. சிந்தனையில் மாற்றம் தேவை எனும் கருத்து முழக்கத்தை இப்போது மக்கள் முன் நிறுத்தியிருக்கிறோம்! மனித சமுதாயம் தன்னைத் தாங்கி நிற்கும் இயற்கை அமைப்பை அழிப்பதை நிறுத்தும் என்று நம்புகிறோம்.

இந்த மண்ணுலகின் காயங்களை ஆற்றுவதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு ஆற்றுவதன் வாயிலாக நாம் நம்முடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்கிறோம். அருமைப்பாடும் அழகும் நிறைந்த அனைத்து உயிர்களையும் அரவணைத்து மகிழ்வதற்காக!

தங்கள் நெடிய கனவுகளை வென்றெடுக்கும் செயற்பாடுகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வருமாறு அவர்களை அன்புடன் அழைக்கின்றேன்! நிலைபேறுடையதோர் எதிர்காலத்தை நிறுவும் வலிமையையும் படைப்பாற்றலையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். உங்கள் சமூகத்திற்கு மட்டுமல்லாது இப்பரந்த உலகிற்குக் கிடைத்திருக்கும் அரிய கொடை நீங்கள் என்பதை இளைஞர்களுக்கு நான் எடுத்துக் கூற விரும்புகிறேன். நீங்களே எங்கள் நன்னம்பிக்கை! நீங்களே எங்கள் எதிர்காலம்!

மாண்புடைய பெருமக்களே! என் ஏற்புரையை முடிக்கும் முன்பாக என் இளம்பருவ நிகழ்வுகளைக் கொஞ்சம் எடுத்துரைக்க விரும்புகிறேன். என் இல்லத்திற்கு அருகில் ஒரு நீரோடை இருந்தது. அம்மாவுக்குத் தண்ணீர் எடுத்துவர அந்த நீரோடைக்கு நான் செல்வேன். அந்த நீரோடையின் குளிர்ந்த நீரை என் இருகைகளாலும் அள்ளி அள்ளிக் குடிப்பேன். தவளைகளின் சின்னஞ்சிறு முட்டைகளை மணிகள் எனக்கருதி எடுக்க முயன்று தோற்றுப் போவேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என் மெல்லிய விரல்களை அவற்றின் அடியில் வைக்கும்போது அவை உடைந்து சிதறும். பின் ஆயிரம் ஆயிரம் தவளைக் குஞ்சுகள் தண்ணீரில் சுறுசுறுப்புடன் இயங்குவதைப் பார்த்து மகிழ்வேன். என் மூதாதையரிடமிருந்து மரபுவழியாக நான் பெற்றுக்கொண்ட உலகம்  இதுதான்! இன்று அய்ம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த நீரோடை வற்றிப் போய்க் காய்ந்து கிடப்பதைக் காண்கிறேன். தண்ணீரைத் தேடிப் பெண்கள் நெடுந்தொலைவு நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நீரும் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை! இளஞ்சிறார்களுக்கு அவர்கள் இழந்தது என்ன என்பதுகூடத் தெரியாத நிலை!

நம் முன்னே உள்ள அறைகூவல் இதுதான். தவளைக் குஞ்சுகளின் தாயகமாய் விளங்கிய அந்த இனிய நீரோடைகளை மீண்டும் நாம் கொண்டு வருவோம். அழகும் அருமைப்பாடும நிறைந்த ஓர் இனிய உலகத்தை நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வோம்; நன்றி.

கடவுளை மறந்து மக்களையும் இயற்கையையும் நினைத்துப் பசுமை உலகைப் படைப்பதற்காக அரும்பணி ஆற்றிய ஒரு கறுப்பினப் பெண்மணியின் வரலாற்றில் சிறப்பு மிகுந்த ஒரு சிறு பகுதி இது. இந்த ஏற்புரை நமக்கும் ஏற்புடையதுதானே!

காலங்காலமாய் நம் முன்னோர்கள் பேணி வளர்த்த மரங்களையெல்லாம் போராட்டம் என்ற பெயரில் வெட்டி வீழ்த்திவிட்டு, இன்று பசுமைத் தாயகம் படைக்கப் புறப்பட்டிருக்கும் நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக இது அமையவேண்டும். அவர்கள் எங்கே இதையெல்லாம் படிக்கப் போகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *