கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!

2023 தலையங்கம் மே 1-15,2023

கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பணி, உரிமைகள், சலுகைகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கையை ஜனநாயகப் பண்போடு நிறுத்தி வைத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரம் உள்ளிட்ட, ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு என்று இருந்த உரிமைகள், சலுகைகள் பறிப்பு உள்ளிட்ட சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.4.2023 அன்று நிறைவேற்றப்பட்டது.

அன்றே எதிர்த்தோம்!

அந்த சட்டமுன் வடிவில் இடம் பெற்றிருந்த தொழிலாளர் நலனுக்கு விரோதமான அம்சங்களைச் சுட்டிக்காட்டி, இதனை விலக்கிக் கொள்ள வேண்டும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்றே (21.4.2023) அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன்.

கூட்டணிக் கட்சிகள் உள்பட இந்த சட்டமுன் வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இது தொடர்பாக 24.4.2023 அன்று தொழிற்சங்கங்களின் கூட்டம் மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது; தி.மு.க. தொழிற்சங்கம் உள்பட அந்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து 24.4.2023 மாலை 7:00 மணிக்கு முதல் அமைச்சர் தலைமையில் கூட்டணிக் கட்சி களின் கலந்துரையாடல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சட்ட முன்வடிவின் நோக்கம் குறித்து விளக்கினார்.

தோழர்களின் கருத்துகள்

சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்த சட்டமுன் வடிவினால் எந்தெந்த வகைகளில் தொழிலாளர் நலன் பாதிக்கப்படுகிறது, போராடிப் பெற்ற உரிமைகள் பறி போகின்றன என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினார். மற்ற கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாகக் கூறினர்.
இறுதியாக திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த சட்ட முன்வடிவு குறித்து விளக்கிக் கூறினேன்.

போராடிப் பெற்ற உரிமைகளைஇழக்க முடியாது!

“இந்த சட்ட முன் வடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற நல்ல முடிவோடு இங்கே வருகை தந்துள்ள முதல் அமைச்சருக்கு அனைத்துக் கட்சி சார்பில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் மே தினம் நூற்றாண்டைக் காணவிருக்கிறது. மே தினத்திற்கு விடுமுறை அளித்தவர் முதல் அமைச்சர் முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் ஆவார்.

இந்தச் சூழலில் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் பறி போகும் வகையிலும், தொழிலாளர்கள், வெகு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு அம்சங்களைக் கொண்ட சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெகு மக்கள் மத்தியில்….

பல்வேறு காரணங்களை சமாதானமாகக் கூறினாலும் இதுவரை எட்டு மணி நேரம் வேலை என்பது 12 மணி நேரமாகப் போகிறது என்ற பிரச்சாரமும், மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி, அது போன்ற எண்ணமும் தான் மேலோங்கி நிற்கும்.

இது திராவிட மாடல் அரசுக்குத் தேவையில்லாத ஒன்று. நாள்தோறும் மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு சாதனைகளைக் குவித்து வரும் அரசுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்.
ஊடகங்களும் பெரும் அளவில் ஊதிப் பெருக்கிப் பிரச்சாரம் செய்யும்; போராட்டங்கள் பல வடிவங்களில் கிளர்ந்து எழ வாய்ப்புண்டு.

எதிர்க்கட்சிகள் வாய்க்குக் கிடைத்த அவல்!

வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகளுக்கு அவலைக் கொடுக்கும் நிலையை அரசு ஏற்படுத் தலாமா?
கூட்டணிக் கட்சிகளும் தி.மு.க. அரசை ஆதரித்தாலும் கொள்கை என்று வரும்போது விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் அமைச்சரின் அணுகுமுறை வெகு சிறப்பு!

பிடிவாதம் காட்டாமல் எதிர்ப்பு என்று வரும்போது அதில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு, உரிய வகையில் நமது முதல் அமைச்சரின் சட்ட முன் வடிவை நிறுத்தி வைக்கும் முடிவு, முதல் அமைச்சரின் பரந்த ஜனநாயக உணர்வை வெளிப்படுத்துகிறது. வெகு மக்கள் உணர்வை மதிப்பது பெரும் பண்பாடாகும். ‘A Win – Win Situation’ என்ற சொலவடை உண்டு. ‘யாருக்கும் தோல்வி இல்லை’ என்பதையே முதலமைச்சரின் முடிவு பறைசாற்றுகிறது.

முழுமையாக ரத்து செய்ய வேண்டும்

நிறுத்தி வைப்பது என்பதையும் தாண்டி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை நாடு எதிர்பார்க்கிறது” என்று அக்கூட்டத்தில் குறிப்பிட்டேன்.
இதனை வழிமொழிவதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் குறிப்பிட்டனர்.
முதல் அமைச்சரின் நல்ல முடிவை ஏற்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடை பெற்றனர். நான்கு நாள்களாக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் எழுந்த அலைகள் ஓய்ந்ததில் நமக்கு முழுத் திருப்தியே!

– கி.வீரமணி
ஆசிரியர்