பட்டம் பெற்றமைக்கு பாராட்டு விழாக்கள்!
கி.வீரமணி
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் எமக்களித்த மதிப்புறு முனைவர் பட்டம் குறித்து, தமிழ்நாடு முழுவதும் தலைவர்களும், தொண்டர்களும் பொதுமக்களும் பெருமையும் மகிழ்வும் கொண்டதை எம்மால் அறிய முடிந்தது.
அவற்றுள் ஒன்று, திருச்சி துவாக்குடி வீகேயென் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் பொறியாளர் எல். கண்ணப்பன் அவர்கள் காட்டிய உணர்ச்சியும் செயல்பாடும். எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.
தங்கள் வீட்டில் நடைபெறுகிற மகிழ்ச்சிகரமான விழாவாக, அதனை மிகவும் தடபுடலாகக் கொண்டாடினார்! காரைக்குடியில் வீகேயென் விருந்தினர் மாளிகைக்கு முதல் நாளே நானும் எனது துணைவியாரும் வந்தபோது சகோதர பாசத்துடன் அவர் அன்போடு வரவேற்று உபசரித்தார்.
பட்டமளிப்பு விழா நாளன்று காலை 8.30 மணியளவில் பாண்டு இசை முழங்க வரவேற்பு அளித்து பொன்னாடை அணிவித்து அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழியனுப்பி வைத்தார்.
கழகத் தோழர்கள் புடைசூழ காரைக்குடியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நாம் மாலை அணிவித்தபின், அங்கிருந்து அழகப்பா பல்கலைக்கழகத்திற்குச் சென்றோம்.
பட்டமளிப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் எம்மைத் தோழர்கள் வீகேயென் விருந்தினர் மாளிகைக்கு பிற்பகல் 12:30 மணியளவில் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து வரவேற்பும் பாராட்டும் விழாவும் தொடங்கியது.
வீகேயென் நிறுவன உரிமையாளர் பொறியாளர் எல். கண்ணப்பன் அவர்கள் தம் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாமல் திக்கு முக்காடினார். சில வார்த்தைகளே அவரால் பேச இயன்றது. எமக்குப் பொன்னாடை போர்த்தினார். வீகேயென் நிறுவன பொறியாளர் மயிலன் சந்தன மாலை அணிவித்தார். எனது வாழ்விணையர் வீ.மோகனா அவர்களுக்கு வீகேயென் அவர்களின் வாழ்விணையர் திருமதி. கண்ணாத்தாள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.
வீகேயென் நிறுவனத்தின் சார்பில் புலவர் மனோகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கழகத் தோழர்களும் சிறப்புச் செய்யப்-பட்டனர் தொடர்ந்து கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் முக்கியப் பொறுப்பாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள், பெரியார் கல்வி நிறுவன தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
வீகேயென் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
குடைகள், டார்ச் லைட்டுகள், எவர்சில்வர் பாத்திரம், குடம் முதலியவை நினைவுப் பரிசுகளாக அளிக்கப்பட்டன.
வீகேயென் அவர்களின் துணைவியார் திருமதி. கண்ணாத்தாள் அவர்களுக்கு எனது வாழ்விணையர் மோகனா அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஏற்புரையாக நாம் மிகுந்த நெகிழ்ச்சியுடன் சிறிது நேரம் உரையாற்றினோம். அப்போது,
இது என் வாழ்நாளில் மிகவும் உணர்ச்சிப் பூர்வமான நிகழ்ச்சி பட்டம் பெற்றதற்காக அல்ல. அது ஒரு சுமை. இந்த நேரத்தில் என் வேண்டுகோள் – இந்த டாக்டர் பட்டம் போட்டு என்னை அழைக்காதீர்கள் என்பதுதான்!
இந்தப் பட்டங்கள் பெருமைகள் எல்லாம் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுக்கே உரியதாகும். தந்தை பெரியாரை அழைத்து இத்தகைய பட்டங்களைக் கொடுக்க முடியாது என்பதால்தான் இந்தச் சின்ன மெழுகுவத்தியை அழைத்து அளித்துள்ளார்கள். இந்த இயக்கத்தின் லட்சோப லட்சம் தொண்டர்களுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம் இது.
அன்புச் சகோதரர் ‘வீகேயென்’ கண்ணப்பன் அவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணம் போல இந்த நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு நாள்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லையற்ற மகிழ்ச்சி விழாவாக இதனை ஆக்கியுள்ளார்.
எனக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருவர். அவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர்கள் எனக்குக் கல்வியை அளித்தனர். எனக்கு இந்த இயக்கக் கல்வியை அளித்த எனது ஆசான் ஆ. திராவிடமணி அவர்களும் உயிருடன் இல்லை.
என்னுடைய சகோதரர்கள் உயிருடன் இருந்திருந்தால் எப்படியெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருப்பார்களோ, அந்த இடத்தில் என் உடன் பிறவா சகோதரர் ‘வீகேயென்’ கண்ணப்பன் அவர்கள் இருந்து என்னையும் என் வாழ்விணையரையும் இங்கு அழைத்து, நேற்று முதல் நாங்கள் எல்லாம் வெட்கப்படும் அளவுக்கு பெரிய மணவிழாவைப் போல் நடத்திக் கொண்டுள்ளார். காரைக்குடியே விழாக்கோலம் பூண்டது போல ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
அவருக்கு எந்த வகையில் நன்றியைத் தெரிவிப்பது என்று தெரியாமல் திகைக்கின்றேன்.
தந்தை பெரியாரின் கொள்கைக்கு அவர்களின் இலட்சியத்திற்குக் கொடுக்கப்பட்ட பட்டம் இது. அந்த அய்யாவை நீண்ட காலம் வாழ வைத்த அன்னை மணியம்மையார் அவர்களுக்குக் கிடைத்த பட்டம் இது.
இத்தகைய விழாக்கள் மூலம் சகோதரர் கண்ணப்பன் அவர்கள் என்னைக் கடன்படச் செய்துவிட்டார். அதனை எப்படி திருப்பி அடைப்பேன் என்றுதான் நினைக்கிறேன். என் இறுதி மூச்சு அடங்கும்வரை தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக உழைத்து அந்தக் கடனைத் திருப்பி அடைப்பேன்’’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டோம்.
பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நல். இராமச்சந்திரன் நன்றி கூற, பிற்பகல் 1:30 மணிக்கு விழா இனிதே நிறைவுற்றது.
பண்ருட்டி வட்டம் வேகாக்கொல்லை கிராமம், குள்ளஞ்சாவடி சாலையில் கடலூர் மாவட்டத் துணைத் தலைவர் தாமோதரன்-அரங்கதமிழ்மணி ஆகியோர் புதிதாகக் கட்டிய கனகம் – நாராயணசாமி இல்லம் திறப்பு விழா 6.4.2003 ஞாயிறு காலை 8:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு புதிய இல்லத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம்.
அன்று காலை 10:00 மணிக்கு கடலூர் வட்டம் குறிஞ்சிப்பாடி பிரித்து என்ஜினீயரிங் என்டர்பிரைசஸ் இரா. தேசிங்குக்கும், காட்டுமன்னார்குடி வட்டம் கோவிந்தராசன் பேட்டை தி. மஞ்சநாதன் _ சுசிலா ஆகியோரின் மகள் செல்வி ப. கனிமொழிக்கும் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பத்மாவதி திருமண மண்டபத்தில் மணவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்து மணவிழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தின் சார்பில் தஞ்சை வல்லத்தில் மகளிருக்காக நடத்தப்படும் உலகின் முதல் பெண்கள் பொறியியற் கல்லூரியான, ‘பெரியார் – மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி’ ‘பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி’ ஆகியவற்றுக்கு நிலம் வழங்க சென்னை உயர்
நீதிமன்றம் ஆணையிட்டதற்கிணங்க, தமிழ்நாடு அரசு அதற்குரிய கிரையத் தொகையைப் பெற்றுக்
கொண்டு நிலத்தை அளித்தமைக்கு மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு, 11.4.2003 அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அறக்கட்டளைத் தலைவர் என்கிற முறையில் நானும், அதன் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான திரு.கோ. சாமிதுரை, திரு.எஸ். இராஜரத்தினம் ஆகியோரும் சந்தித்து மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டோம்.
அழகப்பா பல்கலைக் கழகம் விடுதலை ஆசிரியர், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு டாக்டர் பட்டம் அறித்தமைக்காக சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள விடுதலைப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பாக தமிழர் தலைவர் அவர்களுக்கு பாராட்டுவிழா சென்னை பெரியார் திடலில் 12.4.2003 மாலை 5.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கழக உதவிப் பொதுச் செயலாளர் ‘விடுதலை’ நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார். கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசினார். இறுதியாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார். பெரியார் திடலில் பணிபுரிவோர் மற்றும் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் அவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி, தேநீர் அருந்தினர்.
19.4.2003 அன்று மாலை 5:30 மணிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்கு சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் அதன் தலைவர் இரா.செழியன், பொருளாளர் கோ. சாமிதுரை, அமைப்பாளர்
கா. ஜெக வீரபாண்டியன் இசைக் குழுவினருக்குச் சால்வை அணிவித்து பெருமைப்படுத்தினர்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மனிதநேய நண்பர்கள் குழு தலைவர் இரா. செழியன் வரவேற்றுப் பேசினார். ரோம் நாட்டில் ஆசிரியர்களுக்கு டாக்டர் என்ற பட்டம் வழங்கப்படுகிறது. வீரமணி அவர்கள் எந்தனையோ டாக்டர் பட்டம் பெறக் கூடியவர். டாக்டர் பட்டம் பெற்றது திரு. வீரமணி அவர்களுக்குப் பெருமை அல்ல. அழகப்பா பல்கலைக்கழகம் பெருமை பெற்றது என்று குறிப்பிட்டார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் துரை. சக்ரவர்த்தி பேசுகையில், ‘‘அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தமைக்கு தந்தை பெரியார் அவர்கள் இருந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ந்திருப்பார் என்பதை எங்கள் மனக் கண்ணால் பார்க்கிறோம். பன்னாட்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர் ரெஜினா பாப்பா தன் உரையில்,
‘‘மூன்று ஆண்டுகள் உழைத்தால் ஒருவருக்கு டாக்டர் பட்டம் கிடைக்கின்றது. ‘விடுதலை’ ஆசிரியர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களோ தமிழ்ச் சமுதாயத்திற்காக 60 ஆண்டுகள் உழைத்திருக்கின்றார். அப்படியானால் அவருக்கு எத்தனை டாக்டர் பட்டங்கள் வழங்கலாம்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன்:பிரபல பல்மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்கள் பேசுகையில், தந்தை பெரியார் அவர்களைத் தொட்டு மருத்துவம் பார்த்த டாக்டர்களில் நானும் ஒருவன்’, தமிழ்நாடு அரசு விரும்பினால் திராவிடர் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தலாம். பனாரசில் இந்துப் பல்கலைக்கழகம் இருப்பது போல் ஏன் இங்கு திராவிடர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார். திராவிடர் பல்கலைக் கழகத்தில் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தலாமே என்றும் கூறிய அவர், தந்தை பெரியார் என்ற ஆசான் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்கள் மருத்துவர்களாக ஆகி இருக்கவே முடியாது என்றவர், டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர் அவர்களைப் பாராட்டுகிறோம் என்றார்.
மாணவர் பருவந் தொட்டு பெரியார் இயக்க ஈடுபாடு கொண்ட நீதியரசர் பெ. வேணுகோபால் அவர்கள் பேசுகையில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மாண்புமிகு கா. காளிமுத்து அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை ஏற்பதால் தமிழ்நாடு அரசே வீரமணி அவர்களுக்கு விழா எடுத்ததைப் போன்ற உணர்வைப் பெறுகின்றேன். பத்து வயதில் மேடை ஏறிய ஒரே தலைவர் வீரமணி, அவர் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று பாராட்டி விளக்கிப் பேசினார். கிரிக்கெட் போதை முதல், தொலைக்காட்சிப் போதை வரை கண்டிக்கக் கூடிய தலைவரும் இவரே என்றார்.
சிறுநீரகத் துறையில் புகழ்பெற்ற டாக்டர் ராஜசேகரன் தனது உரையில், வீரமணி அவர்களுடன் நான் ஒன்றாகப் படித்தவன். பெரியார் அவர்களுக்கு எத்தனையோ விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. வீரமணி அவர்களைப் பற்றி நான்கு வார்த்தைகள் பேச வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இன்று தான் நிறைவேறியது. வீரமணி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தனது விழைவை வெளிப்படுத்தினார்.
மகப்பேறு மருத்துவத் துறையில் பிரபல டாக்டரான பூ. பழனியப்பன் தனது உரையில், வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரபல பொறியியல் அறிஞரும், அறிவியல் தமிழ் ஆய்வாளருமான டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் உரையாற்றுகையில், வீரமணி அவர்களை தமிழ்நாட்டின் ஒப்புயர்வற்ற அறிவியக்கத்தின் தலைவர் என்றே கூறவேண்டும். தனி மனிதர் டாக்டர் பட்டம் பெற்றார் என்றால், அவரின் சாதனைக்காக சமுதாயத்தில் ஆற்றிய பணிகளுக்காக பல்கலைக்கழகம் ஒரு முத்திரையை வழங்குகிறது. அதுதான் டாக்டர் பட்டம். 6 கோடித் தமிழ் மக்களின் மதிப்பீட்டில் கொடுக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த டாக்டர் பட்டம் என்றார்.
தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலர் கே. சொக்கலிங்கம், அய்.ஏ.எஸ்.(ஓய்வு)
அவர்கள் தனது உரையில், வீரமணி அவர்களை 40 ஆண்டுகளுக்கு முன்னமேயே நான் திருச்சியில் சந்தித்திருக்கின்றேன். வீரமணி அவர்களுக்குக் கிடைத்திருக்கின்ற பாராட்டு தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த பாராட்டு என்றார்.
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி
வி. இராமசாமி அவர்கள் தனது உரையில்,
வீரமணி அவர்கள் 10 வயதுச் சிறுவனாக இருக்கும் பொழுது (14.10.1944) பல தலைவர்கள் மேடையில் இருக்கையில், அதுவும் தந்தை பெரியார் அவர்கள் இருக்கையில் எப்படித்தான் அவர் பேசினாரோ தெரியவில்லை. எப்படி அவருக்கு அந்த வயதிலேயே துணிச்சல் வந்தது என்று தெரியவில்லை. அவர் துணிவாகப் பேசியதற்குக் காரணம் தந்தை
பெரியார் அவர்களின் கொள்கைப் பிடிப்புதான் என்று நினைக்கின்றேன்.
எந்த அரசாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும் மக்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்யத் தவறுகிறபொழுது, அதைக் கண்டித்துக் குரல் கொடுக்கிறவர்தான் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி அவர்கள். தந்தை பெரியாரின் கொள்கைக்கு ஓர் உருக் கொடுத்து, அதனை உயிரோட்டமாக்கி, பிரகாசிக்க வைக்கக்கூடியவர் வீரமணி அவர்கள் என்றார்.
ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் பேசுகையில், பெரியார் வழியில் நின்று, பதவியையும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்பாராது நாம் தொண்டாற்றுவதைச் சுட்டிக் காட்டினார். தமிழ்நாட்டில் மட்டுமன்றி, பிற மாநிலங்களிலும் சமூக நீதியைப் பரப்புவதற்கு ஓயாது உழைத்து வருவதையும் எமது கல்விப் பணியையும், அமைப்பாற்றலையும், எழுத்தாற்றலையும், சொல்லாற்றலையும் சுட்டிக்காட்டியதுடன் தன்னலமற்ற தொண்டையும் பாராட்டினார்.
நாம் மதிப்புறு முனைவர் பட்டம் பெறும் தகவல் அறிந்த தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் 3.4.2003 அன்றே மாலை 5:00 மணி அளவில் எமக்கு அன்பு அழைப்பினை விடுத்தார்கள். அழைப்பினை ஏற்று குன்றக்குடி மடத்துக்குச் சென்றோம். எங்களை அன்புடன் வரவேற்று பொன்னாடை அணிவித்து, தேநீர் விருந்தளித்து அன்பு மழை பொழிந்து உபசரித்தார்கள்.
பட்டம் பெறுவதற்கு முன்னமே பாராட்டிய அடிகளார், பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டு பேசுகையில், சென்ற காலத்தில் கி.மு., கி.பி. என்றுதான் காலத்தைப் பிரித்துப் பார்ப்பார்கள். ஆனால், அதைவிட தந்தை பெரியாருக்கு முன், தந்தை பெரியாருக்குப்பின் என்றுதான் காலத்தைப் பிரிக்க வேண்டும். தந்தை பெரியார் கண்டெடுத்த அற்புத வைரம்தான் வீரமணி. வீரமணி அவர்கள் ஆற்றியிருக்கின்ற தொண்டிற்கு இதுவரை பல முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கலாம். அந்த அளவுக்கு அவர் தகுதி உடையவர். சிறந்த கல்வியாளர். எழுத்தாளர், சிந்தனையாளர், அறிஞர், நாற்காலியை நாடாத தலைவர் என்றார்.
விழா மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தி, பன்னாட்டு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சானல் இடமருகு, மத்திய அரசின் திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் கே. வேங்கடசுப்பிரமணியம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செல்லசுவாமி மற்றும் ஏராளமானோர் அனுப்பிய தந்திகள், கடிதங்கள் ஆகியவற்றை கவிஞர் கலி. பூங்குன்றன் படித்தார். மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறியவர்களையும் அறிவித்தார்.
நிறைவாக எமது ஏற்புரையில்
“எல்லாப் பெருமையும், பட்டங்க-ளும் தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தானவை என்றும்,. தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் பல தலைவர்களும் பாராட்டியிருப்பது எமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது’’ என்றோம்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய மனித நேய நண்பர்கள் குழுவின் அமைப்பாளர்
கா. ஜெகவீரபாண்டியன் நன்றி கூறினார். கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் இணைப்புரை வழங்கினார்.
தலைவர்கள் வாழ்த்துச் செய்தி:
வி.பி.சிங் தொலைபேசியில் வாழ்த்து
இந்திய மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நேரடியாக செல் தொலைபேசியில் எம்மிடம் தொடர்பு
கொண்டு வாழ்த்தினார். அப்பொழுது அவர்
கூறியதாவது,
“இந்தநேரத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்.கு (வீரமணி) டாக்டர் பட்டம் வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென்பதற்காக அல்ல; ஒரு பார்வை
யாளனாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை. சகோதரர் வீரமணி அவர்களே, உங்களுக்குக் கிடைத்த இந்த “டாக்டர் பட்டம்” தந்தை பெரியாருடைய கொள்கைக்கு, சமூக நீதிக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம். என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை இந்த நேரத்திலே உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். நாம் மகிழ்ச்சி பொங்க அவருக்கு நன்றி கூறினோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின்
வாழ்த்துச் செய்தி:
திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான திரு. வீரமணி அவர்களுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பு செய்தது குறித்தும், அது தொடர்பாக திரு. கி.வீரமணி அவர்களுக்குத் தாங்கள் பாராட்டு விழா நடத்துவது குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புச் சகோதரர் திரு.கி.வீரமணி அவர்கள் மிக இளமைக் காலத்திலிருந்தே தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, அந்தத் தத்துவங்களைப் பரப்புவதற்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர். பொது வாழ்வில் ஈடுபட்டு சீரிய முறையில் பணியாற்றி வரும் பண்பாளர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் அவருடைய தன்னிகரற்ற பணிகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் பட்டம் மட்டுமல்ல. தந்தை பெரியாரின் கொள்கைகளுக்குச் செலுத்தப்பட்டிருக்கும் மரியாதையும் ஆகும். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை, தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரப்பிவரும் அன்புச் சகோதரர் திரு.கி. வீரமணி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது குறித்து விழா எடுத்துள்ள மனித நேய நண்பர்கள் குழுவினரை நான் மனமாரப் பாராட்டுகிறேன். பாராட்டு விழா வெற்றி பெற, எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வாழ்த்து!
அன்புள்ள சகோதரரே,
வணக்கம். அழகப்பா பல்கலைக்கழகம் தங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதை அறிந்து நான்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக நீங்கள் ஆற்றிய தொண்டினை
அங்கீகரிப்பதே அது என நான் கருதுகிறேன். அன்பு கூர்ந்து எனது வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளவும்.
– மு.கருணாநிதி, தலைவர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.
மதுரை ஆதீனகர்த்தர் நேரில் வாழ்த்துரை
தவத்திரு மதுரை ஆதீனகர்த்தர் அவர்கள் 20.4.2003 அன்று காலை 10:30 மணி அளவில் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து டாக்டர் பட்டம் பெற்ற எமக்குப் பொன்னாடை போர்த்தி பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
நினைவுகள் நீளும்…