ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் இப்போதும் தங்களுடைய குருஜி என்று அழைக்கும் கோல்வால்கர் “பஞ்ச் ஆப் தாட்ஸ் (Bunch of Thought)” சிந்தனைக் கொத்து எனும் நூலை எழுதியுள்ளார்.
அது தமிழிலும் ஞானகங்கை எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது. அந்த ஞானகங்கையின் இரண்டாம் பாகத்தில் ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்னும் தலைப்பில் இருக்கும் ஒரு கட்டுரை சோசலிசம் எனும் சொல்லை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. சோசலிசம் என்றால் தமிழில் சமதர்மம் என்று நாம் சொல்லலாம். சோசலிசம்தான் அழிக்கப்பட வேண்டிய முதல் எதிரி என்று கோல்வால்கர் சொல்லுகிறார்.
அது ஒரு மனிதனின் தனித்துவத்தையே அழித்துவிடுமாம். அது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானதாம். சோசலிசம் இருக்கிற நாடுகளில் ஜனநாயகம் இருக்காது என்று ஒரு புதிய கோட்பாட்டையும் அவர் பொய்யாக வர்ணித்து எழுதுகிறார். அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்திலிருக்கிற ஜனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை எனும் மூன்று சொற்களை அழிப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
– பேராசிரியர் சுப.வீ.