மஞ்சை வசந்தன்
கல்வியில் இடைநிற்றல் என்பது விதிவிலக்காக இருந்த நிலை மாறி, தற்போது அதிக அளவில் வளர்ந்து வரும் போக்கு அனைவரும் கவலைகொள்ள வேண்டிய ஒரு சமுதாயச் சிக்கல் என்பதை அரசும், பெற்றோரும், மாணவர்களும் புரிந்துகொண்டு அதைத் தடுக்கும் வழிகளைக் காணவேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. இடைநிற்றல் தொடக்கக் கல்வி அளவிலும் நிகழ்கிறது, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவிலும் நிகழ்கிறது, கல்லூரிக் கல்வியிலும் அது தொடர்கிறது.
தொடக்கக் கல்வி அளவில் அது நிகழ்ந்தால் பிள்ளைகளின் அறியாமை என்று கொள்ளலாம். ஆனால், நன்கு சிந்திக்கும் வயது வந்த, எதிர்காலம் பற்றிய பொறுப்புணர்வு புரிந்த, கல்வியின் கட்டாயம் பற்றி விழிப்புணர்வு பெற்ற நிலையிலும் இடைநிற்றல் தொடர்கிறது என்றால், அதன் காரணங்களை நாம் ஆழமாக ஆராய்ந்து கண்டறிய வேண்டியது கட்டாயம் ஆகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கல்வி மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் தொண்டால், போராட்டங்களால், பிரச்சாரங்களால் கல்வி எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு தற்போது வந்துள்ளது. அப்படி, கிடைத்தற்கரிய கல்வியைக் கற்காது இடைநிற்றல் என்பது மிகமிகப் பேரிழப்பாகும்.
இடைநிற்றல் என்பது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களிடையேதான் அதிகம் நிகழ்கிறது. உயர் ஜாதியினர் மத்தியில் அதிகம் நிகழ்வதில்லை. எனவே, இந்த இடைநிற்றலை இன்னும் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு, அதைத் தடுக்க முயலவேண்டும், அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
இடைநிற்றலுக்கான காரணங்கள்:
குடும்பச்சூழல்:
பெற்றோரை இழத்தல், பெற்றோர் அயலிடம் செல்லுல், உறவினர் வீட்டில் வளர்தல் போன்ற சூழலில் பிள்ளைகளைப் பொறுப்புடன் கண்காணித்து, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாத நிலையில், கட்டுப்பாடு இல்லாச் சூழலில் வளரும் பிள்ளைகள், சுற்றியுள்ள சமூகச் சீர்கேடுகள், நட்பு வட்டங்கள், தவறான செயல்பாடுகளில் ஆர்வம் போன்றவை ஏற்பட, கல்வி கற்பதில் நாட்டம் குறைய, வெளியில் சுற்றித் திரிவதில், பொழுதுபோக்குவதில் ஆர்வம் ஏற்பட, கல்வியைக் கைவிடுகின்றனர்.
வறுமையும் வருவாய் பற்றாக்குறையும்:
பெற்றோரின் வருவாய் குடும்பம் நடத்த போதாததாய் இருக்கும்போது, சாப்பாட்டிற்கே வருவாய் பற்றாத நிலையில் படிக்கவைக்க முடியாத நிலைக்கு வறுமை நிலையில் படிப்பை நிறுத்துகின்றனர். விவசாய வேலைக்கும், தாங்கள் பார்க்கும் வேலைக்குத் துணையாக இருக்கவும் பிள்ளைகளின் படிப்பை நிறுத்துகின்றனர். பிள்ளையும் கூலி வேலைக்குச் சென்றால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களும் உண்டு.
சில வீடுகளில் பெற்றோர் நோய்வாய்ப்பட, அவர்களால் வருவாய் ஈட்ட முடியாத சூழலில், பிள்ளைகள் கூலி வேலைக்குச் சென்று அக்குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை வரும்போது பிள்ளையின் படிப்பு இடைநிற்றலுக்கு ஆளாகிறது.
கல்வியின்மீது ஆர்வமின்மையும் வெறுப்பும்:
சில பிள்ளைகளுக்கு சுற்றித் திரிந்து விளையாடுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். படிப்பை வெறுப்பர். பொதுவாகவே பிள்ளைகளுக்கு விளையாட்டில்தான் ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால்தான் விளையாட்டாக கல்வியைக் கற்பிக்கும் முறையை நாம் பின்பற்றுகிறோம். பிள்ளைகளின் இயல்பான இந்த நாட்டம் கல்விக்கு ஒரு தடையென்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. பல பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கூடங்களுக்கு அடித்து இழுத்துக்கொண்டு சென்று விடும் நிலையும், தெருவில் இழுத்துச் சென்று பள்ளியில் விடும் நிலையும் நடைமுறையில் காணப்படும் உண்மைகள்.
படித்த பரம்பரையில் பிறக்கும் பிள்ளைகள் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அக்காள் இவர்கள் படிப்பதைப் பார்த்துப் பார்த்து இவர்களும் ஆர்வம் பெறுவார்கள். மாறாக படிக்காத பெற்றோர், தாத்தா, பாட்டி, அண்ணன், அக்காள் உள்ள வீடுகளில், அப்படிப்பட்ட குடும்பங்கள் நிறைந்த சூழலில் வாழும், வளரும் பிள்ளைகள் படிப்பின்மீது ஆர்வம் இன்றி வெறுப்பைக் காட்டுவது இயல்புதான்.
கூட்டாளிகளின் வற்புறுத்தல்: படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகள்கூட, கூட்டாளிகள் ஊர் சுற்றிகளாக இருப்பின், இவர்களும் அப்படியே சுற்றுவதில் ஆர்வம் கொள்வர். அதையும் மீறி சில பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முற்பட்டால், அந்த ஊர் சுற்றும் கூட்டாளிகள் விடமாட்டார்கள். அவர்கள் வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, ஊர்சுற்ற, விளையாட அழைத்துச் சென்றுவிடுவர்.
வீட்டில் பள்ளிக்குச் செல்வதாய்க் கூறிவிட்டு, பாடநூல்களைப் பையில் எடுத்துக் கொண்டு செல்லும் பிள்ளைகள், தோப்புகளில், ஆற்றோரங்களில், கடைவீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு, பள்ளி விடும் நேரத்தில் வீட்டிற்குச் சென்றுவிடுவதைப் பலரும் நடைமுறையில் காண்பதுதான்.
கற்கும் சூழல்: அதிக தூரம், போக்குவரத்து வாகன வசதி இன்மை, தோழமையில்லாத தனிமை, பாடச் சுமை, பள்ளி விதிமுறைகள், ஆசிரியர்களின் கண்டிப்பு, பெற்றோர்களின் கண்டிப்பு போன்றவை மாணவர்களின் இடைநிற்றலுக்குப் பெரிதும் காரணங்களாக அமைகின்றன.
வகுப்பறையில் பிற மாணவர்களோடு ஒப்பிட்டுத் திட்டுதல், தண்டனை வழங்கல் போன்றவையும் இடைநிற்றலுக்குக் காரணங்களாகின்றன.
தாழ்வுமனப்பான்மை: தனக்குப் படிப்பு வராது, தனக்கு இந்தப் பாடம் கடினம், நமக்குப் புரியாது, நமக்கு மறதி அதிகம், நம்மால் அதிக மதிப்பெண் பெறமுடியாது போன்ற தாழ்வு எண்ணங்கள் இப்படி பிள்ளைகளின் மனதில் பல காரணங்கள் பதிந்துவிடுகின்றன. இப்படிப்பட்ட எண்ணங்கள் அவர்களின் ஆர்வத்தை, முயற்சியை பெரிதும் தடுத்துவிடுகின்றன.
பாலுணர்வு உந்தல்: 14 வயதுக்குமேல் மாணவர்களின் உணர்வுகள், உளவியல் எல்லாம் மாறும். குறிப்பாக பாலுணர்வு தூண்டல், எதிர் பாலினக் கவர்ச்சி போன்றவை இயல்பாய் வரும். அவ்வுணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய ஆளுமைத்திறன் உள்ள மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து சாதிப்பர். மாறாக, பாலுணர்வுத் தூண்டலுக்கு ஆளாகி, அதைப்பற்றிய சிந்தனைகளில், செயல்பாடுகளில் தடம்புரண்டால், கற்கும் ஆர்வம் குறைய, நாளடைவில் அது இடைநிற்றலுக்கு இட்டுச் செல்கிறது. இதுபோன்று தடம்புரளும் மாணவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அரட்டை அடித்தல், தப்பான செயல்களில் ஈடுபடல், வீடியோக்கள் பார்த்தல் என்று பல்வேறு கவனச் சிதறல்களுக்கு ஆளாகி, இறுதியில் கல்வியை விடுகின்ற நிலை வந்துவிடுகிறது.
போதைப் பழக்கம்: கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே பாக்கு வடிவில், சாக்லெட் வடிவில், பீடா வடிவில் போதைப் பொருள்கள் எளிதில் கிடைப்பதால் அவற்றை நுகரும் பிள்ளைகள் நாளடைவில் போதைக்கு ஆட்பட்டு, அடிமையாகி, அதை விடமுடியாத நிலைக்கு ஆளாகி, உடலும் உள்ளமும் பாதிக்கப்படும் நிலையில், கல்வியைக் கைவிடும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஆண்கள் மட்டுமே போதைக்கு ஆள்பட்டு வந்த நிலை மாறி, பெண் பிள்ளைகளும் போதைக்கு அடிமையாகும் அவலம் தற்போது வந்துள்ளது வேதனைத் தரும் உண்மையாகும்.
பிறவற்றில் ஆர்வம்:
படிக்க வேண்டிய வயதில், திரைப்படம், விளையாட்டு, ஊர் சுற்றல், அரட்டை அடித்தல், சூதாடுதல், வீடியோக்கள் பார்த்தல் என்று இன்று கிடைக்கும். பலவற்றிலும் ஈடுபட்டு, படிப்பைவிட்டு விலகிவிடுகின்றனர். நல்லதைவிட கெட்டவை எளிதில் ஈர்க்கும் என்ற உளவியல் மாணவர் பருவத்தில் மிகவும் பொருந்தும். இந்த உளவியல் அவர்களை எளிதில் இடைநிற்றலுக்கு இட்டுச் செல்கிறது.
வேலைவாய்ப்பு பற்றிய அச்சம், அய்யம்:
படித்த எல்லோருக்கும் வேலை கிடைக்கவில்லையே! நாம் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம். பல ஆண்டுகள் சிரமப்பட்டுப் படித்து, பல லட்சம் ரூபாய் பணம் செலவு செய்து, பட்டம் பெற்று, வேலையின்றி வீட்டில் இருக்க நேர்ந்தால் என்ன செய்வது என்ற அச்சமும், அய்யமும் பல மாணவர்கள் மத்தியில் இன்று பரவலாகக் காணப்படுகிறது.
பணமும், உழைப்பும் வீணாகி வேலையின்றி இருப்பதைவிட, இப்போதே ஏதாவது ஒரு தொழிலைச் செய்து சம்பாதிக்கலாமே! ஏன் காலத்தைக் கடத்த வேண்டும், வீணடிக்க வேண்டும்? என்று அவர்களுக்கு பல வினாக்களும், அய்யங்களும் எழ, படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வேறு வேலையில் ஈடுபட்டுவிடுகின்றனர்.
உல்லாச வாழ்வை நாடுதல்:
இளமையில் உழைப்பு இல்வாழ்வில் மகிழ்ச்சி; இளமையில் உல்லாசம் எதிர்காலத்தில் துன்பம் என்பது வாழ்வியல் அடிப்படை. இளம் வயதில் கட்டுப்பாட்டுடன் உணர்வுகளை வைத்து, படிப்பில் கவனம் செலுத்திப் படிக்கின்றவர்கள் நல்ல நிலையை எதிர்காலத்தில் எட்டுகின்றனர். ஆனால், இளமையில் உல்லாசம் விரும்பி ஊர் சுற்றுகிறவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு, பாழாகின்றனர்.
படிப்பைச் சுமையாக எண்ணுதல்:
படிப்பை விரும்பி ஆர்வமுடன் கற்கின்றவர்கள் மேலும் மேலும் படித்துச் சாதிக்கின்றனர். படிப்பைச் சுமையாக, வெறுப்பாக எண்ணுகின்றவர்கள் படிப்பைப் பாதியில் விடுகின்றனர். ஈடுபாட்டுடன், ஆர்வத்துடன் செய்யப்படாத எச்செயலும் முழுமையடையாது, நிறைவேறாது. இது படிப்பிற்கும் பொருந்தும், இடைநிற்றலில் உள்ளவர்களை ஆய்வு செய்தால் அவர்களில் பெரும்பாலோர் படிப்பைச் சுமையாகவும், வெறுப்பாகவும் எண்ணுகின்றவர்கள் என்ற உண்மை வெளிப்படும்.
தேர்வு அச்சம்: பல மாணவர்களுக்கு தேர்வு அச்சம் இயல்பாய் வரும். நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்கே தேர்வு அச்சம் வரும். ஒன்றும் படிக்காமல் ஊர் சுற்றுகின்றவர்களுக்கு தேர்வு அச்சம் வருவதில்லை. ஆனால் ஓரளவு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு அச்சம் வருகிறது. நமக்கு நிறைய மதிப்பெண் கிடைக்குமா? தேர்வில் வினாக்கள் எதிர்பார்த்தது, படித்தது வருமா? தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமா? குறைவான மதிப்பெண் பெற்றுவிடுவோமா? என்பன போன்ற அச்சங்கள் பல மாணவர்களை அன்றாடம் அரித்துக்கொண்டேயிருக்கும். இதனால் தேர்வு நெருங்கும்வரை பள்ளிக்குத் தவறாது வந்து படித்த மாணவர்கள் தேர்வு நேரத்தில் நின்றுவிடுவதும், தேர்வை எழுதாமல் தவிர்ப்பதும் நிகழ்கிறது.
இடைநிற்றலைத் தடுக்கும் வழிகள்:
காரணங்களைக் கண்டறிதல்: இடைநிறுத்தம் செய்யும் எல்லா மாணவர்களும் ஒரே காரணத்திற்காக அதைச் செய்வதில்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். எனவே, கல்வியை இடையில் விடும் மாணவர்களை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கு பள்ளிக்குத் தொடர்ந்து வராத மாணவர்ககள் பட்டியலைத் தயார் செய்து, ஒவ்வொரு மாணவரையும் கண்டறிந்து, அவர்களைத் தனிப்பட்ட முறையில் கலந்தாய்வு செய்தல் வேண்டும். உண்மைக் காரணத்தை மறைக்காமல் சரியாகச் சொல்லும்படி செய்தல் வேண்டும்.
கல்வியின் கட்டாயத்தை உணர்த்துதல்:
மாணவர்கள் எல்லோரும், கல்வியைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் போதிய விழிப்புணர்வு கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. பலரும் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இன்றியே இருப்பர்; இருக்கின்றனர். எனவே, சென்ற தலைமுறைகளில் கற்கும் உரிமை இல்லாத வரலாற்றையும், கற்கும் உரிமையை நாம் எப்படிப் போராடிப் பெற்றோம் என்பதையும், கிடைத்த இந்த அரிய வாய்ப்பை இழக்கலாமா? என்பதையும், அரசு கல்விக்காக என்னென்ன உதவிகளைச் செய்கிறது என்ற விவரத்தையும் விளக்கிக் கூறி விழிப்புணர்வு உருவாக்கவேண்டும்.
கல்வி மனிதனுக்கு எவ்வளவு கட்டாயம், வாழ்க்கை மேம்பாட்டிற்கு அதன் பங்கு என்ன? வருவாய் ஈட்ட வழி செய்யும் வேலை வாய்ப்பிற்கு அது எந்த அளவிற்குக் கட்டாயம் என்பனவற்றை விளக்கிக் கூறவேண்டும். உன்னோடு படிக்கின்ற மாணவன் கற்ற உயர்நிலையில் வாழும்போது, கல்வியைக் கைவிட்டால் உன் வாழ்வு எவ்வளவு தாழும், வீழும் என்பதையும், அப்போது நீ எவ்வளவு வேதனைப்படுவாய் என்பதையும் அவனுக்கு ஒப்பிட்டு விளக்க வேண்டும்.
ஆலோசனை வழங்கி ஆர்வம் உண்டாக்கல்:
இடைநின்ற மாணவர்களுக்குத் தனித்தனியே ஆலோசனை வழங்கவேண்டும். அவர்கள் எந்தக் காரணத்திற்காக இடைநிறுத்தம் செய்தார்களோ அக்காரணத்தைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காணுவதற்குரிய வழிகளைக் கண்டு, அவர்களுக்குள்ள சிக்கல் தீர்வதற்கான வழிகளைக் கூறி, உரிய உதவிகளைச் செய்து, இடைநிறுத்தத்திற்கான காரணத்தைப் போக்கி, அம்மாணவன் மீண்டும் கல்வியைத் தொடரும் வகையில் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். இளம் பிள்ளைகள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் முடிவு எடுப்பார்கள். அவர்களுக்கு நிதானமாகச் சிந்தித்து செயல்படும் உளப்பக்குவத்தை உருவாக்க வேண்டும். எந்தவொன்றையும் விரும்பிச் செய்தால் எளிமை; வெறுப்பாய்ச் செய்தால் கடினம். படிப்பிற்கும் அது பொருந்தும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்; உணர்த்தி உள்வாங்கச் செய்ய வேண்டும். அன்றாடம் படிக்க வேண்டியவற்றைத் தவறாமல் படித்துவிட்டால் படிப்பு சுமையாக இருக்காது; எளிமையாக இருக்கும் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். நன்றாகப் படிக்கின்றவர்களுக்கென்று சிறப்பான மூளை ஏதும் இல்லை. நமக்குள்ள மூளைதான் அவர்களுக்கும். அவர்கள் அன்றாடப் பாடத்தை அன்றாடம் படிக்காமல் பாடச் சுமையை ஏற்றிக்கொள்கிறார்கள். பாடம் மலைப்பாக மாறுகிறது. படிப்பில் வெறுப்பு வருகிறது என்ற உண்மையை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்; விழிப்பை ஏற்படுத்த வேண்டும். அவர்களையும் படிப்பில் விருப்பம்கொள்ளச் செய்ய வேண்டும்.
தன்னம்பிக்கையை வளர்த்தல்:
தன்னால் முடியும் என்ற நம்பிக்கைதான் ஒருவனின் வெற்றிக்கு முதல்படி. ஒரு பொருளைத் தூக்கவும், ஒரு இடத்தைத் தாண்டவும், ஒரு செயலைச் செய்யும் முன்பும் அதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் செய்ய முடியும்.
பிறரால் முடிவது நம்மால் எப்படி முடியாமல் போகும்! என்ற தன்மான உணர்வு வந்தால் தன்னம்பிக்கைதானே வரும்! தன்னம்பிக்கை வந்துவிட்டால் எல்லாம் நம்மால் முடியும்.
கையில்லாப் பறவை கூடு கட்டும்போது எல்லா உறுப்புகளும் உள்ள நம்மால் ஏன் முடியாது? என்று நமக்கு நாமே வினா எழுப்பிக் கொள்ள வேண்டும்.
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு முயன்றால் நம்மால் முடியாதது எதுவும் இல்லை. நம்மால் எல்லாம் முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படி விழிப்பூட்ட வேண்டும்.
கல்வியின் கட்டாயத்தை உணர்த்துதல்:
கல்வி என்பது நமக்கு விழி போன்றது. கண் தெரியாதவன் தடுமாறுவது போல, முட்டி மோதிக்கொள்வது போல, கல்வியில்லாதவன் வாழ்வில் தடுமாறுவான், முட்டி மோதிக்கொள்வான் என்பதை உணர்த்த வேண்டும்.
கல்வி அறிவைத் தருகிறது, தெளிவைத் தருகிறது, உண்மையைப் புரியச் செய்கிறது. ஊக்கம் அளிக்கிறது. உரிமைக்காகப் போராடும் விழிப்பைத் தருகிறது. திறனை வளர்க்கிறது; வாய்ப்புகளைத் தருகிறது; உயர்வைத் தருகிறது. கற்காமல் போனால் ஒதுக்கப்படுவோம், உதாசீனப்படுத்தப்படுவோம், ஏமாற்றப்படுவோம்; ஏழ்மைநிலைக்குச்செல்வோம் என்பதை வலியுறுத்த வேண்டும்.
படித்த குடும்பம் பெற்ற உயர்வையும்; படிக்காத குடும்பத்தின் தாழ்வையும் ஒப்பிட்டு உணரச் செய்ய வேண்டும். கல்விதான் மனித வாழ்வின் அடிப்படை; அதைக் கட்டாயம் பெறவேண்டும் என்பதை இடைநிற்கும் மாணவனிடம் எடுத்துக் கூற வேண்டும்.
பெற்றோருக்கு விழிப்பூட்டல்:
பெற்றோர்கள் விழிப்போடு இருந்தால் பிள்ளைகளின் இடைநிற்றல் தவிர்க்கப்படும். எனவே, கல்வியின் கட்டாயம், அதனால் கிடைக்கும் உயர்வு, சிறப்பு இவற்றை உணர்த்த வேண்டும். படிக்காமல் போனால் உங்கள் பிள்ளையின் வாழ்வு எந்த அளவிற்கு எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்பதை உணரும்படி செய்ய வேண்டும். பெற்றோர் கூட்டங்களை மாதம் ஒருமுறையாவது நடத்தி பிள்ளைகளின் கற்றல் நிலை குறித்தும், பெற்றோர் செய்யவேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் எடுத்துக் கூறவேண்டும்.
அரசின் உதவிகளை விளக்கிச் சொல்லல்:
இல்லாமையால் கல்லாமை இல்லை என்ற நிலையை இன்றைக்கு தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் இல்லங்களைப் போல செயல்படுகின்றன. காலை உணவு, மதிய உணவு, உதவித் தொகை, இலவச பாடப் புத்தகம், மிதிவண்டி, கணினி, பேருந்து வசதி என்று எல்லாமும் அரசு வழங்குகிறது. எனவே, பணம் இல்லையென்பதற்காக எந்தப் பிள்ளையும் படிக்காமல் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
படித்த பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொண்டு அமைப்புகளிடம் தங்கள் குடும்ப நிலையைக் கூறினால், பிள்ளைகள் தடையின்றிக் கற்க உரிய வழிகளை அவர்கள் கூறுவார்கள் என்பதை பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் சொல்ல வேண்டும். அறியாமையால் ஏற்படும் இழப்புகள்தான் இங்கு ஏராளம். எனவே அரசின் உதவிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.
இடைநிற்றல் காரணம் அறிந்து தீர்வு காணல்:
இடைநிற்றல் செய்யும் மாணவர்களின் அந்நிலைக்கான காரணத்தைக் கேட்டறிந்து, அதைப் போக்கி, அம்மாணவரை தொடர்ந்து கற்கச் செய்ய வேண்டியது கட்டாயம். பெற்றோர், ஆசிரியர், தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைத்து, அவர்கள் மூலம் மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைப் போக்கவேண்டும்.
நண்பர்கள் மூலம் மனமாற்றம் உருவாக்கல்:
இடைநிற்றல் செய்யும் மாணவர்களின் நெருங்கிய நண்பர்கள் முயன்றால் இடைநிற்றலை எளிதில் தடுக்கலாம். மற்றவர்கள் கூறுவதைக் காட்டிலும் நட்புத் தோழர்களின் அறிவுரை மிகவும் பலன் தரும். இடைநிறுத்தம் செய்யும் மாணவர் ஒரே நாளில் அந்த முடிவை எடுப்பதில்லை. அவர் இடைநிற்றல் செய்யப்போகிறார் என்பது தோழர்களுக்குத் தெரியும். அப்போதே அந்த எண்ணத்தை மாற்றி, கற்றலைத் தொடர சக தோழர்கள் அறிவுரை சொல்லவேண்டும். அச்செய்தியை ஆசிரியர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.
அச்சம், அய்யம் அகற்றுதல்:
படித்தால் வேலை கிடைக்குமா? படிக்காமல் வேறு வேலை செய்யலாமா? தேர்வில் வெற்றி பெறுவோமா? அதிக மதிப்பெண் பெற முடியுமா? என்ற காரியங்கள் வரும்போது, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். நல்ல முறையில் படித்து முடித்தால் வேலை கிடைக்கும், முயன்று படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம் போன்ற ஊக்கங்களை அவர்களுக்குத் தரவேண்டும். ஆசிரியரும், பெற்றோரும், உடன்பயிலும் மாணவர்களும் இதைச் செய்ய வேண்டியது கட்டாயம்.
மனஇறுக்கத்தைத் தளர்த்துதல்:
பாடச் சுமை, தேர்வு போன்றவற்றால் மாணவர்கள் மனஇறுக்கம் அடையும்போது, அவர்களுக்கு விளையாட்டு, சுற்றுலா, கலை நிகழ்ச்சிகளின் மூலம் மனஇறுக்கத்தை அகற்ற வேண்டும். இது மாணவர்களின் இடைநிற்றலைப் பெரிதும் தடுக்கும். உளவியல் வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கவேண்டியதும் கட்டாயம்.
கண்காணிப்புக் குழுக்கள்அரசு எல்லா கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, அக்குழுவினரைக் கொண்டு, ஒவ்வொரு பள்ளியிலும் இடைநிறுத்தம் செய்ய வாய்ப்புள்ள மாணவர்களைக் கண்டறிந்து, பட்டியல் தயார் செய்து, அம்மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்கவேண்டும். இடைநிற்றல் செய்த மாணவர்களையும் கண்டறிந்து அவர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனைகள் வழங்கவேண்டும்.
தேர்வைத் தவிர்க்கும் மாணவர்கள்:
ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வந்துவிட்டு, அரசுப் பொதுத் தேர்வைத் தவிர்க்கும் போக்கு அண்மைக் காலத்தில் அதிகமாகி வருகிறது. மாணவர்களை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, தன்னம்பிக்கையுடன் அவர்கள் தேர்வெழுத ஊக்கப்படுத்தவேண்டும்.
தீர்வு
அரசின் திட்டமிடல், கண்காணிப்புக் குழுக்கள் ஆய்வு செய்தல் மற்றும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் சந்திக்க மாதம் ஒரு கூட்டம் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இடைநிற்றலைத் தடுக்க வேண்டும். இது அரசு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களின் கட்டாயக் கடமையாகும்.