ஆசிரியர் பதில்கள் – மார்க்சியம் அறியா மண்டை வறட்சியின் வெளிப்பாடு!

2023 ஆசிரியர் பதில்கள் மார்ச் 1-15,2023

1. கே: ஆளுநர் ஆர்.என். இரவி அவர்கள், “இந்தியாவைச் சிதைத்தது கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள்’’ என்று கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன?
                                                                                                                                                                                                                             – பொ. இரவிந்திரன், வேலூர்.

ப: கார்ல் மார்க்சின் தத்துவமான பொதுவுடைமை, விஞ்ஞான சோஷலிசம் – இவை பற்றி ஆளுநர் ரவி
என்ற ஆர்.எஸ்.எஸ்காரரின் பிரச்சாரப் பாணியால், அவரது அறியாமையும்,அரசியல் சட்டவிதிகளைப் புறக்கணித்த
அவரது அகம்பாவமும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்றன! மார்க்சியம் தெரியாத மண்ணாங்கட்டியின் மண்டை வறட்சியின் வெளிப்பாடு! இந்தியாவில் குரங்கை வணங்குகின்றனர். ஜாதியை ஏற்படுத்திய மனுவை கண்டித்து மார்ஸ் சில கட்டுரைகள் எழுதியுள்ளார். அதன் காரணமான கோபத்தின் பிரதிபலிப்புத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்காரருக்கு! புரிந்துகொள்வோமாக!

 

2. கே : இடைத்தேர்தல் ரத்தாகவேண்டும் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் முனைப்பு காட்டுவது, தேர்தல் ஆணையத்திற்குத் தரும் மறைமுக அழுத்தமா?
                                                                                                                                                                                                                                             – விசாலாட்சி, மதுரை.

ப: ஆசைகளைக் குதிரைகளாக்கிப் பறக்க நினைக்கும் ஆரியமும் அதன் அடிமைகளும் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!

3. கே: அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் சென்றுள்ளதில் ரஷ்யாவிற்கான அழுத்தம் ஏதாவது உண்டா?
                                                                                                                                                                                                                         – கோ. தயாளன், வேப்பம்பட்டு.

ப: ஒரு பக்கம் ஆயுத வியாபாரம்; மறுபுறம் அமைதிப் பேச்சு – என்ன உலகமடா? ‘ஏய்ப்போரின் பெரும் உலகம்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது!

 

4. கே: அமெரிக்காவில் சியாட்டில் மாநகரில் ஜாதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
                                                                                                                                                                                                                             – மணிகண்டன், சென்னை-12.

ப: எங்கு நோய்க்குறிகள் தென்படுகிறதோ அங்கு சிகிச்சை மேற்கொள்ளும் நிலை! அமெரிக்காவிற்கும் ஜாதியை ஏற்றுமதி
செய்துள்ளார்கள் -_ வெட்கங்கெட்ட-வர்கள்!

 

5. கே: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல்வேறு பிரிவுகளும், அதன் கைக்கூலிகளும் நூற்றுக்கணக்கில் சமூக ஊடகங்களில் பல பெயரில் மதவெறியைப் பரப்பும்போது, நாமும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சியளித்து ஈடுபடுத்த ஆவன செய்வீர்களா?
                                                                                                                                                                                                             – ஆர். ஜானகிராமன், நாகர்கோவில்.

ப: ‘டிரால்ஸ்’ (Trolls) என்ற பொய்ச் செய்திகளை, சம்பளம் கொடுத்து பொய்யுரை பரப்பும் முயற்சியைத் தடுக்க நாமும் இயக்கத்தில் முயற்சியை தாராளமாகச் செய்யலாமே! செய்து வருகிறோம் – உண்மையைப் பரப்ப.

 

6. கே: உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து நடைபெறுவதற்கான மூலகாரணத்தை முறியடிக்க என்ன செய்யவேண்டும்?
                                                                                                                                                                                                                                              – பாரதிராஜா, தேனி.

ப: ஒன்றிய அரசு கண்டும் காணாதது-போல் உள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு தனி விசாரணைக் குழுவை நியமித்து, உண்மைகளைக் கண்டுபிடித்து, உலகிற்கும் பெற்றோர்களுக்கும் புரிய வைக்க முன்வர வேண்டும்!

 

7, கே : இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கேட்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருவதால், தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
                                                                                                                                                                                                                            – பன்னீர்செல்வம், பண்ருட்டி.

ப: தமிழ்நாடு அரசு தானே முன்வந்து, அதுபற்றி தனது நிலைப்பாடு குறித்து வாதாடி, சேதுசமுத்திரத் திட்டத்தினைத் தொடர ஏற்பாடு செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும்.

 

8. கே: தீனதயாள் உபாத்தியாயா என்பவர், மற்ற மதத்தவர் இந்தியாவில் வாழ தங்கள் மதக்கோட்பாடுகளைக் கைவிட வேண்டும் என்றவர். அவரை ஆளுநர் கொண்டாடுவது அவரது பதவிக்குச் செய்யும் துரோகம் அல்லவா?
                                                                                                                                                                                                                          – பி. வெங்கட்ராமன், திருச்சி.

ப: அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் அது.ஆளுநர் பதவி விலகி, அண்ணாமலைக்குப் பக்கத் துணைவரான பின்பு செய்யலாம்; அதற்காக நமது வரிப் பணத்திலா? ராஜ்பவனத்தை ஆர்.எஸ்.எஸ். கிளைப் பிரச்சார அலுவலகமாக மாற்றிட முனையலாமா? வன்மையான கண்டனங்கள் குவியட்டும்!