பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ‘ஆண்மை’யும் ‘பெண் அடிமையும் ‘கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும் இதை உண்மையென்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால், பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றது என்பதும், நடு நிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது’’ என்றார் தந்தை பெரியார். (“குடி அரசு’’ 22-.12-.1929)
தந்தை பெரியாரின் சொல்லாடலைக் கவனியுங்கள்.தந்தை பெரியாரின் மேற்கண்ட உரைக்கு விளக்கம் கொடுப்பது போல் அண்மையில் வெளி வந்திருக்கும் ‘அயலி ‘என்னும் இணைய வலைத் தொடர் (திரைப்படம்) அமைந்திருக்கிறது.ஏறத்தாழ 4 மணி நேரம் ஓடும் இந்த வலைத்தொடர், பெண்கள் கல்வி கற்பதை எப்படி ஒரு கடவுள் நம்பிக்கை தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது. கிராமம், கிராமச் சொல்லாடல், கிராமக் கோயில் என்ற பெயரில் இருக்கும் கட்டுப்பாடுகள், பெண் கல்விக்குத் தடையாக இருக்கும் உளவியல் காரணங்கள் எனப் பல கோணங்களைப் பேசுகிறது இந்த ‘அயலி’.
பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் முதல் முறை மாதவிடாய் என்பது பெண்களின் கல்வியைத் தடுக்கும் காரணியாக எப்படி மாற்றப்படுகிறது என்பதையும்,கடவுள் கட்டளை என்னும் பெயரால் நடக்கும் இளம் வயது திருமணங்களையும், அதனால் வாழ்நாள் முழுவதும் துன்பப்படும் இரண்டு தலைமுறைப் பெண்களையும் எதார்த்தமாக எடுத்துக்காட்டுகிறது.
கடவுளின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட புனிதம், புடலங்காய் எல்லாம் எப்படி விழிப்புணர்வு பெற்ற ஒரு பெண்ணால் தூள் தூளாகிறது என்பதுதான் ‘அயலி’ சொல்லும் செய்தி. கல்வி என்பது எவ்வளவு அவசியம் என்ற புரிதல் இருந்தால் முன்னேறுவதில் இருக்கும் தடைகளைப் பெண்களால் தகர்க்க முடியும் என்பதை இந்த ‘அயலி’ மிக அழகாகக் காட்டுகிறது.. ‘உன் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்’ என்னும் தந்தை பெரியாரின் கருத்து அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் தொடர்ச்சியாகச் சொல்லிவரும் பெண் கல்வி ஏன் தேவை என்பதை மிகச்சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொடர்கள், தந்தை பெரியாரின் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் ‘அயலி’ போன்றவை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் எட்டுவது மட்டுமல்ல, இந்தத் தொடர் போன்றவை இந்தி மற்றும் வடமாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்படவேண்டும். பல நாடுகளின் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் இருக்கும் பெண்களைச் சென்றடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு, தங்கள் விடுதலைக்கான விடை என்பது எதில் இருக்கிறது என்பது புரியும்.
மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியின் 75ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்தக் கல்லூரியின் தமிழ் உயராய்வு நடுவத்தின் வேயாமுற்றம் சார்பாக, நாடகப் பேராசிரியரும், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தை தமிழ்நாடு எங்கும் நடத்திய தோழருமான மு.இராமசாமி அவர்களின் எழுத்து-நெறியாளுகையில் ‘பெண் ஏன் அடிமையானாள்:’ -‘கலகக்காரர் தோழர் பெரியார் 2’ என்னும் நாடகம் 15.02.2023 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நாடகத்தை பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அந்த நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே அந்தக் கல்லூரியின் மாணவிகள். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த 25 பேரும் கருப்பு உடை அணிந்து நடித்தனர். இந்த நாடகத்தின் தொடக்க விழாவிற்கு அழைப்பின் பேரில் நான் நேரில் சென்று கலந்து கொண்டபோது வியப்பின் உச்சிக்கே சென்றேன். தந்தை பெரியாரின் கருத்துகளை எப்படி அந்தக் கல்லூரியின் மாணவிகள் உள்வாங்கி நடித்தார்கள் என்பது மட்டுமல்ல, தந்தை பெரியாரின் கருத்துகளை நாடகத்தில் நடித்த பெண்கள் பேசியபோது, பார்வையாளர்களாக இருந்த மாணவிகள் தரப்பில் இருந்து எழுந்த கைதட்டல், உற்சாகம், அவர்களின் உணர்ச்சிமயமான ஈடுபாடு உண்மையிலேயே கலந்துகொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த நாடகம் பெண் இன்று எப்படி குடும்ப வன்முறைக்கு ஆளாகிறாள்? எப்படி வளர்ப்பிலேயே பெண் குழந்தைக்கும் ஆண்குழந்தைக்கும் பாகுபாடு காட்டப்படுகிறது? மனு நீதி சுலோகங்கள் எப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறது? ஒரு பெண் எப்படி தந்தை, கணவன், மகன் ஆகியோருக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது? என்பதை எல்லாம் மிக விளக்கமாக அப்படியே _ நடப்பவற்றை கண்முன்னே காட்சிப்படுத்தி_ அந்தக் கல்லூரிப் பெண்கள் நடித்துக் காட்டினார்கள்.
1929- செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதைப் பெண்கள் மாநாட்டிற்கு தந்தை பெரியார்,’ தனித்து வாழும் பெண்கள், விதவைகள், விபசாரி என்று அழைக்கப்படும் பெண்கள் _ இவர்கள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும்’ என்று விடுத்த அழைப்பு, அதனுடைய முக்கியத்துவம், அந்தக் காலகட்டத்தில் அது எப்பேர்ப்பட்ட மனித நேய அழைப்பு என்பதையெல்லாம் நடித்துக் காட்டினார்கள்.
விதவை மறுமணம், ஜாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் என்று தந்தை பெரியார் நடத்திக் காட்டிய திருமணங்களின் சிறப்பைப் பட்டியலிட்டு அந்தப் பெண்கள் உணர்ச்சிகரமாக நடித்துக் காட்டினார்கள். பெண் எப்படி அடிமையானாள் என்பதை வரலாற்றின் அடிப்படையில் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்கா முதல் கங்கை வரை’ புத்தகத்தை வைத்துப் பெண்கள் பேசி விளக்கினார்கள். ’பொம்பளை சிரிச்சா போச்சு’ என்ற பழமொழிக்கு மாற்றாக நாடகத்தில் அடிக்கடி ஒரு பெண் வெடிச்சிரிப்பு சிரித்து’ இந்த ஆம்பளைங்க நம்மளை அடிமைப்படுத்துறதுக்கு இந்தக் கம்பி கட்டுற கதை எல்லாம் எப்படி எப்படி சொல்லி வச்சிருக்கானுங்க, பாரு‘ என்று பேசியபோது அரங்கத்தில் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.
இந்த நாடகம் அந்தக் கல்லூரியில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவியர்களுக்காகத் தொடர்ந்து 6 முறை அரங்கேற்றப்பட்டது. பொது
மக்களுக்காக என்று ஒரு முறை அரங்கேற்றப்-பட்டது. ஆயிரக்கணக்கான மாணவ_ -மாணவியர் கலந்து கொண்டு பார்த்து, பெரியாரியலைப் பற்றியும்,, பெரியாரியப் பார்வையில் பெண்ணிய விடுதலையைப் பற்றியும் உள்வாங்கிய நிகழ்வாக இந்த நாடக நிகழ்வு அமைந்தது.
மதவாதிகள் ஒரு பக்கம் இன்னமும் ‘சொர்க்கம்- நரகம் ‘என்னும் கற்பிதங்களை வைத்து பெண்களை அடக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.தொலைக்காட்சித் தொடர்களில் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி பெண்களை இன்னமும் அடிமைத் தனத்தில் வைத்திருக்க பெரும் முயற்சி செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பெண்கள் தங்கள் விடுதலைக்கான விடைகளை பெரியாரின் வழி நின்று சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் தொடங்கி இருக்கிறார்கள்.அதற்கு நாடகம், திரைப்படம்,இணைய வலைத்தொடர்கள் என்று பல்வேறு வடிவங்களை கைகளில் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்… மகிழ்ச்சியாக இருக்கிறது.
அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8 என்பது, கடவுள் என்னும் பொய்மையை பெண்கள் கட்டுடைத்து வெளிவர வேண்டிய நாள்! மதம் என்பது பெண்களை ஒடுக்குவதற்காக மிகத் திட்டமிட்டு, ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கருவி.
மதம் என்பது நம்மை ஒடுக்கும் கருவி என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள உதவும் நாளாக இந்த அனைத்துலக பெண்கள் நாள் அமையவேண்டும்.