தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பாதிப்பைத் தரக்கூடியவை. நம் நாட்டில் உள்ள மொத்த வரிதாரர்களில் சுமார் 40% வரிதாரர்களை மட்டுமே புதிய வரி முறையில் கொண்டுவர, அதற்குப் பல சலுகைகளை அறிவித்த ஒன்றியநிதியமைச்சர், பழைய வரி முறையைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிச் செய்ததன் மூலம், அடுத்த சில ஆண்டுகளில் பழைய வரி முறையையே ஒழித்துக்கட்டிவிடுவதுதான் ஒன்றிய அரசின் நோக்கம் என்று தெளிவாகத் தெரிகிறது.
இது மிகத் தவறான அணுகுமுறை என்றே சொல்ல வேண்டும். காரணம், வீட்டுக் கடனோ, காப்பீட்டுத் திட்டமோ எதுவாக இருந்தாலும், அதை நம் மக்கள் தேர்வு செய்ய முக்கியமான காரணங்களுள் ஒன்று. அதற்கு அளிக்கப்படும் வரிச்சலுகைதான். எல்.அய்.சி.யில் பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் கட்டி வருவதற்கும், பல லட்சம் கோடியை வீட்டுக் கடனாக மக்கள் பெற்றதற்கும் காரணம், வரிச் சலுகைதான்.
இனிவரும் காலத்தில் எதற்கும் வரிச்சலுகை இல்லை எனில், மக்கள் காப்பீடு எடுக்காமல், வீட்டுக் கடன் வாங்காமல், எல்லாப் பணத்தையும் செலவு செய்வார்கள். இதனால் பொருள்களின் விற்பனை அதிகரித்து, சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறும். ஆனால் மக்களோ, சேமிப்பு எதுவும் இல்லாமல், கடன் வலையில் சிக்கி, சீரழிந்து போவார்கள். இப்படியொரு நிலை உருவாவதைத்தான் ஒன்றிய அரசு உருவாக்க விரும்புகிறதா?
வரிச் சலுகைகள் தனிமனிதர்களின் வாழ்நிலையை உயர்த்தக்கூடியவை. அந்தத் ‘தேன்கூட்டில்’
கைவைத்துக் கலைக்க நினைத்தால், அதற்கான விளைவை மத்திய அரசு நிச்சயம் ஒன்றிய வேண்டியிருக்கும்!
நன்றி: ‘நாணயம் விகடன்’