நேயன்
வேதத்தில் இருக்கும் திருமண மந்திரங்கள், ‘மனைவி, அவள் புகும் வீட்டின் இல்லத்தரசி’ என்றே தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆம். நாம் எளிதாக இன்று பயன்படுத்தும் இந்த ‘இல்லத்தரசி’ என்கிற வார்த்தையே, வேதத்தில் நாம் காணும் கருத்தாக்கம்தான்.
“உன் புகுந்த வீட்டில் மாமியாருக்கும் மாமனாருக்கும் அன்பு கொண்ட அரசாட்சி செய்பவளாக இருப்
பாய்! உன் கணவனின் சகோதர சகோதரிகளின்மீதுஉனது ஆட்சி முழுமையாக அமையட்டும்!’’ (ரிக், 10.85.46)
ஒரு வயதுகூட நிரம்பாத பெண் குழந்தை எப்படி இல்லத்தரசி ஆக முடியும்? எப்படி அன்பான அரசாட்சி செய்யமுடியும்? அதுவும், வயது முதிர்ந்த மாமியார் மீது? மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது, நீங்கள் வேதம் சொல்வதை எதிர்க்கிறீர்கள் அல்லவா? வேதத்தை எதிர்க்கிற நீங்கள், எப்படி உங்களைச் சனாதன தர்மிகள் எனச் சொல்லமுடியும்?
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர், ஹர் பிலாஸ் சாரதா என்பவர் வேத அறிஞர். ஹிந்து தேசியவாதி. அவர் ஒவ்வொரு மாகாணத்திலும் சென்று பேசினார். அங்கே உள்ள சமூகச் சீர்திருத்தவாதிகளை முடுக்கிவிட்டார். விடுதலை கிடைக்க வேண்டுமென்றால், முதலில் நாம் பண்பட வேண்டும். நம் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அவர்களுக்குக் கல்வி வேண்டும். அதுதான் முக்கியம். இல்லாவிட்டால் விடுதலை கிடைக்காது. நாம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். வேதம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். சாரதாவின் உழைப்பு, பலன் கொடுக்க ஆரம்பித்தது. பிரிட்டிஷ் கலெக்டர்கள், தங்கள் அறிக்கைகளில் சொன்னார்கள் _ பெண்களின திருமண வயதை உயர்த்த, மக்கள் விரும்புகிறார்கள் என்று.
அன்றைய ஆச்சாரவாதத்தின் தென்னகத் தலைநகராக இருந்த கும்பகோணத்தில், பெண்கள் கூடி எதிர்ப்பில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். பெண்கள் விவாக வயதை அதிகரிக்கச் சொல்லும் சாரதா கொண்டுவரும் சட்டம் அமலாக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் இருந்து லஷ்மி ஏகாம்பரம், கஞ்சம் ஊரில் இருந்து ஹிந்து பதித பாவன மிஷன், சென்னையில் இருந்து ஹிந்து தர்ம பரிபாலன சபா, வீரராகவபுரத்தில் இருந்து பாரத ஸ்திரீகள் மண்டலியைச் சேர்ந்த கோமதி அம்மாள் என எல்லாப் பக்கங்களில் இருந்தும் சமூகப் போராளிகள் இணைந்து குரல் கொடுத்தனர். சாரதா கொண்டு வரும் சட்டம், அவசியம் இந்தச் சமுதாயத்துக்கு வேண்டும்.
(இது, 1929-_இல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் ஒரே ஒருவர்தான் என்பதுபோல் பிரச்சாரம் செய்யப்படுகிறதே, அவர் இதையெல்லாம் குறித்து மேடை மேடையாகப் பேச்சளவில் முழங்கியதற்கு முன்னால், களத்தில் போராடியவர்கள் யாரென்றால், எது சத்தியமான வேதநெறியோ, அது தழைத்தோங்கக் குரல் கொடுத்தவர்கள், வேத தர்மத்துக்ககாக உழைத்தவர்கள்).
1929, செப்டம்பர் 28-இல், சாரதா சட்டம் அமலுக்கு வந்தது. 1930, ஏப்ரல் 1-இல், அது அனைத்து இந்தியர்களுக்கும் சட்டமானது. நவீன இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இது. பெண் விடுதலைக்கான மிக முக்கிய தாவல் இது.
ஹர் பிலாஸ் சாரதா இல்லையென்றால், இந்தியாவில் பெண் விடுதலை, பல பத்தாண்டுகளுக்கு. ஏன் ஒரு நூற்றாண்டுக்குக்கூட, பின் தள்ளப்பட்டிருக்கும். இதற்காக, இந்த மகாமனிதர் செய்த உழைப்பு தியாகங்கள், அவர் பெற்ற சொல்லடிகள், எதிர்ப்புகள், அவமானங்கள் இவை எதுவுமே இன்று நம் நினைவில் இல்லை. ஆனால், அவர் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அதைச் செய்யவில்லை. அவரை இயக்கியது. அவர் மூலமாக வெளிப்பட்டது. வேத ரிஷிகளுக்கும் ஹர்பிலாஸ் சாரதாவுக்கும், இதற்காக உழைத்த நவீன வேதப் போராளிகளான ஆரிய சமாஜிகளுக்கும் ஒவ்வோர் இந்தியனும் கடமைப்பட்டிருக்கிறான்.
சாரதா அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்ததாக, ஏற்கெனவே விதவைகளாக வாழ்வோருக்குச் சொத்துரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தார் சாரதா. “வேதங்-கள், மனைவியைக் கணவனின் சரி பாதி எனக் கூறுகின்றன. எனவே, கணவன் இறந்துவிட்டாலும், மனைவியின் மூலம் சரி பாதியாக அவன் வாழ்கிறான். அப்படி அவன் வாழும்போது, அவனது சொத்துக்கள் எப்படி அவளுக்குப் (அதாவது, மனைவிக்கு) போகாமல் இருக்க முடியும்?’ பிரகஸ்பதி, இந்த வாதங்களை முன்வைத்துச் சொல்கிறார் _ எனவே, கணவனுக்கு முன் மனைவி இறந்தால், அவன் கையில் இருந்து நெருப்பு அவளுக்குச் செல்ல வேண்டும். மனைவிக்கு முன் கணவன் இறந்தால், அவன் சொத்து அவளுக்குச் செல்ல வேண்டும்’.
இந்த நிலை, பண்டைய இந்தியாவில் இருந்தா என்றால், அது முழுமையாக இருந்திருக்க முடியாது. அன்றைய சமுதாயச் சூழலில், ஒரு பெண் எந்த அளவு தனியாகச் சொத்து நிருவாகம் செய்திருக்க முடியும்? இருப்பினும், இன்னொரு விஷயத்தையும் நாம் காண்கிறோம். பல விதவை ராணிகள் அரசாண்டிருக்கிறார்கள். மிகத் திறமையாகவே அரசாட்சி செய்திருக்கிறார்கள். ராணி மங்கம்மாள், அகல்யாபாய் கேல்கர் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். எனவே, பிரகஸ்பதி தர்ம சாஸ்திரத்தின் சிந்தனை, சமூகத் தளத்தில் ஏற்புடையதாக அமைந்திருக்கிறது. பின்னாள்களில், இந்த உண்மையை இந்து சனாதனிகள் என தம்மை அழைத்துக்கொண்டவர்களின் எதிர்ப்பை மீறி, இந்து சிவில் சட்டத்தில் ஒருவர் கொண்டு வந்தார். அவர் பெயர், பாபாசாஹிப் என அன்போடு அழைக்கப்படும் நவீன போதிசத்வரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
அதாவது இவர்கள் சனாதன இந்துமதமும், வேதங்களும் பெண்களுக்கு உரிய உரிமையை, மதிப்பை, வாய்ப்பை அளிப்பதாகவும், சில பழைமைவாதிகள்தான் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதாகவும் இவர் திசை திருப்பி இந்துக் காலித்தனத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்.
சாதாரண பழைமைவாதிகள் பற்றி நமக்குக் கவலையில்லை. தெய்வமாக இவர்களால் மதிக்கப்படும், காஞ்சி பெரிய சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் என்ன கூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.
ஏழாவது வயதிலே பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். அந்த வயதில் அவருக்குக் கணவனாக வருகின்றவனிடம் அவள் தன்னை ஒப்படைத்துவிட வேண்டும். அவனையே குருவாகவும், தெய்வமாகவும் ஏற்று, அவனுக்குத் தன்னை அர்ப்பணித்துவிடவேண்டும். வயது ஆகிவிட்டால் பெண் எதிர்க் கேள்வி கேட்பாள். அதனால், இளவயதிலே அவளை ஒருவனிடம் அர்ப்பணித்து விட வேண்டும். அதன் பிறகு அவளுக்கென்று எதுவுமே இல்லை. எல்லாம் அவள் கணவன்தான்-அந்தச் சிறு பையன்தான்” என்கிறார் ‘பெரியவாள்.’
(“தெய்வத்தின் குரல்” 870ஆம் பக்கம், இரண்டாம் பாகம்)
‘பெண்ணுக்கு கணவனே தெய்வம். பெண்
ணுக்கு என்று தனி அறிவு இல்லை. கணவன் பெற்ற அறிவையே அவள் பற்றி வாழவேண்டும்.
சிறு பெண்ணை ஒரு சிறுவனிடம் ஒப்படைத்தபின் அவளுக்கு எல்லாமே அவன்தான். பெண்ணுக்குக் கணவனே ஈஸ்வரன். புருஷனை ஈஸ்வரனாக நினைப்பது, கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் என்ற அடக்க சுபாவம், கற்பு, சுமங்கலியாகவே செத்துப் போக வேண்டும் என்ற பிரார்த்தனை ஆகியவை பெண்களின் உத்தம ஜீவனுக்கு உயிர் நிலை…
காதல் கீதல் என்று சித்த விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும், காமமும் வருவதற்கு முந்தியே (ஏழு வயதிலே) ஒருவனைக் அடைந்தால்தான் குழந்தை உள்ளத்தில் உண்டாகிற பணிவினால், இவனே நமக்குக் குரு, இவனே நமக்கு ஈச்வரன் என்று இருக்க முடியும்…
தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் இவளுடைய அகம்பாவம் கரைந்து போய் விடுகிறது… இப்படி கணவனிடமே சரணாகதியான நளாயினி, அநஸுயை, ஸாக்ஷாத் மகாலட்சுமியான ஸீதாதேவி, ஸாவித்திரி, கண்ணகி, வாஸுகி போன்றோர் நம்மால் வணங்கப்படுகிறார்கள்” என்கிறார் பழைய பெரியவாள்.
(தெ. குரல்- பகுதி மிமி, பக்கம்- 889, 890.)
வேதத்தின் அத்தாரிட்டி என்று பார்ப்பனர்
களால் போற்றப்படும் “காஞ்சிப் பெரியவாள்’’ கூறிய மேற்கண்டக் கருத்துகளை அரவிந்தன் நீலகண்டன் ஏற்கிறா? மறுக்கிறாரா? மறுத்தால் இக்கருத்துகளைக் கண்டிக்கத் தயாரா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவேண்டும்.
(தொடரும்)