மகிழ்ச்சி ஒளி வீசிட…
வாழ்க்கையில்…
முதல் பக்கம்…
கருவறை!
கடைசிப்பக்கம்…
கல்லறை!!
இடையிலுள்ள
பக்கங்களை
தன்மானத்தால்
கடும் உழைப்பால்
பகுத்தறிவால் நிரப்பு!
மகிழ்ச்சி
ஒளிவீசித் திகழும்
பக்கத்திற்குப் பக்கம்!!
– நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக்கருப்பூர்
பொருள்…
எல்லா நூல்களிலும்
தேடிப் பார்த்துவிட்டேன்
பொருள் மட்டும்
கிடைக்கவே இல்லை
சுதந்திரம் என்ற சொல்லுக்கு…
பஞ்சம்
வளர்ந்து வருகிறது
அறிவியல் _ ஆனாலும்
இன்னும் பஞ்சம்தான்
அரைகுறை ஆடையுடன்
சிலைகள்!
– அ.குருஷ்ராஜா, இனாம்ரெட்டியபட்டி
சாமியாடி…
செடியின்
வேர்களுக்குத்
தண்ணீர் ஊற்றினான்!
மலர்களை
அள்ளிக் கொடுத்தது!
மரங்களின் வேர்களுக்கு
தண்ணீர் ஊற்றினான்!
கனிகளை அள்ளிக் கொடுத்தது!
மனிதனின் கால்களில்
தண்ணீர் ஊற்றினான்!
அவன் சாமியாடிக் கொண்டு
ஆட்டைக் கொடு!
கோழியைக் கொடு!
பொங்கல் வை!
பாயாசம் வை! என்றான்!
பாவம் பக்தன்!
– லட்சுமிசங்கரன்
மவுன கீதங்கள்
அமைதியில் மனம்
விரியும் சிறகுகள்
ஆதரிக்கும் மவுனம்
அறிவும் மனமும்
சுற்றுலாத் தலங்கள்
மவுனத்திற்கு
கலங்கிய குளம்
காயம்பட்ட மனம்
ஆறுதலாய் மவுனம்
பூட்டிக் கிடக்கும் வாய்
எட்டிப் பார்க்கும் பேச்சு
சிரிக்கும் மவுனம்.
என்னருமை நண்பனே!
உற்றுநோக்கு தெரியும்
பறவையிடம் மனமும்
உன்னிடம் சிறகுகளும்!
செதுக்கினால் கிடைக்கும்
கல்லில் சிற்பமும்
எண்ணத்தில் செப்பமும்!
துரும்பைத் தொட்டுவிடு
தொட்டுவிடலாம்
இலக்கை.
வேடந்தாங்கல் பறவைகள்
உணர்த்துமே உன்னுள்
மனஉறுதியை!
நிலைத்த கல்வி நாடு
நினைத்த வேலை தேடு
நிம்மதியாகும் வீடு!
– மலர்மன்னன் முசிறி