குறும்படம்
துவந்த யுத்தம்
தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரிடம் படும் துயரங்களை எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தியாயிற்று. ஆனாலும், துயரங்கள் ஓய்ந்த பாடில்லை. இனி என்னதான் செய்வது என்று புரியாமல் அனைவரும் மருகிக் கொண்டிருக்கும் வேளையில் சில மீனவர்கள் மத்திய அமைச்சரையே கடத்தி கடலுக்கு மீன்பிடி படகில் அழைத்துச் செல்கின்றனர். அங்கு, மத்திய அமைச்சரின் கண் முன்பே, இந்திய கடல் எல்லையிலேயே சிங்களரின் அட்டூழியம் அரங்கேறுகிறது. மத்திய அமைச்சர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகக் கூறி விடைபெற்றுச் செல்வார். அவ்வளவுதான். வழக்கம்போல சிங்களரின் அட்டூழியங்கள் தொடரும்…
இதுதான், துவந்த யுத்தம் குறும்படத்தின் கதை. திரைக்கதை, காட்சி அமைப்பு, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்துத் துறையும் கைகோத்திருக்கும் இக்குறும்படம் 2011-இல் நடந்த பெரியார் திரை குறும்படப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர்: அசோக்குமார், செல்: 98842 11009
நூல்
பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்
முனைவர் வா.நேரு எழுதிய புதுப்பாக்களின் தொகுப்பு நூல் இது. பகுத்தறிவுக் கருத்துகளும் சமூகப் பார்வையும் நிரம்பி வழியும் புதுப்பா வரிகள் படிக்க இனிக்கின்றன.
கிராமங்கள் / சொர்க்கம் என்று / எவன் சொன்னது? / இன்றும்கூட / ஜாதியைக் / கெட்டியாகப் / பற்றியிருக்கும் / நரகம் அவை/…
நாங்கள் / உள்ளே நுழைவதற்கு / முத்தாலம்மன் / கோவிலுக்குள் / அனுமதி / இல்லையென்றால் / அந்தக் கோவில் / தேவைதானா எங்களுக்கு / மதியாதார் தலைவாசல் / மிதியாதே என்றார்கள் / எங்களை / மதியாத / மதத்தில் மட்டும் / இருக்க வேண்டுமா?…
இவை பொறுக்கி எடுக்கப்பட்ட சில வரிகள்.
வெளியீடு: மானமிகு பதிப்பகம், 3/20 ஏ, ஆதிபராசக்தி நகர், திருப்பாலை, மதுரை_625 014. பக். 128 ரூ. 60.
ஒலிவட்டு
“வெங்காயம்“
பாலைவனத்தில் ஒரு சோலையாக வெளியாயிருக்கிறது. வெங்காயம் திரைப்படம். இத்திரைப்படத்தில், அரகிருக்கன், அடடா… இவன் கர்ணனோ, மஞ்ச முகத்தவளே, மேகமே _ வெண் மேகமே, அச்சமென்ன, அச்சமென்ன – ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பாடல்களை பாவலர் அறிவுமதி, எஸ்.எம்.மாணிக்கம், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ஒரு பாடல்.
ஆயிரம் துன்பம் வரும் – ஆயிணும்
அறிவினால் வென்றிடலாம்
தோல்விகள் திரண்டு வரும் – துணிந்திருந்தால்
தோள்களில் மாலை விழும்.
மாட்டுச் சாணியை புனிதம் என்றார்கள்
மாடாய் உழைத்தவனை தீட்டு என்றார்கள்
தீயாய் எழுந்தே தீண்டாமை எரிப்போம்
தீய மதங்களின் வேரறுப்போம்.
இந்தப் பாடலை பேரா. சுப.வீரபாண்டியன் எழுதியிருக்கிறார்.
பரணி இசையமைத்திருக்கிறார்.