நாங்கள் தமிழர்கள்
உலக நாடுகள் அவையில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கணியன் பூங்குன்றன்
வரிகளே உங்களை வரவேற்கும்
உலக மொழிகளில்
முதல் மொழியாம்
எங்கள் தமிழில்
திருவள்ளுவர் தந்த
திருக்குறளை
அறிஞர்கள், அறிந்தவர்கள்
எல்லாம் போற்றுகிறார்கள்
உலகப் பொதுமறை இதுவே என்று.
ஆனால் நாங்கள்
வாலறிவன் தாளை வணங்காது
வந்தேறிகள் காலைக் கழுவினோம்
குடித்தோம்.
தறுதலைகள் காட்டிய கல்லைக்
கடவுள் என நம்பினோம்
தந்திரச் சொல்லை எல்லாம்
மந்திரம் என ஏற்றோம்.
உலகம் மேலே ஏறஏற
மேலே இருந்த நாங்கள்
வீழ்ந்தோம் படுகுழியில்.
மூடத்தனத்தின் எல்லைக்கோட்டில்
விழிமூடிக் கிடந்தோம்
பகுத்தறிவுப் பகலவன்
சூட்டொளிப் பட்டு
குதித்தெழுந்தோம்.
அழுக்கு முதுகுக் கயிறுகள்
இழிவுபடுத்திய போது
பகுத்தறிவு வாளால்
அறுத்துப் போட்டோம்.
விறுவிறுவென உயர்ந்தோம்
கல்வியில் பொருளில்
பதவியில் புகழில்
ஆனால்
பகுத்தறிவில்…?
நேற்று கயிறு கட்டினோம்
இடுப்பில்
மானம் காக்கும்
கோவணத்திற்காக
இன்றும்
கருப்பு பச்சை
சிகப்பு மஞ்சள்
கிளிஞ்சல்கள் மணிகள்
பொம்மைகள் சொருகிய
முடிச்சிட்டக் கயிறுகளை
கோயில் தெருக்களில் வாங்கி
கட்டுகிறோம்
இடவலக் கைகளில்
மூடத்தனம் காட்ட.
பச்சைக் குழந்தை
பழுத்த முதியவர்
படிக்காத பாமரன்
பெரும் படிப்பாளி
தொழிலாளி முதலாளி
ஏழை பணக்காரன்
நீதிபதி குற்றவாளி
அரசு அலுவலர்கள்
அமைச்சர்கள்
ஆளப்படுவோர்
கைகளில் எல்லாம்
கைஞ்ஞாண்!
எல்லாரும் கோவணம் கட்டாதவர்களாய்.