இலட்சியப் பெண்

ஏப்ரல் 16-30

– தி.ப.குடி பத்மா சீனிவாசன்

நஞ்செயும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் இயற்கை வளத்தின் நடுவே அமைந்திருந்தது பாலூர் என்ற பெரிய கிராமம். சுமார் அய்நூறு வீடுகள் மாடிவீடு, ஓட்டு வீடு, கூரை வீடு எனக் கலந்திருந்தன. எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் அவ்வூரில் வாழ்ந்தனர்.

அவர்களிடையே குணசேகரன் என்பவரின் குடும்பம் மிகுந்த அய்தீகக் குடும்பம்.

குணசேகரன், மெத்தப்படித்தவர். நிலபுலன், கார், பங்களா என ஏகப்பட்ட செல்வங்கள். அதோடு அருகில் ஒரு டவுனில் ரோலிங் மில்லையும் வைத்து நடத்தி வந்தார்.

அவருக்கு ஒரே மகள்; எண்பது வயது கிழவனும் ஏறிட்டுப் பார்க்கும் அழகு கல்லூரிக்குப் போவதும் வருவதும், அவளுக்கென சொந்த தனி காரும், வயதான, கார் டிரைவரும் உண்டு. பெயர் மாலினி.

மாலினி செல்வச் செருக்கில் வாழ்ந்தாலும், மானிடப் பற்றுடன், உயர்ஜாதி, தாழ்ஜாதி என்ற பேதம் அற்றவள். ஏழ்மையைக் கண்டு இரக்கங் கொள்பவள்.

மாலினியின் பெற்றோர், அய்தீகத்தை விடாப் பிடியாகப் பின்பற்றுபவர்கள். அவர்களுக்குத் தங்கள் மகள் எதிர்க் கருத்து உடையவளாய் இருப்பது மிகவும் மனச்சங்கடத்தை உண்டாக்கியது.

குணசேகரனுக்கும் தனிக் காரும், ட்ரைவரும் உண்டு. இரண்டு கார் ட்ரைவர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, காரைத்தான் ஓட்டுவார்கள். மாலினி கார் ட்ரைவர், முதலாளி காரையோ, முதலாளி கார் ட்ரைவர், மாலினி காரையோ ஓட்டமாட்டார். இது, முதலாளி குணசேகரின் ஏற்பாடு.

ஒரு நாள் மதியம் இரண்டு மணிக்கு டெலிபோன் மணி அலறியது. கல்லூரிக்குப் போகாமல் வீட்டிலிருந்த மாலினி ஓடிப்போய் எடுத்து தன் காதுக்குக் கொடுத்து, ஹலோ! யார் பேசறது? மாலினி கேட்டாள்.
நாந்தாங்கம்மா முதலாளி ட்ரைவர் பேசறேன்.

ஏன்…. என்ன விசயம்…?

அய்யா, கம்பெனிக்குள்ள ரோலிங் மில்ல சுத்திப் பாக்கும்போது, ஒரு இரும்பு ராடு அவுங்க மேல விழுந்துட்டுச்சிங்கம்மா.

இதைக் கேட்டதும் மாலினி ஷாக்காகி அய்யய்யோ…!

இப்ப எங்க இருக்காங்க? படபடப்போடு கேட்ட மாலினி தன் இயல்புக்கு வந்து இதோ வந்துடுறோம். எந்த ஆஸ்பத்திரி, எனக் கேட்டுக்கொண்டே தன் தாய் வேம்புக்கு விவரம் சொல்ல. அந்த அம்மாவும் மாலினியும் விரைந்து மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது,

குணசேகருக்கு, மூச்சு மட்டும் வந்துகொண்டிருந்தது; தலையில் பலமான அடி; உடல் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

மாலினி அவசரப்பட்டாள். நேராக டாக்டர் அறைக்குச் சென்று விவரங் கேட்டாள்.

டாக்டர், எங்கப்பாவுக்கு என்ன செய்யிது? அவருக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்? கவலையுடன் கேட்டாள் மாலினி.

இங்க பாரும்மா… ஒங்க அப்பாவுக்கு இரும்பு ராடு குத்தி பாதி ரத்தம் வெளியாயிட்டு, அந்த ரத்தத்த ஈடு செய்தாதான் பிழைக்க வைக்கமுடியும். ஒங்க அப்பாவினுடைய ரத்தம் ஓ பாசிட்டிவ். இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த வகை ரத்தம் வேணும். சீக்கிரம் முயற்சி பண்ணுங்க.

இது யாரு ஓ. அம்மாவா…? ஒங்க ரத்தம் எந்த குரூப்பம்மா? பி குரூப்புங்க டாக்டர். சபலத்தோடு சொன்னாள் மாலினியின் தாய் வேம்பு.

அப்போ ஒ…ங்க ரெத்தம் என்ன குருப்புங்க? என்று டாக்டர் மாலினியைக் கேட்க,

என்னுடைய ரத்தமும் பி குருப்புதான் டாக்டர். மாலினியின் பதிலைக் கேட்ட டாக்டர்.

போத் ஆஃப் தெம் நாட் இன் யூஸ். ஒங்க ரெண்டு பேரு ரத்தமும் பயன்படாதும்மா. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.

இதைகேட்ட தாயும் மகளும், மருத்துவமனையில் யார் யாரையோ கேட்டுப் பார்த்தனர். கிடைக்கவில்லை.
குணசேகரன் கார் ட்ரைவர் மாறணும் முயற்சித்தான். கிடைக்கவில்லை.

தீவிர அய்தீகவாதியான வேம்பு அம்மாள் என்ன தம்பி, ட்ரைவர் மாறன், ஒன்னோட ரத்தம் எந்தக் குருப்புப்பா?

எதிர்பாராதக் கேள்விக்குப் பதிலாக, என் ரத்தம் எந்தக் குரூப்புண்ணே எனக்குத் தெரியாதுங்கம்மா. நான் டெஸ்ட் பண்ணியும் பாத்ததில்ல. அதுக்கெல்லாம் எங்கள்ட்ட  பணமும் நேரமும் எங்கம்மா இருக்கு? என தனது வறுமைநிலையைக் கலந்து சொன்னான்.

டாக்டர் சொன்ன நேரமோ நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்படியா? சரி… வாப்பா…! ஒன்னோட ரத்தத்தை டெஸ்ட் பண்ணுவோம். மீதியை பிறகு பேசுவோம் என வேம்பு அம்மாள் சொல்லிக் கொண்டு கார் ட்ரைவர் மாறனை லேப்புக்குக் கொண்டு சென்றார்.

சிறிது நேரம் தாயும் மகளும் லேப்புக்கு வெளியே ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தனர்.

லேப் கதவு திறக்கப்பட்டு டாக்டர் புன்சிரிப்போடு வெளியே வந்து, மாறன் ரத்தம் ஓ.கேம்மா என்றார்.

இதைக்கேட்ட வேம்பு அம்மாள் ஓடிப்போய் கார் ட்ரைவரின் காலில் வீழ்ந்து, தம்பி…! எனக்குத் தாலி பிச்சைக் கொடுப்பா. அய்யாவைக் காப்பாத்து எனக் கதறினாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, மாலினி மவுனமாகவே இருந்தாள். அய்தீகம் பிடித்த அம்மாவா இப்படி இரங்கி வருகிறாள்? என மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டாள்.

கார் ட்ரைவர் மாறன் இளைஞன்; திருமணம் ஆகாதவன்; நோய் நொடியற்றவன். திடகார்த்தமானவன். இருந்தும் என்ன? அவன் தாழ்ந்த ஜாதி, ஏழை.

முதலாளிக்குத் தேவையான ரத்தம் கொடுத்தான்; இல்லை _உயிர்கொடுத்தான்; பிழைத்துக் கொண்டார் முதலாளி குணசேகரன்.

வேம்பு அம்மாளின், இந்து முறைப்படியான பூவும் பொட்டும் நிலைத்தது. ஏன் தாலியுங் கூடத்தான்.
குணசேகரன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஒரே சந்தோஷம் ஊரே மாறனைப்பற்றித்தான் பேசியது. ஆனால் மாலினி…

பிறகு…

பெரிய இடத்திலிருந்து மாலினியைப் பெண் பார்க்க நாலைந்து கார்கள் வந்து நிற்கின்றன. மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். வீட்டிற்கு ஒரே பிள்ளை. கார், பங்களா, நிலம் புலம் எல்லாம் ஏராளம்.
குணசேகரின் வேலையாட்கள் எல்லாம் பம்பரமாகச் சுழன்று வேலைகளைக் கவனித்தனர் மாறனும் அப்படியே.

பெண் புரோக்கர் கேட்டார். முதலாளிவாள் பொண்ண வரச் சொல்லுங்கோ.

சாதாரணமா வரச் சொல்லவா; இல்லே, ஜோடிச்சி வரச் சொல்லவா? இது குணசேகரின் கேள்வி. சாதாரணமாகவே வரச் சொல்லுங்க என்றாள் மாப்பிள்ளையின் தாய் மனோகரி.

இவை எதையையும் கண்டு கொள்ளாமல் மாலினி இருந்தாள்.

பக்கத்தில் நின்ற வேம்புவைப் பார்த்த குணசேகரன்.

போ… மாலினியை வரச்சொல் அன்பாகவே சொன்னார்.

காலையில எட்டு மணியிலிருந்தே, அதுக்குத் தலை வலி. ஜொரம். அது ரூம்ல படுத்திருக்குங்க. தயக்கத்தோட சொன்னாள் வேம்பு அம்மா.

அப்டியா…? சரி… சரி. நீங்க, இன்னொரு நாளைக்கு வாங்க என்று மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து விரக்தியாகச் சொன்னார் குணசேகர்.

சரிங்க… பொண்ண ஆஸ்பெட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. நாங்க இன்னொரு நாள்ல வர்றோம் என மாப்பிள்ளை வீட்டார் சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.

படுத்திருந்த மாலினி ஜன்னல் வழியாகப் பார்த்தாள். மாப்பிள்ளை வீட்டார் இல்லை. தந்தை, முதன்முதலாக, இப்படித் தடையாய் விட்டதே என்று மனதில நினைத்துக் கொண்டு சிந்தனையோடு உட்கார்ந்திருந்தார்; தன் வீட்டில் பகுத்தறிவுப் புயல்மையங்கொண்டிருப்பதை உணராமல்.

மாலினி அறைக்குள் வந்த வேம்பு அம்மாள் ஏம்மா…! தலைவலி எப்டியிருக்கு?

தலைவலி போயிட்டும்மா. எப்பம்மா போச்சு?

இப்பதாம்மா… ஒரு அஞ்சு நிமிசம் இருக்கும். உள் அர்த்தமாகச் சொன்னாள் மாலினி.

ஏம்மா… இப்டி பாசாங்கு போட்ட…? ஆமாம்மா… பாசாங்குதான்.

இப்ப நீ என்ன சொல்ற?- சற்றுக் குரலை உயர்த்திக் கேட்டாள் தாய் வேம்பு.

எனக்கு அந்த பெரிய இடமும், அந்த மாப்பிள்ளையும் வேண்டாம்மா… நிதானமாகச் சொன்னாள் மாலினி.
அப்போ. நீ ஓம் மனசில யாரையாவது நெனைச்சிருக்றீயா?

ஆமாம்மா….!

யார்ம்மா அது? எரிச்சலாகக் கேட்டாள் தாய் வேம்பு.

நம்ம கார் ட்ரைவர் மாறன்தாம்மா! நிதானமாகச் சொன்னாள் மாலினி.

அடிப்பாவி…! எப்டிடி ஒனக்கு இந்த மனசு வந்திச்சி? அவஞ் ஜாதி என்ன? நம்ம ஜாதி என்ன? அவங் குடிசையிலிருக்கிறான். நீ, அப்படியா? ஏன்டி ஒனக்கு இந்த புத்தி? படபடப்பும் ஆவேசமும் தாய் வேம்புவை நிலைகுலைய வைத்தது.

யம்மா… நீயூங் காலேஜில படிச்சிருக்க; அப்பாவும் படிச்சிருக்காங்க. மாறன் தாழ்ந்த ஜாதின்னு இப்பதாம் தெரியுமா? மாறனைக் கட்டிக்கிட்டா, நம்ம சொந்த பந்தம்லாம் நம்ள ஒதுக்கி வச்சுடும்னு நெனைக்கிற. உண்மைதான். ஆனா, இன்னைக்கு நீ… பூவும் பொட்டுமா நிக்றியே அது யாராலங்கிறத நெனைச்சுப் பாரும்மா?

அன்னக்கி, நம்ம சொந்தக்காரனெல்லாம் ரத்தம் கேட்டப்ப, வெலகிப் போய்விட்டான்.

ஒருத்தன் எனக்கு டையபடீஸ்ன்னான் இன்னொருத்தன் பி.பி.ன்னாள். மற்றொருத்தன் ஹார்ட் வீக்னஸ்ன்னான். டாக்டர் சொன்ன ரத்தவகையோ கெடைக்கில. நீயாதான் மாறனை டெஸ்ட் பண்ணலாம்னு சொன்ன. அப்போ மாறனோட ரத்தம்தான் அப்பாவை பொழைக்க வச்சிது.

அந்த கீழ்ஜாதி ஏழை மாறன் இல்லாட்டா, இன்னக்கி நீ விதவையாயிருப்ப, நானும் தகப்பனில்லா பொண்ணாயிருப்பேன். இதையெல்லாம் நெனச்சிப் பார்க்காம ஜாதித்துவேஷம் பேசிறியேம்மா.

மாலினி… ஒன்ன இதுக்குதாம் படிக்க வச்சோமா? பூனை மாதிரி இருந்தியே, இப்ப புலியாட்டம் பாயிறியே. இது ஒனக்கே நல்லாயிருக்கா? வேதனையோடு வேம்பு கேட்டாள்.

அன்னக்கி, மாறன் ரத்தம் கொடுத்தது ஆபத்துக்கான ஒதவி. ஆபத்துக்கு பாவம் இல்ல மாலினி.

இப்படிச் சொல்லித்தாம்மா நாம காலங்காலமா மனிதவர்க்கத்தை பிரிச்சி வச்சிருக்கோம். ஆபத்துக்கு உதவும்போது பாவமில்லேங்கிறது; அப்புறம், தீண்டத்தகாதவன்கிறது. இது என்னம்மா ஞாயம்? மாலினி பட்டிமன்றம் போல் எதிர்க்கேள்வி கேட்டாள்.

இதோ பார் மாலி. இதெல்லாம் நீண்ட காலமா இருக்கு. இதுக்கும் ரத்தம் கொடுத்துக்கும் என்ன தொடர்பிருக்கு மாலினி.

அம்மா அப்பாவின் ஒடம்பில் ஓடியது உயர் ஜாதி ரத்தம் என்பது உங்களின் எண்ணம். ஒங்க கருத்துப்படியே வருவோம். உயர்ஜாதி ஒடம்பில உள்ள இதயம் தாழ்ந்த ஜாதி ஒடம்பில உள்ள ரத்தத்த ஏற்க மாட்டேன்னு ஸ்ட்ரைக் பண்ணிடுச்சா?

இல்லையே; ஏற்றுக் கொண்டதால்தான் அப்பா உயிரோடு இருக்கிறார்? ஒங்க உடம்புல தாழ்ந்த ஜாதி ரத்தம் ஓடுது. அதனால் நீங்க எனக்கு புருஷன் இல்லேன்னு ஒதுங்கிட்டீங்களா?

மாலினி தத்துவமாகவே கேள்விகளைப் போட்டாள்.

எத்தனையோ பேர் ஜாதியில்லை, மதமில்லைன்னு பேசுறாங்க, அவங்கள்லாம் இப்படியா செய்றாங்க? தாய் வேம்புவின் எதிர்க் கேள்வி மாலினியைத் தூண்டியது.

அம்மா, மேட்டுக்குடிமக்கள் அவுங்களுக்குள்ளேயே பெண் எடுத்தும், கொடுத்துங் கொள்கிறார்கள். இதனால் அந்த ஜாதி அமைப்பு அப்படியே இருக்கு. எப்டின்னா? மேட்டை வெட்டி மேட்டிலே போடுறாங்க. அது எப்போதும் மேடாகவே இருக்கும். சமமாக்கனும்னா, மேட்டை வெட்டி பள்ளத்துல போடணும். அப்பதான் சமமாகும். சில போலி சீர்திருத்தவாதிங்க செய்ற மாதிரி, செஞ்சிட்டிருந்தா இன்னொரு ஆயிரம் ஆண்டு ஆனாலும் இந்த சமூக அமைப்பு அப்படியேதானிருக்கும்.

இத மாத்தணும்னா பெண்கள்தான் துணிந்து முன் வரணும்; பெண்கள் நெனைச்சா இந்த ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயத்தையே மாற்றிடலாம்மா.

இப்ப, நீ என்னதான் சொல்ற மாலினி? இறுதியாகக் கேட்டாள் தாய் வேம்பு.

இங்க பாருங்கம்மா…! கார் ட்ரைவர் மாறன் அப்பாவுக்கு வாழ்வு கொடுத்தான். அப்பா ஒங்களுக்கு வாழ்வு கொடுக்கிறார். நான் மாறனுக்கு வாழ்க்கைத் துணையாகிறேன்.

இவற்றையெல்லாம் ஜன்னல் ஓரமாக நின்று கேட்டுக்கொண்டிருந்த குணசேகர் மாலினி ரூம் கதவைத் திறந்து உள்ளே வந்து,

சபாஷ் மாலினி…! சபாஷ். உன் பேச்சு எல்லாத்தையும் கேட்டேம்மா. பழமையெல்லாம் பறந்தோடிப் போச்சு.

எத்தனைக் கோடி பணமிருந்தாலும், உயிர் போன பிறகு என்னம்மா செய்ய முடியும்? அந்த உயரைக் கொடுத்த கார் ட்ரைவர் மாறனுக்கு நன்றிக் கடனாக, அவரை நான் மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறேன்.
இதைக் கேட்டவுடன் தந்தையின் கையைப் பிடித்து மாலினி கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *