நானும் என்னுடைய கழகமும் கடந்த முப்பது ஆண்டுகளாக திராவிட மக்களின் நன்மைக்கெனவே பாடு
பட்டு வருகிறோம். நான் எதையும் எடுத்துக் கூறுகிறபொழுது பிறருடைய சலுகையை எதிர்பார்த்தோ, புகழை எதிர்பார்த்தோ கூறுவதில்லை. என்னுடைய மனதிற்கு நன்மை என்று தோன்றுகிற உண்மைகள் வேறு யாருக்கும் துன்பத்தை உண்டாக்குவதாகவோ, மனத்துயரை விளைவிக்கக் கூடியதாகவோ இருந்தாலும் நான் அவற்றை எல்லாம் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில், நான் அவர்களுடைய தயவை எதிர்பார்ப்பவனல்ல. அவர்களிடம் நான் நல்லவன் என்றோ அவர்களுக்கு நல்ல பிள்ளை என்றோ பெயரெடுத்து அதனால் எந்தப் பதவிக்கும், உத்தியோகத்திற்கும் போக வேண்டிய எண்ணம் எனக்குக் கிடையாது. இன்னமும் கூற வேண்டுமானால், நான் மற்றவர்களிடமிருந்து புகழ் வார்த்தைகள் கூட விரும்பவில்லை. ஆனால், இவ்வித முறையில் மற்ற கட்சிக்காரர்கள் இல்லாததால்தான் அவர்கள் உண்மையை எடுத்துக் கூற முடியாத நிலையில் உள்ளனர். அப்படி என்னைப் போல் அவர்களும் எந்த உண்மையையும் எடுத்துக் கூறினால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது. பார்ப்பனரை ஒழிக்க வேண்டும். சாஸ்திர புராணத்தை எரிக்க வேண்டுமென்று கூறிக் கொண்டு மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்டால் ஒருவராவது ஓட்டுப் போட மாட்டார்கள்.
ஆகவே, அவர்களிடம் ஓட்டுக் கேட்க வேண்டியதற்காகவாவது பார்ப்பனரை ஆதரித்தும், நான் செய்யும் கிளர்ச்சிக்கும், போராட்டங்களுக்கும் எதிராக சிலர் வேலைகள் செய்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் என்னுடைய கழகத்தின் பெயரைக் கூறிக் கொண்டு தேர்தலில் கலந்து கொள்வதில்லை என்றும், ஓட்டுப் பெற்று பாராளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் செல்வதில்லை என்றும் தீர்மானித்துள்ளோம். அப்படி இதுவரை சென்ற எந்தக் கட்சிக்காரர்களாவது நல்ல காரியத்தைச் சாதித்துள்ளனரா? என்பதைப் பார்க்கும் பொழுது, சென்றவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்கென்று பணத்தையும், புகழையும், பெருமையையும் சம்பாதித்தார்களே தவிர, வேறு பொது மக்களுக்கென்று நன்மை ஒன்றும் செய்ததாகக் கூற முடியாது. தன்னுடைய வியாபாரத்துக்கும், கான்ட்ராக்ட் தொழிலுக்கும் லைசென்ஸ்_- பர்மிட் இவை வாங்கவும் மற்றும் பிறருக்கு வேண்டியவைகளைச் செய்கிறேன் என்று கூட அவர்களிடம் லஞ்சம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள சட்டசபைகளிலும், பாராளுமன்றத்திலும் வழிகள் இருக்கின்றதே தவிர, வேறு இவர்களால் எதையும் சாதிக்க முடியாத அளவில் அமைந்துள்ளது. அப்படி ஏதாவது ஓரிருவர் பெரிய காரியத்தைச் சாதித்தார்கள் என்றால் தங்கள் தங்கள் ஜாதிக்கு மட்டும் வேண்டிய ஓரிரு சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.
இப்படி இவர்கள் தங்கள் நலனுக்கென்று மக்களிடம் எதையும் மனம் கூசாது அன்பு வார்த்தைகளால் ஆசையைப் புகட்டி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கிறது. அவர்கள் கூறுவதுதான் உண்மை, அதை அப்படியே நம்பினால் உடனே பலன் கிட்டும் என்றெல்லாம் கூறுகின்றனர்.
இதைப் போன்றுதான் ஆதி முதற்கொண்டே தாங்கள் கூறியவைகளையே நம்ப வேண்டும், ஆராய்ந்து அறியக் கூடாது என்று கூறி, இதுவரை மூட நம்பிக்கையிலேயே ஆழ்த்தி விட்டனர். இன்னமும் ரிஷிகளும், தேவர்களும் கூறியதுதான் சாஸ்திரம், அவர்கள் எழுதியதுதான் புராணங்கள், அவர்களால் உண்டாக்கப்பட்டதுதான் மதம், இதை நம்பினால் தான் மோட்சம் கிடைக்கும், அறிவைக் கொண்டு ஆராய்ந்து எதிர்த்துக் கேட்டால் நரகம் சம்பவிக்கும்” என்று கூறி வந்துள்ளனர்.
ஆனால், நாங்கள் கூறுவதோ எதையும் கூறியவுடன் நம்பிவிடக் கூடாது. ஒவ்வொன்றையும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதுதான் மனிதப் பண்புக்கு ஏற்றது. அதன்படி அறிவுக்கு ஏற்றவைகளின் படி நடக்கக் கோருகிறோம். இவ்விதமான நோக்கங்களைக் கொண்டதால்தான் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த மூட நம்பிக்கைகள் இன்று வெளியாகின்றன. பார்ப்பனர்களின் மதம், சாஸ்திரம், புராணம் இவற்றின் அர்த்தமற்ற கொள்கையும் அநாகரிகப் பழக்க வழக்கங்களும் அம்பலமாகின்றன.
பொதுவாக இராமாயணத்தைப் பற்றி எடுத்துக் கொண்டால் இதுவரை மக்கள் உண்மையாகவே அதை நடந்த கதை யென்றும், கடவுள் அவதாரம் எடுத்த சரித்திரம் என்றும் நம்பி வந்துள்ளனர். ஆனால், அது எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் – அதில் குறித்துள்ளவற்றைக் கொண்டே பார்த்தால் – முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது.
இராமாயணம் சுமார் 13 லட்ச ஆண்டுகள் கொண்ட திரேதாயுகத்தில் நடந்த கதை என்று கூறப்படுகிறது. ஆனால், 13 லட்சம் ஆண்டுகள் கொண்ட அந்த யுகத்தில் 50 லட்சம் ஆண்டுகள் ஆயுளாகக் கொண்ட இராவணன் வசித்தான் என்று கூறப்படுகிறது. நான்கு யுகங்களையும் சேர்த்தால் கூட 50 லட்சம் ஆண்டுகள் கிடைக்காது. அப்படி இருக்க திரேதா யுகத்திற்கு மட்டும் 50 லட்சம் ஆண்டுகள் எங்கிருந்து வந்தது?
அடுத்து இராமாயணம் எழுதப்பட்டது திரேதாயுகத்தில். அதாவது, 25 லட்சம் ஆண்டு-களுக்கு முன் என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இராமாயணத்திலேயே 2,500 ஆண்டுகளுக்கு உட்பட்டு வசித்த புத்தரைப் பற்றிய விஷயங்கள் வருகின்றன. புத்த பிட்சுகளைப் பற்றியும், புத்த ஆலயம் என்ற சொல்லும் வருகின்றன. பாண்டிய அரசர்களைப் பற்றியும், சோழ நாட்டினைப் பற்றியும் வருகின்றன. இப்படி 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் 2,500 ஆண்டுக்குட்பட்ட விஷயங்கள் வருவதற்கு என்ன பொருத்தமுள்ளது? ஆகவே, இந்நூல் பார்ப்பனர்கள் இந்நாட்டிற்கு வந்த பிறகுதான் இதை எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதன்றியும், இக்கதையை ஒருவன் தன் சொந்த மூளையைக் கொண்டு கற்பனை செய்து எழுதப்பட்டதுமல்ல, இப்பொழுது ஒருவர் சினிமாக் கதையை மற்றவர் காப்பியடித்து எழுதி விட்டனர் என்று சண்டை போட்டுக் கொள்வதைப் போல் அப்பொழுதும் வைஷ்ணவர் கதையை சைவர் காப்பி யடிப்பதும் சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து எழுதும் தொழிலில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஆகவே, கந்தபுராணம் என்ற சைவர்கள் கதையை வைஷ்ணவர்கள் காப்பியடித்து அதைத் தழுவியே இராமாயணத்தை எழுதி இருக்கின்றனர். கந்தபுராணம் முந்திய நூல் என்பதற்கும் இராமாயணம் பிந்திய நூல் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. கந்தபுராணத்தின் குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளன. இராமாயணத்தைப் பற்றி கந்தபுராணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
இவை, இரண்டிலும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக 50க்கு மேற்பட்ட விஷயங்கள் தென்படுகின்றன.
ஆரம்பம் முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு கடைசி வரை, பிறப்பு முதற்கொண்டு இறப்பு
வரையிலும், அவற்றில் கூறப்பட்ட ஒப்பாரி முதற்கொண்டு ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக இருக்கிறது. இதை நன்றாக உணர வேண்டுமானால் ஆர்.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘வேலும் வில்லும்’ என்ற ஆராய்ச்சி நூலில் தெளிவுறக் காணலாம்.
இப்படியாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் இதுபோன்ற அர்த்தமற்ற செய்திகளும், பொருத்தமற்ற விஷயங்களும் தென்படுவது மல்லாமல், இராமன் கடவுள் அல்ல; சீதை பத்தினி அல்ல; தசரதன் யோக்கியன் அல்ல; ரிஷிகள் காமப் பித்தர்கள், யாகங்கள் என்பன ஆரியரின் ஆபாச நாகரிகங்களை விளக்கும் சம்பவங்கள் என்பன போன்ற உண்மைகள் விளங்கும்.
(4.3.1955 அன்று விருதுநகர் பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
‘விடுதலை’ 21.3.1955