பெண்கள் உறவுகள் ரீதியில் பார்க்கப்படாமல், தனி நபர்களாகப் பார்க்கப்படவேண்டும். அவர்களால் வருவாய் ஈட்ட முடியும். ஆண்களுக்கு இணையாகக் கருதப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
தீபிகா படுகோனே, நடிகை
சினிமா ஒரு ஊடகம், சமூகப் பொறுப்பு வாய்ந்த ஊடகம். அசட்டுத்தனமாக எதையும் சொல்லிவிடாமல் ஆழமாக சுவையாகச் சொல்ல வேண்டும். – பாலாஜி சக்திவேல், திரைப்பட இயக்குநர்
சுயநலம் என்றால் நேரடியாகத் திருடுவது, லஞ்சம் வாங்குவது என்பவைதான் என பொது வாழ்வின் இன்றைய அகராதி சொல்கிறது. ஆனால் ஒரு பொறுப்பின் அந்தஸ்துக்கான விதிகளை மீறுதல், பொய்களை அவிழ்த்து விடுதல், ஏமாற்றுதல், வரன்முறைகளை மீறுதல் போன்றவற்றாலும் குறைந்தபட்சம் அதே அளவுக்கு விபரீதம் ஏற்படவே செய்கிறது. – எம்.கே.அக்பர், பத்திரிகையாளர், எழுத்தாளர்.
விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந் தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், ஈரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத்துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்! – மக்மல் பஃப், ஈரானிய திரைப்பட இயக்குநர்
சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நகரம் எரிக்கப்பட்டது. அந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒரு காலகட்டம். தமிழ்ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் உருவாகி முளைவிட்ட காலம். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அந்தப் போராட்டத்திற்கு மிகுந்த வேகம் சேர்த்தன. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டம் பல்வேறு சக்திகளாக – வெளிநாட்டு சக்திகள் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட பல்வேறுபட்ட நாடுகளின் துணையுடன் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் போராட்டம் முறியடிக்கப்படவில்லை.
எனவே இன்னும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் இதே மாதிரியான உணர்ச்சி திரும்பி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்புகளை எவ்வளவு தூரம் தூர தரிசனத்தோடும், அறம் சார்ந்தும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். கடந்த முப்பது ஆண்டுகளிலும் இந்த போராட்டத்தினுடைய சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அறம் சார்ந்து நாங்கள் செய்த தவறுகள் என்ன? பொது எதிரிக்கு எதிராகச் சாத்தியமான எல்லா நேர்சக்திகளையும் ஒன்றிணைப்பதில் நாங்கள் வெற்றியடைந்திருக்கிறோமா? ஒரு பன்முகப் பாங்கான கட்சிகளுக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பேணக்கூடிய ஒரு அறம் சார்ந்த முறைகளை நாங்கள் செய்திருக்கிறோமோ? இந்த வகையான சுய விமர்சனத்தை, கேள்விகளை எழுப்பி நாங்கள் அவற்றினிலிருந்து சரியான முறையிலே பதிலையும் ஆய்வுநிமித்தம் நாங்கள் தீர்மானித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் பேச வேண்டியிருக்கிறது. – கவிஞர் சேரன், ஈழ எழுத்தாளர்