தமிழ்நாட்டின் மின்வெட்டுக் காலத்தின் அளவு கோடை நெருங்கும் இக்கால கட்டத்தில், நாளுக்கு நாள் பல மணி நேரங்களுக்கு மேலும் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல தொழிற்சாலைகள், சிறு குறு தொழில் நிலையங்கள் உட்பட வெகுவாக பாதிக்கப்பட்டு, மாணவர்கள் தங்களது தேர்வுக் காலங்களில்கூட, மிகப் பெரும் அவதிக்கு ஆளாகும் வேதனை தொடர்ந்த வண்ணம் உள்ளது!
வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல, கடும் மின்வெட்டு தொடரும் நிலையில் மின்கட்டணத்தை தமிழ்நாட்டில் ஒரே அடியாக லாங்ஜம்ப்போல 37 சதவிகிதம் உயர்வு!
எளிய மக்கள் வீடுகளில் பயன்படும் குறைந்தபட்ச அளவு என்பதேகூட, நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாததால், அவர்களும் பல மடங்கு கூடுதலாக மின் கட்டணம் (உயர்வு) செலுத்த வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும்.
ஏற்கெனவே, விலைவாசி உயர்வு, மத்திய அரசின் மறைமுக வரிகள், சேவை வரிகள், கூடுதல் ரயில் கட்டண உயர்வு – மாநில அரசினால் பால் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, மேலும் சுமார் ரூ.1500 கோடி வரிகள் அதனுடைய தாக்கம் பயனாளிகளான மக்கள்மீதுதான் என்ற நிலை!
பெட்ரோல், டீசல், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணம் எல்லாம் உயரும் நிலை!!
ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் மிகப் பெரிய கேள்விக்குறி. வறுமைக்கோட்டின் அளவு ரூ.22 என்று கூறும் மத்திய திட்டக் குழுவின் தலைவரின் விசித்திர மதிப்பீடு இத்தியாதி! இத்தியாதி!!!
இந்நிலையில், மின்சாரத் திருட்டைச் சரிவரக் கண்காணித்து, தடுத்தல் மிகவும் அவசர – அவசியமாகும்!
மின் திருட்டு ஒருபுறம்!
பிரபல அரசியல் கட்சிகள் கூட்டங்கள், அடர்த்தியாக குழல் விளக்குகள், மின்சாரம் வெளிப்படையாக மின் கம்பங்களுக்கு அக்கட்சிகளால் (ஆளுங்கட்சி உட்பட) எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. விசித்திரமான முரண்பாடு இவை!
மின் உற்பத்தி என்பது ஆறு வழிகளில்தான் செய்ய முடியும்.
(1) புனல் (நீர்) (Hydro) மின்சாரம் (2) அனல் (Thermal) (3) காற்றாலை (4) சூரிய வெப்பம் (5) கடல் அலைகள் (6) அணுசக்தி மின்சாரம்.
இவைகளில் மற்றவைகள் பற்பல காரணங்களால் எளிதில் நமக்குக் கிடைக்காதவைகளாக உள்ளன; சில மிகவும் விலை கூடுதலாக ஒரு யூனிட் தயாரிப்புக்கு ஆவதாக – சாத்தியமற்றதாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் அணுமின்சக்திதான் நம் தேவைக்கேற்ப பூர்த்தி செய்யப் பயன்படும் நிலை.
கூடங்குளம் அணுமின் நிலையம் போதிய பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்று அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளான பொது மனிதர்கள் – நிபுணர்கள் கூறியும் – மலிவான விளம்பரம் தேடும் அரசியல் கூத்துகளால் தேவையின்றி, நமது மின் நெருக்கடி தொடரும் அவலம் ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசும், முதல்வரும் முன்பே இதுபற்றி இந்த முடிவை காலத்தே எடுத்திருந்தால் தமிழ்நாட்டுத் தேவை பெரும் அளவு சரி செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். நடந்த போராட்டங்கள் நம்மை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லும் அழைப்புகளாயின!
முன்பு மத்திய நிபுணர் குழுக்கள் கருத்தை ஏற்கவில்லை போராட்டக் குழுவினர்; பிறகும்கூட மாநில அரசு நியமித்த குழுவினர் அறிக்கையும் அணுஉலை பாதுகாப்பை உறுதிப்படுத்தின!
இப்போது விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத்துவங்கிய நிலையில், சட்டமன்றத்தில் அந்தக் குழுவின் அறிக்கையை முதல் அமைச்சர் வெளியிடுவது அவசியமாகும். அதனால் சுற்று வட்டார மக்களின் அச்சம் அகற்றப்படும்; சுனாமிகள் வந்தால்கூட பாதுகாப்புடன் இயங்கும் என்று சொல்லப்படும் நிபுணர்களின் கருத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.
முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு விடுத்த வேண்டுகோள்: கூடங்குளத்தில் தயாராகும் முழு மின் கொள்ளவும் நமது தமிழ்நாட்டிற்கு (சுமார் 2000 மெகாவாட் மின்சாரம்) மின் வெட்டு சரியாகும் வரை முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது; அதை நாம் ஆதரித்து வலியுறுத்துகிறோம்.
மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களும் இதனை ஆதரித்து பரிந்துரைப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த வாழ்வாதாரப் பிரச்சினை இன்றைய மின்வெட்டு அகற்றல் – தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பதால் அனைவரும் இதனை ஒரு குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
நெய்வேலி மின்சாரத்திலும் கணிசமான பங்கு நமக்கு அதிகம் கிடைக்க வழி செய்தல் அவசரம்.
தேவையற்ற விமர்சனங்களால், காலம் வீணாக்கப்படத் தேவையில்லை; பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால் மின்சாரம் வராது; ஓங்கி ஒலிக்கும் ஒற்றுமைதான், மின்சாரம் முதல் காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படாமல் தடுக்கப்பட உதவக் கூடும்!
எனவே, ஊடகங்களும் தேவையற்ற விமர்சனங்களையும் விவாதங்களையும் தவிர்த்து தமிழ்நாட்டின் வளர்ச்சி, பொது முன்னேற்றம் ஆகியவைகளையே மனதில் வைத்து, ஆரோக்கியமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசரம். அவசியம் என்பது திராவிடர் கழகத்தின் வேண்டுகோளாகும்.
– கி.வீரமணி, ஆசிரியர்