இந்தி எதிர்ப்பு ஈகையர்

2023 மற்றவர்கள் ஜனவரி 1-15, 2023

ல.நடராசன்

இந்தி மொழித் திணிப்பும் அதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டக் களம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது என்பது கண்கூடு. 1938இல் முதன்முதலாக இந்தி திணிக்கப்பட்ட போது அதை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழர்கள் போராட்டக் களம் கண்டனர். அந்தப் போராட்டத்தின் முதற்களப்பலியானவர்தான் ல.நடராசன். போராட்டத்தில் குதித்ததால் 1938இல் டிசம்பர் 5ஆம் நாள் இவர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். சிறைச்சூழல் ஒவ்வாமையால் இவருக்கு முகத்தில் சில பருக்கள் தோன்றின. வீக்கமும் நோவும் உண்டாயிற்று. சிறைச்சாலை மருந்தகத்தில் 5 நாள்கள் இருந்தபின் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 1939இல் ஜனவரி 15ஆம் நாள் மரணமடைந்தார். சிறையில் இருக்கும்போது மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று கேட்டும் இன்னும் பல சலுகைகள் தருவதாக வாக்களித்தும் அதற்கெல்லாம் இசையாது இறுதிவரை உறுதியாக நின்று மொழிக்காக உயிர் ஈந்த தியாகி இவர். இவரை அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம் சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ளது.