அ.தி.மு.க. அணியின் வேதனைகள்

ஏப்ரல் 01-15

கூட்டணி என்றால் பிசினஸ் என்ற விஜயகாந்த் இப்போது என்ன சொல்கிறார்?

கேள்வி : தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் எதிர்காலத்தில் கூட்டு    வைப்பீர்களா?

பதில் : இன்னொரு தலைமையின் கீழ் கூட்டு சேரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை நம்பி கட்சிகள் வந்தால் என் தலைமையில் கூட்டணி அமையும். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். இந்த கூட்டணி பிசினஸ் எல்லாம் வேண்டாம். தனித்தனியேத் நிற்கத் தயாரா? என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

– விஜயகாந்த் பேட்டி (கல்கி 4-10-2009)

கேள்வி : வரும் தேர்தலுக்குள் தமிழக அரசியலில் அணி மாற்றம் நடக்கும் என்கிறீர்களா?

பதில் : கூட்டணி மாற்றம் என்பது பதவி ஆசையால் நடப்பது. ஏன் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுகிறார்கள் என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அ.தி.மு.க. கூட்டணியில் சேரப்போகிறேன் என்றெல்லாம் எழுதினார்கள். நிழலுக்கு மாலைபோட எனக்கு விருப்பமில்லை என்பதை எத்தனை முறை சொல்வது?

– விஜயகாந்த் (குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி 5-11-2009)

இப்படியெல்லம் சொன்ன தே.மு.தி.க. தலைவர் இப்போது கூட்டணி – அதுவும் அ.தி.மு.கவோடு சேர்ந்து தேர்தலில் நிற்கிறார். அதாவது, அவர் வார்த்தையில் சொல்லுவது என்றால் நிழலுக்கு மாலை போடுகிறார் – கூட்டணி

பிசினஸில் ஈடுபட்டுவிட்டார்.


சொல்லுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஊழல் + ஊதாரித்தனம் = ஜெ.

தமிழகத்தின் தலைமைக் கணக்கு அதிகாரி – ஆடிட்டர் ஜெனரல், ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சீர்கேடுகள் பற்றி பரபரப்பான தகவல்கள் அடங்கிய பேட்டி அளித்தார். அதில், இந்தியத் தணிக்கைத் துறை 2001 முதல் 2004 வரை தமிழக அரசின் கணக்குகள், மாநில அரசின் நிதி அலுவல்கள்மீது தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை 31.7.2004 இல் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கிராமச் சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள், அரிசி, பருப்பு கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்ததில் இழப்புகள், தீயணைப்புக் கருவிகள் வாங்கியதில் அலட்சியம் எனப் பல்வேறு முறைகேடுகளைப் பட்டியலிட்டு மூன்றாண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆதாரங்களுடன் அறிக்கையில் கூறியிருந்தார்.
மூன்றாண்டுகளில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு விவரம்:

(கோடிகளில்)

2001-2002    இழப்பு    ரூ.3930.24

2002-2003    இழப்பு    ரூ.2981.59

2003-2004    இழப்பு    ரூ.4713.88

தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரு தணிக்கை அதிகாரி தமிழக அரசு கணக்குப் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கியதற்காக அவர் மீது கண்டனங்களைத் தொடுத்ததோடு, தமிழகத்திலுள்ள ஏடுகளுக்கு மட்டும் விளம்பரக் கட்டணமாக தமிழக அரசு செலவிட்ட தொகை 52 லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய். வடநாட்டில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குச் சேர்த்து மொத்தம் ஒரு கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 100 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

–  தீக்கதிர், 5.5.2006

அன்று ஆடிட்டர் ஜெனரல் குற்றச்சாற்று அ.தி.மு.க. ஆட்சிமீது. அன்று அம்பலப்படுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி; இன்று அதே அ.தி.மு.க.வோடு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி கூட்டாம் – பொரியலாம் – வெண்டைக்காயாம்.


அகந்தை + ஆணவம் = ஜெயலலிதா

கொதிக்கிறார் வைகோ!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாபற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் மானமிகு வைகோ நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதி:

அ.தி.மு.க. கூட்டணியில் நம்பிக்கைக்குரிய தோழமையைக் கடைப்பிடித்து வந்த ம.தி.மு.க.வை முதலில் அழைத்துப் பேசி தொகுதி உடன்பாடு செய்திடவேண்டிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல் திட்டமிட்டே உதாசீனப்படுத்திவிட்டது.

ம.தி.மு.க. நடத்தப்பட்ட விதம் குறித்து மக்கள் மன்றத்தில் எழுந்த விமர்சனத்தால், 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தாயகத்தில் சந்தித்து 12 தொகுதிகளைத் தருவதாக அ.தி.மு.க. தலைமையின் சார்பில் தெரிவித்தனர்.

ம.தி.மு.க.வை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், கட்சியின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்திவிட்டன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினையால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நம்பியது முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது.

அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பின், அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற துளியும் உண்மையற்ற விமர்சனத்துக்கே வழிவகுக்கும்.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க.வுக்கு இல்லை. இந்த ஆண்டு நடக்கவுள்ள தமிழகம், புதுவை சட்டசபைப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை.

– ம.தி.மு.க. தீர்மானத்தின் ஒரு பகுதி (19.3.2011)


 

 

சொல்லுவது தீக்கதிர்!

சிறுபான்மையினரே சிந்திப்பீர்!

இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள் தேர்தலின்போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, இல்லையே! அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே! என்று பதிலளித்ததும், செய்தியாளர்கள், சிறுபான்மைச் சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது, முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் மட்டுமல்ல; கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; பார்சிகள் இருக்கிறார்கள்; புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சமமாக இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே, இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்த சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை என்று பதில் கூறி சிறுபான்மை மக்களான இஸ்லாமிய சமுதாயத்துக்கு எதிரான தனது நச்சுக் கருத்தை வெளியிட்டார் – தீக்கதிர் (23.7.2004).

தமிழகத்தில் மதவெறிச் சக்திகளோடு இணைந்து, மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டு வருகிற ஜெயலலிதா அரசுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் தகுந்த படிப்பினையைத் தேர்தலில் தர முன்வரவேண்டும்.

இந்தச் செய்தியை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மனித நேய மக்கள் கட்சி என்று கூறப்படும் இஸ்லாமியர்களின் கட்சியும் ஜெயலலிதாவைப் போட்டி போட்டுக்கொண்டு ஆதரிக்கின்றன

– எச்சரிக்கை! எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *