நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்ணபுரத்தில்
திரு. இராசகோபாலனார் – திருமதி. மீனாட்சிசுந்தரம் அம்மையார் இணையருக்குப் பிறந்தார். முதுகலைப் பட்டம் பெற்றவர். 1972இல் மதுரைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துப் பாராட்டியது. 1929இல் பட்டுக்கோட்டையில் தந்தை பெரியாரின் பேச்சை முதன்முதலில் கேட்டார். இவர் ஒரு முழுமையான சுயமரியாதைக்காரர்.
1944 இல் குடந்தையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்தினார். பேரறிஞர் அண்ணாவால் நாவலர் என்றும், நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் பாராட்டப்பட்டவர். ‘சுதந்திர நாடு’ ‘மாலைமணி’ என்னும் நாளிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியதோடு ‘மன்றம்’ என்னும் வார இதழை சொந்தமாக நடத்தி கொள்கை பரப்பினார். இந்தித் திணிப்பு மறியல் கிளர்ச்சியில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார். 1967இல் தி.மு.க. ஆட்சி அண்ணா தலைமையில் அமைந்த போது பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார். 1978இல் தமிழ்நாடு அரசின் சார்பாக அமைக்கப்பட்ட பெரியார் நூற்றாண்டு விழாக்குழுவின் தலைவராக மாவட்டந்தோறும் விழாக்களை நடத்துவதில் பெரும்பங்காற்றினார். 1991இல் திருக்குறள் தெளிவுரை நூலை எழுதி வெளியிட்டார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு ‘தமிழ்செம்மல்’ பட்டமளித்துச்சிறப்பித்தது. இத்துணைச் சிறப்புகளுக்குரிய
வரான இச்சுயமரியாதை வீரர் இறுதியாக சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற 2000 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றியது குறி¢ப்பிடத்தக்கது. இத்தகு வரலாற்றுப் பெருமைக்குரியவர் 12.1.2000 அன்று இயற்கையெய்தினார்.