Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பொங்கல் நாள் உறுதி ஏற்போம்!
-முனைவர் கடவூர் மணிமாறன்

பூந்தமிழர் எல்லாரும் உணர்வு பொங்கப்
பூரிப்பாய்க் கொண்டாடும் திருநாள் பொங்கல்!
ஏந்துபுகழ் வரலாற்றை நினைவு கூர்ந்தே
ஏற்றத்தை விழைகின்ற இனிய நாளாம்!
தீந்தமிழை மரபார்ந்த தமிழி னத்தின்
தேன்கனவை நெஞ்சத்தில் தேக்கும் நாளில்
மாந்தநேய நல்லுணர்வால் என்றும் வாழ்வில்
மகிழ்ச்சியெலாம் வலம்வரவே உறுதி ஏற்போம்!

தரணியெலாம் போற்றுகிற தமிழர் மாண்போ
தனிச்சிறப்பாம்! செய்ந்நன்றி மறவாப் பண்பால்
உரத்தநறுஞ் சிந்தனையால் உறவால் நட்பால்
ஒப்பரிய கவின்கலையால் புதுமை நோக்கால்
சிறக்கின்ற தைத்திங்கள் முதலாம் நாளே
செம்மாந்த தமிழாண்டின் தொடக்கம் என்னும்
பரணியினைப் பாரெங்கும் முழக்கம் செய்வோம்
பழியற்ற தமிழ்மாட்சி மீட்சி காண்போம்!

பொறுப்புடனே தொண்டறத்தைக் கற்போம்! இந்நாள்
புகழார்ந்த திராவிடத்தின் ஆட்சி கண்டோம்;
வெறுப்பான அரசியலில் முனைப்புக் கொண்டே
வீண்பழிகள் சொல்வோரை ஒதுக்கிச் செல்வோம்!
அறுக்கின்ற ஒருவனையே நம்பும் ஆடாய்
அழிவுகளைச் செய்வோரை ஏற்க லாமா?
மறுக்கின்ற மடமையிலே புரள்வோர் எல்லாம்
மானத்தை ஏலமிட்டு மகிழ்கின் றார்கள்!

எவருக்கும் தாழ்ந்தவனோ தமிழன் அல்லன்;
இனமானம் தன்மானம் மூச்சாய்க் கொள்வான்;
சுவராக மாற்றாரைத் தாங்கித் தொன்மைச்
சுவடுகளை மறப்பதுவோ? நாளும் நம்மை
அவலங்கள் சூழ்ந்திடினும் எதிர்த்து நிற்போம்;
அயலாரை முதுகினிலே சுமந்து வீணே
உவர்நிலமாய் இருப்பதிலே உவகை உண்டோ?
ஒளிபெறவே பொங்கல்நாள் உறுதி ஏற்போம்!