தத்துவக் கவிஞர் குடியரசு படத்திறப்பு
கி.வீரமணி
29.1.2002 செவ்வாய் இரவு 12:50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நானும் எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும் 30.1.2002 அன்று காலை 7.30 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்தோம். கழகக் கறுஞ்சட்டைக் குடும்பத்தினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவரது செல்வன் பொறியாளர் க. ரங்கராஜ், இலியாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
தோழர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு நேரே பாசரீஸ் பகுதியில் உள்ள இராஜராஜன் _ தமிழ்ச்செல்வி இல்லம் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு மாலை மாறன் _ கவிதா இல்லம் சென்றோம். பின் அங்கிருந்து இரவு 8:00 மணிக்கு, கடந்த மாதம் இயற்கையெய்திய முதுபெரும் பெரியார் தொண்டரும் சிங்கப்பூர் திராவிடர் கழக பிரமுகர் மானமிகு தோழர் முருகு. சீனிவாசன் அவர்களது இல்லத்துக்குச் சென்று, இரங்கல் தெரிவித்தோம். அவரது படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
31.1.2002 வியாழன் முற்பகல் 11:30 மணியளவில் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் முதுபெரும்¢ பெரியார் பெருந்தொண்டரும் சிங்கப்பூர் கழக பிரமுகருமான தோழர் சு.தெ. மூர்த்தி அவர்களின் நலம் விசாரிக்கச் சென்றோம். கழக நூல்களை அவருக்கு அளித்தோம். சு.தெ.மூர்த்தி அவர்களும் அவரது துணைவியாரும், மகன் மதியழகன் மகள் குமுதா ஆகியோரும் சிங்கப்பூர் பெரியார் தொண்டர் தமிழ்மறையான் அவர்களும் எங்களை வரவேற்றனர். அனைவருடனும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு பகல் 12:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம்.
மலேசியா கெடா மாநிலத்தின் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் இரா.ப. தங்கமணி அவர்களின் மகன் சிறீ. ஜெய்சுதாசன் _ செல்வின் ஆகியோரின் இணையேற்பு விழா 2.2.2002 அன்று டேவான் டத்தோ ஹாஜி _ அகமட் படாவி பட்டர்வொர்த் பினாங்கில் நடைபெற்றது. நிகழ்வை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
சிங்கப்பூர் நோரிசு சாலையில் உள்ள தமிழ்ச் சங்கக் கட்டடத்தின் ‘கோல்டு பிங்கர்’ உணவகத்தில் விருந்தளிப்பு நிகழ்வு சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் வை. திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் 3.2.2002 ஞாயிறு இரவு 7:00 மணியளவில் தொடங்கியது. இலக்கியச் சிந்தையாளர் தோழர் இலியாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வரவேற்புரையில் தமிழவேள் சாரங்கபாணி அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்றும் அது தமிழகத்தில் திராவிடர் கழகத்தாலும் அதன் தலைவரான தமிழர் தலைவராலும் தான் முடியும் என்றும் கூறினார்.
நிச்சயம் அந்த விழாவை திராவிடர் கழகம் நடத்தும் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தோம்.
அடுத்து பெரியார் பெருந்தொண்டர் சு.தெ.மூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘சு.தெ.மூர்த்தியும் சிங்கப்பூர் திராவிடர் கழகமும்” என்னும் வரலாற்று நூலை நாம் வெளியிட, நூலினை வளர்தமிழ் இயக்கத்தலைவர் வை. திருநாவுக்கரசு, தோழர் இலியாஸ், தோழர் கிட்டப்பா மற்றும் தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.
சிங்கப்பூரிலிருந்து 14.2.2002 அன்று காலை 10:00 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்னையில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். கழகத் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
யூனியன் வங்கியின் பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச்சங்க அலுவலகத்தை, 14.2.2002 அன்று மாலை 6:30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் எதிரில் உள்ள 3ஆம் மாடிக்கட்டடத்தில் திறந்து வைத்து உரையாற்றினோம். அப்போது ஒடுக்கப்
பட்டோர் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை பேச வைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்றக் குழு தேவை. தனியார் துறையில் இடஒதுக்கீடு அவசியம் போன்ற கருத்துகளை வலியுறுத்தினோம்.
சென்னை தியாகராயர் நகரில் 15.2.2002 அன்று மாலை 6:00 மணிக்கு பெரியார் திசைமுகம் பன்முகத் தோற்றம் ஓவியக் கண்காட்சி தியாகராயர் நகர் மேநிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தந்தை பெரியார் முகங்களை தம் தூரிகைமூலம் தத்துவச் சின்னங்களாகப் படைத்திருக்கும் ஓவியர் புகழேந்தி தமிழினத்திற்குக் கிடைத்த பெரிய செல்வம் என்று பாராட்டினோம்.
சேலம் பொத்தனூரைச் சேர்ந்த மணிவாசகம் _ சவுந்தரம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் _ சுந்தரம் ஆகியோரின் பேரனும் சிவகுமாரன் _ புனிதவதி ஆகியோரின் செல்வனுமான பொறியாளர் ஞானசம்பந்தன் (நியூஜெர்சி _ அமெரிக்கா) தாராபுரம் வெறுவேடம்பாளையம் என். பொன்னுசாமி _ மாணிக்கம் ஆகியோரின் செல்வி பெரியார் செல்வி கவிதா ஆகியோரின் இணையேற்பு ஒப்பந்த விழா திருச்சி ஜென்னிஸ் ரெசிடென்சி திருமண மண்டபத்தில் எமது தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச் செய்து சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினோம்.
உரத்தநாடு ஒன்றியத் தோழர் பூவை உ. முருகேசன் அவர்களின் தந்தையார் உத்திராபதி_ தாயார் தனுசம்மாள் ஆகியோரின் இல்லத்தையும், கல்வெட்டையும் 25.2.2002 அன்று காலை 9:30 மணிக்கு திறந்து வைத்தோம். 11:00 மணிக்கு உ. முருகேசன் அவர்கள் தங்கையும் உத்திராபதி _ தனுசம்மாள் ஆகியோரின் மகளுமான செல்வி உ. ஈஸ்வரி அவர்களுக்கும் கக்கரை வடக்குத்தெரு இரா. சொக்கலிங்கம் _ பானுமதி ஆகியோரின் மகன் சொ. முருகேசன் அவர்களுக்கும் ஆர்.வி. நகரில் உள்ள டி.கே.எம். திருமண அரங்கத்தில் இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
தத்துவக் கவிஞர், சுயமரியாதை வீரர் கவிஞர் குடியரசு படத்திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் 28.2.2002 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்தி
ருந்த அனைவரையும் பெரியார் நூலக வாசகர் வட்ட முன்னாள் தலைவர் மாணிக்கசண்முகன் வரவேற்றுப் பேசினார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றினார். அடுத்து தத்துவக் கவிஞர் குடியரசு படத்தை அவரது குடும்பத்தினர் சூழ, திறந்து வைத்து அவருடைய சிறப்புகளை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையிலுள்ள ‘ரஷ்ய கலாச்சார மய்யத்தில் 1.3.2002 காலை 10:30 மணியளவில் ஓவியர்
மு. இராஜாபரணி வரைந்த ‘அம்மாவின் பொற்காலம்’ ஓவியக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ஓவியர் ராஜாபரணியைப் பாராட்டி சால்வை அணிவித்து ‘மக்கள் ஓவியர்’ என்ற பட்டத்தை வழங்கி சிறப்புரையாற்றினோம்.
சென்னை பெரியார் திடலில் 2.3.2002 அன்று மாலை 6:00 மணிக்கு தென்சென்னை மாவட்ட தி.க. செயலாளர் எம்.கே. காளத்தி அவரின் துணைவியார் கருணா ஆகியோரது 50ஆம் ஆண்டு மணவிழா நிறைவு மற்றும் எம்.கே. காளத்தி அவர்களின் 73ஆம் ஆண்டு பிறந்த
நாள் விழா ஆகிய நிகழ்ச்சிகள் திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி சிறப்புரையாற்றினோம்.
10-.3.2002 ஞாயிறன்று காலை 9:00 மணிக்கு திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழுத் தலைவர் சிதம்பரம் கு. கிருட்டினசாமி அவர்களின் பெயரனும் சி. திருநாவுக்கரசு _ தி. பானுமதி ஆகியோரின் செல்வனுமான தி.லெனின் கும்பகோணம் மேலாத்துக்குறிச்சி மு. நல்லப்பன் _ சகுந்தலா ஆகியோரின் செல்வி ந. உஷா இணையேற்பு விழா சிதம்பரம் தனலட்சுமி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச்செய்து, நிறைவாக சிறப்புரையாற்றினோம்.
பாபநாசத்தில் 10.3.2002 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் உரத்த நாடு வட்டம் ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த எம். ராசப்பா _ டி. பரமேஸ்வரி ஆகியோர் இணையேற்கும் நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றினோம்.
இம்மாநாட்டில் எனது எடைக்கு எடை நாணயம் ரூ.9994 பைசா 50 நாகம்மையார் குழந்தைகள் காப்பக வளர்ச்சிக்கு அளிக்கப்-பட்டது.
11.3.2002 அன்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் நடைபெற்ற, பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் ஆண்டு விழாவின்போது ‘பெரியார் களஞ்சியம்’ தொகுதிகள் அடங்கிய குறுந்தகடு(சி.டி.)யினை வெளியிட்டோம். மாவட்ட ஆட்சித் தலைவர் கோசலராமன் பெற்றுக்கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டை நாட்டு முத்து(நாயக்கர்) தெருவில் உள்ள தந்தை பெரியார் பெருந்தொண்டர் சென்னை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் டி.எம். சண்முகம் அவர்களுடைய துணைவியார் மறைந்த குணபூசனம் அவர்களது நினைவு கல்வெட்டை 14.3.2002 அன்று மாலை 6:30 மணிக்கு திறந்து வைத்து, திராவிடர் கழகக் கொடியையும் ஏற்றிவைத்து இரங்கலுரையாற்றினேன்.
நெல்லையிலுள்ள தச்சநல்லூரில் 17.3.2002 ஞாயிறு காலை 10:30 மணிக்கு சிறீதேவி திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட தி.க. செயலாளர் மு. சங்கரலிங்கம் _ சண்முகம் அம்மாள் ஆகியோரின் மகள் ச. மலர்க்கொடி புளியங்குடி கோமதி நாயகம் மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகன் கோ. கணேசமூர்த்தி ஆகியோரின் வாழ்விணையர் ஏற்பு விழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
அன்னை மணியம்மையார் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா_ விதவையர்க்குப் பூச்சூட்டும் விழாவாக 20.3.2002 இரவு 7:00 மணிக்கு வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுலோசனா சம்பத் அவர்களும் நாமும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்காக எனது எடைக்கு எடை நாணயம் ரூ.10,000/-_ வழங்கப்பட்டது. விதவையர்க்குப் பூச்சூட்டும் விழாவும் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருவாதிரை மங்கலம் கு. செல்வமணி _ தனநாயகி ஆகியோரின் மகன் செ. வீரமணிக்கும் பாப்பா கோயில் கோ. அன்புசேகரன் _ தனலக்குமி ஆகியோரின் மகள். அ. கவிதா ஆகியோரின் வாழ்விணையர் ஏற்பு நிகழ்வை திருவாரூர் கிழக்கு வீதி அம்மாளு அம்மாள் திருமண அரங்கத்தில் 24.3.2002 அன்று காலை 9:00 மணியளவில் நடத்திவைத்து சுயமரியாதை திருமணத்தின் தேவையை, சிறப்பை விளக்கிக் கூறினோம்.
காலை 10:00 மணியளவில் நாகை மாவட்டம் சிக்கல் ஒரத்தூர் எம். ஜெயராமன் அவர்களின் மகள் ஜெ. ஆனந்தவள்ளிக்கும் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் வை. வரதராசன் அவர்களின் மகன் வ. இராசராசனுக்கும் சிக்கல் வடக்குவீதி வி.பி.எஸ். தேவி திருமண அரங்கில், வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தோம்.
திருமண மண்டபத்திற்குச் செல்லும்முன் சிக்கல்- _ நாகை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெ. கோவிந்தராசு நினைவுக் கொடிக் கம்பத்தின் கல்வெட்டினைத் திறந்து வைத்து, கழகக் கொடியினையும் ஏற்றிவைத்தோம்.
அன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சை புதிய வீட்டு வாரிய குடியிருப்பு குறிஞ்சித் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் படிப்பகம் சுயமரியாதை பிரச்சார நிறுவன புத்தக விற்பனையகத்தைத் திறந்து வைத்தோம். படிப்பகத்திற்கு நாளிதழ் மாத, வார இதழ்களை நன்கொடையாக வழங்கிய பெருமக்களுக்கும் சிறந்த வகையில் பொதுத் தொண்டாற்றக் கூடிய பொதுமக்களுக்கும் சால்வை அணிவித்தும் புத்தகங்களை வழங்கியும் பெருமைப் படுத்தினோம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்களுக்கு புத்தகங்களை வழங்கினோம்.
அன்றைய பெரியார் மகளிர் மன்றம் (பவர்) கழக மகளிரணி ஒருங்கிணைப்பாளரும் இன்றைய கொள்கை பரப்பு செயலாளருமான வழக்குரைஞர் அருள்மொழி அவர்களின் அலுவலகத்தை 25.3.2002 அன்று திறந்து வைத்து அவர் தொழில் சிறக்கவும், சாதனை படைக்கவும் ஊக்கமளித்து உரை நிகழ்த்தினேன்.
காஞ்சிபுரத்தில் 28.3.2002 அன்று முற்பகல் 11:00 மணிக்கு காஞ்சிபுரம் பெரியார் நகரிலுள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் வணிகவியல் மன்ற ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நாம் கலந்துகொண்டு மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினோம். பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் இரா. தாண்டவன் அவர்கள், “அறிவுச்சுடர் கி. வீரமணி’’ எனும் விருதை (நினைவுக்கேடயம்) எமக்கு வழங்கிச் சிறப்பித்தனர்.
தஞ்சையில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பில் 29.3.2002 அன்றுநடைபெற்ற கூட்டத்தில் எமக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கழக துணைப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி உதவிப் பொதுச்செயலாளர் வரதராசன் தஞ்சை கு. வடுகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
7.4.2002 அன்று காலை 10:00 மணியளவில் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை அவர்களின் மகன் டாக்டர் ஜி.எஸ். குமார் அவர்களின் முயற்சியால், செலவால் கட்டப்பட்ட ஜி.எஸ். மய்யத்தை தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும், பெரியார் படிப்பகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களும் தந்தை பெரியார் சிலையை நானும் திறந்து வைத்து உரையாற்றினோம்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் தேன்மொழி, தமிழ்நாடு மின்வாரியத்தில் ஆக்க முகவராகப் பணிபுரியும் ஆ. சுப்பையா ஆகியோரின் மகன் சு. அன்பரசனுக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மிதிலைப்பட்டி சுப்ரமணியன் _ பொன்னம்மாள் ஆகியோரது மகள் சு. கிருஷ்ணவேணிக்கும் இணையேற்பு ஒப்பந்த விழாவை 5.5.2002 அன்று முற்பகல் 11:00 மணிக்கு புதுக்கோட்டை பி.வி.ஆர். திருமண மண்டபத்தில் நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் படிப்பகத் திறப்பு விழா மற்றும் பிலேமினாள் ரத்தினம் அவர்களுக்குப் பாராட்டு விழா, அகரப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் வீ. மாமுண்டி நினைவரங்கத்தில் 15.5.2002 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. அதற்கு முன்னதாக திருக்காட்டுப்பள்ளியில் கல்வெட்டினைத் திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தோம். தொடர்ந்து படிப்பகத்தைத் திறந்து வைத்து பிலேமினாள் ரத்தினத்தைப் பாராட்டி உரையாற்றினோம்.
திருவையாறு கீழவீதி சாமி சன்னதி அருகில் 16.5.2002 அன்று கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட மேடையில் நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சி நிதிக்கு எனது எடைக்கு எடை நாணயம் ரூ.10,000/-_) வழங்கப்பட்டது. கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக திருப்பழனம் கலியபெருமாள் _ நீலாவதி ஆகியோரின் மகனும் திருச்சி திராவிடன் புத்தக நிலையத்தில் பணிபுரிபவருமான க. இராவணனுக்கும் குடவாசல் பரமானந்தம் _ தமிழரசி ஆகியோரின் மகள் அன்பரசிக்கும் விழா மேடையிலேயே வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த நிகழ்வு எமது தலைமையில் நடந்தது. நிறைவாக சுயமரியாதைக் கருத்துகளை விளக்கிச் சிறப்புரையாற்றினோம்.
தஞ்சை மாவட்டம் திருச்சேறையைச் சேர்ந்த அ. கணபதி மற்றும் ஆதி ஆகியோரின் மகன் க. செல்வத்துக்கும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா.ம அருமைமணிக்கும் குடவாசல் மகாலட்சுமி மாணிக்கம் நடுநிலைப்பள்ளியில் இணையேற்பு ஒப்பந்தவிழா 17.5.2002 அன்று நடைபெற்றது.
நிறைவாக சுயமரியாதைக் கருத்துகளைக் கூறி உரையாற்றினோம்.
நாகை மாவட்டம் சிக்கலில் வி.பி.எஸ். திருமண அரங்கில் 17.5.2002 அன்று சோ. மாரிமுத்து _ தமிழரசி ஆகியோரது செல்வன் வீரமணிக்கும் மன்னார்குடி அம்பிகாபதி ஆகியோரின் செல்வி சுதாவுக்கும் இணையேற்பு நிகழ்வுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்து சுயமரியாதைத் திருமணத்தின் அவசியம் பற்றி விளக்கி உரையாற்றினோம்.
திருநெல்வேலி மாநகர திராவிடர் கழக அமைப்பாளர் பா. மாரியப்பன்(பாமா) _ எம்.ஆதிலட்சுமி ஆகியோரின் செல்வி மணியம்மைக்கும் வீரவநல்லூர் எஸ். சுந்தரம் அவர்களின் செல்வன் எஸ்.குமாருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 19.5.2002 அன்று தச்சநல்லூர் சிறீதேவி மணவிழா மண்டபத்தில் எமது தலைமையில் நடைபெற்றது. நிறைவாக சுயமரியாதைக் கருத்துகளை எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
அன்று இரவு 7:00 மணிக்கு புள்ளம்பாடி கடைவீதியில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டமும் எமது எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் எடைக்கு எடை நாணயத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினோம்.
புதுக்கோட்டை மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் புலவர் பா. வீரப்பன் _ வீர.வசந்தா ஆகியோரின் மகன் வீர. தமிழ்ச்செல்வன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் க. நல்லாண்டி _ ந. மகாலட்சுமி ஆகியோரின் மகள் ந. ரேவதி ஆகியோரின் வாழ்விணையர் ஏற்பு ஒப்பந்த விழா 26.5.2002 அன்று காலை 10:30 மணிக்கு பனையம்பட்டி கே.எம்.பி.எல்.வி. திருமண மண்டபத்தில் எமது தலைமையில் நடைபெற்றது. மாலை மாற்றிக்கொள்ளச் செய்து உறுதிமொழியைக் கூறச்செய்து தாலி இல்லாத் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்..
ஆண்டிமடத்தில் 1.7.2002 அன்று திங்கள் மாலை 5:00 மணிக்கு கடைவீதி பெரியார் திடலில் சுயமரியாதைச் சுடரொளி புதுக்குடி அ. சிவசாமி நினைவரங்கத்தில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியைத் தொடர்ந்து எமக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. நிறைவாக கழகக் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் விளக்கிச் சிறப்புரையாற்றினோம்.
சேலத்தில் இளைஞரணி மாநில மாநாடு 6.7.2002 அன்று நடைபெற்றது. பேரணி _ சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே துவங்கி பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அண்ணாநகர் வீட்டு வசதி வாரியம் வழியாக போஸ் மைதானம் வந்தடைந்தது. தந்தை பெரியார் சிலை அருகே பேரணியை நாம் பார்வையிட்டோம். போஸ் மய்தானத்தில் சீருடையுடன் அணிவகுத்து நின்ற ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் ‘பெரியார் நெறிகள் பத்து’ எனும் உறுதிமொழிகளை ஏற்கச் செய்தோம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பது உட்பட 11 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக இயக்கச் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினோம்.
பட்டுக்கோட்டை மாவட்டம் வடசேரியில் 11.7.2002இல் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநாட்டில் எமக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. அவ்வூரில் பெரியார் நூலகத்தையும் திறந்துவைத்தோம். மாநாட்டின் நிறைவில் கொள்கைகளை விளக்கி உரையாற்றினோம்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 12.7.2002 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தின் அருகில் கே.என். பெருமாள் நினைவரங்கத்தில் கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியின் இன எழுச்சி மாநாடும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பக நிதிக்காக எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு எமது எடைக்கு எடை நாணயத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினோம்.
திருச்சியில் 14.7.2002 ஞாயிறு காலை 10:00 மணிக்கு மேலவாளாடி இராசகோபால் _ சந்திரா ஆகியோரின் மகன் இரா. விவேகானந்தனுக்கும் (மாவட்ட இளைஞரணி தலைவர்) பூவாளூர் காளிமுத்து -_ இந்திராணி ஆகியோரின் மகள் கா. திலகவதிக்கும் திருச்சி டோல்கேட் சீனிவாசா திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழா எமது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மணமக்களை உறுதிமொழி ஏற்கச்செய்து மாலை மாற்றிக்கொள்ளச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.
அன்று மாலை மணப்பாறை தாதக்கவுண்டன் பட்டி பெரியார் பெருந்தொண்டர் வி.எஸ். உலகநாதன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படத்தைத் திறந்து வைத்து, வி.எஸ். உலகநாதன் அவர்களின் கழகப் பணி பற்றியும் அவர்களது குடும்பத்தினர் அனைவருமே கழகக் கொள்கையில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு உழைத்துவருவதையும் குறிப்பிட்டுச் சிறப்புரையாற்றினோம்.
இராமநாதபுரம் மாவட்டம் தொருவளூரில் 15.7.2002 அன்று மாலை 5:00 மணிக்கு தொருவளூர் பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி ரா. சுந்தர்ராசன் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தைத் திறந்து வைத்து அன்னாரின் சிறப்புகளை நினைவு கூர்ந்து உரையாற்றினோம்.
கோவையில் 20.7.2002 சனி அன்று காலை 10:00 மணிக்கு திருச்சி சாலை சிங்காநல்லூரில் ரங்காமகால் திருமண மண்டபத்தில் கோவை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கோவை மாவட்ட தி.க. தலைவர் பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு. இராமசச்ந்திரன் அவர்களின் பவள விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.
சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய மத்திய வளாகத்தில் 24.7.2002 அன்று தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினோம். எண்ணூர் அனல் மின் நிலையத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் (8) சார்பில் எமக்குச் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அய்தராபாத் பப்ளிக் கார்டனில் 26.7.2002 அன்று மாலை நடைபெற்ற சாகுமகராஜின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “நூற்றாண்டு கால இடஒதுக்கீடு_ ஓர் ஆய்வு’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியக் குடியரசுக் கட்சி ஆந்திர மாநிலக் கிளையின் இடஒதுக்கீட்டு ஆய்வுக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கினை துவக்கி வைத்து,
சமூகஅநீதி என்பது ராமாயணத்தில் சம்பூக வதையிலேயே துவங்கி விட்டதையும் வெறும் ஒரு நூற்றாண்டுக் காலமாகத்தான் சாகுமகராஜ் ஊடாக நமக்குக் கிடைத்துள்ள இந்தக் குறுகிய கால சமூக நீதியையும் தட்டிப் பறித்திட லிறிநி எனப்படும் Liberalisation, Privatisation, Globalisation என்ற புதிய ராமாவதார வஞ்சக வலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி நமது நண்பர்களை இனம் கண்டு அரவணைத்துச் செயல்படுவதுடன் எதிரிகளை அடையாளங்கண்டு புறக்கணிக்கத் தயங்கக் கூடாது என்ற மய்யக் கருத்துடன் கூடியதாக ஆங்கிலத்தில் துவக்கவுரையாற்றினோம். 25.12.2002 அன்று அய்தராபாத்தில் இதே ஆய்வுக்குழு அமைப்பின் சார்பில் நடைபெற இருக்கும் மனுதர்ம எரிப்புப் போரை திராவிடர் கழகம் ஆதரிப்பதாகவும் நாமும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளப்போவதாகவும் பலத்த கைதட்டலுக்கிடையில் அறிவித்தோம்.