பெரியார் பேசுகிறார் ! மூட நம்பிக்கைகளை மாய்த்து மனிதத் தன்மையை வளர்க்கவும்

2023 பெரியார் பேசுகிறார் ஜனவரி 1-15, 2023

தந்தை பெரியார்

இது பகுத்தறிவுக் காலம்; புரட்சி யுகமாகும்; மூட நம்பிக்கைகள் சரிந்து பகுத்தறிவுக் கொள்கைகள் மலை போல வளரும் காலம் இது என்று குறிப்பிட்டு, அதற்குப் பல உதாரணங்களையும் எடுத்துச் சொன்னார்கள். அவதார புருஷர் வாக்கு, ரிஷிகள் வாக்கு, ராமன் வாக்கு என்பதெல்லாம் காற்றில் பறக்கின்றன. பிரபு வந்து சொன்னாலும் கோவிலை இனி எவனும் கட்டமாட்டான். இருக்கிற கோவில் போதும்; பள்ளிக்கூடம். ஆஸ்பத்திரி கட்டு என்றுதான் சொல்வான். இது புரட்சி யுகம் என்பதற்கு சக்கரவர்த்திகள், சமஸ்தானாதிபதிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.
இத்தகைய புரட்சிக் காலத்தில் நம்மை அதற்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம். நாம் காட்டுமிராண்டிக் கொள்கைகளைக் கட்டி அழுது கொண்டிருத்தலாகாது.

தென்னாப்பிரிக்கா. இலங்கை, மலாயா முதலிய நாடுகளுக்கு எல்லாம் தமிழர்கள் சென்றது ஏன்? பிறந்த நாட்டில் அவர்கள் சூத்திரர்களாக, இழிமக்களாக ஆக்கப்பட்டதுதானே காரணம்? அந்தச் சூத்திரப் பட்டம் ஒழிந்து நம்மவர்களை மனிதராக்கத்தான் பாடுபடுகிறோம்.
திருக்குறளின் சிறப்புப் பற்றிப் பேசுகையில், “ஆயிரம் தடவை இராமாயணம் படிப்பதும் சரி; ஒரு தடவை திருக்குறள் படிப்பதும் சரி. இராமாயணத்தில் 100 பாடல் படிப்பதும் சரி; குறளில் ஒரு பாட்டு படிப்பதும் சரி. இராமாயணத்தால் அறிவு மழுங்கும்; குறள் படிப்பதால் அறிவு பெருகும்’’ என்றார்.
மக்களுடைய ஒழுக்க நெறியை வகுத்து மேன்மைப்படுத்துவது குறள் என்றார். மேலும் கூறுகையில், என்னைப் பணக்காரன் என்று சிலர் நினைக்கிறார்கள்; எனக்கு ஒன்றுமில்லை; இருக்கிற பணம் எல்லாம் இயக்கத்திற்குத் தான். எனக்கு ஒரு காசு கூட கிடையாது.
(27.12.1954 அன்று சிரம்பான் (மலாயா) பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் உரை
– ‘விடுதலை’, (2.1.1955)

பகுத்தறிவு ஒன்றே மனிதரின் சிறப்புக்குச் சான்று
‘அறிவு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் முதல் மனித சமுதாயம் வரை அறிவு என்பது பொதுவாக உள்ளது. ஆனால், இந்த அறிவானது அதனதற்கு வேண்டிய வாழ்க்கையைக் காப்பாற்ற மட்டும் வேண்டிய அளவு இயற்கையால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
மனிதன் தன்னைக் காப்பாற்ற மட்டும் போதிய அறிவை அடைந்து, அதற்கும் மேற்பட்ட அறிவையும் அடைந்திருக்கிறான். அப்படி அதிகமாக அடைந்துள்ள அறிவு தான் பகுத்தறிவு என்று சொல்லப்படுகிறது. மேன் மேலும் எதையும் ஆராய்ந்து அதன் பயனாக விஞ்ஞானத் துறையில் தன் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிகிறது. பண்டைய காலத்தில் காட்டுமிராண்டிகளாகவும், நாகரிகமற்றவர்களாகவும் வாழ்ந்த மக்கள் இன்றைய தினம் மின்சார சாதனங்களையும், வைத்திய சாதனங்களையும் மற்றும் பலவிதங்களிலும் பயன்படுத்திக்கொண்டு மேன்மேலும் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால், மனித சமுதாயமல்லாத மற்ற மிருகங்கள் போன்ற ஜீவராசிகள் அப்பொழுது எப்படி வாழ்ந்தனவோ, அதேபோல் தான் இப்பொழுதும் வாழ்ந்து வருகின்றன. இதுதான் மனிதனுக்கும், மற்ற ஜீவனுக்கும் உள்ள வித்தியாசம்.
இதன்றி, எவனொருவன் பண்டைக் காலத்தில் உள்ள வாழ்க்கையையே மேற்கொண்டு கால மாறுதலுக்கு ஏற்றாற்போல் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லையோ, அவனுக்கும் மற்ற மிருக ஜாதிகளுக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. தொன்றுதொட்டுக் கையாண்டு வருவதையும், இதுதான் என்னுடைய மதத்தின் வழக்கம். சாஸ்திரத்தின் விதி என்று அநாகரிக ஆபாசங்
களைக் கடைப்பிடிப்பவனையுமே பகுத்தறிவு இல்லா ஜீவனுக்கு ஒப்பிடலாம். ஆகவே, பகுத்தறிவின் மேன்மை தெரிந்தவன் இதைப் புறக்கணிக்க மாட்டான்.

ஆனால், இந்நாட்டில் பகுத்தறிவுக்கு இடமளிக்காதவர்களும் எதையும் அறிவினால் ஆராயக் கூடாது என்று கூறுகிறவர்களும் பார்ப்பனர்கள்தான். அவர்கள் கூறுகிறவற்றையே நம்ப வேண்டும். அவற்றின் பித்தலாட்டங்களைக் கண்டித்துக் கேட்கக்கூடாது என்றும், உண்மையறிந்து அதன் வழியில் நடக்கக் கூடாது என்றும் கூறுகிறவர்கள் பார்ப்பனர்கள் தான். காரணம், அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உண்மையை மறைத்து, பொய், பித்தலாட்டங்களுடன் வாழ்ந்தவர்கள்.

இன்றைய தினம் உண்மையை எடுத்துரைத்தால் அதனால் அவர்கள் வாழ்வதற்கே வழி இன்றிப் போய்விடுகிறது. உண்மையைக் கூறி வாழ முடியாதவர்கள் நேர்மையான முறையில் எதையும் செய்ய முடியாத ஏமாற்றுக்காரர்கள், இவர்களே அயோக்கியர்களின் பட்டியலில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள். இப்படிப்-பட்டவர்கள் இருப்பதால்தான் நம்மக்கள் பகுத்தறிவுக்குப் போதிய சுதந்திரம் கொடுக்க முடியாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியாமையில் மூழ்கி, பார்ப்பனர்களின் அடிமைகளாகவே வாழ்கின்றனர். எனவேதான், என்றைக்கு பார்ப்பனர்கள் இந்நாட்டை விட்டு அகற்றப்படுகிறார்களோ, அன்றுதான் நம் மக்கள் சுதந்திரமுடையவர்களாக ஆக முடியும்.
(திருப்பத்தூர் (வ.ஆ) பகுத்தறிவு மன்றத்தின் சார்பாக 9.2.1955 ‘நியூ’ சினிமா கொட்டகையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை
– “விடுதலை” 14.2.1955)