தமிழர்களின் பொற்காலம்!
9.8.1973 – அன்று விடுதலையில் பெண் அடிமை குறித்து விரிவான தலையங்கம் எழுதினேன். அதில், பெண்களைப் பலவீனமான பிரிவினர் (Weaker Sex) என்று அழைப்பது பொருந்தாக் கூற்று. அவர்களுக்கு இரும்புச் சதையும், எஃகு நரம்பும் உண்டு. உடற்கூறு அமைப்புப்படிப் பார்த்தாலும்- அல்லது வேறு எந்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தாலும்கூட இக்கூற்று ஏற்கப்பட முடியாத ஒன்றேயாகும். இன்று பெண்கள் ஆண்களுடன் சரிநிகர் சமமாக எல்லாத் துறைகளிலும் போட்டியிட்டு முன்னேறுகிறார்கள்! உடல் பலத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பல பணிகளிலும்கூட பெண்கள் இன்று வெகுவாக ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். விமானம் ஓட்டுபவர்களில், நவீன என்ஜின்களையும், இயந்திரங்களையும் இயக்குபவர்களாகவும் பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்! போலீஸ் துறைக்கும்கூட பெண்கள் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது! இந்நிலையில், பெண்களைப் பலவீனமான பிரிவினர் என்று அழைப்பது எப்படிப் பொருத்தம்?
இன்று ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டும்கூட, பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி அவர்களது அந்தஸ்து இதே நிலையில்தான் இருக்கிறது! இதற்கு அடிப்படைக் காரணங்கள், இன்னமும் பழைய பத்தாம்பசலித்தனமான எண்ணங்களும், பழைமை மனப்பான்மையும், சம்பிரதாயங்களும், குரோத உணர்வுகளும்தான். பெண்களின் உணர்வுகளை மதிக்காது – புரிந்துகொள்ளாது பெண் என்பவர் ஒரு தனித்தன்மையுடையவர் என்பதையே ஒப்புக்கொள்ளாத நிலைதான் ஏற்பட்டுள்ளது!
பெண்ணினத்தின் வேலை சமுதாயத்தைத் திருத்தவேண்டும்; மாற்ற வேண்டும். பகுத்தறிவு அடிப்படையில் பேதமற்ற ஒரு சமவாய்ப்பு, சமத்துவ சமுதாயம் உருவாக உழைப்பதுதான். இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் நேற்று சென்னையில், எழும்பூரில் பெண்கள் முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டும் ஓர் கண்காட்சியினைத் தொடக்கிவைக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளில் ஆழ்ந்து ஊறித் திளைத்தவர், தந்தை பெரியார் அவர்களது சமுதாயப் புரட்சிக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் என்ற காரணத்தால், எங்கும் மிகவும் கொள்கைத் தெளிவோடும், உறுதியோடும் பேசி வருபவர் அம்மையார் ஆவார்! பெண்கள் உரிமை, பெண்கள் விடுதலை என்பதைப் பேசுகையிலும்கூட, கடந்த 40,50 ஆண்டுகளாக நமது இயக்கம், நமக்கு விழிதிறந்த வித்தகர், தந்தை பெரியார் அவர்கள் என்னென்ன கொள்கைகளைக் கூறி வந்துள்ளார்களோ அதனையே மிகவும் தெளிவுடன் மேற்காட்டிய வகையில் அமைச்சர் அம்மையார் அவர்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்!
நம்நாட்டில் ஜாதி ஒழிவது என்பது எவ்வளவு கடினமான பணியோ, அதே போன்றதுதான் பெண்ணடிமை ஒழிவது என்பதும்கூட! இவ்விரண்டிற்கும் மொத்தப் பொருத்தம் உண்டு. ஜாதியில் யார் கீழான மக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த மக்களே, அந்தக் கொடுமையான ஏற்பாட்டினை மனமுவந்து ஏற்கும்படிச் செய்யப் பழக்கப்பட்டுவிட்டனர்; பெண்ணடிமையும் அதே போல்தான்! மோட்சம் என்பதும், மறுஉலக ஆசை என்பதும் இந்த இரண்டும் அடிமைகளையும் ஊமையாக்கும் மந்திரக்கோல் போன்றதாகும். ஜாதி என்பது பிராமணன் – சூத்திர -பஞ்சம பேதத்தைக் கட்டிக்காக்கக் கண்டுபிடிக்கப்பட்ட ஏற்பாடு.
திருமணம் என்பது ஆண் என்ற எஜமானன் பெண் என்ற அடிமையை ஏற்கச்செய்யும் ஏற்பாடு. இரண்டும் பிறவியில் ஒருமுறை ஏற்பட்டால் மாற்றப்பட முடியாதது. இரண்டும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருப்பதும், கடவுள், மத, சாஸ்திர புராண ஏற்பாடுகள் மூலமாகவே ஆகும்! இந்நிலையில் ஜாதியை ஒழிக்கவோ, பெண்ணடிமையை ஒழிக்கவோ முன்வரும் எவரும் மதத்தில்- சாஸ்திரத்தில்- _ பழைமையில்- _ சடங்கில் கை வைக்காமல் சீர்திருத்தம் பேசினால், அது ஒன்று அறியாமை, அல்லது பித்தலாட்டம்!
நமது படித்த பெண்கள் என்பவர்களும்கூட, பெண்ணுரிமை பேசிக்கொண்டே பழைமையைக் கட்டி மாரடித்துக்கொண்டிருப்பதில் இன்னமும் பிடிவாதம் காட்டுகின்றனர்! அக்கருத்தரங்கில் அம்மையார் பேச்சு, நோய் நாடி நோய் முதல் நாடுவதாக அமைந்தது என்பது பெருமைப்படத்தக்க உண்மை. ஆனால், பகுத்தறிவுக் கொள்கை என்றால் எட்டிக்காய், வேப்பங்காய் என்று நினைக்கக்கூடிய சில பெரிய இடத்துப் பெண்கள் என்ன பேசியிருக்கிறார்கள், “Preservation of our Traditions and Cultural Heritage was Stressed”. நமது கலாச்சாரம், பாரம்பரியம், பழைமைகள் இவற்றை நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்!
பெண்களுக்கு இம்மாதிரிப் புத்தியிருந்தால் அவர்கள் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் விடுதலை பெறவே முடியாது! அவர்களுக்கு விளங்க வேண்டாமா? அவர்களை இந்த அடிமை நிலைக்கு ஆளாக்கியதே நமது புராணக் கலாச்சாரமும், சம்பிரதாயங்களும்தானே!
நமது புராதனக் கலாச்சாரத்தையும், பழைமைச் சம்பிரதாயங்களையும் போற்றிப் பாதுகாத்து இருந்தால் இன்று இந்திராகாந்தி அம்மையார், பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியுமா? சதி என்ற உடன்கட்டை ஏறுதல்தானே நமது புராதனப் பழக்கம்? அவர்கள் இவ்வுலகில் இருந்திருக்கவே முடியாதே? மனுதர்மத்தையும், இராமாயணத்தையும் சரியாகப் படித்தால் அவை பெண் அடிமைத்தனத்தை எவ்வளவு வலியுறுத்துகின்றன என்பது புரியும்.
அதைச் சரியாக உணராமல் ஏதோ கிளப்பிற்குப் போவதும் மாநாடு போடுவதும், அவர்களுக்குச் சில உத்தியோகப் பிச்சைகள் கிடைப்பதும் அவர்கள் நிலையை உயர்த்திவிடாது! விடவே விடாது! அதை அவர்களில் பலர் உணர வேண்டும். அமைச்சர் கூறிய பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற ஒரே சூரணம்தான் அவர்களது நீண்டகால நோய் போக்கும் மாமருந்து. இதை, பெரிய இடத்துப் பெண்களும், தாய்மார்களும் உணர்வார்களாக!
சட்டமன்றத்தில் கலைஞர் அரசு சாதித்த பணிகள் குறித்துப் பாராட்டி, விரிவான தலையங்கம் ஒன்றினை விடுதலையில் தமிழர்களின் பொற்காலம்! என்ற தலைப்பில் (10.8.1973) எழுதினேன், அதை அப்படியே தருகிறேன்.
தந்தை பெரியார் அவர்களது அரை நூற்றாண்டுக்கும் அப்பாற்பட்ட தொண்டு எப்படிப் பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்து வருகிறது என்பதற்கு அன்றாடம் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் எத்தனையோ சான்றுகளாகும்.
அன்றைய சுதந்திராக் கட்சியின் சட்டமன்றத் தலைவரும் இன்று நடிகர் கட்சிக்குக் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த நவீன விக்கிரமாதித்தருமாகிய திரு. ஹண்டே, சட்டமன்றத்தில் முன்பு ஒருமுறை தி.மு.க. ஆட்சியைக் குறைகூறிப் பேசியதற்குப் பதில் அளித்த முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மிகவும் துணிச்சலுடன் வெளிப்படையாக, எங்களுடைய அரசு மூன்றாந்தர அரசுகூட அல்ல; நாலாந்தர மக்களான சூத்திர மக்களுக்காகவே இருக்கின்ற சூத்திர அரசுதான் என்று தந்தை பெரியார் மொழியில் மிகுந்த ஆணவத்தோடு, பெருமையோடு அறிவித்துக் கொள்கிறேன் என்று சட்டமன்றத்திலேயே பிரகடனப்படுத்தினார்!
வரலாற்றுப் புகழ் வாய்ந்த அந்தப் பிரகடனத்தை அவர் வெறும் வாய்ப் பேச்சளவில் சொல்லவில்லை. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரியதோர் பொற்காலத்தை இவ்வாட்சி உருவாக்கியிருக்கிறது என்று விவரம் தெரிந்தோர் அனைவரும் உணரும் வண்ணம், பல பெரிய பதவிகளை இதற்குமுன் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சமுதாயப் பிரிவினர்கள்- ஜாதியால் கீழ் அமுக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் இப்போது மளமளவென்று முன்னேறுகிறார்கள்!
112 ஆண்டு தமிழக உயர் நீதிமன்றத்தின் நீண்ட வரலாற்றில், இதுவரை ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டது கிடையாது. முதல் முறையாக, சில மாதங்களுக்கு முன் தி.மு.க. அரசு அதனைச் சாதனையாக்கிக் காட்டிற்று! நம் இன எதிரிகளான பார்ப்பனர்கள், இவ்வாட்சியின் மீது தாங்கொணாத எரிச்சல் கொள்ளும் ரகசியத்தை இதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு பொதுப் பணித் தேர்வுக் கழகத்தின் (பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தலைவரும், உறுப்பினர்களும் சமுதாய நீதியில் அசைக்க முடியாத நம்பிக்கை படைத்தவர்களாக இன்று இருக்கிறார்கள். அவர்களை அங்கே அமரவைத்த பெருமை இன்றைய தி.மு.கழக ஆட்சியையே சாரும். அப்படிப்பட்ட பிற்படுத்தப்பட்ட, – தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அப்பொறுப்பு வாய்ந்த பெரும் இடத்தில் அமரவைத்த காரணத்தாலும், இன்றுள்ள ஆட்சியின் கொள்கையை சமூகநீதி முதலில் – பிறகுதான் எதுவும் என்பதிலேயே மிக உறுதியாகப் பின்பற்றுகிற முதல்வர் கலைஞர் தலைமையில் ஆட்சி இருக்கின்ற காரணத்தால் எவ்வளவு பெரும் புரட்சி – ரத்தம் சிந்தாத சமுதாயப் புரட்சி – மவுனப் புரட்சி நடைபெற்றுவருகிறது பார்த்தீர்களா? ஆண்டுதோறும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும் முதல் பிரிவு அரசு வேலைத் தேர்வுக்கு (Group I services) இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலைப் பார்க்கப் பார்க்க நமது உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் நிறைகிறது.
தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டி வரும் தமிழ் இனக் காவலராம் நம் தந்தை அவர்களது கொள்கை எப்படியெல்லாம் இன்று கோட்டையில் கோலோச்சுகிறது என்பதை உணர்ந்து, மிகுந்த பெருமிதம் அடையத்தக்க வண்ணம் நாம் இருக்கிறோம்! டெபுடி கலெக்டர்கள், டெபுடி சூப்ரெண்டெண்ட் ஆப் போலீஸ், ஜாயிண்ட் கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசர்கள். (Joint Commercial Tax Officers), டிஸ்டிரிக்ட் ரிஜிஸ்டிரார்கள் ஆகிய நான்கு வகை முதல் பிரிவு (Group I services) களுக்காக இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலைப் பாருங்கள்.
எப்படிப்பட்ட புரட்சி பார்த்தீர்களா? இதைச் செய்பவர் அல்லவா உண்மையான புரட்சித் தலைவர்! 22 பதவிகளில் பார்ப்பனரோ, இதர முன்னேறிய வகுப்பாரோ எவரும் ஒன்றுகூடப் பெறவில்லை. மேற்காட்டியவர்கள் அத்தனைபேரும் உண்மையான தகுதியிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல; வெறும் பிச்சை போட்டு வந்தவர்கள் அல்ல என்றாலும், அத்தகைய சமூகத்திற்கு – இதற்கு முன்னால் இருந்தவர்களுக்கு வாய்ப்புக் கதவு திறந்துவிடப்படவில்லை. இன்றுள்ள தி.மு.க. ஆட்சியே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசாக இருக்கிற காரணத்தால்தான் கடல் மடை திறந்தாற்போல் இம்மாதிரிக் காரியங்கள் பளிச்சென நடக்கின்றன!
சக்கிலியரும், பள்ளரும், வேட்டுவக் கவுண்டரும், குடும்பாவும், வண்ணாரும், மருத்துவரும், வன்னியரும், வலையரும், வடுகரும், மூப்பரும் நத்தமானும் மற்றவர்களும் இதற்கு முன்னால் இம்மாதிரிப் பதவிகளைக் கனவில்கூட நினைத்திருக்க முடியுமா? இன்று எவ்வளவு சரளமாக இக்காரியங்கள் நடைபெறுகின்றன பார்த்தீர்களா?
இம்மாதிரி சமுதாயப் புரட்சியை இவ்வாட்சியை விட்டால் வேறு எவ்வாட்சியில் காண முடியும்? நினைக்க முடியும்? இன உணர்ச்சி மறந்து நம் இன எதிரிகளின் – துரோகிகளின் வில்லுக்கு அம்பாகி வரும் மறத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். இம்மாதிரி மவுனப் புரட்சிக்குக் காரணமான தி.மு.க. ஆட்சியையும், அதன் முதல்வர் கலைஞரையும் அதனைச் செய்த தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவரையும், அதன் உறுப்பினர்களையும், நாலு கோடித் தமிழர்கள் சார்பாக, இதயப்பூர்வமாக வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்! என்று குறிப்பிட்டு இருந்தேன்.
திருச்சி ரயில்வே ஊழியர் கூட்டத்தில், டிவிஷனல் அலுவலகம் ஒரு பார்ப்பனர் குகை என்பது பிரசித்தமானது. அங்கே 21.7.-73 அன்று, ரயில்வே தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (REPU) ஏற்பாடு செய்த உணவு இடைவேளைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சு, அங்கிருந்த யாவரையும் அய்யாவின் கொள்கைக்கும், தொண்டிற்கும் ஏற்பட்டிருக்கும் வெற்றியினை அறிந்து கொள்ள மிக மிக அவசியமாயிருந்தது. தொ.மு.ச. தலைவர் துரைபாண்டியன் தலைமையில் உறந்தை செல்வேந்திரன் (நகர தி.க.தலைவர்) 10 நிமிடங்கள் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் அவசியம், இன்றைய சூழலில் தொழிலாளர்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி உரை நிகழ்த்தினார். பிறகு, நான் எனது உரையைத் தொடங்கினேன்.
தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! இங்கே உங்களை எல்லாம் உங்கள் உணவு இடைவேளையில் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்புக் கிடைத்தமைக்கு நன்றி. எங்களது உடைகளைக் கொண்டே நாங்கள் யார் என்பதனை அறிந்திருப்பீர்கள். அய்யா அவர்களின் சமுதாய முன்னேற்ற இயக்கத்தில் பங்கு கொண்ட தொண்டர்களாவோம். தமிழர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக எந்த இடர்வரினும் ஏற்றுச் செயல்படுகிற தொண்டர்கள் என்பதனை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நண்பர்கள் இங்கே ஒரு துண்டறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். இந்தச் சங்கம், இரயில்வேயில் ஒரு குறிப்பிட்ட சாரார் எப்படிப் பலன் பெறுகின்றனர்; மற்றவர்களைப் பழிவாங்குகின்றனர் என்பதைக் குறிப்பிட்டு, இந்தத் துண்டறிக்கையை வெளியிட்ட பிறகு 3 குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்திட மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது கொள்கைக்குக் கிடைத்த வெற்றியேயாகும்.
முதலாவதாக, ஒரு பார்ப்பன அதிகாரி பதவி உயர்வு பெற்றதும் அந்த அலுவலகத்திலேயே பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமது தமிழராகிய ஒருவர் பதவி உயர்வு பெற்றதும் அவர் வேற்றூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இங்கே, எந்தச் சமதர்ம ஆட்சி நடைபெற்றாலும் பார்ப்பனர்கள் தங்கள் மனுதர்மப்படியே நடப்பார்கள் என்பதற்கு இது ஒரு மறுக்க முடியாத சான்றாகும். நமது தோழர்களின் துண்டறிக்கைக்குப் பிறகு, மேலிடம் உடன் நடவடிக்கை எடுத்து நமது தோழர்களுக்கு நியாயமான இடத்தை அளித்திருக்கின்றது. இரண்டாவதாக, ஒரு பார்ப்பன அதிகாரி வீட்டில் சமையல் வேலை செய்த பார்ப்பனத் தொழிலாளிக்கு இங்கே அலுவலகத்தில் பணிபுரிந்ததாகக் காட்டி, சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் வெளியிட்ட உடன் அது நிறுத்தப்பட்டிருக்கிறது எனத் தெரிகிறது.
பார்ப்பனர்கள் தர்மமெல்லாம் மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டதே. மனுதர்மம், ஒரு சூத்திரன் கொலை செய்தால் அவனைச் சிரச் சேதம் செய்ய வேண்டும் என்றும், பார்ப்பனன் கொலை செய்தால் அவனுக்குச் சிகைச் சேதம் செய்தால் மட்டும் போதும் என்றும் கூறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் நோட்டீஸ் அடித்துத்தான் – ஊரைக் கூட்டிச் சொல்லித்தான் நாம் நியாயம் பெற வேண்டியிருக்கிறது.
தகுதி, திறமை என்று கூச்சலிடுகின்ற உயர்ஜாதிக்காரன் எனக் கூறிக்கொள்ளும் வர்க்கம், ரயில்வே போர்டு நடத்திய தேர்வில் 10க்கும் அதிகமான தமிழர்கள் வெற்றி பெற்றிருக்க, ஒரே ஒரு பார்ப்பனர்தான் வெற்றி பெற்றார் என்பதனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அறிய மகிழ்ச்சி அடைகிறேன்.
நினைவுகள் நீளும்…