வி.சி. வில்வம்
தொழில்நுட்ப அணி அமைப்பாளர், திராவிடர் கழகம்.
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வயது 90 என்கிறார்கள்!
முதல் 10 ஆண்டுகள் சிறுவயதில் வீட்டில் இருந்துள்ளார். பிறகு நாட்டிற்கு வந்துவிட்டார்!
“தண்ணீரை விட இரத்தம் கெட்டி-யானது; இரத்தச் சொந்தத்தை விட, கொள்கை உறவுகள் மேலானது”, என வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஆசிரியர் கூறுவார்கள்!
அப்படிச் சொல்வதற்கான அனைத்து நியாயங்களும் தலைவருக்கு உண்டு! காரணம் முன்பு சொன்னது தான், 10 ஆண்டுகள் வீட்டிற்கும், 80 ஆண்டுகளை நாட்டிற்கும் தன்னை ஒப்படைத்த ஒப்பற்ற செயல்!
எழுத்தில் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி எழுதிவிடலாம். ஆனால் இப்படியான வாழ்க்கை முறையைக் குறைந்தபட்சம் நம்மால் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா? உலகில் இதுபோன்ற உதாரணங்கள் அரிதிலும் அரிதாய் வேறெங்கும் இருக்கிறதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்!
முதலில் உறுப்பினர், பிறகு பேச்சாளர், பின்னர் ஆசிரியர், இதனூடே எழுத்தாளர், தொடர்ந்து பொதுச் செயலாளர், இப்போது திராவிடர் கழகத்தின் எஞ்சி நிற்கும் திராவிட இயக்கத் தலைவர்! தமிழர்களின் தனிப்பெருந் தலைவர்!
திராவிடர் இயக்கத்தின் தலைவர் திராவிடர் தலைவர் தானே? எப்படி தமிழர் தலைவர் ஆவார் எனச் சில அரிச்சுவடிகள் கேட்பர். அவர்கள் எப்போதும் பாலகர்கள் தான்! எதையும் படித்துவிட மாட்டோம், எதுகுறித்து சிந்தித்துவிடவும் மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். இருக்கட்டும்!
தமிழர் தலைவர் என்றால் தமிழர்களுக்குத் தலைவர் என்பதை விட, தமிழர்களின் வாழ்வுரிமைக்கான தலைவர் என்பது பொருத்தமாக இருக்கும்!
ஆம்! தமிழர்களின் கல்விக்கு, தமிழர்களின் வேலைக்கு, தமிழர்களின் பகுத்தறிவிற்கு, தமிழர்களின் உரிமைக்கு எனச் சுயமரியாதை வாழ்வு வாழ எவையெல்லாம் தேவையோ அதற்கெல்லாம் போராடும், போராடிப் பெறும் தலைவர்!
எனினும் நம் தலைவரின் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் பெருமூச்சு எழுகிறது! தலைவர் என்றால் புகழும், பெருமையும், வளமும், வசதியும் என நினைப்போர் பலர். ஆனால் ஏச்சுகளும், பேச்சுகளும், அவமானங்களும், துன்பங்களும், நெருக்கடிகளும், போராட்டங்களுமாக அவரின் 80 ஆண்டுகள் கடந்துள்ளன. அதற்குப் பலனாகப் பல நன்மைகள் இச்சமூகத்திற்குக் கிடைத்துள்ளன என்பதே வரலாறு!
ஒன்றிரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டாலே “நமக்கு எதற்கு?’ என ஒதுங்கிக் கொள்வோர் ஓராயிரம்! கடவுளை எதிர்த்து, மதத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, புராண, இதிகாசங்களை எதிர்த்து, இந்தியாவின் வலிமையான பார்ப்பனீயத்தை எதிர்த்து என நொடிதோறும், நொடிதோறும் தொடர் செயல்பாடுகள்!
இந்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளாத சில தான்தோன்றிகள், ஆசிரியரை எதிர்த்தும், அவர்தம் குடும்பத்தை எதிர்த்தும் வருகின்றனர்.
இது ஒரு பக்கம்! இதற்கு இன்னொரு பக்கமும் இருக்க வேண்டும் அல்லவா?
இந்த 80 ஆண்டுகளில் ஆசிரியர் செய்த சாதனைகள், அடைந்த புகழ், பெற்ற மக்கள் செல்வாக்கு, நிறைவான பொது வாழ்வு என அது ஒரு நீண்ட பட்டியல்!
மாதத்தில் 20 நாள்களுக்கு மேல் தமிழ்நாடெங்கும் பயணம், சில இந்தியப் பயணங்கள், சில வெளிநாட்டுப் பயணங்கள் என அத்தனையும் கொள்கைப் பயணங்கள்!
வெளியூர் பயணம் என்பது எப்போதும் நாம் விரும்புவது போல் இருக்காது! சில நேரம் சலிப்பைத் தரலாம்; பல நேரம் உடல் வலியைத் தரலாம்; அரிதாக மனச் சோர்வைத் தரலாம்! ஆனால் ஆசிரியரின் பயணங்களில், கூடவே பயணித்தவர்களுக்குத் தெரியும். எப்போதும் உற்சாகமும், உறுதியும், ஓட்டமும், நடையுமாக அது இருக்கும்.
பயணங்களுக்கு இரவு 10:00 மணியோ, 11:00 மணியோ தொடர்வண்டியைப் பிடிக்க வேண்டும். அதிகாலை 4:00 மணியோ, 5:00 மணியோ அரைத் தூக்கத்தில் எழ வேண்டும். பிறகு தோழர்களைப் பார்த்த உற்சாகத்தில் மீண்டும் உழைப்பு! உழைப்பு!!
இவ்வளவு நடைப்பயணம், இவ்வளவு வாகனப் பயணம், இவ்வளவு தொடர்வண்டிப் பயணம், இவ்வளவு விமானப் பயணம், இலட்சம் தாண்டிய கிலோ மீட்டர்கள், இலட்சம் தாண்டிய மனிதர்கள் தொடர்பு.
நாள் முழுக்க சந்திப்புகள், எழுத்துகள், பேச்சுகள், கூட்டங்கள், சிந்தனைகள் என்று, 80 ஆண்டுகளாக என்றால் எவ்வளவு உழைத்திருப்பார்!
மலைப்பின் மறுபெயர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!